ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Corporate murder: Trial opens of France Télécom executives over worker suicides

பெருநிறுவன படுகொலை: தொழிலாளர் தற்கொலைகள் சம்பந்தமாக பிரான்ஸ் டெலிகாம் நிர்வாகிகள் மீதான வழக்கு தொடங்குகிறது

By Will Morrow
10 May 2019

பல தொழிலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தொடர்பாக ஏழு முன்னாள் பிரான்ஸ் டெலிகாம் நிர்வாகிகள் மீது திங்களன்று பாரிசில் தொடங்கிய வழக்கு, முதலாளித்துவ அமைப்புமுறையினது காட்டுமிராண்டித்தனத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.

2005 இன் ஆரம்பத்தில், பிரான்ஸ் டெலிகாம் (இப்போது ஆரஞ்ச் நிறுவனம்) நிர்வாகம் இரகசியமாக உளவியல் சித்திரவதை கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அது தொழிலாளர்களை அவர்களின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர்களிடம் இருந்து விலக்கி தொலைதூர நகரங்களின் கிளைகளுக்குப் பணிமாற்றம் செய்தது; செய்து முடிக்கவியலாத வேலை இலக்குகளை அமைத்தது; அல்லது பணியாளர்களைக் கண்டிக்கவும் அவமரியாதைப்படுத்தவும் மீண்டும் மீண்டும் சம்பிரதாயமான கூட்டங்களை நடத்தியது. இது பணிநீக்கம் செய்யப்படுவதில் இருந்து சட்டரீதியில் பாதுகாக்கப்பட்டிருந்த 22,000 தொழிலாளர்கள், அல்லது தொழிலாளர் சக்தியில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கினர், அவர்களே வெளியேறவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளவோ அவர்களை நிர்பந்திப்பதன் மூலமாக, அவர்களை வேலையிலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது.

“கதவு வழியாகவோ அல்லது ஜன்னல் வழியாகவோ, ஏதோவொரு விதத்தில்" நிர்வாகம் தொழிலாளர்களை வெளியேற்றும் என்று தலைமை செயலதிகாரி டிடியே லொம்பார் தெரிவித்தார்.

அவர்கள் உருவாக்கிய திகிலூட்டும் அனுபவம் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களை மனக்கவலைக்கும் மனஅழுத்தத்திற்கும் உட்படுத்தியது; 2008 இல் இருந்து 2010 வரையில் மட்டும் 57 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதுடன், இதற்கும் மேலாக டஜன்கணக்கானவர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்கள். சிலர் பணியில் இருந்தபோதே, அலுவலகத்திலும் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் உயிரை மாய்த்துக் கொண்டனர், இதை அவர்களின் சக பணியாளர்கள் மரணபீதியோடு கண்கூடாக கண்டனர். இன்னும் சிலர் தங்கள் மரணங்களுக்கு நிர்வாகத்தைக் குறைகூறி, அவர்களின் அன்புக்குரியவர்களுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்கள்.

நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இருந்தாலும், தற்கொலையில் உயிரிழந்த 19 பேர் மற்றும் தற்கொலைக்கு முயன்ற 12 பேர் உட்பட, பாதிக்கப்பட்ட 39 நபர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையில் நிற்கும் ஏழு நிர்வாகிகள்: முன்னாள் தலைமை செயதிகாரி லொம்பார்; அவருக்கு அடுத்திருந்த லூயி-பியர் வெனெஸ்; மனிதவளத்துறை முன்னாள் இயக்குனர் ஒலிவியே பார்பெரோ; மற்றும் இவர்களின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாய் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏனைய நான்கு பேர்.

ஆனால் இவர்கள் மீது "தார்மீக துஷ்பிரயோக" குற்றச்சாட்டு மட்டுமே சாட்டப்பட்டுள்ளது. இது 15,000 யூரோ (16,900 அமெரிக்க டாலர்) அபராதமும் —அல்லது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளியின் தற்கொலைக்கும் 789 யூரோவும்— ஓராண்டு சிறையும் அதிகபட்ச தண்டனையாக கொண்டுள்ளது.

ஆகவே இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், அது 21 ஆம் நூற்றாண்டு பிரான்சில் மேலோங்கி உள்ள வர்க்க நீதியை உறுதிப்படுத்தும். ஒரு தசாப்தமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்துள்ள இந்த நிர்வாகிகள், பிரான்ஸ் டெலிகாமின் இலாபங்களையும் அதன் பங்குதாரர்களினது சொத்துவளங்களையும் அதிகரிக்க நனவுபூர்வமாகவும் குரூரமான முறையிலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை அழித்துள்ள இவர்கள், குறைந்தபட்ச தண்டனைகளோடு, அல்லது ஒருவேளை முற்றிலும் எந்த தண்டனையும் இல்லாமலேயே கூட வெளியில் வரக்கூடும்.

செவ்வாயன்று விளக்கம் அளிக்கையில், லொம்பார் ஆணவத்துடன் 2005 இல் இருந்து 2010 வரையில் தலைமை செயலதிகாரியாக அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாத்தார். “சமூக மாற்றங்கள் இணக்கமாக இல்லை, அது அப்படி இருந்தது,” என்றார். “என்னால் எதுவும் உதவ முடியவில்லை, வேறொருவர் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார், அல்லது இதைவிட மோசமாக நடந்து கொண்டிருப்பார்,” என்றார்.

தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கான எல்லா பொறுப்பையும் மறுத்து, அவர் வலியுறுத்துகையில், இந்த சம்பவங்கள் "சமூக நெருக்கடி" அல்ல, மாறாக "ஊடக நெருக்கடி. ... நிறுவனம் மோசமாக இருப்பதாகவும், அதன் தார்மீக நெறிமுறைகள் முறிந்து விட்டதாகவும் ஊடக பத்திரிகைகள் கூறியதை" வலியுறுத்தினார். ஏதேனும் அவர் நடவடிக்கைகளுக்காக அவர் வருத்தப்பட்டாரா என்று வழக்கறிஞர் வினவிய போது, லொம்பார் பதிலளித்தார்: “இக்கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.” அவர் கருத்துக்கள் அந்நீதிமன்ற அறையில் இருந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கோபமான சலசலப்பை உண்டாக்கியதாக செய்திகள் குறிப்பிட்டன.

ஆனால் லொம்பாரின் பாத்திரம் நன்கு ஆவணப்பட்டுள்ளது. 2005 இல் அந்நிறுவனம், உற்பத்தித்திறனை மூன்றாண்டுகளில் 15 சதவீதம் அதிகரிக்கவும் மற்றும் 22,000 வேலைகளை வெட்டவும் —வெளிப்படையான வார்த்தைகளில் கூறுவதானால், “பிரான்ஸ் டெலிகாமை உலகளாவிய இணைய சேவை வழங்குனராக ஆக்குவதற்கு தயாரிப்பு" செய்வதற்காக — ACT மற்றும் NeXT என்று தலைப்பிட்ட வணிக உத்திகளை ஏற்றது.

சோசலிஸ்ட் கட்சி அந்நிறுவனத்தை 1990 களில் தனியார்மயப்படுத்தி இருந்த போதினும், தொழிலாளர் சக்தியில் மூன்றில் இரண்டு பங்கினர் அப்போதும் பொதுத்துறை பணியாளர்களாகவே இருந்தனர். பணிநீக்கத்திலிருந்து சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்ட அந்த தொழிலாளர் சக்தியை வெளியேற்றுவதற்காக, நிர்வாகிகள், தொழிலாளர்களே வேலையிலிருந்து வெளியேறவோ அல்லது அவர்களைத் தற்கொலை செய்து கொள்ள நிர்பந்திப்பதற்காகவோ வடிவைக்கப்பட்ட மனோரீதியில் சித்திரவதைப்படுத்தும் ஒரு இரகசிய கொள்கையை ஏற்றனர். அவர்கள், ஈவிரக்கமின்றி, மனவேதனைகளை அதிகரிக்கும் ஒன்றோடொன்று பிணைந்த ஆறு-கட்ட நிகழ்முறையை ஏற்றனர் (“புரிந்துகொள்ள இயலாத நிலை,” “கலகம்,” “விரக்தி,” “மனஅழுத்தம்,” “வீட்டுநினைவு ஏற்படுத்துதல்,” மற்றும் இன்னும் பல), கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்னரே தொழிலாளர்கள் இவற்றை அனுபவிப்பார்கள் என்று அவர்கள் நம்பினர்.

2010 இல், Le Parisien, அக்டோபர் 2006 இயக்குனர்கள் சந்திப்பு ஒன்றின் உள்விவகார விபரங்களைப் பிரசுரித்தது, அதில் லொம்பார், வெனெஸ் மற்றும் பார்பெரோ அவர்களின் திட்டத்தை விவாதித்திருந்தனர். அப்பத்திரிகை தகவல்படி, நிறுவன அதிகாரிகள் பின்னர் அந்த விபரங்களை அழித்துவிட உத்தரவிட்டிருந்தனர் என்றாலும், ஒரு செயலாளர் அதன் ஒரு நகலை அவரின் இடத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்.

“நாம் தாய் கோழியின் நிலைமையிலிருந்து வெளியே வரவேண்டும்,” என்று லொம்பார் கூறியிருந்தார். “அது கடந்தகாலத்தை விட சற்றே எதேச்சதிகாரமாக இருக்கும். இந்த 22,000 ஐ மாற்றுவதற்கு இது மட்டுமே நமக்கு முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு... 2007 இல், கதவு வழியாகவோ அல்லது ஜன்னல் வழியாகவோ, ஏதோவொரு வழியில் நான் வெளியேற்றங்களைப் பெறுவேன்,” என்றார்.

தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்களில் ஒருவரான நிக்கோலா கிரெனோவில், 28 வயதே ஆனவர். ஆகஸ்ட் 10, 2009 இல், அவர் பிரான்ஸ் டெலிகாம் கேபிளை பயன்படுத்தி பெசன்ஸோன் நகரில் உள்ள அவர் வீட்டில் தூக்கிட்டு கொண்டார். “என் வேலை என்னை மிகவும் துன்புறுத்துகிறது,” என்று அவர் மரணக்குறிப்பில் எழுதினார். “இந்த வேலையில் என்னால் இருக்க முடியாது, பிரான்ஸ் டெலிகாம் அக்கறை காட்டாது.”

நிக்கோலாவின் சகோதரர் வன்சோன் Le Parisien க்கு கூறுகையில், “அவரைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போவது என்பது நரகத்திற்குப் போவதாக இருந்தது. தனியாக இருக்கையில், உங்களுக்கு யாரும் உதவ இல்லாதபோது, உயர்பதவியினர் உங்களைப் பார்த்து சிரிக்கையில்...”

இந்த வழக்கு அவரது சகோதரருக்கு நீதி வழங்கும் என்றவர் எதிர்பார்க்கவில்லை என்பதையும் வன்சோன் கசப்புணர்வுடன் சேர்த்துக் கொண்டார்: “இவர்கள் நெருங்க முடியாதவர்கள், இந்நாட்டின் தலைவர்களுடன் பள்ளிக்குச் சென்றவர்கள், அபராதம் செலுத்தி விட்டு மேல்முறையீடு செய்யப்போகிறவர்கள்... எனது சகோதரன், இனி திரும்ப வரப்போவதேயில்லை.”

செப்டம்பர் 9, 2009 இல், ஒரு தொழில்நுட்ப வல்லுனரான யோனெல் டெர்வன், அவரின் பதவி மாற்றப்பட்டு கொண்டிருந்ததை அப்போதுதான் அறிந்திருந்த அவர், ஒரு கூட்டத்தின் நடுவில் எழுந்து நின்று, அவரின் சக பணியாளர்களுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, கத்தியை எடுத்து, வயிற்றில் குத்தி கொண்டு இறந்து போனார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், செப்டம்பர் 11, 2009, 32 வயதான ஸ்ரெபானி, பிரான்ஸ் டெலிகாம் அலுவலகத்தின் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஒருநாள் முன்னதாக, அப்பெண்மணி அவர் தந்தைக்கு அனுப்பி இருந்த ஒரு கடிதத்தில், “என் முதலாளி இதனால் எச்சரிக்கப் படப்போவதில்லை, இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ளப்போகும் 23 ஆவது பணியாளராக நான் இருப்பேன். என்னால் சேவைகளின் இந்த புதிய மறுஒழுங்கமைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..... நான் சாகப் போகிறேன்.”

56 வயதான ரெமி லூவ்ராடு, 1979 இல் இருந்து அங்கே வேலை செய்து வந்த பின்னர், ஏப்ரல் 26, 2011 இல், பிரான்ஸ் டெலிகாம் கிளை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் தன்னைத்தானே எரித்து கொண்டார். அவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

“அவர் எந்தளவுக்கு அதிகமான வேலை அழுத்தங்களில் வாழ்ந்து கொண்டிருந்தாரோ, அந்தளவுக்கு நாங்கள் அவரால் வாழ்ந்து கொண்டிருந்தோம்,” என்று அவரின் மனைவி கூறியதை Le Parisien குறிப்பிட்டது. “அவர் சிக்கியிருந்ததில் இருந்து வெளியேறுவதற்கு அவருக்கு எந்த வழியும் இல்லை என்பதைக் கண்டதும், அந்த நரக சுழற்சிக்கு முடிவு கட்ட —ஆனால் அவர் தன் வாழ்நாளையே வழங்கியிருந்த அந்நிறுவனத்தின் நடைமுறைகளைக் கண்டிப்பதற்காகவும்— தற்கொலை செய்து கொண்டார்.”

நிர்பந்திக்கப்பட்ட ஆட்கொலை சம்பந்தமான குற்றச்சாட்டுக்களுக்கு அந்த குடும்பம் அழுத்தமளிக்க விரும்பியது. Rémy இன் முப்பது வயது மகன் குறிப்பிட்டார்: “நீதித்துறை விடையிறுப்பு, அதன் மெதுவான நகர்வுக்கு அப்பால், அந்த கொடூரத்திற்கும் மற்றும் அந்நடவடிக்கையின் முக்கியத்துவத்திற்கும் பொருத்தமானளவில் கூட இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். என்ன நடந்ததோ அதற்கு பொறுப்பானவர்களுக்கு விதிவிலக்கீட்டுரிமையுடன் அது சௌகரியப்படுத்துகிறது. அவர்களின் பாரிய திட்டம் மக்களை விளிம்புக்குத் தள்ள நோக்கம் கொண்டிருந்தது. அவர்களால் கொல்ல முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.”

இந்த குற்றங்கள், பிரான்ஸ் டெலிகாம் நிர்வாகம் மற்றும் சோசலிஸ்ட் கட்சி மீதான ஒரு குற்றப்பத்திரிகை மட்டுமல்ல, மாறாக நிறுவன தொழிற்சங்கங்கள் மீதும் ஒரு குற்றப்பத்திரிகையாகும். ஒவ்வொரு தொழில்துறையிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளதைப் போலவே, தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாளர்களை தனிமைப்படுத்தியும் மற்றும் எதிர்ப்பை மூச்சடைக்கச் செய்தும், பெருநிறுவன நிர்வாகத்தின் அங்கமாக செயல்பட்டது. அனைத்திற்கும் மேலாக அந்நிறுவனத்தின் ஈவிரக்கமற்ற அத்துமீறலை நிறுத்த எதையும் செய்யாத இத்தகைய பெருநிறுவனமயப்பட்ட மற்றும் ஊழல்பீடித்த அதிகாரத்துவங்கள் வகித்த பாத்திரத்தின் காரணமாக, அந்நிறுவனத்தின் கொடூர ஆட்சிமுறையை எதிர்த்து போராடுவதற்கு, இந்த தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்களுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை.

20 ஆம் நூற்றாண்டு நெடுகிலும் தொழிலாளர்கள் வென்றெடுத்த சமூக தேட்டங்களுக்கு எதிராக ஒரு சமூக எதிர்புரட்சியை ஆளும் உயரடுக்குகள் மேற்பார்வையிட்டுள்ள நிலையில், பிரான்ஸ் டெலிகாம் தொழிலாளர் பலியானதைப் போன்ற சம்பவங்கள், கடந்த 40 ஆண்டுகளாக சர்வதேசளவில், பல பரப்புகளில், எண்ணற்ற வேலையிடங்களில் நடந்துள்ளன. இந்த தொழிலாளர்கள் அனைவரும், முதலாளித்துவத்தால், அதாவது நிதியியல் உயரடுக்கு வெறித்தனமாக இலாபத்தைப் பின்தொடர்வதற்கு அடிபணிந்துள்ள இந்த சமூகத்தால், பலியானவர்களாவர்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

France Télécom employee immolates himself
[29 April 2011]