Print Version|Feedback
GEGEN NATIONALISMUS UND KRIEG! FÜR SOZIALISMUS!
Unterstützt den Wahlkampf der Sozialistischen Gleichheitspartei!
தேசியவாதத்திற்கும் போருக்கும் எதிராக சோசலிசத்திற்காக போராடு!
சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளியுங்கள்!
வலதுசாரிகளின் எழுச்சிக்கும், வளர்ச்சியடையும் இராணுவவாதத்திற்கும் மற்றும் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சியானது (SGP) எதிர்வரும் மே மாதம் ஐரோப்பிய தேர்தலில் கலந்துகொள்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியானது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் உள்ள தனது சகோதரக்கட்சிகளுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஐரோப்பாவை சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதற்காக போராடுகின்றது. இதன் மூலம் மட்டுமே பாசிச காட்டுமிராண்டித்தனத்தினுள்ளும் போரினுள்ளும் மீண்டும் மூழ்குவதிலிருந்து தடுக்கப்பட முடியும்.
இராணுவவாத்திற்கும் போருக்கும் எதிராக! ஒரு சோசலிச ஐரோப்பாவிற்காக!
இரண்டாம் உலகயுத்தத்தின் 75 ஆண்டுகளின் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சனைகள் அனைத்தும் மீண்டும் முன்வந்துள்ளன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் ஜனநாயக் கட்சியின் ஆதரவுடன் வலதுசாரிகளை அணிதிரட்டிக்கொண்டு ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான யுத்தத்திற்கு தயாரிப்புச் செய்கின்றது. இதன் விளைவு மனிதகுலத்தை ஒரு அணுவாயுத அழிப்பிற்குள்ளாக்குவதாகவே இருக்கும். ஐரோப்பிவிலும் முன்னரே அகற்றப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட கடந்தகாலத்தின் அழுக்குகள் மீண்டும் மேல் எழுகின்றன. தேசியவாதம், இனவாதம் மற்றும் இராணுவவாதமும் கண்டம் முழுவதும் மீண்டும் வளர்ச்சியடைகின்றன. இத்தாலியிலும் போலந்திலும் ஆஸ்திரியாவிலும் வலதுசாரிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஜேர்மனியில் நாஜி அரசாங்கத்தின் முடிவிற்கு பின்னர் முதல்தடவையாக அவ்வாறான வலதுசாரிகள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியமானது வளர்ச்சியடைந்துவரும் தேசியவாதத்திற்கு ஒரு மாற்றீடு அல்ல. மாறாக அதுவே இதற்கான மூலகாரணமாகின்றது. அது மூலதனத்தின் நலன்களின் பேரில் கடுமையான சிக்கன திட்டங்களை முன்மொழிவதுடன், பொலிசாரையும் உளவுத்துறையும் முற்றுமுழுதாக ஆயுதமயப்படுத்தியுள்ளதுடன், இராணுவத்தை பலப்படுத்தி இக்கண்டத்தை பிளவுபடுத்துகின்றது. முக்கியமாக ஜேர்மன் ஆளும் வர்க்கமானது தான் மீண்டும் உலகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை பயன்படுத்துகின்றது. நான்கு வருடங்களுக்கு முன்னர் இராணுவரீதியாக தான் கட்டுப்பட்டிருந்தது முடிவடைந்து விட்டதாக அறிவித்த ஜேர்மன் அரசாங்கம், மீண்டும் கட்டாய இராணுவ சேவையை அறிமுகப்படுத்தவும் மற்றும் அணுவாயுதமயமாக்கலுக்கும் முன்மொழிந்து இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இரண்டுமடங்காக்கியுள்ளது.
ஏழ்மையான நிலைமைக்கும் இராணுவவாதத்திற்குமான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் இரண்டாம் உலகப் போருக்கும் தயாரிப்பு செய்ய 1933 இல் ஹிட்லர் குடியரசின் சான்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றும் இராணுவவாதத்திற்கு திரும்புவதானது பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பை சர்வாதிகார வழிமுறைகளின் மூலம்தான் நடைமுறைப்படுத்தப்பட முடியும். இதுதான் ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சியின் எழுச்சிக்கான காரணமாக உள்ளது.
வைமார் குடியரசின் NSDAP கட்சியினை போல் அல்லாது இன்று AfD க்கு பாரிய மக்கள் ஆதரவு இல்லை. அதற்கான ஆதரவை அது அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்கின்றது. அதன் தலைமையில் இருப்பவர்கள் ஏனைய கட்சிகளில் முன்னர் பதவிவகித்தவர்களும், பொலிஸ், இராணுவம், கல்விமான்கள் மற்றும் நீதிபதிகளும் உள்ளடங்கியுள்ளனர். செய்தி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் மற்றும் பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அதற்கான தத்துவார்த்த, அரசியல் பாதையை தயாரித்துள்ளன. ஜேர்மன் அரசாங்கமானது அகதிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக AfD இன் நிலைப்பாட்டை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டுள்ளது. மொத்தமாக வாக்களித்தோரின் 12.6 சதவிகித வாக்குகளையே AfD பெற்றிருந்தும், மத்திய அரசின் கொள்கைகளை அதுவே தீர்மானிக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த அரசியலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச அடித்தளத்தில் அணிதிரட்ட போராடுகின்றது.
அகதிகளுக்கு எதிரான கொள்கைளும், ஆயுதமயமாக்கலும் மற்றும் சமூகநலன்கள் மீதான தாக்குதல்களும் வெறுப்பையும் பாரிய எதிர்ப்பையும் சந்திக்கின்றன. கடந்த மாதங்களில் AfD க்கும் மத்திய அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளுக்கும் மற்றும் அரசை பலப்படுத்துதலுக்கும் எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பலபத்து வருட சமூக வெட்டுகளுக்கும் மற்றும் குறைந்த ஊதியத்திற்கும், வேலையை தீவிரப்படுத்துவதற்கும் ஒரு சிறிய சிறுபான்மையினர் வெட்கங்கெட்டவிதத்தில் செல்வந்தராவதற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பாரிய கோபம் நிலவுகின்றது.
ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தங்களும் தொழிற்துறை போராட்டங்களும் எழுச்சியடைகின்றன. பிரான்சில் எரிபொருள் வரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். பல்கேரியாவிலும் சேர்பியாவாலும் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சிரிசா அரசாங்கத்தின் சமூகவெட்டுகளுக்கு எதிராக கிரேக்கத்தில் அடிக்கடி வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெறுகின்றன. கண்டம் முழுவதும் றைன்எயர், அமசன் போன்ற சர்வதேச நிறுவனங்களின் மனிதத்தன்மையற்ற வேலைநிலைமைகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை காட்டுகின்றனர்.
இந்த எதிர்ப்புகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சியானது ஒரு முன்னோக்கையும் ஆதரவையும் வழங்குகின்றது. ஒரு நோய்வாய்ப்பட்ட அமைப்பு முறையை திருத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசுவதற்கு முன்மொழிகின்றோம். பாசிசமும் யுத்தமும் இன்று மீண்டும் திரும்பியிருப்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமான நெருக்கடியின் விளைவாகும். முதலாம் உலகப் போரின்போது ரோசா லுக்செம்பேர்க் குறிப்பிட்டதுபோல் மனிதகுலமானது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற தேர்வின் முன் நிற்கிறது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு ஐரோப்பிய ஐக்கிய சோசலிச ஒன்றியத்திற்காக போராடுவதன் மூலமே இந்த அழிவை தடுக்கமுடியும்.
ஏழ்மைக்கும் சுரண்டலுக்கும் முடிவுகட்டு! சமூகசமத்துவத்திற்காக போராடு!
பாரிய வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் கையகப்படுத்தி மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக நாம் போராடுகின்றோம். இலாப நோக்கங்களுக்கு மாறாக மக்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் அனைவரினதும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். இந்த உரிமைகளில் போதியளவு ஊதியம், தரமான தொழிற்பயிற்சி, வாடகை செலுத்தக்கூடிய குடியிருப்பு வசதிகள், பாதுகாப்பான ஓய்வூதியம், மருத்துவ வசதிகள் மற்றும் கலாச்சார வசதிகளை பெறுவதும் உள்ளடங்கும்.
அதீத செல்வந்தர்களின் கைகளில் சமூகத்தின் கட்டுப்பாடு இருக்கும்வரை பரந்துபட்ட மக்கள் இராணுவவாதத்திற்கும் வர்த்தக யுத்தத்திற்குமான விலையை செலுத்தவேண்டி இருக்கும். சமூகத்தின் ஒரு சிறிய தட்டு தன்னை மிகவும் செல்வந்தராக்கும் கொள்கையினால் பல வருடங்களாக ஊதியம் வீழ்ச்சியடைவதுடன் வேலைசெய்வதை துரிதப்படுத்துவது அதிகரிப்பதுடன், குறைவூதியத்துறை மேலும் வளர்ச்சியடைவதுடன், பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் மோசமான நிலைமையை அடைகின்றன. ஆயுதமயமாக்கலுக்கு நிதியளிப்பதற்காக குடும்ப, தொழிற் பயிற்சி மற்றும் ஆராச்சித்துறையில் மேலதிக பாரிய வெட்டுக்களை பாரிய கூட்டரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனநாயக உரிமைகளை பாதுகார்!
சமூக சமத்துவமின்மையின் பாரியளவு அதிகரிப்பும் மற்றும் இராணுவவாதத்தின் மீள்வரவுமே ஸ்தாபக கட்சிகளின் விரைவான வலதுசாரி திருப்பத்திற்கான முக்கிய உந்துசக்தியாகும். சமூக எழுச்சிகளையும், வேலை நிறுத்தங்களையும் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கமானது தயாரிப்பு செய்கின்றது. இதனால்தான் பாதுகாப்பு பிரிவினர் திட்டமிட்டு ஆயுதமயமாக்கப்படுகின்றனர். அனைத்துக் கட்சிகளாலும் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்ட புதிய பொலிஸ் சட்டங்கள் ஒரு பொலிஸ் அரசுக்கான அடித்தளத்தை இடுகின்றன.
இது பொலிஸ், இராணுவம் மற்றும் உளவுத்துறையினர் நாஜிகளின் வலைப்பின்னலுடன் நெருக்கமாக இணைந்து இயங்குவதில் தெளிவாக வெளிப்படுகின்றது. NSU எனப்படும் வலதுசாரி பயங்கரவாதிகள் தமது கொலைகளை அரசியலமைப்பு பாதுகாப்புத் துறையின் (Verfassungsschutz) கண்களின் முன்னே நடாத்தியுள்ளனர். இதைவிட இராணுவத்தின் மத்தியில் ஒரு மறைமுகமான பிரிவு இயங்குவது தொடர்பான விபரங்கள் வெளிவருகின்றன. Focus இதழின் விசாரணைகளின்படி, “திட்டமிட்டு அரசியல் எதிரிகளை கொல்வதற்கும் தயங்கக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக” தெரியவருகின்றது.
இங்கு குறிப்பிடத்தக்கது என்னவெனில் அரசியலமைப்பு பாதுகாப்புத்துறை வலதுசாரி குழுக்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. அதன் முன்னாள் தலைவரான ஹன்ஸ் ஜியோர்க் மாஸன் கெம்னிட்ஸ் நகரில் வலதுசாரிகளின் செயல்களை பகிரங்கமாக நியாயப்படுத்தினார். இதனால் அவர் தனது பதவியை விட்டு விலகவேண்டி இருந்தது. தற்போதைய அரசியலமைப்பு பாதுகாப்புத்துறையின் அறிக்கையின் படி உண்மையான வலதுசாரிகள் அல்லது வலதுசாரியாக இருக்கக்கூடியவர்கள் பற்றிய மற்றும் அவர்களின் கட்டமைப்பு தொடர்பான விபரங்களை திரட்டுபவர்கள் “இடதுதீவிரவாதிகள்” என கருதப்படுகின்றனர். அதனது அறிக்கையில் முதலாளித்துவத்தையும், ஸ்தாபககட்சிகளையும் மற்றும் தொழிற்சங்கங்களையும் நிராகரிப்பதால் சோசலிச சமத்துவக் கட்சியானது முதல்தடவையாக “இடதுதீவிரவாத” அமைப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பொலிஸ் அரசை கட்டியமைப்பதை நியாயப்படுத்தவும் மற்றும் அதனை பரிசோதிக்கவும் ஆளும்தட்டானது சமூகத்தில் பலவீனமான பிரிவினரை உணர்மையுடன் தேடுகின்றது. அகதிகள் மனிதத்தன்மையற்ற நிலைகளின் கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு நாஜிகளின் கால இரகசிய பொலிசான கெஸ்ட்டாபோ முறையில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு யுத்த பிரதேசங்களுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனூடாக அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கான முன்னோடி உருவாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அனைத்து தொழிலாளர்களினதும் அகதி அந்தஸ்த்துகோரும் உரிமையையும் அவர்கள் விரும்பிய நாட்டில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்குமான உரிமையை பாதுகாக்கின்றோம். தொழிலாள வர்க்கம் தன்னை பிளவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தனது சொந்த உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு தொழிலாள வர்க்கம் அகதிகளுடன் ஐக்கியப்பட்டு சுரண்டலுக்கும் யுத்தத்திற்கும் எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சமனான உரிமையை கோருவதுடன் அவர்கள் நாடுகடத்தப்படுவதையும் அகதிகள் தடுப்பு முகாம்களை மூடுமாறு கோருகின்றோம். சோசலிச சமத்துவக் கட்சியையும் ஏனைய இடது அமைப்புகளையும் அரசியலமைப்பு பாதுகாப்பு அமைப்பு கண்காணிப்பது நிறுத்தப்படவேண்டும். மற்றும் அவ்வமைப்பு கலைக்கப்படவும் வேண்டும்.
தொழிலாள வர்க்கத்திற்கு தனது சொந்த கட்சியின் தேவை!
ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவும் தீவிர வலதுசாரிகள் பலப்படுத்தப்படுவதும் சமூக ஜனநாயகக் கட்சியினதும், இடது கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் மற்றும் தொழிற்சங்கங்களின் பலமான உதவி இல்லாமல் சாத்தியமில்லை.
சமூக ஜனநாயகக் கட்சி தனது 2010 நிகழ்ச்சிநிரலுடன் மில்லியன் கணக்கானோரை ஏழ்மைக்குள் தள்ளியதுடன் ஐரோப்பாவிலேயே பாரிய குறைவூதியத்துறையை உருவாக்கியுள்ளது. அது பெரிய கூட்டரசாங்கத்தின் ஆயுதமயமாக்கும் திட்டத்திற்கு தனது தடையற்ற ஆதரவை வழங்குகின்றது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வெறுப்புக்குள்ளாகியுள்ளது.
பசுமைக் கட்சியானது வசதிபடைத்த மத்தியதர தட்டினது கட்சியாகி உள்ளதுடன் வலது நோக்கி நகர்ந்துள்ளது. இவர்கள் 20 வருடங்களுக்கு முன்னர் யூகோஸ்லாவியாவில் ஜேர்மன் இராணுவத்தலையீட்டை பலத்த எதிர்ப்பிற்கும் மத்தியில் நடைமுறைப்படுத்தியதில் இருந்து ஜேர்மன் இராணுவ தலையீட்டிற்கான மிகத்தீவிரமான ஆதரவாளராகியுள்ளனர். சமூக, உள்நாட்டு மற்றும் அகதிகள் தொடர்பான கொள்கையிலும் இவர்கள் இன்னும் வலதுநோக்கி சென்றுள்ளனர்.
இடது கட்சியும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பாரிய ஆதரவாளர்களாகி உள்ளது. இது அரசினதும் வசதிபடைத்த மத்தியதர தட்டினரதும் நலன்களை பாதுகாப்பதாக உள்ளது. கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அரச கட்சியில் இருந்து எழுந்த இவர்கள், தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கியதுடன் கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவ மீட்சிக்கு ஆதரவளித்தவர்களாகும்.
2007 இல் முன்னைய சமூக ஜனநாயகக் கட்சி அதிகாரிகளுடனும், தொழிற்சங்கவாதிகளுடனும் போலி இடதுகளுடனும் இணைந்து தந்திரோபாயரீதியில் சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து பிளவுபட்டு WASG இனை உருவாக்கினர்.
ஆரம்பத்திலிருந்தே இடது கட்சியானது ஜேர்மன் இராணுவவாதத்திற்கு உயிரூட்டுவதுடன் ஈர்க்கப்பட்டிருந்ததுடன், மிகவும் தாழ்மையுடன் அதற்கு ஆதரவளித்தனர். மாநில மட்டத்தில் எங்கெல்லாம் அவர்கள் ஆட்சியில் இருந்தார்களோ அங்கெல்லாம் சமூகவெட்டுக்களுக்கு ஒரு புதிய வடிவத்தை கொடுத்தனர். இடது கட்சியானது, பேர்லினை ஏழ்மையின் தலைநகராக்கியுள்ளது. கிரேக்கத்தில் அதனது சகோதரக் கட்சியான சிரிசா மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை ஒரு சமூகவெட்டு திட்டத்தினால் அழித்துள்ளது.
தொழிற்சங்கங்களும் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு தமது தங்குதடையற்ற ஆதரவை வழங்குகின்றன. ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பானது (DGB) ஜேர்மன் இராணுவத்துடன் ஒரு கூட்டை கூட உருவாக்கியுள்ளது. இது தொழிற்சாலைகளில் மூலதனத்திற்கு சேவை செய்ய கூட்டு நிர்வாகிகளின் பங்கை வகிக்கின்றது.
அவர்களின் கையெழுத்து இல்லாமல் எந்தவொரு சம்பள குறைப்போ வேலைநீக்கமோ இடம்பெறுவதில்லை. தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தொழில்வழங்குனர்களுக்கும் நிதிய உயர்தட்டுகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்திற்கு புதிய போராட்ட அமைப்புக்கள் தேவையாக உள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியானது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவினையும், யுத்தத்தினையும் மற்றும் வலதுசாரி ஆபத்தினையும் ஒரு சோசலிச முன்னோக்கை கொண்டு எதிர்க்கின்றது. நான்காம் அகிலத்தின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் எதிராக சோசலிச கொள்கைகளை பாதுகாத்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாரிம்பரியத்தில் வேரூன்றியுள்ளது.
ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவினையும், ஏழ்மையின் அதிகரிப்பையும் மற்றும் வலதுசாரிகளின் எழுச்சியையும் எதிர்க்க தயாராக உள்ள அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைக்கின்றோம். எமது தேர்தல் முன்னோக்கை பற்றி உங்களது நண்பர்களுடனும் சக தொழிலாளர்களுடனும் மற்றும் உறவினர்களுடனும் பகிர்ந்து கலந்துரையாடி எமது தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இன்றே உங்களை ஆதரவாளர்களாக பதிவுசெய்து தேர்தல் பிரச்சார நிதிக்கு உதவியளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் நாளாந்த பிரசுரமான உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்துவராகுமாறும் அழைக்கின்றோம்.