Print Version|Feedback
The European elections and the revival of class struggle
ஐரோப்பிய தேர்தல்களும், வர்க்க போராட்டத்தின் மீள்வரவும்
By Ulrich Rippert
29 April 2019
மே இறுதியில் நடக்கவுள்ள ஐரோப்பிய தேர்தல்களுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னர், அங்கே பல ஐரோப்பிய நாடுகளில் மிகக் குறைவான தேர்தல் பிரச்சாரங்களே இடம் பெற்றுள்ளன. ஜேர்மனியில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்ற பல கட்சிகள், நடைமுறையளவில் ஒரே மாதிரியான தேர்தல் பதாகைகளையே தொங்கவிட்டுள்ளன. எழுப்பப்படுகின்ற கோரிக்கைகள் பெரிதும் பரஸ்பர பரிமாற்றங்களாக உள்ளன. யாரும் வரமாட்டார்களோ என்ற அச்சத்தால், தேர்தல் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
தேர்தல் மீது பொதுவான ஆர்வமின்மை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்பைப் பிரதிபலிப்பதுடன், பல நாடுகளில் வேலைநிறுத்தங்களும் வெகுஜன போராட்டங்களும் அதிகரித்திருப்பதுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளது. பிரான்சில், “மஞ்சள் சீருடை" இயக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்திற்கு எதிராக பாரியளவிலான பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் வக்கிரமான ஊடக பிரச்சாரங்களுக்கு மத்தியிலும், ஒவ்வொரு வாரமும் நூறாயிரக் கணக்கானவர்கள் குறைந்த சம்பளம், சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராக போராட வீதிகளில் இறங்கிய வண்ணம் உள்ளனர்.
போலந்தில், 300,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள், அவர்களின் தொழிற்சங்கத்தால் வேலைநிறுத்தம் விற்றுத்தள்ளப்பட்டு வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிடப்படுவதற்கு முன்னதாக, வலதுசாரி PiS அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த வார தொடக்கத்தில் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்ளுமாறு அரசு நிர்வாகிகள் இறுதி எச்சரிக்கை விடுத்தபோதும், ஆசிரியர்கள் கோபத்துடன் அதனை மறுத்தனர், மேலும் 40,000 சமூகப்பணி தொழிலாளர்களும் அந்த வேலைநிறுத்தத்தில் இணைய இருப்பதாக அறிவித்திருந்தனர். இது போலாந்தில் பல தசாப்தங்களுக்குப் பிந்தைய முதல் தேசிய வேலைநிறுத்தமாக இருந்ததுடன், 1980 களின் தொடக்கத்தில் ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு எதிராக நடந்த பாரிய வேலைநிறுத்த இயக்கத்திற்குப் பின்னர் மிகப் பெரிய வேலை நிறுத்தங்களில் ஒன்றாகவும் இருந்தது.
மேம்பட்ட வேலையிட நிலைமைகள், கூலி உயர்வு மற்றும் அத்தியாவசிய வசதிகள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பள்ளிகளுக்கான ஆசிரியர்களின் அந்த போராட்டமானது, சர்வதேச வர்க்க போராட்ட அலையின் பாகமாகும். ஆயிரக் கணக்கான அமெரிக்க ஆசிரியர்கள் கடந்தாண்டு வேலைநிறுத்தங்களில் பங்கெடுத்தனர், கடந்த மாதம் நெதர்லாந்திலும் அர்ஜென்டினாவிலும் தேசியளவில் ஆசிரியர் வேலைநிறுத்தம் நடந்தது.
ஆனால் இது வெறுமனே ஆசிரியர்கள் மட்டுமே வேலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்றாகாது. சமீபத்திய தசாப்தங்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் திணித்த கடுமையான வாழ்க்கையிட மற்றும் வேலையிட நிலைமைகளுக்கு, மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில், எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. போலந்து ஆசிரியர் வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, LOT விமானச்சேவை தொழிலாளர்களும் தேசியளவில் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். போலந்து அமசன் தொழிலாளர்களும் சமீபத்திய வாரங்களில் வேலைகளை நிறுத்தி உள்ளார்கள். கடந்த சில மாதங்களில், ருமேனியா, ஹங்கேரி, செக் குடியரசு, சேர்பியா மற்றும் கொசோவோவில் வாகனத்துறை மற்றும் ஏனைய தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் இருந்துள்ளன, அத்துடன் ஹங்கேரியில் தொழிலாளர்களை சம்பளமின்றி கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கும் "அடிமை சட்டம்" எனப்படுவதை விக்டொர் ஓர்பனின் வலதுசாரி ஆட்சி அறிமுகப்படுத்தியதற்கு எதிராக பாரிய போராட்டங்கள் இருந்தன.
ஜேர்மனியில், பத்தாயிரக் கணக்கான பொதுச்சேவை தொழிலாளர்கள், தாங்கொணா வேலையிட நிலைமைகள் மற்றும் அற்ப கூலிகள் மற்றும் பள்ளிகளின் படுமோசமான நிலைமைகளுக்கு எதிராக குறுகிய கால "அடையாள எச்சரிக்கை" வேலைநிறுத்தங்களை நடத்தினர். மார்ச் மாதம், ஆயிரக் கணக்கான பொதுத்துறை போக்குவரத்து தொழிலாளர்கள் பேர்லினில் வேலைநிறுத்தத்தில் இறங்கி, அந்நகரை ஸ்தம்பிக்கச் செய்தனர்; மூன்று வாரங்களுக்கு முன்னர், 40,000 பேர் அதிகரித்து வரும் வாடகைகளுக்கு எதிராக போராடவும் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களைப் பறிமுதல் செய்யவும் வலியுறுத்தி ஜேர்மன் தலைநகர் நெடுகிலும் அணிவகுத்தனர்.
ஐரோப்பா மற்றும் ஜேர்மனியில் ஆளும் வர்க்கமும் அதன் கட்சிகளும் அவற்றின் பாதையில் முட்டுக்கட்டையாக மாறி வரும் இந்த அதிகரித்து வரும் தீவிரமயப்படலுக்கு, நெருக்கமாக ஒருங்கிணைந்து செயலாற்றுவதன் மூலமாகவும் இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்வதன் மூலமாகவும் விடையிறுத்து வருகின்றன.
கடந்த வாரம், ஜேர்மன் அரசியல்வாதி மான்ஃபிரெட் வேபர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம், CSU, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கன்னை, பழமைவாத ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) தலைவர்) “ஒரு பலமான ஐரோப்பாவுக்காக" 12 அம்ச வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த வேலைதிட்டத்தின் முதல் புள்ளியிலேயே அந்த EPP தலைமை வேட்பாளர் அகதிகள் கொள்கை சம்பந்தமாக அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) மத்திய கோரிக்கையை ஏற்கிறார், மேலும் ஃபுரொன்டெக்ஸ் எல்லை பொலிசைப் பாரியளவில் மேம்படுத்த அழைப்பு விடுக்கிறார். “2022 க்குள், குறைந்தபட்சம் 10,000 எல்லை காவலர்கள், டிரோன்கள் உட்பட அதிநவீன தொழில்நுட்பம், மற்றும் நேரடியாக தலையீடு செய்வதற்கான உரிமையைக் கொண்டு ஐரோப்பிய எல்லை மற்றும் கடல் ரோந்துப்படையை நான் பலப்படுத்த விரும்புகிறேன்,” என்று ஐரோப்பாவுக்கான அவர் வேலைத்திட்டத்தில் வேபர் எழுதுகிறார்.
“நேரடியாக தலையீடு செய்வதற்கான உரிமை" என்பது, யூரோபோல் இற்கு கூடுதலாக ஃபுரொன்டெக்ஸை புதிய அதிகாரங்களுடன் கூடிய ஐரோப்பா-தழுவிய புதிய பொலிஸ் படையாக சீரமைப்பது என்பதை அர்த்தப்படுத்துகிறது.
இரண்டாவது புள்ளியில், “பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிட ஐரோப்பிய FBI” ஐ ஸ்தாபிக்க வேபர் அழைப்பு விடுக்கிறார். அவர் யூரோபோல் பொலிஸ் படையின் நியமனங்களை இரட்டிப்பாக்க அழைப்பு விடுக்கிறார். குற்றம் செய்பவர்கள் மற்றும் அரசியல்ரீதியில் தீவிரப்பட்டவர்களைக் குறித்த தகவல்களை கூட்டு புலனாய்வு குழுக்கள் திரட்டி, பரிமாறிக் கொள்ள இருக்கின்றன. இரகசிய சேவைகளின் கூட்டுறவு ஐரோப்பா எங்கிலும் தீவிரப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படுத்தப்பட உள்ளது.
ஓர் ஐரோப்பிய பொலிஸ் அரசைக் கட்டமைப்பது என்பது நேரடியாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நோக்கம் கொண்டதாகும். வேலைநிறுத்தங்களையும் இராணுவ மீள்ஆயுதமயபடுத்தலுக்கான எதிர்ப்பையும் குற்றகரமாக்குவதற்காக ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்ற தயாரிப்புகளை நியாயப்படுத்துவதற்காக, வேபர், பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றத்திற்கு எதிரான சண்டை மீது ஒருமுகப்படுகிறார்.
ஓர் எதேச்சதிகாரியின் தொனியில், “ஐரோப்பிய ஒன்றியத்தில் நமது ஜனநாயக கோட்பாடுகள் குழிபறிக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்,” என்று அறிவித்த வேபர், ஜனநாயகத்தைப் பாதுகாக்க "புதிய சட்ட இயங்குமுறைகளை" அறிவித்தார். ஜனநாயகம் என்பது மக்கள் உரிமைகளோடும் மற்றும் அரசின் பலத்தை எதிர்ப்பதற்கான மக்கள் சுதந்திரத்துடனும் பிணைந்தது என்ற உண்மையை வேபர் முற்றிலுமாக நிராகரிக்கிறார். அவரைப் பொறுத்த வரையில், அரசு என்பது ஜனநாயகத்தின் பண்புரு என்றுள்ளது, அதாவது, அரசு, ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு எந்திரமும் அவற்றின் பலத்தைக் கொண்டு மக்கள் மீது அதன் விருப்பத்தைத் திணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றுள்ளது.
இந்த தர்க்கத்தின்படி, தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வேலைநிறுத்தம் சட்டமீறலாகிறது, விரைவிலேயே சட்டவிரோதமாக அறிவிக்கப்படக்கூடும்.
ஓர் ஐரோப்பிய பொலிஸ் அரசு சம்பந்தமான இந்த பிற்போக்குத்தனமான கருத்துரு அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. ஜேர்மனியின் ஆளும் மகா கூட்டணியின் பாகமாக உள்ள சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஏற்கனவே தஞ்சம் கோரும் சட்டங்களை இறுக்குவதற்கும் மற்றும் அகதிகளை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆதரித்து ஊக்குவித்துள்ளது. இப்போது அது வேபர் மற்றும் EPP திட்டங்களை வெற்று வார்த்தைகளில் விமர்சிப்பதுடன், பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் CSU உம் கட்சி தந்திரோபாயங்களில் ஒருமுனைப்படுவதற்காகவும் மற்றும் உள்நாட்டு மீள்ஆயுதமயபடுத்தலுக்கான SPD இன் முன்மொழிவுகளை ஆதரிக்க தவறுவதற்காகவும் அவற்றை குற்றஞ்சாட்டுகிறது.
ஓர் ஐரோப்பிய பொலிஸ் அரசு உருவாக்குவதை பசுமை கட்சி முழுமையாக ஆதரிக்கிறது, ஆனால் வெறுமனே அது அதை வித்தியாசமான பெயரில் குறிப்பிடுகிறது. அவர்களின் ஐரோப்பிய தேர்தல் வேலைதிட்டம், "படைகள் மீதான அரசின் ஏகபோகத்தைப் பாதுகாப்பதன்" மீது ஒருகுவிந்துள்ளது. சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான மோதலுக்கு "பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே பலமான ஐரோப்பிய கூட்டுறவு" அவசியப்படுவதாக அவர்களின் வேலைத்திட்டம் கூறுகிறது.
“கொள்ளை, திருட்டு அல்லது மோசடி" போன்ற குற்றங்கள் மீதான வழக்குகள் எல்லை கடந்தும் நடத்தப்பட வேண்டும் என்று அது குறிப்பிடுகிறது. “அதற்கேற்ப, பொலிஸூம் எல்லை கடந்து செயல்பட வேண்டும்.” இது "முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியம் தழுவிய தரவு பரிமாற்றத்திற்கு" பொருந்துகிறது. தரவு ஒப்பீட்டை “வழக்கற்றுப் போன தொழில்நுட்பம்" நடைமுறையளவில் தடுக்கிறது என்பதை இனியும் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிறது.
“ஓர் ஐரோப்பிய குற்றவியல் பொலிஸ் படையை உருவாக்குதல்” என்ற தலைப்பின் கீழ், பசுமை கட்சியினர் கோருகின்றனர்: “சந்தேகத்திற்குரியவர்கள் மீதான கண்காணிப்பு ஐரோப்பிய-நாடுகளின் தனித்தனி எல்லைகளுக்குள் தடுக்கப்படுகிறது என்ற உண்மையாலும் மற்றும் அங்கத்துவ நாடுகளின் பொலிஸ் படைகளது கூட்டுறவு இல்லை என்பதற்காகவும் நமது பாதுகாப்பு விட்டுக்கொடுக்கப்படக் கூடாது. அதற்காக தான் நாங்கள் ஐரோப்பிய குற்றவியல் பொலிஸ் அலுவலகத்தை (EKA) ஸ்தாபிக்க அழைப்பு விடுக்கிறோம்.”
இதுவரையில் இடது கட்சி அமைதியாக இருக்கிறது என்றில்லை, மாறாக அது அதன் ஐரோப்பிய தேர்தல் வேலைத்திட்டத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்தவொரு விமர்சனத்தையும் நீக்கி உள்ளது. பெப்ரவரியில், அக்கட்சியின் நிர்வாகக்குழு, ஐரோப்பிய ஒன்றியத்தை "இராணுவவாத, ஜனநாயகமற்ற, நவதாராளவாத" என்று குறிப்பிடும் ஒரு பந்தியை அதன் வரைவு வேலைத்திட்டத்திலிருந்து நீக்க தலையீடு செய்தது. ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவை தலைவர் டீற்மார் பார்ட்ஷ், ஐரோப்பா மீதான எந்தவொரு பகிரங்கமான விமர்சனமும் இடது கட்சியை இத்தாலி, ஹங்கேரி மற்றும் பிரான்சின் வெகுஜனவாத கட்சிகளின் வளையத்திற்குள் கொண்டு வந்துவிடும் என்று வாதிட்டு அது அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தினார். “நம்முடைய வேலை ஐரோப்பாவை வலதுசாரிக்கு விட்டுக் கொடுப்பதில்லை,” என்றார். இடது கட்சி "சமாதானம், மகத்தான கலாச்சார திட்டத்திற்கு அர்பணிக்கப்பட்ட ஓர் ஐரோப்பாவின் பாரம்பரியத்தில் அதை கட்டமைக்க" விரும்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொருளாதார சமூகம் என்பதிலிருந்து ஓர் இராணுவ மற்றும் பொலிஸ் கூட்டணியாக மாறிவரும் ஒரு தருணத்தில், அதிவலது தீவிரவாத அமைப்புகள், கட்சிகளுக்கான விளைநிலமாக ஆகி வருகின்ற ஒரு தருணத்தில், இடது கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சமாதானம் மற்றும் கலாச்சாரத்திற்கான ஒரு திட்டமாக புகழ்ந்துரைத்து இந்த அபிவிருத்திகளை மூடிமறைக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சி கூட்டணியை எதிர்க்கின்ற ஒரே கட்சி என்பதுடன், அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கம் மற்றும் போராட்டங்களுக்கு ஒரு தெளிவான சோசலிச முன்னோக்கையும் வழங்குகிறது.
ஜேர்மனி முழுவதும் தேர்தலில் நிற்கும் SGP, பல தொடர்ச்சியான தேர்தல் கூட்டங்களில் அதன் வேலைத்திட்டத்தை முன்வைத்து வருகிறது. அதன் வேலைத்திட்டம் குறிப்பிடுகிறது:
“நாங்கள் தேசியவாதத்தின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து வடிவங்களையும் சமரசத்திற்கிடமின்றி எதிர்க்கிறோம். ஐரோப்பா பிளவுபட்டிருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்களுக்கு இடையில் இல்லை, மாறாக உழைக்கும் மக்களுக்கும் மற்றும் தன்னைத்தானே வெட்கமின்றி செழிப்பாக்கி கொண்டே இருக்கும் ஒரு சிறிய உயரடுக்கு வர்க்கத்திற்கும் இடையே பிளவுபட்டுள்ளது. பரந்த சமூக அடுக்குகளை மானக்கேடான வறுமைக்குள் தள்ளியுள்ள கடுமையான சிக்கன கொள்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பாகும். இராணுவவாதம் மற்றும் போரின் மீள்வருகைக்கும், ஒரு பொலிஸ் மற்றும் கண்காணிப்பு அரசை ஸ்தாபிப்பதற்கும், மற்றும் பத்தாயிரக் கணக்கான அகதிகளை நிச்சயமான மரணத்திற்குத் தள்ளுகின்ற படையரண் ஐரோப்பாவைப் பலப்படுத்துவதற்கும் அதுதான் உந்துசக்தியாக உள்ளது. அதுதான் வலதுசாரி மற்றும் பாசிசவாத சக்திகளுக்கான விளைநிலமாக உள்ளது.
“ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எங்களின் பதில். நாங்கள் ஒரு சோசலிச அடித்தளத்தில் பொருளாதாரத்தை மறுஒழுங்கு செய்கின்ற, பெரும் செல்வந்தர்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களிடம் இருந்து செல்வவளத்தைப் பறிமுதல் செய்கின்ற தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக போராடுகிறோம்.”