Print Version|Feedback
100 years ago: British massacre hundreds in Punjab
100 வருடங்களுக்கு முன்பு: பஞ்சாபில் நூற்றுக்கணக்கானவர்கள் பிரிட்டிஷாரால் படுகொலை செய்யப்பட்டனர்
அமிர்தசரஸ் படுகொலை பற்றிய ஒவியரின் படைப்பு
1919 ஏப்ரல் 13 அன்று, சீக்கியர்களின் பொற் கோயில் இருக்கும் பஞ்சாபின் நகரமான அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் எனும் பொதுமக்கள் பூங்காவில் போராட வந்திருந்த பொதுமக்களின் கூட்டத்தை கர்னல் ரெஜினால்ட் டயர் கீழ் இருந்த பிரிட்டன் இந்திய இராணுவ படைகள் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளென 379 இலிருந்து 1,526 பேர்வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷாரால் ஏப்ரல் 10அன்று கைது செய்யப்பட்டு ரகசியமாக நாடுகடத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பஞ்சாப் தலைவர்களான சத்ய பால் மற்றும் சைபுடீன் கிட்சலேவ் ஆகியோரை விடுவிக்கக் கோரும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தேசியாவாதிகள் அறைகூவல் விடுத்தனர்.
அவர்களது எதிர்ப்புக்கான காரணம், டெல்லியில் சட்டமன்ற குழுவால் இயற்றப்பட்ட ரெளலட் சட்டமாகும், அது மிகப்பெரும் அளவில் இந்தியர்களை கைது செய்தல் மற்றும் எந்த விசாரணையுமின்றி இரண்டு வருடங்களுக்கு மேல் சிறையில் வைத்திருத்தல், வரம்புக்குட்பட்ட பேச்சுரிமை மற்றும் இயக்கம் போன்ற கொடூரமான ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு தொகை நடவடிக்கைகளைக் கொண்டிருந்த 1915 இந்திய போர்கால பாதுகாப்பு சட்டத்தினை நீட்டிப்பதாக இருந்தது.
ஏப்ரல் 6 அன்று இந்திய தேசியவாதிகள் ஏற்கனவே ஒரு ஹர்த்தாலை (சிறு வணிகங்களை மூடியும் மற்றும் பொதுவேலைநிறுத்தம் செய்தல்) தலைமையேற்று நடத்தியிருந்தனர். குறிப்பாக பஞ்சாபில் ரெளலட் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. “கிட்டத்தட்ட மொத்த லாகூர் மக்களும் தெருவில் இருந்தனர். சுமார் 20,000 என மதிப்பிடக்கூடிய மிகப்பெரும் கூட்டம் அனார்களி ஊரைக் கடந்து சென்றது. ” என்று ஒரு வரலாற்றாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
ரெளலட் சட்டத்தின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவர் பஞ்சாப்பின் லெப்டினென்ட் கவர்னரான மைக்கேல் ஓ’டியர் இருந்தார். அவர் பிரிட்டன் அரசுக்கு எதிராக இந்தியாவில் மிகவும் போர்குணமிக்க தேசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை எதிர்ப்பவராக இருந்தார்.
ஏப்ரல் 13 அன்று பைசாகி விடுமுறையாக இருந்தது. அது சீக்கியர்களின் புதுவருடத்தை குறிக்கும் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்தி பொருட்களையும் கால்நடைகளையும் விற்பதற்கு அமிர்தசரஸில் கூடியிருந்தனர். ஏற்கனவே கால்நடை சந்தையை பிரிட்டிஷார் மூடிவிட்டநிலையில் ஜாலியன்வாலா பாக் இல் பல விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த படுகொலைச் சம்பவம் மிகவும் பயங்கரமாக இருந்தது. கூட்டம் கலைந்து போவதற்கு கட்டளைகூட இடவில்லை கேணல் டயரின் படை எந்தவித முன் எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கி சூட்டினை நடத்தியது.
ஏகாதிபத்திய மிருகத்தனத்திற்கு புதியவராக இல்லாத வின்சன்ட் சர்ச்சில் ஒரு வருடம் கழித்து மக்கள் சபையில் இந்த படுகொலையை விபரித்தார்: “டிராபல்கர் சதுக்கத்தைவிட மிக சிறிய மற்றும் குறுகிய இடத்திற்குள் மாட்டி எந்த வழியிலும் வெளியேற முடியாமல் அடைத்துவைக்கப்பட்டதால் ஒரு துப்பாக்கி குண்டு மூன்று நான்கு உடல்களை தாண்டி போனது, இந்த வழியா அந்த வழியா என மக்கள் பைத்தியங்களைப் போல் ஓடினார்கள். துப்பாக்கிகளை மையத்தை நோக்கி சுட்டபோது அவர்கள் பக்கங்களை நோக்கி ஓடினார்கள். பின்னர் பக்கங்களை நோக்கி சுட்டனர். அநேகர் தரையில் விழுந்தனர் பின்னர் தரையினை நோக்கி கீழே சுட்டனர். இது 8 முதல் 10 நிமிடங்கள்வரை நீடித்தது மேலும் வெடிமருந்துகள் தீர்ந்தபின்னரே இது நிறுத்தப்பட்டது”
டயர் மற்றும் ஓ’டியர் இருவரும் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தினர் மேலும் அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்படவில்லை. இந்த சம்பவம் இந்திய மக்கள் மத்தியில் தீவிரவாத விளைவை ஏற்படுத்தியது, படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு நபரால் 1940 இல் ஓ’டியர் படுகொலைசெய்யப்பட்டார்.