ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SGP-Kandidat Ratnamaheson beantwortet Fragen des SWR

SWR தொலைக்காட்சியின் கேள்விகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் இரத்தினமகேசன் பதிலளிக்கின்றார்

By our reporters,
April 11, 2019

சோசலிச சமத்துவக் கட்சி (SGP) தனது ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலுகளுக்க்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. பல நகரங்களில் தனது தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதுடன் பல தகவல் நடுவங்களும், கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நேற்று சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் இரத்தினமகேசன் SWR தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். SWR தொலைக்காட்சியானது ஜேர்மனியின் முக்கிய தொலைக்காட்சி சேவையான ARD இனது இரண்டாவது பெரிய பிராந்திய ஒளிபரப்பாகும்.

ஐரோப்பிய தேர்தல் பற்றிய தனது ஒளிபரப்பில் தேர்தலில் கலந்துகொள்ளும் அனைத்துக் கட்சிகளிடமும் ஏழு கேள்விகளை முன்வைத்தது. ஒரு கேள்விக்கு பதிலளிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு நிமிடகால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நேர்காணலானது நேரடியாக ஒளிபரப்பபட்டது.


SWR தொலைக்காட்சி நிலையத்தில் SGP வேட்பாளர் சரவன் இரத்தினமகேசன்

சரவன் இரத்தினமகேசன் (65 வயது) சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு அங்கத்தவராவார். இவர் கணனி தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றார். இலங்கையை பூர்வீக பிறப்பிடமாக கொண்ட அவர் 1978 இல் ஜேர்மனிக்கு அரசியல் தஞ்சம்கோரி குடிபெயர்ந்தார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் 1987 இல் ட்ரொஸ்கிச இயக்கத்தில் இணைந்துகொண்டார். அக்காலகட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்களின் அரசியல் திவால்நிலை காரணமாக சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகவும் போராட முன்வந்த பல தமிழ் தொழிலாளர்களில் இவரும் ஒருவராவார். இவர் க.நேசன் என்ற புனைபெயரில் உலக சோசலிச வலைத் தளத்தில் இலங்கை மற்றும் இந்தியா தொடர்பாக கட்டுரைகளை எழுதுகின்றார்.

தொலைக்காட்சி சேவையானது பிராந்தியரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட கேள்விகளை முன்வைத்தபோதிலும் சோசலிச சமத்துவக் கட்சியின் அடிப்படையான முன்னோக்கை விளங்கப்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை எங்களது வேட்பாளர் பயன்படுத்திக்கொண்டார்.

முதலாவது கேள்வி “தென்மேற்கு ஜேர்மனியின் பலநகரங்களில் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது, ஐரோப்பிய ஒன்றிய அளவிலான ஒன்றுதழுவிய டீசல் வாகன பிரச்சனைக்கான தீர்வு என்ன”?. இதற்கு அவர் “சோசலிச சமத்துவக் கட்சியானது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பிரிவாகும். நாங்கள் பிரான்சிலும் பிரிட்டனிலுமுள்ள எமது சகோதர கட்சிகளுடன் இணைந்து ஐரோப்பிய தேர்தலில் பங்குபற்றுகிறோம். நாம் தேர்தலில் கலந்து கொள்வது வலதுசாரி சக்திகளின் எழுச்சிக்கும், இராணுவவாதத்திற்கும் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதனை மையமாக கொண்டிருக்கின்றது. மேலும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவர்கள். நாம் ஐரோப்பாவை ஒரு சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதற்காக போராடுகின்றோம்.

டீசல் வாகன பிரச்சனையானது வாகனத் தொழிற்துறையின் குற்றத்தனமான ஏமாற்று வேலைகளின் நேரடி விளைவாகும். அவர்கள் முற்றுமுழுதாக தெரிந்திருந்தும் ஏமாற்றுவேலைகள் செய்யப்பட்ட டீசல் வாகனங்களை விற்பனை செய்தனர். இதற்கு பொறுப்பான எவரும் தண்டிக்கப்படவுமில்லை, இதனால் பாதிப்பிற்குள்ளான எந்தவொரு வாகன உரிமையாளருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படவுமில்லை.

நாங்கள் வாகன தொழிற்துறையையும் மற்றும் வங்கிகளையும் பாரிய நிறுவனங்களையும் நஷ்டஈடு ஏதுமின்றி பறிமுதல் செய்ய முன்மொழிகின்றோம். இதன் மூலம்தான் உற்பத்தியை வெகுஜனங்களின் ஜனநாயக ரீதியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிவதுடன், இவ்வாறான குற்றவியல் நடவடிக்கைகள் தடுக்கப்படவும் முடியும்.

இரண்டாவது கேள்வியாக “யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஐரோப்பிய ஒன்றியமானது உறுதியாக ஒன்றாக இணைந்துள்ளபோதிலும் நிதியியல் நெருக்கடிக்கு இலகுவாக பாதிக்கப்படுக்கடியதாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எவ்வாறு நிதியியல் ரீதியாக உறுதியாக ஒன்றுக்கொன்று துணையாக நிற்க முடியும்”?

இதற்கு அவர் “ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஐக்கியப்பட்ட ஒருங்கிணைப்பு அல்ல. இது  ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கு எதிராக ஐரோப்பிய நிறுவனங்களினதும் வங்கிகளினதும் ஒரு கூட்டாகும். யூரோ நாணயமானது பலவீனமான ஐரோப்பிய நாடுகளை கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. பலவீனமான நாடுகளின் இழப்பில் பொருளாதாரரீதியாக பலமான நாடுகளான ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பிய ஒன்றிணைந்த சந்தை மூலம் இலாபமடைந்தன. 2009 இல் ஜேர்மனியானது கிரேக்கத்தில் ஒரு கடுமையான சமூக சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியது. மில்லியன் கணக்கான கிரேக்க தொழிலாளர்கள் தமது வேலைகள், சுகாதார சேவைகள் மற்றும் சமூகநல வசதிகளை இழந்தனர்”.

“ஜேர்மன் அரசாங்கமானது கிரேக்கத்தின் நெருக்கடியிலிருந்து இலாபமடைந்தது. 2010 இலிருந்து 2017 வரை ஜேர்மனி 2.9 மில்லியன் யூரோவை கிரேக்கத்தின் அரசு கடன் நிதியிலிருந்து வட்டியாக பெற்றுக்கொண்டது. இத்தொகையின் மூலம் ஜேர்மனியின் வரவு-செலவு திட்டத்தின் குறைபாடுகள் தீர்க்கப்பட்டது”.

மூன்றாவது கேள்வியாக மோசமான மலிவூதியம் தொடர்பாக கேட்கப்பட்டது. இதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் என்ன செய்ய முடியும். “இந்த கேள்விக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏதாவது தீர்வை எதிர்பார்ப்பது ஒரு அபாயகரமான நப்பாசையாகவே இருக்க முடியும்” என பதிலளித்த எமது வேட்பாளர், “இவ்வாறான ஒரு கொடூரமான சுரண்டலை சாத்தியமாக்கிய சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் இயற்றியதே ஐரோப்பிய ஒன்றியம்தான். VW, Daimler, Audi உட்பட அனைத்து ஜேர்மன் வாகன உற்பத்தியாளர்களும் தமது வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உற்பத்தி செய்கின்றன. அங்கு அவை மலிவான கூலியில் தொழிலாளர்களை சுரண்டுகின்றன”.

“ஜேர்மனியில் மில்லியன் கணக்கான மக்கள் தமது வாடகைக்கும் வாழ்வாதாரத்திற்கும் போதாத மலிவு ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் ஏழ்மை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, 2017 இல் ஜேர்மனியில் 15.5 மில்லியன் மக்கள் ஏழ்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்”.

அதிகரிக்கும் மலிவு ஊதியத்திற்கு காரணமான தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி அவர் குறிப்பிடுகையில், “உற்பத்தியானது வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுவிடும் என்று அச்சுறுத்துவதன் ஊடாக குறைந்த ஊதியத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அச்சுறுத்துகின்றனர். இது ஐரோப்பிய தொழிலாளர்களை அவர்களின் வர்க்க சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரிக்கும் ஒரு வலதுசாரிப் பிரச்சாரமாகும்“.

இதைத்தொடர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயக் கொள்கை தொடர்பாக கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் “ஐரோப்பிய ஒன்றிய விவசாய மானிய கொள்கையானது பாரிய விவசாய நிறுவனங்களுக்கு பொருத்தமாக உருவாக்கப்பட்டதாகும். ஐரோப்பிய ஒன்றித்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளினால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகள் தமது பண்ணைகளை கைவிட நிர்ப்பந்திக்கபட்டு அவர்களது வருமானம் அழிக்கப்பட்டுள்ளது.

இலாபத்தை அதிகரிப்பதற்காக சுற்றுச்சூழல் பாதிப்பும், ஒரேமாதிரியான உற்பத்தியை செய்வதும் ஊக்குவிக்கப்படுகின்றது. இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஜனநாயகரீதியான கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதன் மூலமே விவாசாயத்துறை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாது ஒழுங்கமைக்கப்படுவதுடன் மற்றும் பொதுமக்களின் தேவைக்கேற்ப உற்பத்திசெய்யப்படவும் முடியும்.

ஐரோப்பாவானது அகதிகளின் நெருக்கடிக்கு எவ்வாறான தீர்வை முன்வைக்க முடியும் என SWR அறிந்துகொள்ள விரும்பியது. இதற்கு “இந் நெருக்கடிக்கு ஐரோப்பா இப்போது எவ்வாறு பதிலளிக்கின்றது?” என இரத்தினமகேசன் திருப்பிக் கேட்டார். “ஐரோப்பிய ஒன்றியமானது ஐரோப்பாவை தடைமுகாம்கள், காவல் அரண்கள் மற்றும் முள்வேலிகளால் அடைக்கப்பட்ட அகதிகள் சிறைக்கூடமாக மாற்றியுள்ளது. ஐரோப்பிய பாதுகாப்பு அரணுக்கான வெளிநாட்டவரை வெளியேறு என்ற கொள்கையானது மத்தியதரைக் கடலில் 34,000 பேரை கொல்லும் ஒரு படுகொலைக்கு இட்டுச்சென்றுள்ளது”.

“ஐரோப்பாவிலுள்ள அனைத்து ஸ்தாபக கட்சிகளாலும் பின்தொடரப்படும் இந்த தேசியவாத மற்றும் வெளிநாட்டவருக்கு எதிரான கொள்கையானது, ஐரோப்பா முழுவதும் பாசிச, வலதுசாரி சக்திகளின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது. ஜேர்மன் அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான கொள்கையானது தீவிர வலதுசாரி AfD கட்சியினால் வழிநடாத்தப்படுகின்றது”.

“இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நேட்டோவினால் நடாத்தப்படும் போர்களை ஆதரிக்கின்றன. இதனால் இந்த நாடுகள் அழிவுக்குள்ளாக்கப்பட்டு மக்கள் நாட்டைவிட்டு தப்பியோடுகின்றர். சோசலிச சமத்துவக் கட்சியானது அகதி அந்தஸ்த்து கோரும் உரிமையை எவ்வித நிபந்தனையுமின்றி பாதுகாக்கின்றது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் தான் வாழ்வதற்கும் தொழில்புரிவதற்குமான நாட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை உள்ளது”.

எல்லைகளற்ற மொபைல் தகவல்தொடர்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர், “இணையமானது ஒரு சிறந்த ஜனநாயகரீதியான வழிமுறையாகும். மற்றும் இது உலகரீதியான மக்களின் கூட்டுழைப்பை வேண்டி நிற்கின்றது. ஆனால் இது பல பில்லியன் பெறுமதி கொண்ட ஒரு சில நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. கூகிள் மற்றும் பேஸ்புக் உலகத்திலுள்ள அனைத்து அரசாங்கங்களுடனும் நெருக்கமாக கூடி வேலைசெய்து இணையத்தை தணிக்கை செய்கின்றன. அனைத்து சோசலிச எதிர்ப்பும் மற்றும் எந்தவொரு எதிர்ப்பு குரலும் இணையத்தில் ஒடுக்கப்பட வேண்டுமென அவை கோருகின்றன”.

பல நகரங்களில் ஒட்டப்பட்டுள்ள கட்சியின் தேர்தல் சுவரொட்டிகள் அசாஞ்சை விடுதலை செய், மானிங்கை விடுதலை செய் எனக் கோருவதை இரத்தினமகேசன் சுட்டிக்காட்டினார்.

“விக்கிலீக்ஸின் ஸ்தாபகரான அசான்ஞ் லண்டனிலுள்ள ஈக்குவடோரின் தூதரகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டு வெளி உலகத்துடன் தொடர்பின்றி வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து வெளியேறினால் மரண தண்டனையை எதிர்நோக்கி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம். அவர் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அவர் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்யப்பட்ட போர் குற்றங்கள் பற்றிய ஆவணங்களை அம்பலப்படுத்தி இணையத்தில் வெளியிட்டதாகும்”.

இறுதிக் கேள்விக்கு பதிலளிக்க தனக்கு அதிக நேரம் தேவைப்பட்டதாக குறிப்பிட்ட இரத்தினமகேசன், உங்களது பார்வையில் “2030 பின்னர் ஐரோப்பா எவ்வாறு இருக்கும்” என நீங்கள் கருதுகின்றீர்கள் என்று கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.

அவரின் பதிலை நாங்கள் முழு வடிவத்தில் கீழே தருகின்றோம்:

“ஐரோப்பா இன்று ஒரு தேர்வின் முன்னே நிற்கின்றது. அது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதுதான். கடந்த காலத்தின் ஆவியுருக்கள் எல்லாம் இன்று மீண்டும் கண்முன்னே வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றித்தின் தொழிலாளர்கள் முதலாளித்துவ அரசாங்கங்களை தூக்கிவீசி ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை உருவாக்கவில்லை எனில் சர்வாதிகாரமும் பாசிசமும் போர்களும் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் வலதுசாரி அமைப்புகளில் தங்கியுள்ளன. 1945 க்குப் பின்னர் ஜேர்மனியில் முதல் தடவையாக நவ-பாசிச கட்சி பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்றது. ஆனால் இந்த முறை அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்!. இந்த தடவை நூரெம்பேர்க் விசாரணைகள் போருக்கு பின்னரல்ல போருக்கு முன்னரே நடாத்துவதற்கு நாம் அனைத்தையும் செய்வோம்.

அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு வளர்ச்சியடைகின்றது. பிரான்சில் ஐந்தாவது மாதமாக மஞ்சள் சீருடையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவும் போலந்திலும் ஆசிரியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த போராட்டங்களை வெற்றிக்கு இட்டுச்செல்வதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய கட்சி தேவைப்படுகின்றது. சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி, பசுமைக் கட்சி ஆகியவை ஐரோப்பிய ஒன்றித்தினது முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் சார்பாக நிற்கின்றன. இதனால் தான் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது அவசியமாகின்றது.

நாங்கள் ஐரோப்பிய ஒன்றித்தை நிராகரிக்கின்றோம். அது வங்கிகளினதும் பெருநிறுவனங்களினதும் ஒரு கருவியாகும். நாங்கள் ஐரோப்பிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காகவும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காகவும் போராடுகின்றோம்”.