ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The resurgence of the class struggle in Poland

போலாந்தில் வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி

Johannes Stern and Alex Lantier
11 April 2019

தளபதி Wojciech Jaruzelski இன் ஸ்ராலினிச ஆட்சி தோல்வியடைய தொடங்கி முதலாளித்துவ மீட்சிக்கு வழி வகுத்து முப்பதாண்டுகளுக்குப் பின்னர், போலாந்தில் மீண்டும் வர்க்கப் போராட்டம் வெடித்துள்ளது. திங்களன்று, 300,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். பல தசாப்தங்களுக்குப் பின்னர் போலாந்து ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்வது இதுவே முதல்முறையாகும், இது ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு எதிராக நடந்த பாரிய 1980-81 வேலைநிறுத்த இயக்கத்திற்கு பிந்தைய போலாந்தின் மிகப் பெரிய வேலைநிறுத்தங்களில் ஒன்றாகும்.

இந்த வேலைநிறுத்தமானது, சிறந்த வேலையிட நிலைமைகள், சம்பள உயர்வுகள் மற்றும் தகுதிவாய்ந்த பள்ளிகளைக் கோரும் கல்வியாளர்களின் ஒரு சர்வதேச போராட்ட அலையின் பாகமாக உள்ளது. ஒரு கால் நூற்றாண்டில் வேலைநிறுத்தத்தில் இறங்கிய அமெரிக்க ஆசிரியர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை 2018 ஆண்டு கண்டது. பிரான்ஸ், துனிசியா, மொரோக்கோ மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகளில் நடந்துவரும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினாவிலும் தேசியளவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன.

ஆசிரியர்கள் வேலைநிறுத்தமானது, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த மேலெழுச்சியின் பாகமாகும். போலாந்தில் கல்வியாளர்களின் வெளிநடப்பு, தேசிய விமானச்சேவை LOT தொழிலாளர்களின் இரண்டு வாரகால வேலைநிறுத்தம் மற்றும் போலாந்து அமசன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை பின்தொடர்ந்து வருகிறது. சமீபத்திய மாதங்கள் ருமேனியா, ஹங்கேரி, செக் குடியரசு, சேர்பியா மற்றும் கொசோவோவாவில் வாகனத்துறை மற்றும் ஏனைய தொழிற்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை கண்டுள்ளன, அத்துடன் ஹங்கேரியில் விக்டர் ஓர்பனின் வலதுசாரி ஆட்சி சம்பளமின்றி மிகைநேர வேலையை ஏற்க தொழிலாளர்களை நிர்பந்திக்கின்ற நிலையில், அது ஏற்றுள்ள "அடிமைச் சட்டம்" என்றழைக்கப்படுவதற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடந்தன.

ஜேர்மனியில், பள்ளிக்கூடங்கள் உருக்குலைந்து போவதற்கு எதிராகவும், சகிக்கவியலாத வேலையிட நிலைமைகள் மற்றும் வறிய சம்பளங்களுக்கு எதிராகவும் பெப்ரவரியில் நடந்த அடையாள வேலைநிறுத்தங்களில் பத்தாயிரக் கணக்கான பொதுத்துறை தொழிலாளர்கள் பங்குபற்றினர். மார்ச்சில் ஆயிரக் கணக்கான போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் பேர்லினில் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், இது அந்நகரையே ஸ்தம்பிக்கச் செய்தது. கடந்த சனிக்கிழமையன்று, அதிகரித்து வரும் வாடகைகளுக்கு எதிராக பேர்லினில் 40,000 பேர் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்களைப் பறிமுதல் செய்யக் கோரி போராடினர்.

இத்தகைய போராட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கம் மேலெழுந்து விடுமோ என்று முதலாளித்துவம் அஞ்சுகிறது. ஜேர்மன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும்பான்மையினர் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதற்கான கோரிக்கையை ஆதரிக்கின்றனர் என்பதை ஒரு கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டிய போது, Frankfurter Allgemeine Zeitung மிரண்டு போனது. தடுமாறிப் போன, ஜேர்மன் வங்கிகளுக்கான இந்த ஊதுகுழல் பின்வருமாறு கருத்துரைத்தது: “பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பின்னர், கார்ல்-மார்க்ஸ்-சாலை [Karl-Marx-Allee, சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்த பேர்லின் பெருவீதி] சோசலிசத்தின் மறுஅறிமுகத்திற்கு ஒரு முன்னறிவிப்பாக ஆகியுள்ளது. புரட்சி நீடூழி வாழட்டும்.”

போலாந்து ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் உத்தியோகபூர்வ சொல்லாடல்களைச் சிதறடிப்பதனால், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் நடைமுறையளவில் அதை இருட்டடிப்பு செய்து வருகின்றன. ஸ்ராலினிச சர்வாதிகாரங்களின் முதலாளித்துவ மீட்சியானது வர்க்கப் போராட்டத்தை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசிவிடவில்லை. தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் முதலாளித்துவ மீட்சியின் விளைபயன் மீது சீறிய எதிர்ப்பையும் மூர்க்கமாக ஒடுக்கிய ஸ்ராலினிச ஆட்சிகளின் பொருளாதார தன்னிறைவு கொள்கைகள் மற்றும் தேசிய கொள்கைகள் இரண்டுக்கும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் ஆழமாக-வேரூன்றிய எதிர்ப்பு நிலவுகிறது.

20 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் மிகவும் போர்குணத்துடன் இருந்தவற்றில் போலாந்து தொழிலாள வர்க்கம் உள்ளடங்கி இருந்தது. அது 1956 இன் "போலாந்து அக்டோபர்", டிசம்பர் 1970 தொழிலாளர்களின் மேலெழுச்சி மற்றும் Gdansk இன் லெனின் கப்பல்கட்டும் தளத்தில் தொடங்கி ஒட்டுமொத்த நாடு எங்கிலும் பரவிய, 400,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபற்றிய 1980 பாரிய வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றின் போது சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிராக நினைவார்த்தமான போராட்டங்களுக்கு தலைமை வகித்தது.

ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சி தவிர்க்கவியலாமல் ஸ்ராலினிசத்திற்கு இட்டுச் சென்றது என்ற வாதம் ஒரு பொய்யாகும். ஸ்ராலினிச ஆட்சியைச் சமரசமின்றி எதிர்த்து, உலக சோசலிச புரட்சிக்கான வேலைத்திட்டத்திற்காக போராடிய, போல்ஷிவிக் தலைமையிலான புரட்சியை வழிநடத்தியிருந்த ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீடு அங்கே இருந்தது என்ற வரலாற்று உண்மையை இது மறுத்தளிக்கிறது. அந்த மாற்றீடு தான் இடது எதிர்ப்பு, இது ஸ்ராலினிச தலைமையிலான மூன்றாம் அகிலத்தின் தோல்வி மற்றும் காட்டிக்கொடுப்புக்குப் பின்னர் 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கச் சென்ற லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையின் கீழ் 1920 களின் தொடக்கத்தில் மேலெழுந்தது.

கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் 1940 களின் இறுதியில் அதிகாரத்துவரீதியில் முதலாளித்துவ சொத்துடைமையை பறிமுதல் செய்தன, ஆனால் அவை சோசலிசமாக இருக்கவில்லை. அந்நாடுகளில் ஸ்ராலினிச சர்வாதிகாரங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் பல போராட்டங்கள், ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த மாற்று முன்னோக்கிற்கு, அதாவது சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட சர்வதேச புரட்சிகர போராட்டத்தின் பாகமாக அரசு அதிகாரத்துவங்களுக்கு எதிராக ஓர் அரசியல் புரட்சிக்கு, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புறநிலையான அடித்தளம் இருந்ததை எடுத்துக்காட்டியது.

கிழக்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மீண்டுமொருமுறை போராட்டத்திற்குள் நகர்ந்து வருகின்ற நிலையில், இத்தகைய முக்கிய அரசியல் வரலாற்று அனுபவங்கள் உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அந்த பிராந்தியம் எங்கிலும் தொழிலாளர்கள் போர் அபாயங்கள் மற்றும் எதேச்சதிகார ஆட்சியை முகங்கொடுக்கையில், போலாந்து வேலைநிறுத்தமானது மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் முதலாளித்துவத்தை மீட்டமைக்க போலாந்து ஸ்ராலினிச ஆட்சியுடன் சேர்ந்து செயல்பட்ட சக்திகளுடன் ஆசிரியர்களை நேரெதிராக மோதலுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

இன்று, சோலிடாரிட்டி சங்கம் (Solidarity union) பகிரங்கமாகவே போலாந்தின் அதிவலது சட்டம்-நீதிக் கட்சி (PiS) அரசாங்கத்துடன் அணிசேர்ந்த ஒரு வலதுசாரி இயக்கமாக உள்ளது. அதன் ஆசிரியர்கள் பிரிவு தான், அரசாங்கத்தின் தண்டிக்கும் வகையிலான நிபந்தனைகளை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொண்ட ஒரே தொழிற்சங்கமாக இருந்தது. திங்கட்கிழமை வேலைநிறுத்தம் தொடங்கிய பின்னர், சோலிடாரிட்டி ஆசிரியர் சங்கத் தலைவர் Ryszard Proksa, இவர் PiS உள்ளாட்சியில் அரசு அதிகாரியாகவும் உள்ளார் என்னும் நிலையில், வெளிநடப்பு செய்த ஆசிரியர்களைக் கண்டித்ததுடன், வேலைநிறுத்தம் செய்யும் சங்கக் கிளைகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அச்சுறுத்தினார்.

போலாந்தின் பிரதான ZNP சங்கம், அதன் பங்கிற்கு, வேலைநிறுத்தத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர முயன்று வருகிறது. தொழிற்சங்கம் "இந்த நெருப்பை அணைக்க" விரும்புவதாக, அதாவது PiS உடன் ஓர் அழுகிய உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புவதாக, ZNP தலைவர் Sławomir Broniarz தெரிவித்துள்ளார்.

ஸ்ராலினிச ஆட்சியின் நான்கு தசாப்தகால அதிகாரத்துவ ஒடுக்குமுறைக்குப் பின்னர், முதலாளித்துவ மீட்சியின் மூன்று தசாப்த காலத்தைப் பின்தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் முன்னோக்கு மற்றும் தலைமையின் நெருக்கடியை முகங்கொடுக்கிறார்கள். வேலைநிறுத்தத்தை நடத்துவதற்கான இன்றியமையா தேவைகளானது, தொழிலாளர்களாலேயே நேரடியாக கட்டுப்படுத்தப்படும் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர்களின் புதிய அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டிய தேவையை உயர்த்துகிறது. ஆனால், போலாந்து வரலாறு குறிப்பாக, இந்த சாமானிய தொழிலாளர்களின் அமைப்புகள் வகிக்கக்கூடிய பாத்திரம் முக்கியமாக அவற்றின் தலைமைக்கான முன்னோக்கைச் சார்ந்துள்ளது என்ற ஒரு கூர்மையான படிப்பினையை வழங்குகின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) பாதுகாத்த ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்கும் மற்றும் ஸ்ராலினிச கட்சிகளை ஒரு புரட்சிகர பாத்திரம் வகிக்க அழுத்தமளிக்க முடியும் என்று கூறி நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தைக் கைவிட்டு ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிய குட்டி-முதலாளித்துவ பப்லோவாதிகள் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கும் இடையிலான மோதல் தான் போலாந்தில் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மேலெழுந்த மத்திய பிரச்சினையாக இருந்தது.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான நிஜமான, சுயாதீனமான தொழிலாள வர்க்க எதிர்ப்பிலிருந்து மேலெழுந்த சோலிடாரிட்டி இயக்கம், அதன் உச்சத்தில் 10 மில்லியன் தொழிலாளர்களை ஒழுங்கமைத்தது. ஆனால் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஓர் அரசியல் புரட்சியின் போக்கில் அல்லாமல் மாறாக முதலாளித்துவ மீட்சியின் போக்கில் போலாந்தை இட்டுச் சென்ற ஒரு வலதுசாரி தலைமையின் கீழ் அது வீழ்ந்தது.

இதில் ஜாசெக் கூரோன் (Jacek Kuroń) போன்ற பப்லோவாத பிரமுகர்கள் முக்கிய பாத்திரம் வகித்தனர். லேக் வலேசா (Lech Wałęsa) ஐ சோலிடாரிட்டியின் தலைமைக்கு கூரோன் ஊக்குவித்தார், அதன் தலைவர் ஆன வலேசா, பின்னர் போலாந்து முதலாளித்துவ அரசாங்கத்தின் ஜனாதிபதி ஆனார். கூரோன் அவரே கூட 1989 இல் வட்டமேசை மாநாட்டு பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்ததுடன், 1989-1990 மற்றும் 1992-1993 இல் முதலாளித்துவ மீட்சிக்கு இடையே தொழிலாளர் துறை அமைச்சரானார்.

மூன்று தசாப்தகால முதலாளித்துவ ஆட்சி, சோலிடாரிட்டி உட்பட கிழக்கு ஐரோப்பாவின் முதலாளித்துவ "ஜனநாயகப் புரட்சியின்" தீர்க்கதரிசிகள் பொய்யாக வாக்குறுதியளித்ததைப் போல, ஜனநாயகத்தின் மலர்ச்சியையோ, தொழிலாள வர்க்க வாழ்க்கை நிலைமைகளில் முன்னேற்றத்தையோ உருவாக்கவில்லை. முதலாளித்துவ மீட்சி தொழிலாள வர்க்கத்தில் ஒரு சமூக பேரழிவையும், வலதுசாரி மற்றும் பாசிசவாத சக்திகளது அதிகார வளர்ச்சியையும் உருவாக்கி உள்ளது.

ஐரோப்பாவில் மிகவும் சமநிலையற்ற நாடுகளில் போலாந்தும் ஒன்றாகும். “போலாந்தில் சமத்துவமின்மை" என்று தலைப்பிட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கடந்த 30 ஆண்டுகளில் "சமத்துவமின்மையின் அதிகரிப்பைக் கணிசமானளவுக்கு குறைமதிப்பிட்டிருப்பதை" கண்டறிந்தது. “1989 மற்றும் 2015 க்கு இடையே உயர்மட்ட 10 சதவீதத்தினரின் வருவாய் பங்கு 23 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்தது, உயர்மட்ட 1 சதவீதத்தினரின் வருவாய் பங்கு 4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்தது,” என்று அந்த ஆய்வு நிறைவு செய்கிறது.

போலாந்தின் அதிதீவிர தேசியவாத, நேட்டோவை ஆதரிக்கும் PiS அரசாங்கம் போர் வெறிகொண்ட யூத-எதிர்ப்புவாத அரசாங்கமாகும். அது ரஷ்யாவுடனான இராணுவ பதட்டங்களை வாஷிங்டன் அதிகரிப்பதை ஆதரித்துள்ளதுடன், அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு நிரந்தரமான மோதல் அபாயத்தை முன்னிறுத்தும் வகையில், அதன் அண்டைபகுதியில் ரஷ்ய குடியேற்றப்பகுதியான கலினின்கிராட்டுக்கு அருகே நேட்டோ படைகளை நிலைநிறுத்துவதை வரவேற்றுள்ளது.

யூத இனப்படுகொலையின் போது யூதர்களுக்கு எதிராக போலாந்துக்காரர்கள் நடத்திய குற்றங்களைக் குறித்து ஏதேனும் குறிப்பிடுவதை PiS கடந்தாண்டு சட்டவிரோதமாக்கியது. அப்போதிருந்து, போலாந்தில் யூத-எதிர்ப்புவாதம் மற்றும் யூதர்-எதிர்ப்பு படுகொலைகளை ஆராய்ச்சி செய்து வரும் பல வரலாற்றாளர்களும் அவர்களின் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பரில் போலாந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில், பிரதம மந்திரி மத்தேயுஸ் மொராவிஜெஸ்கி (Mateusz Morawiecki) உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் பாசிசவாதிகளுடன் சேர்ந்து போலாந்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு அணிவகுத்தனர்.

சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் PiS க்கும் போலாந்து தொழிலாள வர்க்கத்திடையே எழுந்துவரும் எதிர்ப்பானது ICFI விவரித்த பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது. இன்று, 1930 களைப் போலில்லாமல், அதிவலது இயக்கங்களும் அரசாங்கங்களும் பெருந்திரளான மக்கள் அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அவை அபாயத்தில் குறைந்துவிடவில்லை, ஏனென்றால் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தின் அச்சுறுத்தலுக்கு விடையிறுப்பாக, அரசு, ஸ்தாபக கட்சிகள், ஊடகங்கள் மற்றும் கல்வித்துறை பிரிவுகளிடையே அவை திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கம் நனவுபூர்வமாக தயாரிப்பு செய்யப்பட வேண்டும். விரிவடைந்து வரும் போராட்டங்களுக்கு ஓர் உண்மையான சோசலிச முன்னோக்கு மற்றும் தலைமையை வழங்க, இதற்கு போலாந்திலும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பது அவசியமாகும்.