Print Version|Feedback
No to calls for “national unity” after the burning of Notre Dame in Paris
பாரீசில் நோத்ர்-டாம் தீவிபத்துக்குப் பிந்தைய "தேசிய ஐக்கியத்திற்கான" அழைப்புகளை நிராகரிப்போம்
By Alex Lantier
20 April 2019
பாரீசில் திங்களன்று நோத்ர் டாம் தேவாலயம் மோசமான ஒரு தீவிபத்தில் நாசமடைந்த பின்னர், பிரெஞ்சு ஊடகங்கள் மற்றும் ஆளும் உயரடுக்குகளில் இருந்து வரும் தேசிய ஐக்கியத்திற்கான அழைப்புகள், அவமதிப்புக்குத் தகுதி உடையவையே தவிர வேறெதற்கும் அல்ல. அவற்றின் நோக்கங்கள் வெளிப்படையாக உள்ளன. அரசு எந்திரத்தின் முழு பொறுப்பின்மையை அம்பலப்படுத்தி உள்ள அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் படிப்பினைகள் மீதான அனைத்து விமர்சனபூர்வ பிரதிபலிப்புகளின் குரல்வளையை நெரிப்பதும்; "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் மற்றும் அல்ஜீரிய இராணுவ ஆட்சிக்கு எதிரான பாரிய போராட்டங்களுடன் வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியால் அதிர்ந்து போயுள்ள ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதுமே அவற்றின் நோக்கமாகும்.
புனரமைப்பு வேலையின் போது தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரிய முறையில் இல்லாததே, நோத்ர் டாம் தேவாலயம் நாசமானதற்கு காரணமாகும், அது சிக்கன நடவடிக்கைகளிலும் மற்றும் நிதியியல் பிரபுத்துவம் தன்னைத்தானே ஓயாது செழிப்பாக்கிக் கொண்டதிலும் வேரூன்றி இருந்தது. பிரெஞ்சு அரசு புனரமைப்புக்கான 100 மில்லியன் யூரோ செலவுத்தொகையை வழங்க மறுத்ததால், தேவாலய அதிகாரிகள் சர்வதேச அளவில் பணம் யாசிக்க விடப்பட்டிருந்தார்கள். போதுமானளவுக்கு தீயணைப்பு பாதுகாப்பு பணியாளர்களை வைத்திருக்க வேண்டிய தேவை உட்பட அடிப்படை தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட ஒரு திட்டம் இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தீ பற்றியதற்கான எச்சரிக்கை ஒலி ஒலித்ததும், அந்த பகுதியை அடைந்து பரிசோதனை செய்ய பணியாளர்களுக்கு 20 நிமிடங்கள் ஆகும் என்பதாக இருந்தது.
இராணுவத்திற்கு நூறு பில்லியன் கணக்கில் யூரோக்களைப் பாய்ச்சுகின்ற, செல்வந்தர்களுக்கு வரி வெட்டுக்களைச் செய்கின்ற மற்றும் வங்கி பிணையெடுப்புகளை மேற்கொள்கின்ற மக்ரோனின் சிக்கன கொள்கைகளுக்கு இடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் ஓட்டைகள், நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. திங்களன்று இரண்டு எச்சரிக்கை மணி ஒலிகள் ஒலித்த போதினும், மேல்கூரையின் பெரும்பகுதி எரிந்து கோபுர உச்சியே முறிந்து விழும் வரையில் நோத்ர் டாம் பணியாளர்களால் தீ பற்றிய இடத்தை கண்டறிய முடியாமல் இருந்தது.
இந்த சேதங்களுக்குப் பின்னர், ஓர் அரசியல் சமாதானத்திற்கு வரவும் மற்றும் எல்லா விமர்சனங்களையும் நிறுத்தவும் பிரதான ஊடகங்களும் கட்சிகளும் அழைப்பு விடுத்து வருகின்றன. மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LRM) கட்சியும் நவ-பாசிசவாத தேசிய பேரணியும் (RN) அவற்றின் ஐரோப்பிய பிரச்சாரங்களை தற்காலிகமாக நிறுத்தின. அடிபணியா பிரான்சின் (La France insoumise – LFI) ஜோன் லூக் மெலோன்சோன், “அரசியலில் இருந்து 24 மணி நேரம் விலகி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கும்,” என்று ட்வீட்டரில் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றிய தேர்தலுக்கான LRM வேட்பாளர்களின் தலைவர் Nathalie Loiseau குறிப்பிடுகையில், LRM வேட்பாளர்கள் "இயல்பாகவே தேசிய ஐக்கியத்திற்கான இந்த தருணத்தில் இணைகிறார்கள். அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் வரையில் நாங்கள் எங்களின் பிரச்சாரத்தைத் தற்காலிகமாக நிறுத்துகிறோம்,” என்றார்.
ஐரோப்பா1 வானொலி உணர்ச்சிகரமாக அறிவித்தது, “தீப்பிடித்து எரிந்த தேவாலயத்திற்கு விஜயம் செய்த அனைத்து அரசு அதிகாரிகளும் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். ஜனாதிபதி, பிரதம மந்திரி ... அனைவரும் அவர்களே நேரில் சென்றார்கள். ஒரு மணி நேரத்தில், ஒரு புனிதமான ஒற்றுமை உருவானது. தேசிய நல்லிணக்கத்திற்கான அழைப்பிற்கு அங்கே எந்த ஒத்திசைவற்ற கருத்தும் இருக்கவில்லை, ஒருவேளை ஜோன் லூக் மெலோன்சோன் விதிவிலக்காக இருக்கலாம் ஏனென்றால் அவர் சில நாட்களுக்கு இமானுவல் மக்ரோனை அமைதியாக இருக்குமாறு கேட்டு வந்தார்.”
“புனிதமான ஒற்றுமை"—வரலாற்றுரீதியில், முதலாம் உலக போர் தொடங்க சமூக ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்து முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமைக்கான இந்த பெயர் மற்றும் அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியிலிருந்து மேலெழுந்து அதிகரித்து வந்த சர்வதேச கம்யூனிச இயக்கத்தை எதிர்க்கவும் சூட்டப்பட்ட இந்த பெயரை மேலுயர்த்தியதன் மூலமாக, ஐரோப்பா1 ஒருவிதத்தில் அது உத்தேசித்ததை விட கூடுதலாகவே கூறியிருந்தது.
பிரெஞ்சு "தேசிய ஐக்கியத்திற்கான" இப்போதைய இந்த உத்தியோகபூர்வ பிரச்சாரம், ஏறத்தாழ இரசாயனரீதியில் தேசியவாதத்தின் பிற்போக்கு பாத்திரத்திற்கான சுத்தமான எடுத்துக்காட்டாக உள்ளது, இது சர்வதேச வர்க்க போராட்டத்தின் முக்கியத்துவத்தை மறுத்து தொழிலாளர்களை ஆளும் வர்க்கத்தின் இராணுவ-சிக்கன நடவடிக்கைகளுக்கான கட்டளைகளுக்கு அடிபணிய செய்கிறது. பிரதான கட்சிகள் தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் உத்தியோகபூர்வ கொள்கை மீதான விமர்சனத்தை மவுனமாக்குவதற்கான அழைப்புக்கு தலைமை வகிக்கின்றன என்றாலும், “தேசிய ஐக்கியம்" என்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்று குறிப்பிடுவதை அவை மெடெஃப் வணிக கூட்டமைப்பிடம் ஒப்படைத்தன.
புதன்கிழமை, மெடெஃப் தலைவர் Geoffroy Roux de Bézieux செல்வந்தர்களுக்கான வரி வெட்டுகளையும் மற்றும் இந்த அழிவுக்கு இட்டுச் சென்ற முறையற்ற செல்வவளத்தையும் முழுமூச்சில் பாதுகாக்க BFM-TV இல் உரையாற்றினார். நோத்ர் டாமை மறுகட்டமைப்பதற்கான தேசத்தின் "நம்பவியலாதளவிலான உற்சாகத்தை" புகழ்ந்துரைத்த அவர், “வரி வெட்டுக்கள் மீதான பரிதாபகரமான விவாதங்களை" கண்டித்து கூறுகையில், “பிரான்சில் நீங்கள் அதிக வரி சுமத்தினால், அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். பிரான்சில் மிக அதிகளவில் வரி செலுத்தும் செல்வந்தர்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள்,” என்றார்.
பின்னர், புனரமைப்புக்கு நிதி வழங்க மறுத்த ஆனால் இப்போது பல பில்லியன் யூரோ மதிப்பிலான அந்த தேவாலயத்தின் மறுகட்டமைப்பு திட்டத்திற்கு ஒருசில நூறு மில்லியன் யூரோக்களை வழங்குகின்றன பில்லியனர் ஆர்னோ மற்றும் பினோ குடும்பங்களை Roux de Bézieux புகழ்ந்தார். அவர் கூறினார், “அரசே 100 சதவீதமும் செலுத்தினால், வேறு யார் செலுத்துவார்கள்? நீங்களும் நானும் தான், ஒவ்வொருவரும் தான், வரி செலுத்துவோர்கள் தான். ... ஆகவே உதவுவதற்காக தங்கள் பையில் இருந்து எடுத்துக் கொடுக்க ஒப்புக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் என்பது மகத்தானதென்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
நோத்ர் டாம் தேவாலயத்தின் தலைவிதியும் மெடெஃப்பின் மடத்தனமான பணவெறியும் பிரான்சில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வில் மேலாதிக்கம் செலுத்தும் பொறுப்பற்ற மற்றும் ஒட்டுண்ணித்தனமான ஆளும் வர்க்கத்தின் செல்வவளங்களைப் பறிமுதல் செய்வது மட்டுமே தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் ஒரே வழியாகும். பெரும் செல்வந்தர்களுடன் நல்லிணக்கத்திற்கான தேசியவாத முறையீடுகளை நிராகரித்து அதன் தீர்மானங்களை எதிர்த்து போராடுவதற்கான வர்க்க போராட்டம் மட்டுமே நிதியியல் பிரபுத்துவத்தின் நாசகரமான நடவடிக்கைகள் உருவாக்கும் உடனடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாக உள்ளது.
இதில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் கல்வித்துறை உடன் பிணைந்துள்ள குட்டி-முதலாளித்துவ சக்திகளின் முகமூடிகளைக் கிழித்து அவற்றை எதிர்ப்பது மிக முக்கியம், இவர்கள் "இடது" வேஷத்தில் தேசியவாதத்திற்கு சேவையாற்ற முயல்கிறார்கள், அதேவேளையில் மார்க்சிசம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை மறுக்கிறார்கள். பிரான்சில், தற்போது மெலோன்சோன் இந்த பாத்திரம் வகித்து வருகிறார், தீவிபத்திற்குப் பின்னர் மக்ரோனை அமைதியாக இருக்குமாறு கோரியதற்காக விமர்சனத்திற்கு உள்ளான இவர் பின்னர், அவரது வலைப்பதிவில் "நாம் பகிர்ந்து கொண்ட தேவாலயம்" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், நோத்ர் டாம் இற்கு ஆதரவளிப்பதன் மூலமாக நாத்திகத்துடன் ஒரு பிற்போக்குத்தனமான மத நல்லிணக்கத்தைக் கொண்டு பிரான்சின் தேசிய ஒற்றுமையை நடைமுறைப்படுத்த வாதிட்டார்.
“நாத்திகவாதிகளோ அல்லது ஆத்திகவாதிகளோ, நோத்ர் டாம் நமது பொதுவான தேவாலயம்,” என்று தொடங்கிய மெலோன்சோன், “ஒருபுறம், கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இந்த கட்டிடத்தைக் கட்டமைக்கிறார்கள். ... மறுபுறம், அர்த்தமற்ற பிரபஞ்சத்தின் வெறுமையையும் அபத்தமான மனித நிலைமைகளையும் அறிந்துள்ளவர்கள் அனைத்திற்கும் மேலாக அதை நூறாயிரக் கணக்கான பெண்கள் மற்றும் ஆண்களின் உத்வேகம் மற்றும் உழைப்பின் மகுடந்தரித்த மகிமை என்று பார்க்கிறார்கள்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
வாழ்க்கை அர்த்தமற்றது அபத்தமானது என்ற கண்ணோட்டத்திற்கே நாத்திகம் இட்டுச் செல்கிறது என்ற மெலோன்சோனின் வாதம் மார்க்சிசம் மீதான ஒரு தாக்குதலாகும். “இதுநாள் வரையிலான சமூகத்தின் வரலாறு அனைத்தும் வர்க்க போராட்டத்தின் வரலாறே ஆகும்,” என்று சிறிதும் சமரசமற்ற நாத்திகர்களான கார்ல் மார்க்ஸூம் பிரெடெரிக் ஏங்கல்ஸூம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதினார்கள்.
மார்க்ஸூம் ஏங்கெல்ஸும் வாழ்க்கையை அபத்தமானதாக பார்க்கவில்லை. மெலோன்சோன் 2014 இல் மக்களின் சகாப்தம் என்ற அவர் நூலில் செய்ததைப் போல, வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியை கடந்த சகாப்தத்தின் உயிரற்ற எச்சசொச்சங்களாக கைக்கழுவி உள்ளவர்களான, இருத்தலியல்வாதம் (existentialism) மற்றும் பின்நவீனத்துவத்தில் (postmodernism) ஊறிய குட்டி-முதலாளித்துவ வெகுஜனவாதிகளிடம் மட்டுந்தான் அந்த நிலைப்பாடு ஆதரவைக் காண்கிறது. மறுபுறம் மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் தொழிலாள வர்க்கத்தை மார்க்சிசத்தைக் கொண்டு —அதாவது, வர்க்க போராட்டத்தைப் புரட்சிகரமாக செயல்படுத்துவதற்கான அழிக்கவியலாத விஞ்ஞானபூர்வ செயல்முறை கையேட்டைக் கொண்டு— ஆயுதபாணியாக்கினார்கள்.
மெலோன்சோன் ஐரோப்பிய சிந்தனையின் மீது கணித மற்றும் பௌதீக விஞ்ஞானங்களது பாத்திரத்தைத் தொடர்ந்து தாக்கினார், அவை "ஒரு பயங்கர தடுமாற்றத்தை" உருவாக்குவதாக அவர் வாதிடுகிறார். “... இவ்வாறு இருக்கிறது: அங்கே உண்மை வெளிப்படுத்தப்படுகிறது, அது வெளியிலிருந்து வருகிறது, மதத்தின் மூலமாகவோ அல்லது வழக்கமான முறையிலோ உறுதிசெய்யப்படுகிறது, அது சுய-ஆதாரத்தின் தோற்றத்தை மறுஉத்தரவாதம் செய்வதை தன்மீது திணித்துக் கொள்கிறது. பின்னர் ஒருவரின் சொந்த ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் அவரின் மூளையால் கண்டுபிடிக்கும் உண்மை உள்ளது, இதை ஒவ்வொரு நாளும் சிறுக சிறுக விஞ்ஞானம் நெருங்கிக் கொண்டிருக்கிறது,” என்று அவர் வாதிடுகிறார்.
பிரெஞ்சு சமூகத்தின் மிகப்பெரும் பிளவு நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் இடையே இருப்பதாக காட்டிக்கொள்ளும் மெலோன்சோனின் பாசாங்குத்தனம், மெலோன்சோனின் கருத்துக்களுக்கு ஆதரவாக விஞ்ஞானம் வகிக்கும் பாத்திரம் முன்பினும் அதிக நெருக்கமாக வருகின்றன என்ற கண்ணோட்டத்தைப் போலவே அதேயளவுக்கு வெறும் பொய்யாகும். பிரெஞ்சு மக்களில் வெறும் 4.5 சதவீதத்தினர் மட்டுமே குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை தேவாலய வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்பதை சமீபத்திய ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. மிகப்பெரும் பிளவு வர்க்கமாகும்—இது, ஒரு முதலாளிக்குத் தங்களின் உழைப்பு சக்தியை விற்க நிர்பந்திக்கப்பட்ட அதிகரித்த பெரும்பாலான தொழிலாளர்களையும், நிதியியல் பிரபுத்துவத்தின் ஒட்டுண்ணிகளையும் பிரிக்கின்ற கோடாக உள்ளது.
மதம் மற்றும் நாத்திகத்தை ஒன்றிணைக்கும் ஆசையோடு மெலோன்சோன் தொடங்கி இருந்தாலும், விசித்திரமான முறையில் அவர் பதிவில் நோத்ர் டாம் இன் அமரத்துவத்தைத் துணைக்கு இழுத்து நிறைவு செய்கிறார், இதில் அவர் "மனிதர்கள் சொர்க்கத்தைக் கட்டமைக்க விரும்புவார்கள் என்பதால் சில விடயங்கள் எப்போதும் நிலைத்திருக்கும்,” என்கிறார். இதுபோன்ற வாய்வீச்சு பிரான்சின் பெருநிறுவன ஊடக பண்டிதர்கள் மற்றும் செலதிகாரிகளுக்கு மிகப்பெரியளவில் அழைப்புவிடுக்கிறது என்றாலும், அது உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ அல்லது முதலாளித்துவத்தின் சூறையாடல்களில் இருந்து முக்கிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவோ எதையும் செய்வதாக இல்லை.
ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் உலகெங்கிலும் வர்க்க போராட்டம் அதிகரித்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை அணிதிரட்டி வருகின்ற நிலையில், நிதியியல் பிரபுத்துவத்துடன் தேசிய ஐக்கியத்திற்கு வக்காலத்துவாங்கும் இதுபோன்ற குட்டி-முதலாளித்துவ ஆதரவாளர்களின் எந்தவொரு முன்முயற்சி மீதும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதே முதல் பணியாகும்.