Print Version|Feedback
Sri Lankan bomb survivors and local residents denounce terror attacks
இலங்கையில் குண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களும் உள்ளூர் வாசிகளும் பயங்கரவாத தாக்குதலை கண்டனம் செய்கின்றனர்
By our correspondents
22 April 2019
உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) நிருபர்கள், நேற்று இரண்டு கொடூரமான குண்டுத் தாக்குதல்கள் நடந்த கொழும்பு கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஹட்டுவாபிட்டிய பிரதேச மக்களுடன் உரையாடினர். அவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியாசாலைக்கும் சென்று, உயிர் தப்பியவர்களையும் மற்றும் காணாமல் போயுள்ள தமது உறவினர்களைத் தேடுபவர்களையும் பேட்டிகண்டனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு எதிர்ப்பக்கமாக உள்ள ஜம்பட்டா வீதியில் வசிக்கும் என்.ஏ. சுமனபால கூறியதாவது: “காலை ஆராதனை முடிவடைவதற்கு சற்று முன்னர் 8.45 மணியளவில் ஒரு பெரும் வெடிப்பு நடந்தது. மக்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். சுற்றிவர சிதறிய தசைத் துண்டுகள் காணப்பட்டன. இது ஒரு உயிர்த்த ஞாயிறு என்பதால், கிட்டத்தட்ட 1000 பேர் தேவாலயத்துக்குள் இருந்திருக்க முடியும். உயிர்ப்புக் கொண்டாட்டத்துக்காக பலர் தூர இடங்களில் இருந்து வந்திருந்தார்கள்.
“குண்டுத்தாக்குதல் நடந்து அரை மணித்தியாலத்துக்குப் பின்னர், ஒரேயொரு அம்புலன்ஸ் மட்டுமே வந்திருந்தது. பாதிக்கப்பட்டவர்கள், உள்ளூர் வாசிகளுக்குச் சொந்தமான பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை கார்கள் மூலமே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.”
சுமனபால
சுமனபால பயங்கரவாத தாக்குதலை கோபத்துடன் கண்டனம் செய்தார். “இந்த குண்டுத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும். மிகப் பிரமாண்டமான பேரழிவுகளை ஒவ்வொருவர் மீதும் சுமத்திய 30 வருட யுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு. இனவாதம் மற்றும் குழப்பங்களைத் தூண்டிவிடுவதே இந்த குண்டுத் தாக்குதலின் இலக்காக இருக்க முடியும். இது முழுமையாக கண்டிக்கப்பட வேண்டியது,” என அவர் கூறினார்.
புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகில் வாழும் ஸ்டீபன் பெர்னான்டோ கூறியதாவது: “நான் உறக்கத்தில் இருந்த போது ஒரு பிரமாண்டமான குண்டுவெடிப்பு நடந்திருந்தது. தேவாலயத்துக்குள் குண்டு வெடித்துவிட்டது என அம்மா கூறினார், அதனால் நான் விரைவாக அங்கே ஓடினேன். அங்கே எல்லா இடமும் தசையும் இரத்தமும் பரந்து கிடந்தன. அது என்னை நிலைகுலைய வைத்தது. மக்கள் ஒலமிட்ட வண்ணம் ஓடிக்கொண்டிருந்தார்கள்.”
பெர்னாண்டோ
பெர்னாண்டோ இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டனம் செய்கையில் “இது அமைதியாவாழும் மக்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தூண்டும் ஒரு மோசமான முயற்சி” என கண்டனம் செய்தார்.
இலங்கை வைத்தியசாலை நிர்வாகம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 32ம் இலக்க வாட்டுக்கு மட்டுமே ஊடகங்களை அனுமதித்தது. அங்கு கொச்சிக்கடை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட சிறிய காயத்தை உடைய 35 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
கொழும்புக்கு புறநகர் பகுதியான வத்தளையைச் சேர்ந்த 15 வயது மாணவனான ஷோனல் டானியல் தனது முகத்திலும், வலது கையிலும் காயப்பட்டிருந்தார். அவரது தகப்பனார் WSWS உடன் பேசும்போது, தனதுது மகன் காலைப் பிரார்த்தனைக்கு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு சென்று வருவதற்கு தாமதமாகியதாக தெரிவித்தார். “அவர் தாமதமானதால் நாங்கள் கவலையடைந்திருந்தோம். அதன் பின்பு, தேவாலயத்தில் குண்டு வெடித்துவிட்டதாக கேள்விப்பட்டு அங்கு விரைந்தோம். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்று அறிந்துகொண்டோம். பெரும் பீதியுடன் நாங்கள் இங்கு வந்தோம், ஆனால் அவருக்கு அதிஷ்டவசமாக சிறிய காயமே ஏற்பட்டிருந்தது. இந்த குண்டுத் தாக்குதலானது மிருகத்தனமான குற்றமாகும்.” என்றார்.
ரஞ்ஜித் குமார்
கொழும்பில் சுமை தூக்கும் தொழிலாளியான 42 வயதான ரஞ்ஜித் குமார், எரிகாயங்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். “நான் தேவாலயத்துக்குள்ளே இருந்தேன். திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. பின்பு, இன்னொரு பிரமாண்டமான சத்தத்துடன் அனல் வீசியது. நான் வீசப்பட்டு விழுந்தேன் எப்படியோ சமாளித்து வெளியே வந்தேன்,” என அவர் கூறினார்.
“எனது மனைவி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் காயமேற்பட்டு, 38வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். எனது 10 வயது மகனும் தேவாலயத்துக்குள்ளே இருந்தார், ஆனாலும் அவருக்கு அதிஷ்டவசமாக தலை மயிர் மட்டுமே எரிந்துள்ளது. எங்களுக்கு தொடர்ச்சியான மாத வருமானம் கிடையாது. முழுநாளும் வேலை செய்தால் எங்களால் 2000 ரூபா வரையும் வருமானம் ஈட்ட முடியும். இந்த வருமானத்துக்குள்ளேயே நான் 6 பேரை பராமரிக்க வேண்டியுள்ளது. இந்தச் சம்வம் எங்களுக்கு பாரிய அடியாகும்.
மத்திய மாகாணத்தின் நாவலப்பிட்டியவைச் சேர்ந்த 32 வயதான நெல்சன், கொழும்பில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஹம்பகாவில் எரிவாயு கம்பனி ஒன்றில் வேலை செய்கின்றார். “குண்டுவெடிப்பினால் நான் தட்டுப்பட்டுக் கீழே விழுந்த்தனால் எனது தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. பல ஆட்கள் எனக்கு மேலே வந்து விழுந்தார்கள். என்னோடு தேவாலயத்துக்குள் இருந்த எனது மாமா, பிரமாண்டமான வெடிப்புச் சத்தத்தினால் கேட்கும் சக்தியை இழந்துவிட்டார். குண்டு வெடிப்பு நடந்தபோது, தமிழ் மொழியில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டிருந்தோம்.
நெல்சன்
“எனது மனைவி, கொழும்பு காசல் ஆஸ்பத்திரியில் குழந்தையொன்றினைப் பிரசவித்து, வீட்டுக்குச் செல்வதற்காக காத்திருக்கின்றார். அவர் இந்தச் சம்வத்தினையும் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் அறிந்திருக்கமாட்டார். அதிஷ்டவசமாக நான் உயிருடன் உள்ளேன். ஆனாலும் இது ஒரு கொடூரமானது. எத்தனைபேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்று பாருங்கள்.”
புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்றிருந்த தமது கணவன்மார்களை தேடிய வண்ணம் இரண்டு இளம் பெண்கள் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். அவர்களால் தங்களின் கணவன்மார்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களில் ஒரு பெண்ணான எஸ். ரோகினி என்பவர், அரசி கடையொன்றில் விற்பனையாளராக வேலை செய்யும் 30 வயதான லோகநாதன் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
“நாங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடித்தோம். எங்களுக்கு 5 வயதில் ஒரு பிள்ளை இருக்கின்றார். நானும் எனது குடும்ப அங்கத்தவர்களும் வேறொரு தேவாலயத்துக்கு சென்றிருந்தோம். ஆனால் எனது கணவர் மட்டும் கொச்சிக்கடை தேவாலயத்துக்கு சென்றிருந்தார். நாங்கள் தேசிய வைத்தியசாலையில் உள்ள சகல வார்ட்டுகளிலும் தேடிவிட்டோம். மற்றைய ஆஸ்பத்திரியிலும் கூட தேடிவிட்டோம். ஆனால் எங்கேயும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த தாக்குதல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்,” என ரோஹினி கூறினார்.
WSWS செய்தியாளர்கள் நீர்கொழும்பில் உள்ள ஹட்டுவப்பிட்டிய தேவாலயத்துக்கும் சென்றிருந்தார்கள். அங்கே கட்டிடத்துக்குள் 20 சடலங்கள் காணப்பட்டன. அவை அடையாளம் காண முடியாதவாறு எரிந்து, தரைமுழுவதும் சிதறிக் கிடந்தன. அவை அங்கே பிற்பகல் 2 மணிவரை இருந்தன. இரத்தம் தேவாலயம் முழுவதும் வழிந்தோடியது. குண்டு வெடிப்பால் முழு கட்டிடத்தினது கூரை ஓடுகளும் சிதறிப் போயிருந்தன.
ஒரு கலக்கமடைந்த நடுத்தரவயது மனிதன் தேவாலயத்துக்குள் இருந்து வெளியில் வந்து கத்தினார்: “இவைகள் நடக்கும்போது கடவுள் எங்கே இருந்தார்? இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தவொரு பழிவாங்கலும் சாதாரண மக்களின் படுகொலைக்கே வழிவகுக்கும்.”
குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தேவாலயத்துக்கும், பின்னர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி முழுவதுக்கும் விரைந்தார்கள். பாதிக்கப்பட்ட குடுபங்களில் இருந்து ஒரு அங்கத்தவர் மட்டும் ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கப்பட்டார்.
பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அழுதவண்ணம் காயப்பட்ட தங்கள் உறவினர்களை ஆஸ்பத்திரியில் கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் தூர இடங்களில் இருந்து வந்தவர்கள். குண்டுவெடிப்பில் தனது மாமியாரைப் பறிகொடுத்த ஒருவர் அழுதுகொண்டிருந்தார்: “எனது இளைய மகன் அவரது தலையில் இருந்து இரத்தம் வடிந்த வண்ணம் வீட்டுக்கு வந்தார், ஆனால் எனது 15 வயது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தேவாலயத்திலும் இல்லை ஆஸ்பத்திரியிலும் இல்லை.”
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தடுப்பின் மறுபக்கத்தில்
நீர்கொழும்பில் போதுமான படுக்கைகள் மற்றும் மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லை, இதனால் கூடுதலான காயமடைந்த நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, றாகமை போதனா வைத்தியசாலை அல்லது சிலாபத்தில் உள்ள மற்றைய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டார்கள், என்று ஒரு வைத்தியர் WSWS க்கு தெரிவித்தார்.
ஊடகங்களின் செய்திகளுக்கு அமைவாக, பெரும் எண்ணிக்கையிலான மக்கள், கூடுதலான இளைஞர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கடுமையாக காயப்பட்டவர்களுக்கு இரத்தம் தானம் செய்தார்கள். அவர்களில் ஒருவர் WSWS உடன் வெளிப்படையாக பேசினார்: “எவரொருவர் இந்த தாக்குதலை நடத்தியிருந்தாலும், இதில் ஆட்சியாளர்களே நன்மையடைவர். தேர்தல்களை மேலும் ஒத்திவைப்பதற்கும், மக்கள் மீது மேலும் சுமைகளைச் சுமத்துவதற்கும் மற்றும் வேலை நிறுத்தங்களை தடை செய்வதற்கும் அரசியல்வாதிகள் இதைச் சுரண்டிக் கொள்வார்கள்.