Print Version|Feedback
One hundred years since the formation of the Communist International
கம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நூறு ஆண்டுகள்
By Peter Schwarz
20 March 2019
நூறாண்டுகளுக்கு முன்னர், 1919 இல், இதே மாதம், மார்ச் 2 இல் இருந்து மார்ச் 6 வரையில் மூன்றாம் அகிலத்தின், அதாவது கம்யூனிச அகிலத்தின் ஸ்தாபக மாநாடு மாஸ்கோவில் நடந்தது. ஆக்ரோஷமான உள்நாட்டு போர் மற்றும் ஏகாதிபத்திய முட்டுக்கட்டைகளின் காரணமாக பயணிப்பது சிரமமாக இருந்த போதினும், 17 அமைப்புகளைச் சேர்ந்த முழு வாக்குரிமைகள் கொண்ட 35 பிரதிநிதிகளும் இன்னும் 16 அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆலோசனை வாக்குரிமை கொண்ட 16 பிரதிநிதிகளும் என 51 பிரதிநிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், உலகெங்கிலும் இருந்து புரட்சிகர மனநிலையோடு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மூன்றாம் அகிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இணைந்தனர்.
இரண்டாம் அகிலத்தின் பொறிவு
மூன்றாம் அகிலத்தின் ஸ்தாபகமானது, முதலாம் உலகப் போர் தொடங்கிய வேளையில் இரண்டாம் அகிலம் தோல்வியடைந்ததற்கு விடையிறுப்பாக இருந்தது. ஆகஸ்ட் 4, 1914 இல், இரண்டாம் அகிலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கான பிரிவாக விளங்கிய ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Reichstag) போர் நிதி ஒதுக்கீடுகளுக்கு வாக்களித்து, அவ்விதத்தில் ஜேர்மன் ஏகாதிபத்திய போர் நோக்கங்களுக்கு அதன் ஆதரவை வழங்கியது. ரஷ்ய மற்றும் சேர்பிய பிரிவுகள் நீங்கலாக, ஏனைய அனைத்துப் பிரிவுகளும் SPD இன் முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்து அந்த ஏகாதிபத்திய இரத்த ஆறை ஆதரித்தன.
போருக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அவர்களின் ஆதரவுடன், சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் சோசலிச சர்வதேசியவாதத்தின் மிகவும் அடிப்படையான கோட்பாடுகளைக் காட்டிக்கொடுத்தார்கள். அதற்கு வெறும் வெகுசில வாரங்களுக்கு முன்னர்தான் அவர்கள் போரைக் கண்டனம் செய்து, சம்பிரதாயமான உரைகளில் அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்ட சூளுரைத்தனர். பின்னர் அவர்களின் சொந்த முதலாளித்துவத்துடன் தொழிலாளர்களைச் சமசரப்படுத்த தீர்மானித்து, அவர்கள் ஏகாதிபத்திய முகாமில் இணைந்து, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கியதுடன், அவர்களின் அங்கத்தவர்களை படுகுழிக்குள் தள்ளினர், அங்கே அவர்கள் ஒருவரால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த வரலாற்று அளவிலான ஓர் அரசியல் காட்டிக்கொடுப்பை அகநிலையான உள்நோக்கங்களால் விவரித்துவிட முடியாது. அது ஆழ்ந்து-செல்லும் புறநிலை வேர்களைக் கொண்டிருந்தது. பல்வேறு அகிலங்களும் தற்செயலாக தோன்றியதில்லை, மாறாக அவற்றின் தோற்றம், அரசியல் மற்றும் செயல் வழிமுறைகளும் சமூக அபிவிருத்தியின் குறிப்பிட்ட காலகட்டங்களுடன் நெருக்கமாக பிணைந்திருந்தன.
1864 இல் இலண்டனில் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பை நிறுவுதல் (மார்க்ஸ், பேச்சாளரின் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்)
1864 இல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் செயலூக்கமான பங்களிப்புடன் உதித்த முதலாம் அகிலம், ஓர் ஆரம்பகால தயாரிப்பு தன்மையில் இருந்தது. அது எதிர்கால அபிவிருத்திகளை முன்கணித்து, தொழிலாளர்களை அரசியல்ரீதியிலும் தத்துவார்த்தரீதியிலும் தயார் செய்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் முதல் தைரியமிக்க முயற்சியான பாரீஸ் கம்யூன் நசுக்கப்பட்டதற்குப் பின்னர், முதலாம் அகிலம் 1870 களின் போக்கில் கலைக்கப்பட்டது.
1889 இல் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டாம் அகிலம், வேறொரு சகாப்தத்தை எடுத்துக்காட்டியது. வேகமான பொருளாதார விரிவாக்க நிலைமைகளின் கீழ், சக்தி வாய்ந்த தொழிலாளர் அமைப்புகள் அபிவிருத்தி அடைந்து, அவை ஒருங்கிணைந்தன. அவை சர்வதேசியவாதத்திற்கான அவற்றின் ஆதரவை அறிவித்த போதினும், புறநிலைமைகளோ அவற்றின் அரசியல் கண்ணோட்டங்கள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் மீது ஒரு தேசியத்தன்மையைத் திணித்தன. அவற்றின் செயல்பாடுகள் ஜனநாயக மற்றும் சமூக சீர்திருத்த போராட்டத்தின் மீதும், கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை அமைப்புரீதியில் பலப்படுத்துவதிலும் ஒருமுனைப்பட்டிருந்தன.
அது படிப்படியாக அமைப்புரீதியில் அபிவிருத்தி அடைந்து வந்த காலகட்டமாக இருந்தது, அக்காலகட்டம் அரசு அதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சிகர போராட்டத்திற்கான ஒரு வாய்ப்பை சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு வழங்கியிருக்கவில்லை. 1893 இல் கார்ல் கவுட்ஸ்கி Die Neue Zeit இல் உரைத்த பிரபல வாக்கியம், “சோசலிஸ்ட் கட்சி புரட்சிகரமானது, ஆனால் புரட்சியை உண்டாக்கும் கட்சி அல்ல,” என்பது ஐயத்திற்கிடமின்றி அக்காலக்கட்டத்தின் அகநிலை மற்றும் புறநிலை காரணிகளுக்கு இடையிலான உறவைப் பிரதிபலித்தது.
புரட்சிகர முன்னோக்கிற்கும் சீர்திருத்த நடைமுறைக்கும் இடையிலான பதட்டம் புரட்சிகர முன்னோக்கிற்கு எதிரான சந்தர்ப்பவாத போக்குகளுக்கு வளமான அடித்தளத்தை உருவாக்கியது. அவை தனிச்சலுகை கொண்ட கட்சி செயல்பாட்டாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மற்றும் தொழிலாளர்களில் செழிப்பான பிரிவுகளிடையே ஆதரவைக் கண்டது. லெனின் விவரித்ததைப் போல, ஒப்பீட்டளவில் அமைதியான விரிவாக்க காலகட்டத்தில் முதலாளித்துவம் அவர்களுக்கு "தேசிய மூலதனத்தின் இலாபங்களில் இருந்து சில துண்டு துணுக்குகளை" வழங்கியதால், இது "அவலம், துன்பம் மற்றும் சீரழிக்கப்பட்ட மக்களின் புரட்சிகர உறுதித்தன்மையிலிருந்து அவர்களை விலக்கி" நிறுத்தியது.
இரண்டாம் அகிலத்தின் 1907 ஸ்ருட்கார்ட் மாநாடு கூட்டம் ஒன்றில் ரோசா லுக்செம்பேர்க் உரையாற்றுகிறார்
இந்த "தொழிலாளர்களின் பிரபுத்துவம்", அமைதியான காலத்திலும் மற்றும் போரின் போதும், அவற்றின் "சொந்த" ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் வெற்றிகளுடன் அதிகரித்தளவில் அதன் நலன்களை அடையாளம் கண்டது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மாநாடுகளில், அவர்கள் அவர்களின் மிகவும் பிரபல பேச்சாளர் எட்வார்ட் பேர்ன்ஸ்டைனுடன் தங்களை இணைத்து கொண்டு சிறுபான்மையாக நீடித்திருந்தனர். எவ்வாறிருப்பினும் அவர்கள் SPD இன் ஒரு அதிகாரபூர்வ பாகமாக சகித்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதுடன், கட்சி எந்திரம் மற்றும் தொழிற்சங்கங்களில் பெரும் செல்வாக்கை வென்றிருந்தார்கள்.
1914 கோடையில் முதலாம் உலக போரின் வெடிப்பு முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தை, அதாவது ஏகாதிபத்திய சகாப்தம், போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு சகாப்தத்தைக் குறித்தது. உலக அரசியல் தேசிய அரசியலில் மேலாதிக்கம் செலுத்தியது; தேசிய அரசின் கட்டமைப்புக்குள் ஒரு புரட்சிகர நோக்குநிலை பேணுவதை அது சாத்தியமற்றதாக ஆக்கியது. இதுதான் இரண்டாம் அகிலம் தோல்வியடைவதற்கான காரணமாக இருந்தது. போரை எதிர்கொண்டிருந்த நிலையில், சந்தர்ப்பவாதமானது, சீர்திருத்தவாதம் மற்றும் வர்க்க சமரசத்தை அறிவுறுத்தி, இப்போது அதன் உண்மையான நிறத்தை எடுத்துக்காட்டியது, பேரினவாதம் மற்றும் போரை-ஆதரிக்கும் உத்வேகத்தை தழுவிய அது, தீர்மானிக்கவியலாமல் இருந்த மற்றும் அரைமனதுடன் இருந்த கூறுபாடுகள் அனைத்தையும் அரவணைத்துக் கொண்டது.
“தற்போதைய தேசிய பொருளாதார மையங்களின் முறிவும், அதன் இடத்தில் உலக பொருளாதாரம் பிரதியீடு செய்யப்படுவதும் தான் போருக்கான நிஜமான புறநிலை முக்கியத்துவம்,” என்று போர் வெடித்து பல வாரங்களுக்குப் பின்னர் போரின் முக்கியத்துவத்தைத் தொகுத்து குறிப்பிடுகையில் ட்ரொட்ஸ்கி எழுதினார். “இந்த சகாப்தத்தில் சோசலிஸ்ட் கட்சிகள் இப்போது தேசிய கட்சிகளாக மாறிவிட்டன. அவை அவற்றின் அமைப்புகளது வெவ்வேறு அனைத்து கிளைகளுடனும், அவற்றின் நடவடிக்கைகளுடனும், அவற்றின் உளவியலுடனும் தேசிய அரசுகளில் உட்பொதிந்துவிட்டன. தேசிய மண்ணில் மிகப்பெரியளவில் வளர்ந்துவிட்ட ஏகாதிபத்தியம் காலத்திற்கு ஒவ்வாத தேசிய தடைகளை அழிக்கத் தொடங்கிய போது, அவற்றின் உள்ளார்ந்த மாநாட்டு பிரகடனங்களில், அவை பழமைவாத அரசைப் பாதுகாக்க எழுந்தன. அவற்றின் வரலாற்றுப் பொறிவுடன் சேர்ந்து தேசிய அரசுகள், தேசிய சோசலிஸ்ட் கட்சிகளையும் சேர்த்து அவற்றுடன் பின்னுக்கு இழுக்கின்றன.”
மூன்றாம் அகிலத்தின் பணிகள்
இரண்டாம் அகிலத்தின் பொறிவைத் தொடர்ந்து லெனினும் ட்ரொட்ஸ்கியும் அதனை புதுப்பிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என உறுதியாக நம்பினர். மூன்றாம் அகிலத்தின் பணியும் அணுகுமுறைகளும் அடிப்படையில் அதற்கு முன்னோடி அமைப்பிலிருந்து வேறுபட்டிருக்கும் விதத்தில், அதைக் கட்டமைப்பதே மிக அவசர அரசியல் பணியாக இருந்தது.
முதலாவதாக, சந்தர்ப்பவாதிகளைப் போல அதே அமைப்பில் இருந்து பணியாற்றுவது சாத்தியமில்லாது இருந்தது. இரண்டாம் அகிலத்திற்குள் இருந்த மார்க்சிஸ்டுகள் பல ஆண்டுகளாக சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக போராடி வந்தார்கள் என்றாலும், திருத்தல்வாதம் எவ்வாறிருப்பினும் சமூக ஜனநாயகத்தின் "உத்தியோகபூர்வ பாகமாக கருதப்பட்டது". இதைத் தொடர முடியாது என்று வலியுறுத்திய லெனின், “சொல்லப்போனால் சந்தர்ப்பவாதிகளுடனான ஐக்கியம் என்பது, இன்று, தொழிலாள வர்க்கத்தை "அதன்" தேசிய முதலாளித்துவத்திற்கு அடிபணிய வைப்பதையும், மற்ற தேசங்களை ஒடுக்கும் நோக்கத்திற்காக அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கும் மற்றும் வல்லரசு தனி அந்தஸ்திற்காக சண்டையிடுவதையும் அர்த்தப்படுத்துகிறது; இதன் அர்த்தம் அனைத்து நாடுகளிலும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதாகும்,” என்று எழுதினார்.
இரண்டாவதாக, புறநிலை மற்றும் அகநிலை காரணிகளுக்கு இடையிலான உறவு வேகமாக மாறியிருந்தது. இரண்டாம் அகிலம் வெறுமனே தத்துவார்த்த அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் கேள்வியை முன்னிறுத்தி இருந்த நிலையில், மூன்றாம் அகிலமோ, சோசலிசப் புரட்சியை தொலைதூர எதிர்காலத்திற்கான ஒரு பொதுவான குறிக்கோளாக அல்லாமல், அதன் நடைமுறைப் பணியாக அமைத்திருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி "ஒரு புரட்சியை-நடத்தும்" கட்சி அல்ல என்றும், “புரட்சியை தூண்டுவதோ அல்லது அதற்கு வழிவகுக்க தயாரிப்பு செய்வதோ நமது வேலையின் பாகமல்ல" என்றும் கவுட்ஸ்கியின் இத்தகைய அபிப்ராயங்கள் 1890 களில் குறிப்பிடத்தக்க நியாயப்பாடுகளைக் கொண்டிருந்த போதினும், அவை இப்போது புரட்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததுடன், முற்றிலும் தவறான மதிப்பீடாக இருந்தன.
1919 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஸ்தாபக மாநாடு
மூன்றாம் அகிலம் புரட்சிகர தலைமைக்கான ஒரு வித்தியாசமான கருத்துருவுடன் நின்றது. அதன் பணிகள் வெறுமனே புரட்சியை தவிர்க்கவியலாததாக முன்கணிப்பதை மட்டும் உள்ளடக்கி இருக்கவில்லை, மாறாக அதற்கு தயாரிப்பு செய்வது மற்றும் அதை வழிநடத்துவதையும் உள்ளடக்கி இருந்தது. இது ஏகாதிபத்திய சகாப்தத்தின் தன்மையிலிருந்து உதித்திருந்த நிலையில், இந்த சகாப்தத்தில் சோசலிச புரட்சிக்கான அனைத்து பொருளாதார முன்நிபந்தனைகளும் கனிந்திருந்தன. தனிச்சொத்துடைமை மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கு இடையிலான, உலக பொருளாதாரம் மற்றும் தேசிய அரசுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையான சமூக பதட்டங்களை உருவாக்கின. அதேவேளையில் ஒரு புரட்சிகர மார்க்சிச கட்சி நனவுபூர்வமாக தலையீடு செய்தால் அவற்றின் தவிர்க்கவியலாத வெடிப்பு ஒரு சோசலிச புரட்சியில் மட்டுமே போய் முடியக் கூடியதாக இருந்தது.
“முதலாம் அகிலம், வரவிருந்த போக்கின் அபிவிருத்தியை மற்றும் அதன் பாதைகளைச் சூசகமாக அறிவித்திருந்தது என்றால்; இரண்டாம் அகிலம் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஒருங்கிணைத்து ஒழுங்கமைத்து இருந்தது என்றால்; பின், மூன்றாம் அகிலம் பகிரங்கமான பாரிய நடவடிக்கையின் அகிலமாக, புரட்சியைக் கைவரப் பெறக்கூடிய அகிலமாக, செயலுக்குரிய அகிலமாக உள்ளது,” என்று மூன்றாம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டு அறிக்கை பிரகடனப்படுத்தியது, இதை ட்ரொட்ஸ்கி எழுதியிருந்தார்.
மூன்றாவதாக, மூன்றாம் அகிலம் தேசிய பிரிவுகளின் ஒரு கூட்டமைப்பாக இருக்கவில்லை, மாறாக ஓர் உலகளாவிய மூலோபாயத்தை பின்தொடர்ந்த ஓர் உலக கட்சியாக இருந்தது. இதன் அர்த்தம், ஒவ்வொரு நாட்டிலும் நிலைமைகள் ஒரே மாதிரியாக உள்ளன, புரட்சி ஒவ்வொரு இடத்திலும் ஒரே நேரத்தில் நடக்கும், அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தந்திரோபாயம் அவசியமில்லை என்று அர்த்தமல்ல. இதன் அர்த்தம், உலகளாவிய பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே ஒரு சரியான தேசிய கொள்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதாகும், ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, அகிலத்தின் ஒவ்வொரு பிரிவும் "உலக பொருளாதாரத்தின் மற்றும் உலக அரசியல் அமைப்புமுறையின் நிலைமைகள் மற்றும் போக்குகள் மீதான ஓர் ஒட்டுமொத்தமான பகுப்பாய்வில் இருந்தே நேரடியாக முன்நகர வேண்டும்,” என்றவர் 1928 இல் எழுதினார், “இப்போதைய இந்த சகாப்தத்தில், கடந்த காலத்தை விட மிகப் பெரியளவில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலையானது ஒரு உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கே தான் கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான மற்றும் முதன்மையான வேறுபாடு தங்கியுள்ளது.”
இது, மூன்றாம் அகிலத்தினது உயிர்வாழ்வின் முதல் ஐந்தாண்டுகளில், நம்பமுடியாதளவில் வளமான அரசியல் மற்றும் தத்துவார்த்த பணிகளை விளக்குகிறது. அது, உலகெங்கிலுமான கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரச்சினைகள் மற்றும் பணிகள் மீது ஒருமுனைப்பட்டிருந்த சர்வதேச மூலோபாய பாடசாலையாக விளங்கியது. அதன் மூலமாக, தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தமாக சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைகளைப் பின்தொடர முடிந்தது என்பதோடு, அதன் சிக்கலான அரசியல் பிரச்சினைகளில் ஈடுபடவும், அவற்றிலிருந்து படிப்பினைகளைப் பெறவும் முடிந்தது. முதல் நான்கு மாநாடுகளின் தீர்மானங்களும் நெறிமுறைகளும், இதுவே பல தொகுதிகளாக நிறைந்துள்ள நிலையில், புரட்சிகர மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களுக்கு வற்றாத வழிகாட்டியாக விளங்குகின்றன.
1917 அக்டோபர் புரட்சி
மூன்றாம் அகிலத்தின் கட்டமைப்பானது, 1914 காட்டிக்கொடுப்பிலிருந்து லெனின் வரைந்த மிக முக்கிய தீர்மானமாக இருந்தது. அது வெறுமனே வார்த்தையளவிலான கல்வி கேள்வி சார்ந்த விடயமாக இருக்கவில்லை. அது புரட்சிகரமான 1917 ஆம் ஆண்டில் போல்ஷிவிக் கட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை தீர்மானித்தது. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்துடன் சேர்ந்து, அது அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கு அடித்தளத்தை உருவாக்கியது.
போர் வெடித்ததற்குப் பின்னர், லெனின் சந்தர்ப்பவாதிகளுடன் முழுமையாக முறித்துக் கொள்ள அறிவுறுத்தினார் மற்றும் போரை ஓர் உள்நாட்டு போராக அதாவது ஒரு சோசலிசப் புரட்சியாக மாற்றுவதற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் 1915 செப்டம்பரில் சுவிஸ் கிராமமான சிம்மர்வால்டில் சந்தித்த முதலாவது சர்வதேச போர்-எதிர்ப்பு மாநாட்டில் கூட, இந்த நிலைப்பாட்டுடன் அவர் சிறுபான்மையாக இருந்தார். போரை எதிர்த்த சோசலிஸ்டுகளில் பெரும்பான்மையினர், நாடுகளின் இணைப்புகள் இல்லாமல் அதாவது போருக்கு முன்னர் இருந்ததைப் போன்ற அதே நிலையிலேயே சமாதானத்திற்குத் திரும்ப வேண்டுமென கோரினர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் லெனினின் முன்னோக்கு வியத்தகு முறையில் உறுதிப்படுத்தப்பட்டது.
ஜாரிச ஆட்சிக்கு எதிரான புரட்சிகர பாரிய மக்கள் மேலெழுச்சிகளைத் தொடர்ந்து பெப்ரவரி 1917 இல் ரஷ்யாவில் அதிகாரத்திற்கு வந்த மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்கள் பெருந்திரளான மக்களின் புரட்சிகர கோரிக்கைகளில் ஒன்றே ஒன்றைக் கூட பூர்த்தி செய்ய மறுத்தனர், இதன் மூலமாக முதலாளித்துவ அடிப்படையில் போரிலிருந்து வெளி வருவதற்கு வழியே கிடையாது என்பதை நிரூபித்தனர். அவர்கள் ஏகாதிபத்திய போரைத் தொடர்ந்ததுடன், நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்தனர், புரட்சிகர தொழிலாளர்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையைத் தொடங்கினர். தொழிலாள வர்க்கம் இடது நோக்கி நகர்ந்து, போல்ஷிவிக்குகள் பக்கம் திரும்பியது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ், அவர்கள் அக்டோபர் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றி, வரலாற்றில் முதல் தொழிலாளர்களின் அரசை ஸ்தாபித்தனர்.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாடு (இடதில் இருந்து மூன்றாவதாக, பௌல் லெவி மற்றும் சினோவியேவ் ஐ அடுத்து ட்ரொட்ஸ்கி)
பொருளாதாரரீதியில் பின்தங்கிய ரஷ்யாவில் தொழிலாளர்களின் அதிகாரம் என்பது, உலக சோசலிசப் புரட்சிக்கு முன்னறிவிப்பாக சேவையாற்றினால் மட்டுமே அதை நீண்டகால அடிப்படையில் திடப்படுத்த முடியுமென லெனினும் ட்ரொட்ஸ்கியும் உறுதியாக நம்பினர். இந்த முன்னோக்கு யதார்த்தமானதாக இருந்தது. அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் ஐரோப்பா எங்கிலும் பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்களும், சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களும் ஆதிக்கம் செலுத்தின. இத்தகைய இயக்கங்கள் அனுபவம்மிக்க புரட்சிகர தலைமை இல்லாததாலும், அல்லது பெருந்திரளான மக்களுடன் அது போதுமானளவுக்கு இணைப்பு பெறாத காரணத்தாலுமே வெற்றிகரமான புரட்சிகளை உருவாக்க தவறின.
நவம்பர் 1918 இல், ஜேர்மன் புரட்சி ஒட்டுமொத்த நாடெங்கிலும் காட்டுத்தீயைப் போல பரவி, கைசரை இராஜினாமா செய்ய நிர்பந்தித்து, ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் சபைகள் உருவாவதற்கு இட்டுச் சென்றது. அதிகாரத்திற்கு வந்த சமூக ஜனநாயகக் கட்சியினர் இராணுவத்தின் உயர்மட்ட கட்டளையகத்துடன் ஒரு கூட்டணியை உருவாக்கியும் மற்றும் புரட்சிகர தலைவர்கள் ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோரைப் படுகொலை செய்தும் புரட்சியை ஒடுக்கினர். பல நாட்களுக்கு பவேரியாவிலும் பல மாதங்களுக்கு ஹங்கேரியிலும் சோவியத் குடியரசுகள் இருந்தன, ஆனால் அவ்விரு இடங்களிலும் எதிர்புரட்சிகர துருப்புகளால் அவை மூர்க்கமாக வீழ்த்தப்பட்டன. இந்த பின்னணியில், கம்யூனிச அகிலம் வேகமாக உலக புரட்சியின் மையமாக மேலெழுந்தது.
ஸ்ராலினிச சீரழிவு
ஏகாதிபத்திய சகாப்தத்தில் அகநிலை காரணி வகித்த மத்திய பாத்திரமும், மூன்றாம் அகிலம் தீர்க்க வேண்டியிருந்த பிரதான பிரச்சினையாக இருந்தது. அது அரசியல் நிலைமையின் முதிர்ச்சிக்கும் புரட்சிகர தலைமையின் முதிர்ச்சியின்மைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டியிருந்தது. முந்தைய அபிவிருத்திகளின் மரபில் வந்த இந்த பிரச்சினை காலத்தால் கடந்து வரக் கூடியதாக இருந்தது என்றாலும், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அரசியல் சீரழிவின் ஒரு நிகழ்ச்சிப்போக்கு அதிகரித்தளவில் இத்தகைய முயற்சிகளுக்கு தடையாக இருந்தன.
நவம்பர் 1922 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காம் மாநாடு கூடுவதற்கு முன்னரே, லெனின் ஏற்கனவே அவரின் முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்குப் பின்னர் விரைவிலேயே, மார்ச் 1923 இல், மற்றொரு பக்கவாத நோய் தாக்குதலானது அவர் மேற்கொண்டு அரசியல் வேலை செய்வதிலிருந்து அவரைத் தடுத்தது. உலக சோசலிசப் புரட்சியின் முன்னணி தத்துவவியலாளரான ட்ரொட்ஸ்கி, தேசிய நோக்குநிலை கொண்டிருந்த ஒரு கட்சி மற்றும் ஸ்ராலின் தலைமையின் கீழ் இருந்த அரசு அதிகாரத்துவத்தினது அழுத்தத்தின் கீழ் வந்தார்.
1924 இல், ஸ்ராலின் "தனியொரு நாட்டில் சோசலிச" தத்துவத்தை பிரகடனப்படுத்தினார், அது உலக பொருளாதாரத்திலிருந்து சுதந்திரமாகவும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தேசிய கட்டமைப்புக்குள்ளே சோசலிசத்தைக் கட்டமைப்பது சாத்தியம் என்றும் பிரகடனப்படுத்தியது. அது ஸ்ராலினிச ஆட்சியின் அரசு கோட்பாடாக மாறியது. அது, தத்துவார்த்தரீதியில், வலதுசாரி சமூக ஜனநாயக வாதிகளின் தேசிய சோசலிசத்திற்குத் திரும்புவதையும், அரசியல்ரீதியில், கம்யூனிச அகிலத்தை சோவியத் அதிகாரத்துவத்தின் தேசிய நலன்களுக்கு அடிபணிய செய்வதையும் அர்த்தப்படுத்தியது.
ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் இந்த சீரழிவுக்கு எதிராக பல ஆண்டுகளாக தீவிரமாக போராடினார்கள். 1928 இல், இதற்கு ஓராண்டுக்கு முன்னரே கம்யூனிச அகிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கி அதன் வரைவு வேலைத்திட்டத்தின் மீது கடுமையானதொரு விமர்சனத்தை வைத்தார். “தனியொரு நாட்டில் சோசலிச" தத்துவம் சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்திற்குப் படுபயங்கரமான பாதிப்புக்களைக் கொண்டிருக்கும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். பாட்டாளி வர்க்கத்தால் கைப்பற்றப்பட்ட அதிகாரம் "சர்வதேச உழைப்பு பிரிவினை முறையிலிருந்து சோவியத் குடியரசை முற்றிலும் வெளியில் கொண்டு வந்துவிடவில்லை" என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். 1927 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீரழிந்ததில் போய் முடிந்ததைப் போல, “தனியொரு நாட்டில் சோசலிசம்" சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான தோல்விகளை உண்டாக்கும் என்றவர் வலியுறுத்தினார்.
ட்ரொட்ஸ்கியும் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை பாதுகாத்த எவரொருவரும் முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள், பின்னர் சிறையிலடைக்கப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள், இறுதியில் 1937-38 பாரிய பயங்கர (Great Terror) நடவடிக்கைகளின்போது பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
நான்காம் அகிலம்
1933 வரையில், ட்ரொட்ஸ்கியும் சர்வதேச இடது எதிர்ப்பும் கம்யூனிச அகிலத்தின் கொள்கைகளைத் திருத்த முனைந்திருந்தனர். ஆனால் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ராலினின் மேலாளுமையின் கீழ், நாஜிக்களுக்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சியினருடன் ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்க மறுத்து, அவ்விதத்தில் ஹிட்லர் ஒரு போராட்டமின்றி அதிகாரத்தைக் கைப்பற்ற வழி வகுத்த பின்னர், கம்யூனிஸ்ட் அகிலத்தின் எந்த பிரிவும் இதை எதிர்க்காத போதுதான், ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுத்தார்.
மூன்றாம் அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகளை நான்காம் அகிலம் அதன் அடித்தளமாக ஏற்றது. காட்டுமிராண்டித்தனம், பாசிசவாதம் மற்றும் உலகம் போருக்குள் மூழ்கிய ஒரு காலகட்டத்தின் போது, நான்காம் அகிலம் மார்க்சிசத்தின் தொடர்ச்சியை பேணியதுடன் புரட்சிகர போராட்டங்களுக்கான புதிய சகாப்தத்திற்குத் தயாரிப்பு செய்தது. ஆனால் அது வெறுமனே அதன் முன்னோடி அமைப்பின் பணியைத் தொடரவில்லை. ஒருபுறம், மூன்றாம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து சமூக முரண்பாடுகள் இன்னும் கூர்மையாகி இருந்தன. உலகம், இரண்டாம் உலகப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" குறித்து பேசினார். மறுபுறம் தீர்க்க வேண்டியிருந்த பாட்டாளி வர்க்க தலைமைக்கான நெருக்கடியோ, ஸ்ராலினிசத்தின் வளர்ச்சியால் மேலும் சிக்கலாகி இருந்தது.
ஜேர்மன் பேரழிவுக்குப் பின்னர், கம்யூனிச அகிலம் பகிரங்கமாகவே எதிர்புரட்சிகர சக்தியாக எழுந்தது. “மக்கள் முன்னணியின்" பெயரில், அது முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணிகளை உருவாக்கியதோடு, முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விடுக்க முனைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு புரட்சிகர போராட்டமும் நசுக்கப்பட்டது. பிரான்சில், மக்கள் முன்னணி 1936 பொது வேலைநிறுத்தத்தை நசுக்கியது, இது அதற்கு நான்காண்டுகளுக்குப் பின்னர் நாஜி ஆதரவாளரான மார்ஷல் பெத்தான் ஓர் எதேச்சதிகார ஆட்சியை ஸ்தாபிக்க வழி வகுத்தது. ஸ்பெயினில், உள்நாட்டு போரின் முன்வரிசையில் நின்ற புரட்சிகர போராளிகளைச் சோவியத் இரகசிய பொலிஸ் படுகொலை செய்தது, இது பாசிசவாத பிராங்கோவின் வெற்றியைச் சாத்தியமாக்கியது. சோவியத் ஒன்றியத்தில், ஸ்ராலினிச ஆட்சி மாஸ்கோ விசாரணைகளின் கட்டமைப்புக்குள் நடைமுறையளவில் அக்டோபர் புரட்சியின் ஒட்டுமொத்த தலைவர்களையும் பூண்டோடு அழித்தது. இறுதியில் 1943 இல் ஸ்ராலின் கம்யூனிச அகிலத்தை கலைத்தார் ஏனென்றால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் அவர் கூட்டணி வைப்பதற்கு அதுவொரு தடையாக இருந்தது.
மெக்சிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கி
1939 க்குப் பின்னர் இருந்து, நான்காம் அகிலம், போர் மற்றும் பாசிசவாத அழுத்தத்தின் கீழ், அதன் சொந்த அணிகளில் இருந்த "ஜனநாயக ஏகாதிபத்திய" அல்லது ஸ்ராலினிச முகாம்களை ஏற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத போக்குகளையும் எதிர்த்து போராட வேண்டியதாக இருந்தது. இந்த அழுத்தம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் தீவிரமடைந்தது, அப்போது ஸ்ராலினிசத்தின் எதிர்புரட்சிகர பாத்திரமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த பொருளாதார பலமும் முதலாளித்துவத்திற்கு மூச்சுவிடுவதற்கான அவகாசத்தை உறுதிப்படுத்தி இருந்தன.
நான்காம் அகிலம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்குள்ளேயும், மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான திருத்தல்வாத போக்குகளது பல்வேறு முதலாளித்துவ தேசியவாத சுதந்திர இயக்கங்களுக்குள்ளேயும் கலைந்து விடாமல் தடுக்க, 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதிருந்து, அது போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக காட்டிக்கொள்ள முனைந்த நேர்மையற்ற பல்வேறு சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராக, மிகக் கடுமையான மற்றும் சிக்கலான நிலைமைகளின் கீழ், உலக சோசலிச புரட்சியின் முன்னோக்கை சிறிதும் விட்டுக்கொடுப்பின்றி தாங்கிப் பிடித்து வந்துள்ளது.
இந்த போராட்டம் 1985 இல் அதன் உச்சத்தை எட்டியது. பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஓடுகாலிகளுடனான மோதலில், ICFI, நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த வரலாறுடனும் மற்றும் ஸ்ராலினிசவாதம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் குட்டி-முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போராட்டங்களுடனான அதன் தொடர்ச்சியை உறுதிப்படுத்தியது.
அதன் வரலாற்று முக்கியத்துவத்தைத் தொகுத்துரைத்த 1988 முன்னோக்கு ஆவணம் ஒன்றில், அனைத்துலகக் குழு பூகோளமயப்பட்ட உற்பத்தி, பன்னாட்டு பெருநிறுவனங்களின் தோற்றம், மற்றும் சோசலிச புரட்சியில் இது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் குறித்து சுட்டிக்காட்டியது. வர்க்க போராட்டத்தின் அடுத்த கட்டம் முன்னொருபோதும் இல்லாத சர்வதேசியமயமாக்கமாக இருக்கும் என்றும், அது வர்க்க போராட்டத்தை அதன் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, மாறாக வடிவத்திலும் சர்வதேசமயமாக ஆக்கும் என்பதை முன்கணித்தது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் பிரிவுகளைச் சோசலிச சமத்துவக் கட்சிகளாக (SEP) அமைத்து, 20 மொழிகளில் பிரசுரிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச பத்திரிகையாக உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) அபிவிருத்தி செய்தது, இது உலகெங்கிலும் வாசிக்கப்படுவதுடன், நாளாந்தம் அது தொழிலாளர்களுக்கு அரசியல் நோக்குநிலையை வழங்கி வருகிறது.
எண்ணற்ற போலி-இடது போக்குகள் அனைத்தும், ஏகாதிபத்திய போர்களை ஆதரித்தன, முதலாளித்துவ அரசாங்கங்களுடன் ஒத்துழைத்தன, அவை அதிகாரத்துவங்கள் மற்றும் அரசு எந்திரத்திற்குள் தங்களை ஒருங்கிணைத்து கொண்ட அதேவேளையில், இன்று ICFI மட்டுமே மூன்றாம் அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகள் மற்றும் நான்காம் அகிலத்தின் மரபியத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்காக நிற்கிறது.
மூன்றாம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 20 ஆம் நூற்றாண்டை மனிதகுல வரலாற்றில் மிகவும் வன்முறையானதாக ஆக்கிய முரண்பாடுகளில் எதுவுமே தீர்க்கப்பட்டிருக்கவில்லை. கண்கூடான சமூக சமத்துவமின்மை, கூர்மையான உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள், ஒட்டுமொத்த நாடுகளும் ஏகாதிபத்திய சக்திகளிடம் அடிபணிந்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பொறிவு, பாசிசவாத இயக்கங்களின் வளர்ச்சி, பிரதான சக்திகளுக்கு இடையிலான கடுமையான மோதல்கள், உடனடியான உலக போர் ஆபத்து ஆகியவை மீண்டுமொருமுறை மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
அதிகாரத்துவ அமைப்புகளால் வர்க்க போராட்டம் நசுக்கப்பட்ட தசாப்தங்களைப் பின்தொடர்ந்து, தொழிலாள வர்க்கம் மீண்டுமொருமுறை போராட்டத்திற்குள் நுழைந்து வருகிறது என்பதோடு, அதன் சொந்த சுயாதீனமான கோரிக்கைகளை உயர்த்தி வருகிறது. பிரான்ஸ், அல்ஜீரியா, அமெரிக்கா மற்றும் எண்ணற்ற பிற நாடுகளில் பாரிய சமூக போராட்டங்கள் வெடிப்பது ஒரு புதிய புரட்சிகர காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மூன்றாம் அகிலம் தீர்க்க முயன்ற அதே பணிகளைத்தான் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கிறது: அதாவது முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது, தேசிய அரசைக் கடந்து வருவது, உலகப் பொருளாதாரத்தின் பாரிய வளங்களை ஒரு சிறிய செல்வவளமான ஒருசிலரின் இலாபத்திற்காக அல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களுக்காக மறுஒழுங்கமைத்தல் ஆகியவையாகும். இத்தகைய பணிகளைச் செய்து முடிப்பதற்கான புறநிலை முன்நிபந்தனைகள் நிலவுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் படிநிலைகள் பல மடங்கு பெரிதாகி உள்ளன, உலகப் பொருளாதாரமோ இன்னும் மிக அதிகமாக ஒருங்கிணைந்துள்ளது, தொழில்நுட்ப ஆதாரவளங்களோ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் மிக அதிகமாக அபிவிருத்தி அடைந்துள்ளன.
இத்தகைய பணிகளை கையாளக்கூடிய தகமை கொண்ட ஒரு புரட்சிகர தலைமையை கட்டமைப்பதையே ஒவ்வொன்றும் இப்போது சார்ந்துள்ளது. அதன் வரலாறு, மரபுகள் மற்றும் வேலைத்திட்டங்களின் காரணமாக, இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகள் மட்டுமே செய்து முடிக்க முடியும்.