Print Version|Feedback
The political implications of the Corbyn/May Brexit talks
கோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள்
Chris Marsden
5 April 2019
இங்கிலாந்தின் பழமைவாத கட்சியின் பிரதம மந்திரி தெரேசா மே க்கும் ஜெர்மி கோர்பினுக்கும் இடையே ஒரு மாற்று பிரெக்ஸிட் உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தைகள், தொழிற் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுப்பட்டமை உழைக்கும் மக்களுக்கு ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது என்ற அனைத்து வாதங்களையும் தீர்க்கமாக மறுத்தளிக்கின்றன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலத்தில் அது முகங்கொடுத்ததிலேயே மிகப்பெரிய நெருக்கடியின் மத்தியில் உள்ளது. டோரி அரசாங்கம் பொறிவின் விளிம்பில் நிலைக்குலைந்து போயுள்ளது. அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் உடையும் புள்ளியில் உள்ளன. அரசியல் இரட்சிப்புக்காக கோர்பினை எதிர்நோக்குவதே ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாக உள்ளது.
செவ்வாயன்று ஒரு பொது தேர்தலுக்கான அவரின் கோரிக்கையை உடனடியாக கைவிட்டு விடையிறுத்த அவர், “தேசிய நலன்களை வழங்க தேசிய நல்லிணக்கத்திற்கு" முறையிட்ட தெரேசா மே இன் பெரும்பிரயத்தன முறையீட்டுக்கு உடன்பட்டார். கடந்த தேர்தலில் தொழிற் கட்சியை ஆதரித்தவர்களையும் மற்றும் தொழிற் கட்சியை ஆதரிக்காதவர்களையும் கூட பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பை" அவர் ஏற்கக்கூடும்.
மூன்றாண்டுகளுக்கும் மேலாக, கோர்பின் அவர் தேர்வு செய்யப்பட்ட வெற்றிக்கு விடையிறுப்பாக தொழிற் கட்சியில் இணைந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம், டோரிக்களை தோற்கடிக்க கட்சியின் ஐக்கியம் இன்றியமையாதது என்பதால் பிளேயரிச வலதுசாரிகளை விரட்டவும் மற்றும் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் அவர்கள் கோரக் கூடாது என வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பிரெக்ஸிட் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் முழுமையாக தோல்வியடையும் வரையில் அரசாங்கத்தின் மீது எந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் "கொண்டு வருவதில்லை" என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இப்போது "கட்சி ஐக்கியம்" என்பது "தேசிய ஐக்கியம்" என்பதைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.
டோரி அரசாங்கம், புதிய தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் டோரி/தாராளவாத ஜனநாயக அரசாங்கங்களும் தசாப்தங்களாக சமூக செல்வவளத்தை பெருவணிகங்களுக்கு பாரியளவில் கைமாற்றியதற்கு பின்னர், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் அதிர்விலிருந்து தான் 2015 இல் கோர்பின் கட்சித் தலைவராக மேலுயர்ந்தார். அது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திருப்பி தாக்கும் ஒரு முயற்சியாக இருந்தது, அது எந்த புள்ளிவரைக்கும் தீவிரமடைந்தது என்றால், 2017 இல் —அப்போது மே ஒரு இடைக்கால பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்து அவரின் நிலைமையை சீர்படுத்திக் கொள்ள முயன்ற நிலையில்— 1945 இல் கிளெமெண்ட் அட்லியின் தொழிற் கட்சியின் மிகப்பெரிய எழுச்சிக்குப் பின்னர் டோரிக்கள் ஒரு சிறுபான்மை அரசாங்கமாக சுருங்கியது.
இந்த ஆதாயத்தைப் புகலிடமாக கொண்டு அழுத்தமளிப்பதற்குப் பதிலாக, கோர்பின் கட்சியின் வலதுசாரி சிறுகூட்டத்தை சமாதானப்படுத்துவதில் இருந்து தொடங்கி அடிபணியும் வரையில் நகர்ந்தார். 2018 தொழிற் கட்சி மாநாடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டாய மறுதேர்வுக்கான கோரிக்கைகளை அவர் எதிர்ப்பதைக் கண்டது, அதேவேளையில் அவர் அவரின் சொந்த நெருக்கமான ஆதரவாளர்கள் வேட்டையாடப்படுவதையும், வெளியேற்றப்படுவதையும் அனுமதித்தார், நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் தொழிற் கட்சியின் விசுவாசத்தை உறுதிப்படுத்த இலண்டன் நகரத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இன்று பிளேயரிச ரொம் வாட்சன் கோர்பினின் துணை தலைவர் என்பதை விட கட்சியின் தலைவரைப் போலிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் டோரிக்களுடன் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் பங்கெடுக்க அவர் தயாராக இருப்பதாக வாட்சன் Prospect சஞ்சிகைக்குக் கூறிய போது, கோர்பினின் அலுவலகம் ஒரு "ஸ்தாபக ஒட்டுப்போடல்" திட்டங்களைக் குறைகூறியது. மூன்று நாட்களுக்குப் பின்னர், கோர்பின் ஒரு பொது தேர்தலைத் தடுக்கும் நோக்கில், அதுவும் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொனி மேர்சர் அவரது கட்சி "துடைத்தழிக்கப்படுவதை" காணும் என்று கூறியிருந்த நிலையிலும், ஓர் உண்மையான ஒட்டுபோடலில் அவர் பங்கேற்றார்.
தொழிலாள வர்க்க இயக்கத்தின் விளைவாக அவர் அதிகாரத்திற்கு வந்தாலும் கூட அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் கோர்பின் சிந்திக்கக்கூடிய இறுதி விடயமாக இருக்கும். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவையாற்ற மட்டுமே விரும்புகிறார் என்பதுடன், அவரை தலைவராக தேர்ந்தெடுத்ததில் அதன் குணாம்சத்தை வெளிப்படுத்தி உள்ள வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும் தொடர்ந்து முயன்று வருகிறார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் இன்றியமையாத கூட்டாளியாக ஆளும் வர்க்கம் கோர்பினைச் சரியாக அளவிட்டுள்ளது என்பதையே மேயின் சிநேகபூர்வ முயற்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
இவை பிரிட்டனிலும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு மூலோபாய அனுபவங்களாகும். கோர்பின், உலகெங்கிலும் உள்ள போலி-இடது உருவாக்கங்கள் முன்மாதிரியாக கொள்வதற்குரிய ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறார். ஆனால் கோர்பினுக்கு முன்னரே கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமொஸ், போர்ச்சுக்கல்லில் "இடது அணி" மற்றும் அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ் ஆகியோர் அதே சேவையை —எப்போதும் அதே நாசகரமான பாதிப்புகளுடன்—வழங்கினர்.
ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்து வந்துள்ளது, “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள ஒரு கொள்கைக்கு உயிரூட்டுவதற்கான கடைசி பெரும்பிரயத்தன முயற்சியை கோர்பின் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதோடு, அவர் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர அபிவிருத்தியை —அதாவது தொழிற் கட்சியை இடதுக்கு நகர்த்த முயற்சிக்கும் கொள்கையை— தடுப்பதில் முதலாளித்துவத்திற்காக ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவிலான சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்க சூளுரைத்ததன் விளைவாக ஜனவரி 2015 இல் சிரிசா அதிகாரத்திற்கு வந்தபோது, அது எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தது என்பதன் மீது குறிப்பாக நாம் கவனத்தைக் கொண்டு வந்தோம், “இது ஐரோப்பிய அரசியலின் போக்கை மாற்றும் ஒரு மாற்றத்திற்குரிய நிகழ்வாக ஒவ்வொரு இடத்திலும் போலி-இடது அமைப்புகள் அதை வரவேற்றன. ஆனால் அதற்கு பதிலாக, ஜூலை [2015] சர்வஜன வாக்கெடுப்பில் கூடுதல் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்த பெருவாரியான வாக்குகளை நிராகரிப்பதற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான நிபந்தனைகளின் மீது அற்ப விட்டுக்கொடுப்புக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் மன்றாட பல மாதங்களை செலவிட்டதுடன், அதன் முன்னர் இருந்தவர்களை விட இன்னும் கடுமையான செலவின வெட்டுக்களைத் திணிக்கவும் உடன்பட்டது.
போலி-இடதின் வாதங்கள் சுக்குநூறாக கிழிந்து தொங்குகின்றன. இந்த வாரம் சோசலிஸ்ட் கட்சி, “தொழிற்சங்க தலைவர்களிடம் இருந்து திகிலான நிசப்தம்" குறித்தும், இவர்கள் "தொழிலாள வர்க்க சமூகங்களின் பெரும் சிரமமான நிலையை எடுத்துக்காட்ட தவறியுள்ளனர்" என்றும், “ஜெர்மி கோர்பினின் இளகிய மனம் படைத்த, சத்தமில்லாத குரல்" குறித்தும் எழுதுகிறது — மே உடனான அவரின் பேச்சுவார்த்தைகள் குறித்து அது குறிப்பிடவும் கூட இல்லை. அந்த பேச்சுவார்த்தைகளை "தொழிற் கட்சிக்கான ஒரு பொறி" என்றும், “முதலாளிமார்களின் நலன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு மூடிமறைப்பு" என்றும் சோசலிஸ்ட் கட்சி வர்ணிக்கிறது. “தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தலையீடு தான் இந்த நெருக்கடியில் இல்லாமல் இருக்கும் அம்சம், அதனால் தான் அரசாங்கம் இன்னும் பொறிந்து போகாமல் உள்ளது,” என்று அவர்கள், கோர்பினைச் சிறிதும் விமர்சிக்காமல், நிறைவு செய்கிறார்கள்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் நிலவும் முட்டுச்சந்து, உலக சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்விரோத போட்டி சக்திகளுக்கு இடையிலான கடுமையான போட்டியால் தூண்டிவிடப்பட்டு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரோதங்கள் உலகளாவியளவில் வெடித்திருப்பதில் வேரூன்றி உள்ளது. டொனால்ட் ட்ரம்பின் கீழ், அமெரிக்கா கூர்மையாக பாதுகாப்புவாதம், வர்த்தகப் போர் மற்றும் போர் அச்சுறுத்தலை அதிகரிப்பதை நோக்கி திரும்பி உள்ளது. ஐரோப்பிய பிரதான சக்திகளோ —ஐரோப்பிய ஒன்றியம் அதுவே உடைவதற்கு அச்சுறுத்தியவாறு அவற்றுக்கு இடையிலான விரோதங்கள் நிலவுகின்ற நிலையிலும் கூட— அதன் சொந்த இராணுவ தகைமையுடன் ஒரு பாதுகாப்புவாத வர்த்தக அணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை மீளபலப்படுத்த முயல்வதன் மூலமாக விடையிறுக்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் தேசிய பதட்டங்களின் வளர்ச்சியானது அனைத்து பிரதான கட்சிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசாங்கங்களும் வலதை நோக்கி திரும்புவதில் அரசியல்ரீதியான வெளிப்பாட்டைக் காண்கின்றன. உலகளவில் போட்டித்தன்மையில் நிறைந்திருப்பது என்பது வேலைகள், கூலிகள் மற்றும் தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான முடிவில்லா தாக்குதலை அர்த்தப்படுத்துகிறது, இதற்காக இது ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களைக் கோருகிறது. ஐரோப்பாவில் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கைகள் மீதான மக்கள் விரோதத்தை சாதகமாக்கி கொண்டுள்ள மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைப் பலிக்கடா ஆக்குவதில் இருந்து ஆதாயமடையும் அதிவலது மற்றும் பாசிசவாத இயக்கங்களின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. அவர்கள் ஏற்கனவே இத்தாலி, ஹங்கேரி, ஆஸ்திரியா மற்றும் போலாந்தில் ஆட்சியில் உள்ளனர் என்பதோடு, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பிரதான எதிர்கட்சிகளாக உள்ளனர் — இவர்கள் ஊடகங்களாலும் அரசு எந்திரத்தாலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிரடிப் படையாக ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கோர்பின் மற்றும் தொழிற் கட்சிக்கான ஆதரவைத் தொடர்வது இந்த அபாயகரமான அபிவிருத்திக்கு சாதகமாக அமைகிறது. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை, பிரான்சில் மரீன் லு பென்னின் மேலுயர்வு மற்றும் ஜேர்மன் நாடாளுமன்றத்திற்குள் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி மேலுயர்ந்திருப்பது ஆகிய அனைத்தும் உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது அனுதாபிகள் வகித்த சீரழிக்கும் பாத்திரத்தாலேயே சாத்தியமானது.
தொழிலாள வர்க்கம் ஒரு எதிர் தாக்குதலைத் தொடுப்பதற்கான நிலைமைகள் இப்போது மேலெழுந்து வருகின்றன. கோர்பினும் போலி-இடதுகளும் அரசியல்ரீதியாக அம்பலமாவது, தசாப்தங்களாக பழைய சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வந்த பின்னர், சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலை இப்போது தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் நடக்கின்றன.
பிரான்சில் "மஞ்சள் சீருடை" போராட்டங்களுடன் தேசிய ஆசிரியர் வேலைநிறுத்தமும் இணைந்துள்ளது. போர்ச்சுக்கல் மற்றும் ஹங்கேரியில் ஒரு வேலைநிறுத்த அலை நடந்து வருகிறது மற்றும் இத்தாலியில் அதிவலதுக்கு எதிராக பெருந்திரளான போராட்டங்கள் உள்ளன. அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் 1986 க்குப் பின்னர் அதன் அதிகபட்ச மட்டங்களில் உள்ளன. அல்ஜீரியா மற்றும் சூடானில், அவர்களின் அரசாங்கங்களையே கவிழ்க்க அச்சுறுத்தும் பாரிய வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன.
பிரிட்டன் தொழிலாளர்கள் இந்த மேலெழுந்து வரும் உலகளாவிய வர்க்கப் போராட்ட இயக்கத்தின் மீது தன்னை நனவுபூர்வமாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு புதிய வேலைத்திட்டமும் தலைமையும் அவசியமாகிறது. ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த இயக்கம் தான் பிரெக்ஸிட்டுக்கும் மற்றும் இக்கண்டம் தேசியவாத அடிப்படையில் உடைந்து வருவதற்குமான பதிலாகும். சோசலிச சமத்துவக் கட்சியும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ள நமது சகோதரத்துவ கட்சிகளும் இந்த மூலோபாய அரசியல் திருப்பத்தை வழிநடத்த ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்க தங்களைத் தாங்களே அர்ப்பணித்துள்ளன.