Print Version|Feedback
America the Barbaric
அமெரிக்க சிறைகளின் காட்டுமிராண்டி நிலைமைகள்
Niles Niemuth
6 April 2019
பலாத்காரங்கள், படுகொலைகள், அடி-உதைகள், உருச்சிதைவுகள், தீக்கிரையாக்கும் நடவடிக்கைகள் மற்றும் சட்ட விதிமுறைமீறல்களும் கட்டுக்கடங்காமல் உள்ளன. உதவி கோரும் அலறல்களுடன், தனியறைகளில் அடைத்து வைக்கப்பட்ட சிறைக்கைதிகளின் இரத்தச் சிதறல்கள் சுவர்களில் கறைகளாக படிந்துள்ளன. கடந்த 15 மாதங்களில் பதினைந்து தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவையெல்லாம் அல்-சிசியின் எகிப்திலோ அல்லது பின் சல்மானின் சவூதி அரேபியா சித்திரவதைக் கூடத்தினதோ விவரிப்புகள் அல்ல. அல்லது ஈராக்கில் இழிபெயர் பெற்ற அபு கிஹ்ரைப் சிறைக்கூடத்தில் கைதிகள் மீதான துஷ்பிரயோகம் குறித்ததும் இல்லை, இவை குவாண்டனமோ வளைகுடா சிறை முகாமில் அல்லது சிஐஏ இருட்டு விசாரணை அறையில் நிலவுகின்ற நிலைமைகளாகும்.
அலபாமா மாநில அரசு சிறைத்துறையில் நிலவும் இந்த பெருங்கவலைக்குரிய நிலைமைகள், இவ்வாரம் வெளியிடப்பட்ட நீதித்துறை அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது. இவை குரூரமான மற்றும் அசாதாரண தண்டனைக்கு தடைவிதிக்கும் அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை முற்றிலுமாக மீறுவதாக உள்ளன.
இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக தெற்கு பிரிவு வறுமை சட்ட மையத்தால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட 2,000 க்கும் அதிகமான அலபாமா சிறைச்சாலையின் புகைப்படங்கள், இந்த நிலைமைகளது குரூரமான யதார்த்தத்தைச் சித்தரிக்கின்றன, இவை பெடரல் புலன்விசாரணையாளர்களால் இரண்டாண்டுகளுக்கும் அதிகமாக சிறைக்கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் நடத்தப்பட்ட நூற்றுக் கணக்கான நேர்காணல்களில் விவரிக்கப்பட்டன.
குறிப்பிடத்தக்களவில் படுபயங்கரமாக இருந்தாலும், இதுபோன்ற நிலைமைகள் எவ்விதத்திலும் அங்கே மட்டும் பிரத்யேகமாக நிலவும் நிலைமைகள் அல்ல. இவை அமெரிக்கா எங்கிலும் ஒவ்வொரு மாநிலம், உள்ளாட்சி மற்றும் நகரத்தினது சிறைச்சாலைகளிலும் வெவ்வேறு வடிவங்களில் நிலவுகின்றன. அமெரிக்காவின் மத்திய மற்றும் மாநில சிறைச்சாலை அமைப்புகளுக்குள்ளும், உள்ளூர் சிறைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் முகாம்களிலும் 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விலங்குகளைப் போல அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நன்னடத்தைக் காவலில் இருப்பவர்கள் அல்லது பிணையில் இருப்பவர்கள் உள்ளடங்கலாக, அண்மித்து 7 மில்லியன் அமெரிக்கர்கள் அர்த்தமற்ற விதத்தில் "குற்றவியல் நீதி விசாரணை முறை" என்றழைக்கப்படுவதில் சிக்கியுள்ளனர்.
உலகளவில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒரு கால்வாசியினருக்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். ஒவ்வொரு 100,000 குடியானவர்களில், 698 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். எந்த ஒரு நாளிலும் சிறையில் அடைக்கப்பட்ட 540,000 க்கும் அதிகமானவர்கள் மீது எந்த குற்றத்திற்காகவும் தண்டனை வழங்கப்பட்டிருக்கவில்லை. மிதமான பிணைத்தொகையான 10,000 டாலர் கூட செலுத்த முடியாத ஏழைகள் என்ற காரணத்தினாலேயே பலரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் அரை மில்லியன் பேர், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் ஐந்தில் ஒருவர், வன்முறை எதுவுமின்றி போதை சம்பந்தமான குற்றத்தீர்ப்புகளுக்காக நீண்டகாலமாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை சித்திரவதைக்கு நிகரானது என்று அறிவித்துள்ள சிறையடைப்பின் ஒரு வடிவமான, ஏதேனும் ஒரு நாளாவது தனியாக அடைத்து வைப்பதில் 61,000 கைதிகள் வைக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். குறைந்தபட்சம் 4,000 பேர் உலக தொடர்பின்றி முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் கடுமையான மனநோய்க்கு உள்ளாகி உள்ளனர். சீமெந்து சவப்பெட்டிக்குள் அடைத்து வைப்பதால் இது பல கைதிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது.
கடனாளிகளுக்கான சிறைக்கூடங்கள் என்பது உத்தியோகபூர்வமாக சட்டத்திற்குப் புறம்பானவை என்ற போதினும், வறிய தொழிலாளர்கள் அவர்களின் கடன்களுக்காக வழமையாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இண்டியானாவில் தாய் ஒருவர், அவருக்கு ஒருபோதும் மெயிலில் அனுப்பப்பட்டிராத ஆம்புலன்ஸ் கட்டணத்தைக் கட்டவில்லை என்பதற்காக பெப்வரி மாதம் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து ஓர் அழுக்கடைந்த சிறையில் மூன்று நாட்களுக்குத் அடைக்கப்பட்டிருந்தார். இதுபோன்ற கதைகள் நிறைய உள்ளன.
ஒபாமா கொண்டு வந்த கொள்கைகளை விரிவாக்கி, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இந்த மத்திய அரசாங்கம் ஆயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இழிவார்ந்த நிலைமைகளில் தங்க வைத்து, புலம்பெயர்ந்தவர்கள் மீது ஒரு போர் தொடுத்து வருகிறது. தெற்கு எல்லையைக் கடக்க முயன்றதற்காக பெப்ரவரியில் சுமார் 77,000 பேர் காவலில் வைக்கப்பட்டார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேட்டையாடப்பட்டு வருவதுடன், அவர்களின் வீடுகள் மற்றும் வேலையிடங்களில் கைது செய்யப்படுகின்றனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் குரூரத்தனம் இவ்வாரம் 280 ஆவணமற்ற தொழிலாளர்கள் டெக்சாஸின் ஆலனில் பெடரல் முகவர்களால் கைது செய்யப்பட்ட போது முழுமையாக பார்வைக்கு வந்தது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் இதுவே மிகப் பெரிய வேட்டையாடலாகும்.
பின்னர் அங்கே முடிவில்லாத பொலிஸ் படுகொலைகளின் அலை உள்ளது, இதில் அமெரிக்க நகர வீதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் அதிகமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், மின்னதிர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அடித்து கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் படுகொலைகள் மீதான குற்ற வழக்குகள் அரிதாகவே உள்ளன என்பதோடு, இதற்காக தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக ஏறத்தாழ எதுவும் காதில் விழுவதில்லை. கொலை செய்வதற்கும், முடமாக்குவதற்கும் மற்றும் குரூரமாக நடந்து கொள்வதற்கும் பொலிஸிற்குத் தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் பச்சைக் கொடி காட்டப்படுகிறது.
அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தவொரு நாட்டை ஆட்சி மாற்றத்திற்காகவோ அல்லது படையெடுப்புக்காகவோ இலக்கில் வைக்கிறதோ அந்நாட்டில் மனித உரிமைமீறல்கள் நடப்பதாக குற்றஞ்சாட்டுவதில், ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும், கணக்கிலடங்கா பாசாங்குத்தனத்துடன், அவற்றின் ஆக்ரோஷத்தைக் காட்டுகின்றன. மொத்த மக்கள்தொகையில் அடிமட்ட அரைவாசி ஜனங்களது செல்வவளத்தை விட அதிகமானதை மூன்று மிகப் பெரிய அமெரிக்கர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதும், உலகிலேயே மிகவும் குரூரமான மற்றும் சமமற்ற சமூகங்களில் ஒன்றை, அவை உலகின் ஜனநாயகத்திற்கான கலங்கரை விளக்கமாக பிரகடனப்படுத்துகின்றன.
அமெரிக்க சிறைச்சாலை நிலைமைகள் ரஷ்யாவில் அல்லது சீனாவில் இருப்பதாக வெளியாகி இருந்தால், பத்திரிகைகளிலும் காங்கிரஸ் சபைகளிலும் பொருளாதார தடைகள் மற்றும் "மனிதாபிமான" இராணுவத் தலையீட்டுக்கு ஆரவாரமான கூச்சல் இருந்திருக்கும், ஊடகங்களில் அது மீண்டும் மீண்டும் எதிரொலிக்கப்பட்டிருக்கும்.
அலபாமா சிறைச்சாலைகளின் நிலைமைகளை வெளிப்படுத்தும் இதுபோன்ற ஓர் அறிக்கை ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வெளியாகி இருந்தால், அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் பிரிவுகளுக்குள்ளேயே கூட அதிர்ச்சி மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வந்திருக்கும், ஆனால் இன்றோ அது வெறுமனே முணுமுணுப்புடன் கடந்து செல்லப்படுகிறது.
ஜனநாயகக் கட்சி வாய்மூடி உள்ளது ஏனென்றால் அமெரிக்க சிறைச்சாலை நிலைமைகளின் பரந்த சிக்கலான நிலைகளுக்கு அதுவும் உடந்தையாகும். சிறைச்சாலை நெரிசலை வரலாற்றளவில் அதிகரிப்பதற்கு வழி வகுத்த சட்டமசோதாவில் ஜனாதிபதி பில் கிளிண்டன் தான் கையெழுத்திட்டார். 2011 இல் உச்சநீதிமன்றத்தால் "குரூரமானதாக" மற்றும் "வழமைக்கு மாறானது" என்றும் அரசியலமைப்பை மீறுவதாகவும் காணப்பட்ட கலிபோர்னியா சிறைத்துறையை ஜனநாயகக் கட்சியினர் தான் மேற்பார்வையிடுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள சுய-ஆவேசம் கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளுக்கு இது குறித்து எந்த ஆர்வமும் இல்லை. ஊடகங்களிலும் கல்வித்துறையிலும் #MeToo பிரச்சாரத்தை ஊக்குவிப்பவர்கள் அமெரிக்க சிறைச்சாலைகளின் பாலியியல் வன்முறை குறித்து எதுவும் கூறுவதில்லை, அல்லது அமெரிக்காவுக்குத் தப்பி வருகின்ற புலம்பெயர்ந்தவர்கள் மீது சுமத்தப்படும் வன்முறை குறித்தும் ஒன்றும் கூறுவதில்லை.
பெரும்பாலான இரவு நேர செய்தி நிகழ்ச்சிகளில் எந்த செய்தியும் இல்லாமல், ஊடகங்களோ முடிந்தளவுக்கு மிகக் குறைந்த செய்திகளையே வெளியிட்டுள்ளன. அபு கிஹ்ரைப் துஷ்பிரயோக புகைப்படங்கள் மற்றும் சிஐஏ சித்திரவதைக் குறித்த செனட் அறிக்கை ஆகியவற்றைப் போலவே, அலபாமாவில் என்ன நடந்து வருகிறதோ அந்த தகவல்களையும் மறைப்பதற்கான முயற்சி நடக்கிறது. நியூ யோர்க் டைம்ஸூம் ஏனைய ஊடக நிறுவனங்களும் துஷ்பிரயோகம் மற்றும் உயிரிழப்புகளை ஆவணப்படுத்துகின்ற பெரும்பாலான புகைப்படங்களை பிரசுரிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளன.
முடிவாக பார்த்தால், இதுவே அவர்களின் நிலையும். அமெரிக்க சிறைச்சாலைகளின் நிலைமைகள், மற்றும் ஒட்டுமொத்தமாக வன்முறை எந்திரமானது, அமெரிக்க "ஜனநாயகத்தின்" யதார்த்தத்திற்கு ஓர் இழிவார்ந்த வெளிப்பாடாகும். அரசு எந்திரமானது நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும். இது தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் நிஜமான முகம்.