Print Version|Feedback
ඕස්ට්රේලියාව ඉන්දියානු සාගර යුද අභ්යාසයක් ශ්රී ලංකාවේදී පවත්වයි
இலங்கையில் ஒரு இந்து சமுத்திர போர் பயிற்சியை ஆஸ்திரேலியா நடத்தியது
By Vijith Samarasinghe
25 March 2019
ஆஸ்திரேலியா, இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான அதன் முக்கிய இராணுவப் பயிற்சியான இந்து-பசிபிக் பயிற்சி-19 (Indo-Pacific Endeavour-19) என்ற ஒன்றை இலங்கையை மையப்படுத்தி தற்போது முன்னெடுத்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப் பெரிய பயிற்சியான இது, ஆஸ்திரேலிய இராஜ்ஜிய கடற்படையின் தலைமையில் அனைத்து இலங்கை பாதுகாப்புப் படைகளினதும் பங்களிப்புடன் நடைபெறுகின்றது.
இதற்காக படகுகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மார்ச் 11 முதல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன் 1000 இற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவொன்று மார்ச் 23 முதல் 30 வரை பயிற்சிகளில் பங்கேற்கும். திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இடம்பெறும் இந்த பயிற்சியில் கன்பெரா, சக்சஸ், பரமடா மற்றும் நியூகாசல் ஆகிய நான்கு முக்கிய போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும். இவற்றில் ஹெலிகொப்டர்களை ஏந்திச் செல்லும் கன்பெரா கப்பல், ஆஸ்திரேலிய கடற்படையின் மிகப்பெரிய கட்டளையிடும் கப்பலாகும். நியுகாசல் மற்றும் பரமடா கப்பல்கள் ஏவுகணைகளை ஏந்தி செல்லும் இரண்டு தாக்குதல் கப்பல்களாகும். இவற்றுக்கு மேலாக பயிற்சியில் ஈடுபடும் விமானங்கள், ஹம்பந்தோட்ட, மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ளன.
பயிற்சி பற்றி கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு தொழிற்துறை அமைச்சர் லிண்டா ரெனால்டிஸ், "ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையானது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள பாதுகாப்புப் படைகளுடன் நீண்ட கால உறவுகளை பேணி வருவதோடு இந்து-பசிபிக் பயிற்சி போன்ற தலையீடுகள் மூலம் அத்தகைய உறவுகள் பலப்படுத்தப்படுகின்றன," என தெரிவித்தார்.
இலங்கையில் தனது படைகளை "மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள்" போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்துவதன் மூலம், இலங்கை பாதுகாப்பு பிரிவுடன், குறிப்பாக கடற்படையுடன் தொடர்புகளை ஆழப்படுத்துக்கொண்டுள்ளது என, கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜோன் பிலிப், பயிற்சியைப் பற்றி ஒரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி தெளிவுபடுத்தினார். "இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் சமுத்திர பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதி பற்றிய ஒரு பலம்வாய்ந்த பொது நோக்கம் உள்ளது," என பிலிப் மேலும் கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குழு காப்டன் ஷோன் எர்வின், இரண்டு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு உறவுகள் 2015 இல் இருந்து நிலையாக வளர்ச்சியடைந்துள்ளதோடு சட்டவிரோத ஆட்கடத்தல் போக்குவரத்து வியாபாரத்தையும் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்வையும் போதைப் பொருள் கட்டுப்பாடு, அதே போல், இந்து சமுத்திர பிராந்தியத்துள் “சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை" உருவாக்குவதையும் மேலும் மேலும் இலக்காகக் கொண்டுள்ளது, எனத் தெரிவித்தார்.
எத்தகைய முகமூடியைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளின் புதிய வளர்ச்சியான இந்த போர் பயிற்சியின் மூலம், இந்து சமுத்திரப் பிராந்தியத்துள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் மேற்கொள்ளப்படும் பூகோள-அரசியல் அணிதிரள்வே வெளிப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நீண்டகால நண்பனான ஆஸ்திரேலியா, 2016 இல் வெளியிட்ட "பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில்" "இந்து சமுத்திரத்தில் மிக முக்கியமான கடற் போக்குவரத்து பாதை அருகே அமைந்துள்ளமை, இலங்கை-ஆஸ்திரேலிய பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பிரதானமாக காரணமாக உள்ளது" என்று இலங்கையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிராக இந்த பிராந்தியத்தில் ஏற்பாடு செய்கின்ற இராணுவ நடவடிக்கைகளில், இலங்கையின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை கன்பராவும் தீவிரமாக புரிந்துகொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஒன்றாக சேர்ந்து நான்கு உறுப்பு பேச்சுவார்த்தை என்ற பெயரில், 2007 இல் சீனாவிற்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டன. அதற்குப் பின்னாரலான காலத்தில், பல்வேறு போர் பயிற்சிகள், இராணுவ தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இராணுவ நிலைப்படுத்தல் மூலம் இந்த கூட்டணி மேலும் மேலும் பலப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து தென் ஆசிய பிராந்தியத்துள் "மலபார்" என்ற பெயரில் பிரமாண்டமான யுத்தப் பயிற்சி ஒன்றை நடத்தி வருவதோடு, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையில் “ஆஸ்இன்டெக்ஸ்” என்ற பெயரில் ஒரு தனி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் பயிற்சி முடிந்த பின்னர், உடனடியாக ஆஸ்திரேலிய கடற்படையானது இந்திய கடற்படை உடன் இந்த பயிற்சியில் பங்கெடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை, "இந்து சமுத்திரத்திர பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவிற்கு முக்கிய மூலோபாய பங்குதாரரான இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், 2019 இந்து-பசிபிக் பயிற்சியில் முதன்மை அடிப்படையாக இருக்கும்” என தெரிவித்துள்ளது. கன்பரா கப்பல் உட்பட பயிற்சியில் ஈடுபடும் கப்பல்கள், அதன் பின்னர் இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற இந்த பிராந்தியத்தில் வாஷிங்டனில் ஏனைய மூலோபாய பங்காளிகளான நாடுகளுக்கும் பயணிக்க உள்ளன.
2012 இல் ஒபாமா நிர்வாகத்தின் மூலம் "ஆசியாவில் முன்னிலை" என்ற கொள்கையின் கீழ் தொடங்கப்பட்டு, ட்ரம்ப் ஆட்சியின் கீழ் புதிய மட்டத்திற்கு தீவிரமாக்கப்பட்டுள்ள, சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைக்கும் வாஷிங்டனின் நடவடிக்கைகள் மூலம் முன்னெடுக்கப்படும் புவி-அரசியல் நீர்ச்சுழிக்குள் இலங்கை இழுத்துச் செல்லப்படுகின்றது என்பதே ஆஸ்திரேலிய இராணுவ தலையீட்டின் மூலம் தெளிவாகின்றது. "இந்து-சமுத்திர பிராந்தியத்தில் சட்ட அடிப்படையிலான ஆட்சியை ஸ்தாபிப்பது" போன்ற வாஷிங்டனின் சீனாவை இலக்காகக் கொண்ட அறிக்கைகள், இந்த இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியாவும் பயன்படுத்திக்கொண்டுள்ளது. இரண்டாவது வரிசை ஏகாதிபத்திய அரசான ஆஸ்திரேலியா, அதன் பிராந்திய மேலாதிக்கத்தை ஸ்தாபித்துக்கொள்வதற்காக சீனாவிற்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையில் முழுமையாக ஒருங்கிணைந்துகொண்டுள்ளது.
இந்து சமுத்திரத்தின் மையத்தில் முக்கிய கடல் வர்த்தக பாதைக்கு அருகில் அமைந்திருப்பதால், இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மூலோபாய ரீதியில் மிகவும் அவசியமானதாகும். 2015 ஜனாதிபதி தேர்தலில், சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பராமரித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தமையானது வாஷிங்டன் தலையிட்டு மேற்கொண்ட ஒரு ஆட்சி மாற்ற சதியே ஆகும்.
2015 இற்குப் பின்னர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மிக அதிகமான அளவுக்கு உயர்ந்துள்ளன. 2018 இல் மட்டும், ஐந்து தடவை அமெரிக்க இராணுவ கப்பல்கள் மற்றும் கடற்படை பட்டாளங்கள் இலங்கையில் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் கடற் பரப்புகளில் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை நடத்தியுள்ளன. ஆஸ்திரேலிய பயிற்சிக்கான மையமாக உள்ள திருகோணமலை துறைமுகம், அமெரிக்க போர் கப்பல்களுக்காக "திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பு மையமாக" (Logistics Hub) ஆக்கும் சாத்தியத்தைப் பற்றிய ஒரு ஆய்வும் கூட டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன. தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக புது தில்லி இலக்கு வைத்துள்ள நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மத்தல விமான நிலையம், ஆஸ்திரேலிய பயிற்சியின் ஒரு மையமாக ஆகியிருப்பதும் தற்செயலான விடயம் அல்ல.
இராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆரம்பத்தில் கையெழுத்திடப்பட்ட, அமெரிக்கவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெறுதல் மற்றும் இருதரப்புச் சேவை உடன்படிக்கை (Acquisition and Cross-Servicing Agreement - ACSA) என்ற இராணுவ ஒப்பந்தமும் தற்போதைய அரசாங்கத்தினால் காலவரையறை இன்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரியில், அமெரிக்க செனட் சபையின் ஆயுத சேவைகள் செயறகுழு முன் உரையாற்றிய அமெரிக்க கடற்படையின் இந்து-பசிபிக் தளபதி பிலிப் டேவிட்சன், அமெரிக்க-இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை ஒத்துழைப்பை புதிய மட்டத்திற்கு உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது, என்று கூறினார்.
இந்தப் பிராந்தியம் முழுவதும் பற்றிப் படரும், திடீரென ஒரு உலகப் போராக வெடிக்கக் கூடிய சீனாவுக்கு எதிரான ஒரு மோதலில், பிரதான கடற்படை தாக்குதல் தளமாக இலங்கையை ஆக்கிக்கொள்வதற்கு, வாஷிங்டன் தனது ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் உட்பட கூட்டளிகளுடன் சேர்ந்து முன்னெடுக்கும் வேலைத் திட்டத்திற்கு, இப்போது கொழும்பு உள்ள ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனத்தினதும் முழு ஆதரவு கிடைத்துள்ளது.
அரசியல் வெட்டு குத்துக்கள் ஒரு புறம் இருக்க, ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த இராணுவ உறவுகளை பலப்படுத்துவதற்கு ஒன்றாக செயற்படுகின்ற அதே வேளை, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுடன் உறவுகளை கட்டியெழுப்புவதற்கு உத்வேகத்துடன் இருக்கும் எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர், இந்த அபிவிருத்திகளைப் பற்றி மௌனமாக இருக்கின்றனர்.
அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள பெறுதல் மற்றும் கூட்டுச் சேவை உடன்படிக்கை மூலம், "நாட்டின் இறைமைக்கு" பாதிப்பு ஏற்படுகின்றனது எனக் கூறிக்கொண்டு, தேசியவாத போலி எதிர்ப்பைக் காட்டுகின்ற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), இந்த இராணுவ தொடர்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ள பிராந்திய மற்றும் உலக யுத்தமொன்றின் உண்மையான ஆபத்தை திட்டமிட்டு மூடி மறைத்து வருகின்றது.
பிராந்திய பூகோள அரசியல் பதட்டங்கள் முழு அளவிலான போரின் விளிம்பிற்கு வந்திருக்கின்றது என்பதை, கடந்த மாதம் இரண்டு அணுவாயுத சக்திகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுக்கிடையிலான எல்லையில் காஷ்மீரில் நடந்த விமானத் தாக்குதல்கள் மற்றும் இராணுவ தாக்குதல்களும் தெளிவாக்கி இருந்தன. சீனாவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் யுத்த பயிற்சிகள் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களினால் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த ஆபத்தை இலங்கை தொழிலாளர்கள், ஏழை மற்றும் இளைஞர்களும் மிகவும் பாரதூரமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய திட்டங்களுக்கு தோள்கொடுத்து வருகின்ற முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் போலி இடது கட்சிகளிடம் இருந்து முற்றிலுமாக விலகி, தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ், சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கமொன்றை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.