Print Version|Feedback
Ecuadorian police repress mass march demanding Julian Assange’s freedom
ஜூலியன் அசான்ஜின் விடுதலையைக் கோரும் பாரிய அணிவகுப்புகளை ஈக்வடோரிய பொலிஸ் நசுக்குகிறது
By Bill Van Auken
18 April 2019
ஈக்வடோரில் ஜனாதிபதி லெனின் மொரேனோ பதவி விலகவும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யவும் கோரிக்கைகளை முன்வைத்து புதனன்று, ஆயிரக்கணக்கான ஈக்வடோரிய தொழிலாளர்களும் இளைஞர்களும் கியூட்டோவின் வரலாற்று காலனித்துவ மையத்தின் ஊடாக அணிவகுத்துச் சென்றனர்.
2017 இல் மொரேனோ ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றான இது மிருகத்தனமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டது. அணிவகுப்பாளர்கள், Plaza de la Independencia இன் இரண்டு தொகுதிகளுக்கு உள்ளேயும், பொலிஸ் மற்றும் ஆயுதமேந்திய படையினரின் தீவிர சுற்றிவளைப்புக்கு மத்தியிலான காரோன்டிலெட் ஜனாதிபதி மாளிகைப் பகுதியிலும் அணிவகுத்துச் சென்றபோது, அவர்கள் மீது பொலிஸ், தாக்குதல் நாய்கள் மற்றும் கண்ணீர்புகை வீச்சு என தமது தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்தளவில் பாதுகாப்பு படையினர் கட்டவிழ்த்து விட்டனர்.
பொலிஸ் தாக்குதலில் இரண்டு செய்தி புகைப்படக்காரர்கள் உட்பட பலர் காயமடைந்தனர் என்பதுடன், குறைந்தபட்சம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், “அசான்ஜை விடுதலை செய்” எனக் கோரும் சுலோகங்களை கையிலேந்தி சென்றதுடன், பலரும் அசான்ஜ் போன்ற முகமூடியை அணிந்திருந்தனர். ஏனையோர், அசான்ஜ் கைதானதைச் சித்தரிக்கும் மற்றும் மொரேனோ அரசாங்கத்தை ஏளனம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் சித்திரங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை கையிலேந்திச் சென்றனர், இவரது தூதர் லண்டனில் தூதரக பணியாளர் மீது “உளவு பார்த்ததாக” அபத்தமாக குற்றம்சாட்டினார்.
மேலும், “மொரேனோ, நீ ஒரு கபட வேடதாரி மற்றும் துரோகி, மக்கள் உன்னை நிராகரிக்கிறார்கள்!” என்று கூட்டத்தினர் முழக்கமிட்டனர்.
“ஒரு குறைந்த உரிமை அல்ல” [#niunderechomenos] என்ற சுலோகத்தின் கீழ் அழைப்புவிடுக்கப்பட்டதான இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, லண்டன் தூதரகத்தின் கதவுகளை திறந்து அசான்ஜை இழுத்துவந்து பிரிட்டிஷ் சிறையில் அடைக்க பொலிஸ் கைப்பற்றுதல் குழுவிற்கு மொரேனோ அரசாங்கம் வழங்கிய உத்தரவுதான் தூண்டுதலாக இருந்தது, இங்குதான் 2012 முதல் அசான்ஜூக்கு அடைக்கலம் வழங்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக, அமெரிக்க போர் குற்றங்கள் மற்றும் உலகளாவிய அதன் சதிகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களை தைரியமாக பகிரங்கப்படுத்தியதற்காக விசாரணயை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவதற்கான அச்சுறுத்தலுக்கு தற்போது அவர் முகம் கொடுக்கிறார்.
முக்கியமாக, முன்னாள் ஜனாதிபதியும் மொரேனோவின் எதிராளியுமான ரஃபேல் கோரியாவை ஆதரிக்கும் Revolución Ciudadana கட்சி உட்பட, அணிவகுப்பு ஒழுங்கமைப்பாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகபட்சமாக 20,000 பேர் பங்கேற்றனர் எனத் தெரிவித்தனர்.
அணிவகுப்பில் ஏந்தி செல்லப்பட்ட பதாகைகளில், அசான்ஜூக்கு எதிரான மொரேனோவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் அவரை ஒரு “துரோகி” என்றும் “உலக பழிகேடர்” என்றும் இழிவுபடுத்தும் சுலோகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஒரு முக்கிய பதாகை, ஆஸ்திரேலியாவில் பிறந்த பத்திரிகையாளருக்கு 2017 இல் வழங்கப்பட்டிருந்த குடியுரிமை பற்றிய ஒரு குறிப்பின் படி “அசான்ஜ் ஒரு ஈக்வடோரியன்,” என்றும், பிரிட்டிஷ் பொலிஸிடம் அவரை ஒப்படைக்க அதனுடன் ஒத்துழைக்கும் வகையில் மொரேனோ அரசாங்கம் அவ்வுரிமையை விசாரணையின்றி சட்டத்திற்கு புறம்பாக அவரிடமிருந்து பறித்துவிட்டது என்றும் குறிப்பிட்டது. மேலும், “அசான்ஜ் உங்களது கொடுங்கனவாக இருப்பார்” என்று மற்றொரு பதாகை மொரேனோவை எச்சரித்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு “தூண்டுதலாக இருந்தது அசான்ஜ்” என்று ஈக்வடோர் குடிமக்கள் பங்கேற்பு மற்றும் சமூக கட்டுப்பாட்டுக் குழுவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் எட்வின் ஜாரின் தெரிவித்தார், இவரும் அணிவகுப்பில் கலந்து கொண்டார், அப்போது, மொரேனோ அரசாங்கத்தின் “அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் பற்றிய மக்களின் ஒட்டுமொத்த கோபம்” மற்றும் “பாரிய பணிநீக்கங்கள்” மற்றும் “புதிய தாராளவாதக் கொள்கைகள்” ஆகியவற்றின் மீதான வெளிப்பாடாகவும் இது இருந்தது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) 4.5 பில்லியன் டாலர் கடனுக்காக கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மொரேனோ அரசாங்கம், தொழிலாளர் சட்டங்களை நீக்குவது, 10,000 க்கும் அதிகமான பொதுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, ஓய்வூதியங்களை தாக்குவது மற்றும் அரசாங்க சேவைகளை கூர்மையாக வெட்டுவது என்ற வகையிலான ஒரு தொடர்ச்சியான “கட்டமைப்பு சரிசெய்தல்” நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மொரேனோ, கோரியாவின் கீழ் துணை ஜனாதிபதியாக சேவையாற்றியவர் என்பதுடன், அவரது கைதேர்ந்த வாரிசாகவும் இருந்தார். வெனிசுவேலா, பிரேசில், ஆர்ஜென்டினா மற்றும் பிற நாடுகளில் முதலாளித்துவ ஜனரஞ்சக தேசியவாத அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததைக் கண்ட “Pink Tide” மற்றும் “பொலிவாரிய புரட்சி” ஆகியவற்றின் ஒரு பகுதியாக கோரியா தன்னைக் காட்டிக் கொண்ட அதேவேளை, பொருட்களின் விலையேற்றம் முடிவுக்கு வந்த நிலையில் வாஷிங்டன் உடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகளை அவரே தொடங்கியும் வைத்தார். பேர்னி சாண்டர்ஸூக்கு எதிராக முதன்மையானவற்றை தூண்டிவிடும் ஜனநாயக கட்சித் தலைமையின் முயற்சிகளை அம்பலப்படுத்திய மின்னஞ்சல்களையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களை பாதுகாக்க உறுதியளிக்கும் வகையில் ஹில்லாரி கிளின்டன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வழங்கிய உரைகளையும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பின்னர், அசான்ஜை மவுனமாக்கவும், அவரது இணைய அணுகுதலை தடுக்கவும் முதல் கட்ட நடவடிக்கைகளை அவரும் மேற்கொண்டார்.
மொரேனோ ஒருமுறை அலுவலகத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு அசான்ஜை அவர் காட்டிக் கொடுப்பதுடனும், மற்றும் வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கை மற்றும் ஈக்வடோருக்குள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ள அதன் இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்பு போன்றவற்றை உச்சபட்சமாக அமெரிக்க அதிகாரிகள் எப்போதும் நெருக்கமாக தழுவி நிற்பதுடனும் சேர்த்து, இந்த திருப்பத்தை வலதை நோக்கி வலுவாக முடுக்கிவிட்டார்.
ஈக்வடோரிய தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களுடன் ஒருங்கிணைந்த இந்த வலதுசாரி திருப்பம், தவிர்க்கவியலாமல் ஜூலியன் அசான்ஜ் வழக்குடன் பிணைந்த அதிகரித்தளவிலான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மொரேனோ அரசாங்கம் எடுப்பதற்கு வழி வகுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அணிவகுப்புக்கு முன்பாக, அதன் இரு முக்கிய ஒழுங்கமைப்பாளர்களான நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரிக்கார்டோ பாட்டினோ, மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விர்ஜிலியோ ஹெர்னாண்டெஸ் ஆகியோர் மீதான ஜோடிப்பு வழக்குகளின் பேரில் அவர்களை கைது செய்வதற்கு மொரேனோ அரசாங்கம் முனைந்தது.
இது, ஈக்வடோரில் வசித்து வரும் சுவீடன் குடிமகனான ஓலா பினி ஐயும் சிறையிலிட்டது, இவர் அசான்ஜின் நண்பர் மற்றும் லண்டனில் ஈக்வடோரிய தூதரகத்திற்குச் சென்று பலமுறை அவரை சந்தித்து வந்தார் என்ற ஒரே ஆதாரத்தின் பேரில், பொது மற்றும் தனியார் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் கணக்குகளை ஊடுருவி தகவல் திருடினார் என்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
ஈக்வடோரில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்த பினி, கியூட்டோவைத் தளமாகக் கொண்ட மையம் ஒன்றில் பணிபுரிந்தார், அந்த மையம் இணைய பாதுகாப்பு, குறியாக்கம் மற்றும் இலவச மென்பொருள் விரிவாக்கம் ஆகிய வேலைகளில் சிறப்புவாய்ந்தது.
அவரது பெற்றோர், திங்களன்று கியூட்டோவிற்கு வந்து சேர்ந்து, பின்னர் அவர்களது மகனை “அவர்கள் என்னவென்று குற்றம்சாட்டியுள்ளனரோ அவர் அப்படிப்பட்டவர் இல்லை, வெறும் அப்பாவி; எங்களது மகன் எந்தவொரு அமைப்பு, தனியார் அல்லது பொது நிறுவனம் என எதன் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை” என்பதை வலியுறுத்தி பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ஈக்வடோரில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் உலகெங்கிலுமுள்ள அவரது நண்பர்கள் தொடர்புபட்டவர்கள், எனவே அவர்கள் தான் “அவரை வீட்டிற்கு அழைத்துவர” வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
ஒரு சீன கட்டுமான ஒப்பந்தக்காரரிடம் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களில் ஒரு கடற்சிப்பி நிறுவனத்திற்கு இலஞ்சப் பணம் பாய்ச்சப்பட்டு பின்னர் அந்நிறுவனம் ஜனாதிபதியின் மூன்று மகள்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டதான ஒரு பாரிய ஊழல் மோசடியில் ஜனாதிபதியும் அவரது குடும்பமும் ஈடுபட்டிருந்தது பற்றி அம்பலப்படுத்தியதற்கு எதிரான மொரேனோ அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையுடன் பின்னிப் பிணைந்ததாகவே பினி மீதான ஜோடிப்பு குற்றச்சாட்டு உள்ளது.
இந்த ஊழலை அம்பலப்படுத்திய INA ஆவணங்கள் என்று அழைக்கப்படுவனவற்றை வெளியிட்டது குறித்து பரவலாகப் புகார் அளிக்கப்பட்டது, மேலும் கடந்த மாதம் விக்கிலீக்ஸ் அதன் ட்விட்டர் கணக்கில் இந்த ஊழல் மோசடியை கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்னர் ஈக்வடோரில் அது தொடர்பாக காங்கிரஸ் விசாரணை தொடங்கப்படுவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்தது. லண்டன் தூதரகத்தில் தனிமைபடுத்தப்பட்ட தடுப்புக் காவலுக்கு நெருக்கமான கடுமையான கண்காணிப்பு மற்றும் நிலைமைகள் இருந்த போதிலும் - விக்கிலீக்ஸூம் ஜூலியன் அசான்ஜூம், ஊழல் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக மொரேனோ மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை ஊடுருவி தகவல்கள் சேகரித்ததற்காக தனிப்பட்ட முறையில் அவர்களை குற்றம்சாட்டுவதற்கு இந்த ட்வீட்டை மொரேனோ அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.
தனியுரிமை மீதான ஊடுருவலால் பாதிக்கப்பட்டவராக தன்னைக் காட்டிக் கொண்ட மொரேனோ தனிப்பட்ட சொந்த புகைப்படங்களை வெளியிட்டது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார், அவற்றில், படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கடல் நண்டு பிரியாணி போன்ற இரவு உணவை அவர் உண்ணுகின்ற அதே நேரத்தில், அவரது அரசாங்கம் பாரிய பணிநீக்கங்களுக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தது போன்ற புகைப்படமும் அடங்கும்.
பிரிட்டிஷ் பொலிசாரிடம் அசான்ஜை ஒப்படைத்து உடனடியாக பின்னர் இந்த வாரத்தில் வாஷிங்டனுக்கு அவர் விஜயம் செய்தபோது, ஒரு பெருவணிக கட்டுப்பாட்டு வாஷிங்டன் சிந்தனைக் குழாமான உள்நாட்டு-அமெரிக்கர்களின் விவாத அரங்கத்தில் (Inter-American Dialogue) ஒரு பொது அரங்கில் மொரேனோ பங்கேற்றார், அங்கு அவர், அசான்ஜ் இராஜதந்திர வசதியை “உளவு மையமாக” மாற்றிவிட்டார் என்பதால், அவரை ஈக்வடோரின் லண்டன் தூதரகத்தை விட்டு பிரிட்டிஷ் பொலிசார் இழுத்துவருவதற்கு அழைப்பு விடுத்ததை நியாயப்படுத்திய விடயத்தை மீண்டும் மீண்டும் கூறினார்.
அசான்ஜை 24/7 நேர கண்காணிப்பிற்கு உட்படுத்துகின்ற நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் நிர்வாக நிலைப்பாட்டிற்கு பொருந்துகின்ற வகையில், முன்னாள் சிஐஏ இயக்குநரும் தற்போதைய வெளியுறவுச் செயலருமான மைக் பொம்பியோ, விக்கிலீக்ஸ் ஒரு “அரசு சார்பற்ற, உளவுத்துறைக்கு விரோதமான செயலை” செய்துள்ளது என்ற அபத்தமான கூற்றை முன்வைத்ததுடன், உளவுச் சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் அவரை குற்றம்சாட்டுவதற்கு வசதியாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அசான்ஜை காட்டிக் கொடுப்பதற்கு பெரும் மக்கள் ஆதரவை மொரேனோ கோரி வருகின்ற அதேவேளையில், கியூட்டோவின் பாரிய ஆர்ப்பாட்டம் தைரியமான பத்திரிகையாளருக்கு ஆதரவாக பரந்த உணர்வுகளையும் மற்றும் சாத்தியமுள்ள கடன் நிவாரணங்களுக்கும் வர்த்தக உடன்படிக்கைகளுக்கும் பதிலீடாக இழிவான வகையில் காட்டிக் கொடுப்பதற்கு தயாராகவுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கும் சிப்பாய்களாக அவர்களது அரசாங்கம் மாறியுள்ளதன் மீதான மில்லியன் கணக்கான ஈக்வடோரியன்களின் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று கியூட்டோவில் அணிவகுத்த ஆயிரக்கணக்கானவர்கள், இங்கிலாந்தில் ஜூலியன் அசான்ஜை சிறையில் அடைத்திருப்பது குறித்தும், மேலும், அமெரிக்க அரசாங்கத்தின் போர் குற்றங்கள் மற்றும் இராஜதந்திர சதிகளை அம்பலப்படுத்தியதற்காக, விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை சட்டவிரோதமாக கைப்பற்றவும், அவரை தடுப்புக்காவலில் வைக்கவும், சித்திரவதை செய்யவும் மேலும் கொல்வதற்குமான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல் குறித்தும், வெறுப்பும் சீற்றமும் கொண்ட உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்காக பேசினர்.
உலகளாவிய அளவிலான தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சி என்பது, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பரந்த ஆதரவை திரட்டுவதற்கான, மற்றும் ஏகாதிபத்தியக் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக சிறையிலிடப்பட்டுள்ள ஜூலியன் அசான்ஜ், செல்சீ மானிங் மற்றும் ஏனையோரை விடுதலை செய்வதற்கான அடித்தளமாக உருவெடுத்துள்ளது.