Print Version|Feedback
UK Labour leads “rape” smears against Julian Assange demanding Swedish extradition
சுவீடனிடம் ஒப்படைக்ககோரி அசான்ஜிற்கு எதிரான "கற்பழிப்பு" பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதை இங்கிலாந்து தொழிற் கட்சி முன்னெடுக்கிறது
By Laura Tiernan
15 April 2019
விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜ் ஒரு "கற்பழிப்பு சூத்திரதாரி" என்று பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி அவர் சுவீடனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் பாராளுமன்ற தொழிற் கட்சி (PLP) ஒரு அரசியல் சூனிய வேட்டையை முன்னெடுக்கின்றது. வார இறுதியில், இந்த இழிவான பிரச்சாரத்தை தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் ஆதரித்தார்.
"ஜூலியன் அசான்ஜை 2010 ல் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்களுக்காக சுவீடனுக்கு ஒப்படைக்க அனுமதிக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரிக்குமாறு" கோரி பழமைவாத உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மற்றும் தொழிற் கட்சியின் நிழல் உள்துறை அமைச்சர் டயான் அபோட் ஆகியோருக்கு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
வெள்ளியன்று, பிளேயரிச பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்டெல்லா கிரைசி மற்றும் ஜெஸ் பிலிப்ஸ் ஆகியோரால் கடிதம் தொடக்கி வைக்கப்பட்டது. இதில் கையெழுத்திட்ட பெரும்பாலானோர் பிளேயர் ஆதரவாளர்கள். ஆனால் கையெழுத்திட்ட மற்றையோரில் சுயேட்சை குழுவை சேர்ந்த சுகா உமுன்னா, லூசியானா பேர்கர் மற்றும் அன்னா சவுப்ரி மற்றும் பழமைவாத, தாராளவாத-ஜனநாயக மற்றும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல தொழிற்கட்சி ஆதரவாளர்கள் உள்ளடங்குவர்.
"தற்போது, அமெரிக்க அதிகாரிகள் நாடுகடத்த எடுக்கும் முயற்சிகளில் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன” என்று இந்த வலதுசாரி குழு புகார் தெரிவிக்கின்றது. பாலியல் வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மற்றும் திரு.அசான்ஜின் விசாரணை இப்போது ஒழுங்காக நடத்தப்படுவதை உறுதிப்படுத்தஂ நாங்கள் உங்களுக்கு அழைப்புவிடுகிறோம்" எனக் கோரினர்.
லண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்தில் இருந்து அசான்ஜின் கொடூரமான கைதைப் பற்றிய உலகளாவிய மக்கள் சீற்றத்திற்கு பிளேயரிசவாதிகளின் பிரதிபலிப்பு இதுதான்.
ஈக்வடோரால் வழங்கப்பட்ட அரசியல் தஞ்சம் சட்டவிரோதமாக இரத்து செய்யப்பட்ட பின்னர் இங்கிலாந்து பொலிஸ், அமெரிக்க சட்ட அமுலாக்க முகவர்கள் வழங்கிய கணினி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் அசான்ஜை கைது செய்தது. ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதை அடிப்படையாக கொண்ட முக்கிய செய்தித்துறை நடவடிக்கைகளை குற்றத்தன்மையானதாக்கும் குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவிற்கு அசான்ஜ் அனுப்பப்படுவதற்கான ஒரு சட்டபூர்வமான தூண்டுகோலாகும், அங்கு அவர் 1917 உளவுச் சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்.
அசான்ஜிற்கு எதிரான போலிக்குற்றச்சாட்டுக்களை தூண்டிவிட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளின் முன்னால் உள்ள ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்கான அரசாங்கங்களின் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. சுவீடனின் போலி "கற்பழிப்பு" குற்றச்சாட்டுகளின் நோக்கம் இதுவேயாகும். அமெரிக்காவிடம் அசான்ஜின் ஒப்படைப்பு, சுவீடனுக்கும் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையிலான தற்காலிக சரணடைவு ஒப்பந்த உடன்படிக்கைகளின் கீழ் துரிதமாக இடம்பெற முடியும். வியாழக்கிழமை, சுவீடனின் பொது வழக்கு விசாரணையின் துணை இயக்குனர், ஈவா-மேரி பெர்சன், அசான்ஜி்ற்கு எதிரான வழக்கை மறுபரிசீலனை செய்வதாக ராய்ட்டருக்கு கூறினார்.
சுவீடனின் நாடகம் தெளிவாகியுள்ளது. சனிக்கிழமையன்று தொழிற் கட்சியின் நிழல் வெளியுறவு செயலர் எமிலி தோர்ன்பெரி பிபிசி ரேடியோ 4-க்கு அளித்த பேட்டியில், அசான்ஜிற்கு எதிரான இரு சுவீடன் பெண்களால் முன்வைக்கப்பட்ட பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளால் அமெரிக்காவின் ஒப்படைக்ககோரும் நடவடிக்கை "மறைக்கப்படுவதால்" அவர் "வெறுப்படைந்துள்ளதாக" தெரிவித்தார்.
“சுவீடனுக்கு அவர் நாடுகடத்தப்படுவார், பின்னர் அமெரிக்கர்கள் சுவீடனிலிருந்து நாடுகடத்துவதற்கான ஒரு புதிய கோரிக்கையை சமர்ப்பிப்பது நடக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஏகாதிபத்திய சார்பு நோக்கங்களுக்காக பாலின அரசியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. சனிக்கிழமையன்று கார்டியனின் முதல் பக்க தலைப்பு, “அசான்ஜ் கற்பழிப்பு சம்பவத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ஜாவித் வலியுறுத்துகிறார்" என்று ஒரு முக்கிய செய்தி கட்டுரையில் "சுவீடனுக்கு அசான்ஜை அனுப்புவது தோல்வியுற்றால், கற்பழிப்பு கலாச்சாரம்" ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பெண்கள் குழுக்கள் கூறுகின்றன, எனக் குறிப்பிட்டது.
”சனிக்கிழமை கார்டியன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒப்சேவர் பத்திரிகைகளின் ஆசிரிய கட்டுரைகள் சுவீடனிடம் அசான்ஜ் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. "ஜூலியன் அசான்ஜை கவனத்திற்கு எடுக்காமல் விடுவது கடினம் அல்ல. ஏழு ஆண்டுகள், சுவீடனில் கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை தவிர்ப்பதற்காக லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார். ... பின்னர் அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதை எதிர்கொள்வார் என்பதற்காக சுவீடனில் வழக்கை எதிர்கொள்ள மறுத்ததற்கான காரணங்கள் முட்டாள்தனமானது". எனக் குறிப்பிட்டது.
உண்மையில், நீண்டகாலமாக "சதி கோட்பாடுகள்" என்று கண்டனம் செய்யப்பட்டுவந்த அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதை பற்றிய அசான்ஜ் மற்றும் அவருடைய சட்ட குழுவின் எச்சரிக்கைகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் பற்றி ஒரு இரகசிய ஜூரி விசாரணை அம்பலப்படுத்தப்பட்ட பின்னர், "நன்கு நிறுவப்பட்ட" அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் துன்புறுத்துதலின் அச்சங்கள் காரணமாகவே ஈக்வடோர் அசான்ஜிற்கு அரசியல் தஞ்சம் வழங்கியது. அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக அவருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், "பாலியல் பலாத்கார" குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுவீடனுக்குச் செல்ல அசான்ஜ் முன்வந்தார். அவர் தனது குற்றம் தொடர்பாக தெளிவுபடுத்த சுவீடனின் வழக்குத்தொடுனர்களை ஈக்வடோர் தூதரகத்திற்கு அழைத்தார், ஆனால் இந்த திட்டங்கள் மறுக்கப்பட்டு விட்டன.
சுவீடனின் வழக்குத்தொடுனர்கள், 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் "கற்பழிப்பு" மற்றும் "பாலியல் வன்முறை" குற்றச்சாட்டுகளுக்கு "எந்தவொரு குற்றமும்" செய்யப்படவில்லை என்று முடிவெடுத்து ஆரம்ப விசாரணைகளை நிறுத்தினர். விசாரணை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே புதுப்பிக்கப்பட்டது. "பொலிசாரே குற்றச்சாட்டுகளை தோற்றுவித்துள்ளனர்" என்று ஒரு குறுஞ் செய்தியில் பெண் ஒருவர் எழுதினார். அசான்ஜ் இன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவருடன் உடன்பாடான பாலியல் உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர், பின்னர் அதைப் பற்றி அவர்களின் நண்பர்களின் முன்னிலையில் பெருமைப்பட்டுக் கொண்டனர். சுவீடனில் அசான்ஜின் "பாதுகாப்பான வீடுகளை" ஏற்பாடு செய்த அனா அர்டின், அவர்களில் ஒருவர், முன்னணி சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியிடம் பணியுற்றினார். அசான்ஜ் மீது சக குற்றம்சாட்டியவரான சோபியா வில்னை அறிமுகப்படுத்தியது ஆர்டின் ஆவார். ஈராக் மற்றும் ஆப்கானிய போர் கசிவை வெளியிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிருப்திக்கு மத்தியில் அசான்ஜின் சுவீடன் வருகை இடம்பெற்றிருந்தது.
அசான்ஜை தனிமைப்படுத்துவதில் தொழிற் கட்சி முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பழமைவாத பிரதமர் தெரெசா மே, வியாழனன்று பழமைவாத மற்றும் தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கைது பற்றி பாராட்டு தெரிவித்த போது, கோர்பின் அமைதியாக இருந்தார். பின்னர், கைது மற்றும் குற்றச்சாட்டுக்கள் பற்றி சஜித் ஜாவித் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டபோது, அபோட்டை தன்னுடைய கட்சியின் சார்பில் பேசுவதற்கு விட்டுவிட்டு அவர் பாராளுமன்றத்தைவிட்டு வெளியே சென்றார். "சட்டவிரோதப் போர்கள்; படுகொலைகள், பொதுமக்கள் கொலைகள் மற்றும் பெரிய அளவிலான ஊழல்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியமையாலேயே ஜூலியன் அசான்ஜை அமெரிக்க நிர்வாகம் இலக்கு வைத்திருக்கின்றது" என்று அவர் கூறினார்.
அபோட் உரை விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டது, ஆனால் பின்னர் "இங்கிலாந்தில் அசாஞ்ச் பிணை எடுப்பு அல்லது ஸ்வீடிஷ் அதிகாரிகளால் கொண்டு வரப்பட்ட எந்த கற்பழிப்பு குற்றச்சாட்டையும் அலட்சியம் செய்யக்கூடாது" என்று பின்னர் அன்றைய தினம் செய்தது அவரது ஆதரவின் போலித்தனமான தன்மையை தெளிவுபடுத்தியது. பாராளுமன்றத்தில் அபோட் உரையாடல்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டதுடன், எந்தவொரு அமெரிக்க ஒப்படைத்தல் கோரிக்கையும் "இப்போது பிரிட்டிஷ் சட்ட நீதிமன்றங்களின் கைகளில்" இருப்பதாகவும், மேலும் "பிரிட்டிஷ் சட்ட அமைப்பில் தொழிற் கட்சிக்கு பெரும் நம்பிக்கை உள்ளதை" பதிவு செய்திருப்பதாகவும் தெளிவாக்கியுள்ளது. எதிர்கால தொழிற் கட்சி அரசாங்கம் அமெரிக்காவிற்கு அசான்ஜ் அனுப்பப்படுவதை தடுக்கும் என்று அவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை.
ஆயினும்கூட, அவரின் அறிக்கை பெரும் சீற்றத்துடனான எதிர்ப்பை சந்தித்தது. "இந்த விஷயத்தில் உண்மையில் நடந்த கற்பழிப்பிற்காக சந்தேகிக்கப்படும் ஒரு மனிதன் உண்மையில் இந்த வழக்கில், பல ஆண்டுகளாக நீதியிலிருந்து தப்பிக்க அவர் என்னென்ன செய்திருந்தார் என்பது பற்றி நான் கவனம் செலுத்துகிறேன்" என்று தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டயானா ஜோன்சன் பாராளுமன்றத்தில் கூறினார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)
சில மணி நேரங்களுக்குள், பிலிப்ஸ், கிரீசி மற்றும் ஸ்டீபன் கின்னாக் உட்பட முன்னணி பிளேயரிச ஆதரவாளர்கள் முதலில் வெள்ளியன்று அனைத்துக் கட்சி கடிதத்துடனும் பின்னர் கின்னாக் மற்றும் ஏனைய போர் ஆதரவாளர்களுடன் அசான்ஜிற்கு எதிராக ஒரு முழு ஊடகத் தாக்குதலுடனும் தங்கள் எதிர்த் தாக்குதலைத் தொடங்கினர்.
பின்னர், சனிக்கிழமையன்று கோர்பினின் ITV செய்தி பேட்டியில், அசான்ஜை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பது என்பது, “பிரிட்டன் நீதிமன்றங்களின் ஒரு விடயம்”, "2017 ல் கைவிடப்பட்ட சுவீடன் வழக்கு........ இப்போது மறுபடியும் புத்துயிர் பெறப் போகிறது, பின்னர் வெளிப்படையாக அவர் அந்த கேள்விகளுக்கு மற்றும் ஸ்வீடனில் உள்ள மக்களால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும். அத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து ஒளித்துக்கொள்வதற்கு ஒரு இடமும் இல்லை" என்று தெரிவித்தார். (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
"#கோர்பினிடமிருந்தான தந்திரமான வார்த்தைகள்! இங்கிலாந்து / அமெரிக்க நாடுகடத்தலுக்கு இல்லை ஆனால் புதுப்பிக்கப்பட்ட இங்கிலாந்து / ஸ்வீடன் நாடுகடத்தலுக்கு ஆம்! சுவீடனின் (குற்றம் இல்லை!) 'வழக்கு' ஒரு அரசியல் சதி என்று அவர் நன்றாக அறிந்திருக்கிறார்! சுவீடன் / பிரிட்டன் இருதரப்பு உடன்படிக்கை தற்காலிக சரணடைதலின் கீழ் அமெரிக்காவுக்கு விரைவான கையளிப்பிற்கான பாதையை அளிக்கிறது!" என்று ஞாயிறன்று காலை, ஜூலியன் அசான்ஜின் தாயார் கிறிஸ்டின், ட்வீட் மூலம் பதிலளித்தார்.
சுவீடனின் குற்றச்சாட்டுகள் மற்றும் நாடுகடத்தல் நடவடிக்கைகள் ஆகியவை அமெரிக்க ஒப்படைப்புக்கு ஒரு படிநிலைதான் என்று கோர்பின் நன்கு அறிவார். அசான்ஜ் "மீண்டும் சுவீடனுக்குத் திரும்பினால், அவர் வலுக்கட்டாயமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார் என்று அவருக்கு தெரிந்தமையால்தான் தூதரகத்திற்குள் தஞ்சமடைந்தார்" என்று கட்சித் தலைவராக ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஜூலை 2015 ல் அவர் New Statesman க்கு விளக்கினார். அசான்ஜ் போர்க்குற்றங்கள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான அரச சதிகளை தைரியமாக அம்பலப்படுத்தியுள்ளார் என்று அவர் அறிவார், ஆனால், பிளேயரிசவாதிகளை எதிலும் சவால் செய்ய அவர் மறுத்து, அதற்கு பதிலாக அசான்ஜிற்கு எதிரான அவர்களின் அச்சுறுத்தல்களை எதிரொலிக்கிறார்.
இதிலிருந்து அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். அசான்ஜை பாதுகாப்பதற்கான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்காக இந்த வாரம் கோர்பின் ஒரு அழைப்பு ஒன்றை விடுத்திருந்தால் பல்லாயிரக்கணக்கானவர்கள் அணிதிரட்டப்பட்டிருப்பார்கள். பிளேயரிசவாதிகளும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் தனிமைப்படுத்தப்பட்ட குழுவாக அம்பலப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர் பிளேயரிசவாதிகள் பற்றி அச்சம் கொள்ளவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீட்டை தடுப்பதிலேயே அவரது முதன்மை அக்கறை இருந்தது. ஜூலியன் அசான்ஜ் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க விரும்பும் அனைவரும் இந்த சமூக சக்தியை நோக்கி அவசரமாக திரும்ப வேண்டும்.