Print Version|Feedback
Free Julian Assange and Chelsea Manning!
ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கை விடுதலை செய்!
Andre Damon
28 March 2019
ஏகாதிபத்திய குற்றங்கள் மற்றும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தால் துன்புறுத்தப்பட்ட அரசியல் கைதிகளான ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கின் தலைவிதி பற்றி, முழு தொழிலாள வர்க்கமும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரான ஜூலியான் அசான்ஜ் இணையத்தை பாவிப்பதிலிருந்தும் மற்றும் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வதிலிருந்தும் தடை விதிக்கப்பட்டு இன்றுடன் ஒரு முழு வருடத்தை குறிக்கிறது. 2012 ல் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டதிலிருந்து லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அசான்ஜ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அங்கே அவர் தொடர்ச்சியான மற்றும் வலுவான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அசான்ஜ் தனது கருத்துக்களைத் தெரிவிக்கவோ அல்லது அவரைக் கையாளும் முறையை எதிர்க்கவோ முடியாத நிலையில் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டும் அல்லது தூதரகத்தை விட்டு வெளியேறினால் பிரிட்டிஷ் போலிஸால் கைது செய்யப்பட்டு, வேவுபார்த்தல் குறித்த தவறான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஒரு ஜோடிப்பு வழக்கை எதிர்கொள்ளும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்ற கொடூரமான தெரிவை எதிர்கொள்கிறார்.
ரஷ்யாவின் இணைய ஊடுருவலாளர் என்று கூறப்படும் Yevgeniy Nikulin ஐ கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு அமெரிக்க நீதித்துறை விமானம் சனிக்கிழமை லண்டனுக்கு திரும்பிவந்துள்ளது என்ற உண்மையை கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்டு அசான்ஜ் முகங்கொடுக்கும் ஆபத்து்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கவனத்தை ஈர்த்தது. விமானம் புறப்பட்ட அதே நேரத்தில் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தைச் சுற்றி சிவில் உடையில் காரணம் தெரிவிக்காது அதிகளவு போலீசார் காணப்பட்டனர்.
2010 இல் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை விக்கிலீக்ஸிற்கு வழங்கி நாட்டை அவமதித்தமைக்காக செல்சீ மானிங் அரசாங்க நீதிபதியால் சிறையில் அடைக்கப்பட்டு நாளையுடன் மூன்று வாரங்கள் ஆகிறது. அசான்ஜ் இற்கு எதிரான ஒரு இரகசிய ஜூரிகளின் விசாரணையில் சாட்சியமளிக்க மறுத்தமையே மானிங்கின் "குற்றம்" என்று கூறப்படுகிறது. அவர் ஒரு நாளில் 22 மணித்தியாலங்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்திரவதை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கை வழங்குபவரால் "கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவானது" என்று அழைக்கப்படும் சிறையில் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் மானிங், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற காலவரையற்ற தடுப்புக் காவலை எதிர்கொள்கிறார்.
மானிங் மற்றும் அசான்ஜ் இற்கு நடந்தவை முக்கிய செய்தி ஊடகங்களால் உண்மையில் வெளியிடப்படவில்லை. இது அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து எதிர்ப்புக்களை ஏற்படுத்தவில்லை. பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் உள்ளிட்ட காங்கிரஸின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் கூட மானிங் சிறையில் இருப்பதைப் பற்றி பேசவோ எதிர்க்கவோ இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு உதவுகையில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கும் நியூ யோர்க் டைம்ஸின் ஆசிரியர் குழுவும் அதன் பாசாங்குத்தன கட்டுரையாளர்களும் அமைதியாக உள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகம் அசான்ஜ் மற்றும் மானிங்கின் துன்புறுத்துதலை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் பழிவாங்கும் மற்றும் அரசியலமைப்புக்கு மாறான பழிதீர்க்கும் எண்ணம், ஜனநாயகக் கட்சியாலும் அதனுடன் தொடர்புடைய செய்தி ஊடகங்களாலும் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியினர், நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பதவியை திருடுவதற்காக ரஷ்யாவுடனும் ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுடனும் விக்கிலீக்ஸ் உடந்தையாக இருந்தது என்ற பொய்யை ஊக்குவித்தன. அமெரிக்க உளவுத்துறையினரால் நிரூபிக்கப்படாத வலியுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட செய்தி ஊடகம், விக்கிலீக்ஸ் ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து திருடப்பட்ட மின்னஞ்சல்களை அறிந்ததோடு ட்ரம்பின் எதிர்ப்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக இந்த தகவலை "ஆயுதமாக" பயன்படுத்த முற்படுகிறது என்று அறிவித்தது.
ரஷ்ய எதிர்ப்பு வேட்டைக்கு அடிப்படையாக அமைந்த, முல்லர் விசாரணையின் முடிவானது ஊடகங்களின் பொய்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. "உடந்தையாக இயங்கியது" என்ற குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, ரஷ்ய எதிர்ப்பு (மற்றும் விக்கிலீக்ஸ் எதிர்ப்பு) பிரச்சாரத்தின் முழு கட்டமைப்பும் ஒரு மோசடி என அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசாங்கத்தின் இரகசியங்கள், பொய்கள் மற்றும் அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தி மக்களுக்குத் தெரிவித்து, பத்திரிகையாளர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்த அசான்ஜ் போன்ற உண்மையான பத்திரிகையாளர்கள், வேட்டையாடப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர்.
உடந்தையாக இயங்கியது தொடர்பான கட்டுக்கதைகள் வீழ்ச்சியடைகையில், அமெரிக்காவில் இடதுசாரி மற்றும் சோசலிச உணர்வின் வளர்ச்சியை, ரஷ்ய "தலையீட்டின்" விளைவாக என்று சித்தரிக்க முற்படும் ஜனநாயகக் கட்சியில் உள்ள அதன் அரசியல் எதிரிகளுக்கும் சோசலிசம் மீதான போரை அறிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு நெருக்கம் அதிகரித்துவருகின்றது.
அசான்ஜ் மற்றும் மானிங்கின் துன்புறுத்தலில் மிக உயர்ந்த அல்லது மிகக்கூடிய குற்றவியல் வெளிப்பாட்டை காண்பது பேச்சு சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்பது அவர்களின் பொதுவான நிகழ்ச்சிநிரல் ஆகும்.
ஜனநாயகக் கட்சி, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் மீதமுள்ள பெருநிறுவன ஊடகங்கள் ஆகியவை மானிங் மற்றும் அசான்ஜ் ஆகியோரின் துன்புறுத்தலில் உடந்தையாவது ஆச்சரியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதுகாவலர்கள் மற்றும் CIA, பென்டகன் ஆகியவற்றின் ஊதுகுழல்களிடம் இருந்து எவரும் இதைவிட குறைவானதை எதிர்பார்க்க முடியாது.
அத்துடன், ஜோடிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் மீது அவர் "நீதியை எதிர்கொள்ள" வேண்டும் என்று கோரப்பட்டு அது இறுதியில் வழக்கறிஞர்களால் கைவிடப்பட்ட பின்னரும் ஜனநாயகக் கட்சியை சுற்றியுள்ள நடுத்தர வர்க்க போலி இடதுகளின் அமைப்புக்கள் அசான்ஜ் இன் சிறைவாசத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.
உலக சோசலிச வலைத் தளம் அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலை வெற்றியடைவதற்கு ஒரு பிரச்சாரத்தை நடத்துகிறது. இந்த மாத தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) சிட்னி மற்றும் மெல்போர்னில் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்ட பேரணிகளை நடத்தியது. அசான்ஜ் உடனடியாக மற்றும் பாதுகாப்பாக அவுஸ்திரேலியாவிற்குக்கு வருவதைக் கோரி நடைபெற்ற சிட்னி பேரணி முன்னணி ஊடகவியலாளர்கள் ஜோன் பில்ஜர் மற்றும் ஜோ லோரியா, அதே போல் சிவில் உரிமைகள் தலைவர் பேராசிரியர் ஸ்டூவார்ட் ரீஸ் ஆகியோரைக் கொண்டிருந்தது.
கடந்த இரு வாரங்களாக அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சி மானிங் சிறைவைக்கப்படுவதை எதிர்த்து பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தியது.
"ஜூலியான் ஒரு வர்க்கப் போர் கைதி. அவர் மீதான அனைத்து துன்புறுத்தல்களும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களாகும்" என்று சிட்னியில் நடந்த பேரணியில் உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சி (அவுஸ்ரேலியா) தேசிய செயலர் ஜேம்ஸ் கோகன் தெரிவித்தார். "ட்ரொட்ஸ்கிச இயக்கம், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவை ஜூலியானை பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், உண்மையான சமூக சமத்துவத்தை அடையவும், போரை எதிர்ப்பதற்கும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்குமான போராட்டத்தின் ஒரு முக்கிய கூறாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்" என்று மேலும் தெரிவித்தார்.
வட ஆபிரிக்க வெகுஜனங்களிலிருந்து லாஸ் ஏஞ்சலில் Uber வாடக்கைக்கார் ஓட்டுநர்கள் அத்துடன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கார் தொழிலாளர்கள் வரை உலகெங்கிலும் தொழிலாளர்களின் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், கோகன் முடிவுரையில் கூறியதை மீண்டும் கூறுவோமானால் "ஜூலியான் அசான்ஜ் இற்கு இன்று ஒரு தெளிவான செய்தியை அனுப்புகின்றோம், அவர் அதைக் கேட்பார்: நீங்கள் தனியாக இல்லை, நீங்கள் கைவிடப்படவில்லை, நீங்கள் மறக்கப்படவும் இல்லை. நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்".