Print Version|Feedback
Which way forward for the struggle against Algeria’s military dictatorship?
அல்ஜீரியாவின் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான வழி எது?
By Alex Lantier
12 April 2019
மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்களின் ஆறுவார கால எதிர்ப்புக்குப் பின்னர், கடந்தவாரம் அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இராஜனாமாக் கடிதம் அவரது இருபதாண்டுக் கால ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது. தேசிய விடுதலை முன்னணி (FLN) அதன் சொந்த தலைமையை —அல்ஜீரிய எண்ணெய் வளத்தை FLN சூறையாடலை மற்றும் 1922-2002 அல்ஜீரிய உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆண்டுகளின் படுகொலைகளை மேற்பார்வை செய்த, 2013-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜனாதிபதியை— அகற்றிக் கொண்டது.
துனிசியாவிலும் எகிப்திலும் ஏகாதிபத்திய ஆதரவு சர்வாதிகாரிகளைக் கவிழ்த்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய எழுச்சி நடைபெறுகின்றது. சூடானிய ஆட்சியைத் தூக்கி வீச பரந்த எதிர்ப்புக்கள் மற்றும் துனீசியா, மொரோக்கோ மற்றும் கண்டம் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்கள் என ஆபிரிக்கா பரந்த எதிர்ப்புகளைக் கண்டுவருகிறது. சர்வதேச ரீதியாக அமெரிக்க ஆசிரியர்கள், மெக்சிகன் மக்கிலாடோரா தொழிலாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கும் ஐரோப்பிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள், அல்ஜீரியாவின் முன்னாள் காலனியாதிக்க எசமானான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை வெளியேற்றக்கோரும் “மஞ்சள் சீருடை” எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்கின்றன.
2019 இன் புரட்சிகரப் போராட்டங்கள் கட்டவிழ்ந்து வரவில்லை, ஆயினும், அவை 2011ன் திரும்பிவரலாக, ஆனால் உயர்ந்த மட்டத்தில் கட்டவிழ்ந்து வருகின்றன. தொழிலாளர்கள் இரத்தம் தோய்ந்த எகிப்தின் உதாரணத்தைப் பார்த்திருக்கின்றனர், அங்கே மூன்றாண்டுகளாக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டம், 2013ல் எகிப்திய ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் சிசி ஆல் வழிநடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பில் முடிவுற்றது. இது ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை விலையாகக் கொடுத்த கசப்பான மற்றும் மறக்க முடியாத படிப்பினையாக, அதாவது சுற்றி வளைக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தை வெற்றிகொள்ள பரந்த போர்க்குணமிக்க எதிர்ப்புக்கள் மட்டுமே போதுமானதல்ல என்ற படிப்பினை இருந்தது.
இராணுவம் புட்டஃபிளிக்காவை நீக்கியது தொழிலாள வர்க்கத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான மோதலை உக்கிரமடைய மட்டுமே வைத்தது. இந்த வாரம் அல்ஜீரியத் தொழிலாளரகள் எதிர்ப்பு தெரிவித்து இராணுவ பலவானான ஜெனரல் அல் சிசியை ஆல் முன்மொழியப்பட்ட அலுவலர்களை நீக்குமாறு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எகிப்திய முழக்கமான “ஆட்சியின் வீழ்ச்சியை மக்கள் விரும்புகிறார்கள்” என்று முழங்கி, “கய்ட் சலாஹ், மக்கள் முட்டாள்கள் அல்ல” மற்றும் “எகிப்திய காட்சியை திரும்பக் கொணராதே” என்று கூறும் அட்டைகளை ஏந்திச் சென்றனர்.
தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே சாத்தியமான முன்னோக்கு அல்ஜீரியாவிலும் சர்வதேச ரீதியாகவும் முதலாளித்துவத்தைத் தூக்கி வீசுவதற்கான போராட்டத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை அமைப்பு மற்றும் அனைத்திற்கும் மேலாக புரட்சிகர முன்னோக்கு மற்றும் தலைமை பற்றியது ஆகும். இராணுவ-பொலீஸ் ஒடுக்குமுறை மற்றும் சிக்கன பொருளாதாரக் கொள்கைக்கான எதிர்ப்பை ஒருங்கிணைக்க தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ அரசாங்கங்களிலிருந்தும் அவற்றோடு கூட்டுச் சேர்ந்த தொழிற்சங்கங்களிலிருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழு தேவை. இறுதியில், வேலைத் தளங்களிலும் தொழிலாள வர்க்க பகுதிகளிலும் தொழிற்படுகின்ற இந்த அங்கங்களுக்கு அரசு அதிகாரத்தை மாற்றி, அவற்றை தொழிலாளர் அதிகார உறுப்புக்களாக மாற்றுவதன் மூலம் மட்டுமே இரத்தம் தோய்ந்த எதிர்ப்புரட்சிகர ஆபத்தை அவர்கள் நீக்க முடியும்.
ஆயினும், அவை எதிர்கொள்கின்ற புரட்சிகரக் கடமைகளை செய்வதென்பது ஒரு புறம் இருக்கட்டும், ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்குத் தலைமை ஏற்ற போல்ஷிவிக் கட்சி போன்ற தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச முன்னணிப் படையாலான தொழிலாள வர்க்கத்திற்குள் புரட்சிகர முன்னோக்கிற்கான ஒரு போராட்டம் இல்லாமல் அத்தகைய குழுக்களை உருக்கி வலியதாக ஒன்றிணைக்க முடியாது.
அல்ஜீரிய சர்வாதிகாரம் சாதாரணமாய் ஜனநாயக சீர்திருத்தங்களை வழங்கும் என்ற பொய் வாக்குறுதிகள் ஒவ்வொரு முதலாளித்துவ அரசியல்வாதியின் உதடுகளிலும் இப்பொழுது ஒலிக்கின்றன. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் “இந்த ஜனநாயகப் புரட்சியை பின்பற்றுவதற்கான அனைத்து அல்ஜீரிய மக்களின் திறனை“ புகழ்ந்தேற்றிய அதேவேளை, “அல்ஜீரியாவில் இந்த மாற்றத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்ற கேள்விகளில், அல்ஜீரிய மக்களே முடிவு செய்ய வேண்டும்” என அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் ரோபர்ட் பல்லாடினோ அறிவித்தார்.
ஜெனரல்களிலிருந்து தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களிலுள்ள அவர்களின் அடிவருடிகள் வரை அல்ஜீரிய ஆளும் தட்டு முழுவதும் அதிகாரத்திற்காக தொழிலாளர்களை போராடுவதிலிருந்து விலக்கி வைப்பதற்கு ஜனநாயக முதலாளித்துவ எதிர்காலம் பற்றிய வாக்குறுதிகளில் தொழிலாளர்களை தாலாட்ட முயற்சித்து வருகின்றனர், கய்ட் சலாஹ், இப்பொழுது, உளவுத்துறை தலைமைத் தளபதி Athmane Tartag போன்றமிக இழிவான சித்திரவதையாளர்களை பணி ஓய்வில் அனுப்புகிறார்.
பிரான்சின் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) யுடன் ஒன்றிணைந்த சோசலிச தொழிலாளர் கட்சி (PST), வெளிப்படையாக, “தோற்றங்கள் இருந்த போதிலும் நாம் ஒரு புரட்சிகர சூழ்நிலையில் இருக்கவில்லை” என்று அறிவித்தது. பதிலாக, அது இராணுவத்தைப் புகழ்ந்தது, “மக்களை, அதன் சமூக உரிமைகளை மற்றும் நலன்களை, அதன் தேசிய இறையாண்மையை, அதன் எல்லைகளை, அதன் அரசியல் இறையாண்மையைக் காப்பது அதன் பங்காகும் மற்றும் அல்ஜீரிய ஆட்சியின் அல்ஜீரிய தொழிலாளர் பொது சங்கமான UGTA ஐ “தொழிலாளர் நலன்களைப் பாதுகாப்பதற்கான மூலோபாயக் கருவி” என்கிறது. இந்த அடிப்படையில் அது அல்ஜீரிய முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் அரசியற்சட்டத்தை திருத்தி எழுதுவதற்காக அரசியல் சட்ட சபையை கூட்டுமாறு அழைப்பு விடுத்தது.
இது, எகிப்தில் எகிப்திய புரட்சியின் குரல்வளையை நெரித்த எகிப்திய புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) போன்ற குட்டி முதலாளித்துவ குழுக்களை எதிரொலிக்கும் ஒரு பித்தலாட்டமாகும். எகிப்தில் தொழிலாளர்கள் அந்த வேளையிலும் மீண்டும் எழுந்து வீதிகளில் பாதுகாப்பு படைகளைத் தோற்கடித்தனர். ஆனால் அவர்கள் கலவரப் போலீசாருடனான சண்டையில் அமைக்கப்பட்ட மக்கள் குழுக்களை கலைத்துவிட வேலைசெய்த RS-க்கு எதிராக ஒரு தலைமையையும் முன்னோக்கையும் அவர்களால் வழங்க முடியவில்லை. அனைத்திற்கும் மேலாக, RS ஆளும் வர்க்கத்தின் கன்னைகள் எவையாக இருந்தாலும் அவற்றை —இராணுவம் பின்னர் முஸ்லிம் சகோதரத்துவம், இறுதியில் அல் சிசியின் ஆட்சிக் கவிழப்புக்கு முன்னர் அவரை ஆதரித்த தமரோட் இயக்கம் என ஏறுவரிசை மதிப்பில் வைத்து அவற்றை— ஜனநாயகத்தை வழங்குவன என்று கூறியது. இது எகிப்தில் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்தது மற்றும் வீதிகளில் எதிர்ப்பாளர்களை இரத்தம் தோய்ந்த படுகொலையின் மூலமும் பரந்த மக்களை சித்திரவதைக்கு ஆளாக்குவதன் மூலமும் அல் சிசி சர்வாதிகாரம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதித்தது.
எதிர்ப்பாளர்களின் முழக்கத்தில் சுடாதே என்று இராணுவத்திற்கு வேண்டுகோள விடுத்து —“மக்களும் இராணுவமும் சகோதரர்கள்”— என சர்வாதிகாரத்திற்கு ஒளிமயமான வண்ணப் பூச்சு பூசி, இங்கே PST ஆனது எகிப்தில் RS ஆற்றிய பாத்திரத்தை மறுபடியும் திருப்பிச்செய்கிறது. நிச்சயமாக பல இராணுவத்தினர் தொழிலாளர்களைச் சுட ஆணையிடுவதன் வாய்ப்பை எதிர்த்தனர்தான். இதிலிருந்து ஊற்றெடுக்கும் பணி இராணுவத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் முண்டு கொடுப்பதல்ல, மாறாக அதிகாரிகள் வழி காணும் முன்னர் தொழிலாளர்கள் அதிகாரத்தை எடுப்பதற்கு அணிதிரட்டப்பட வேண்டும், எகிப்தில் அல் சிசி செய்ததுபோல, அது தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய துருப்புக்கள் திரும்புவதற்கு தூண்டுதலாய் அமைந்தது.
RS மற்றும் PST போன்ற கட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் கட்டியமைக்க வேண்டிய புரட்சிகரத் தலைமை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகும். அது மட்டுமே ஸ்ராலினிஸ்டுகளுக்கும் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிய குட்டிமுதலாளித்துவ ஓடுகாலிகளின் பப்லோவாத வழித்தோன்றல்களுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிசத்திற்கான அதன் பல தசாப்தகால போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டு, RS இன் பாத்திரத்தை எதிர்க்கின்றது. இந்த சக்திகள் அல்ஜீரியாவில் 1962ல் FLN போன்ற முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் அதிகாரத்திற்கு வருவது, காலனித்துவ நாடுகளில் முதலாளித்துவ வர்க்க பகுதிகளின் “ஜனநாயக” புரட்சிகர இயல்பைக் காட்டுவதாகக் கூறினர்.
தாமதமாக முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த முன்னாள் காலனித்துவ நாடுகளில், ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கமானது ஒரு ஜனநாயக அரசை நிலைநாட்ட திராணியற்றுள்ளது என்ற அனுபவமானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி ததத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனநாயக கோரிக்கைகளுக்கான போராட்டம் அது தொழிலாள வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் ஒரு சோசலிசப் புரட்சியாக வளர்ந்து, சர்வதேச அரங்கில் வெளிப்பாட்டைக் காணும், உண்மையான சோசலிச மற்றும் ஜனநாயக சமுதாயத்தைக் கட்டியமைக்க தேவைப்படும் வளங்களை உலகப் பொருளாதாரம் கொண்டிருக்கும் நிலையில், அதை முன்னாள் காலனித்துவ நாடுகளின் தொழிலாளர்களின் கைகளில் வைக்க முடியும்.
1954-1962 அல்ஜீரியப் போரானது பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தொழிலாளர் விவசாயிகளது ஒரு வலிமையான போராட்டமாகும். ஆனால் பிரான்ஸ் அதிகாரத்தைக் கையளித்த FLN ஆனது ஒரு முதலாளித்துவ ஆட்சி ஆகும், அது ஹவ்வாரி பூமேடியன் இன் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் வெளிப்படையான இராணுவ சர்வாதிகாரமாக ஆனது.
அல்ஜீரியாவின் 1992-2002 உள்நாட்டுப் போரானது, 1988 இல் பல கட்சி ஆட்சிமுறைக்கு மாறுதல் என்று பரந்த எதிர்ப்புக்களை எதிர் கொள்கையில், ஆட்சியை ஜனநாயகப்படுத்தும் முயற்சியின் கடைசித் தோல்வியிலிருந்து தோன்றியது. ஆட்சியானது இஸ்லாமிக் சால்வேசன் ஃபிரண்ட் (FIS) இன் 1991 தேர்தல் வெற்றியை நீக்கியமை 200,000 உயிர்களைப் பலிவாங்கிய யுத்தத்தை தூண்டி விட்டது. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் 1954-1962ல் சுதந்திரப் போராளிகளுக்கு எதிராக செய்ததைப் போல, FLN ஆனது பாரிஸோடு ஒத்துழைத்து செயற்பட்டுக் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களின் மேல் சித்திரவதைகளைப் பயன்படுத்தியது மற்றும் அவர்களைக் கொலை செய்தது. இன்று, இந்த கொடூரங்களைச் செய்த அதிகாரிகளான டார்டாக் போன்றவர்கள், அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோபத்திலிருந்து தப்பிக்கும் ஆற்றொணா நிலையில் உள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தின் உறுதியான எதிர்ப்பாளர்கள் என்பதை நிரூபிக்க தீர்மானகரமாக உள்ளனர்.
அல்ஜீரியாவில் ஜனநாயக சீர்திருத்தம் எதுவும் இருக்கப்போவதில்லை, அனைத்திற்கும் மேலாக ஏனென்றால் முதலாளித்துவமானது சர்வதேச ரீதியாக அதன் பாதங்களிலேயே அழுகிக்கொண்டிருக்கிறது. தசாப்தகால பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக கோபம் இவற்றுக்குப் பின்னர், —நீண்ட முதலாளித்துவ ஜனநாயக மரபுகளைக் கொண்ட நாடுகளில் கூட— கீழிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கையில் முதலாளித்துவ வர்க்கமானது ஆட்சியின் ஜனநாயக வடிவங்களை அகற்றுகின்றது. மக்ரோனின் வெளியுறவு அமைச்சர் அல்ஜீரியாவில் “ஜனநாயக மாற்றத்திற்கு” உறுதி தரும் அதேவேளை, மக்ரோன் பாரிசில் “மஞ்சள் சீருடை” எதிர்ப்பாளர்களை சுடுவதற்கு பிரெஞ்சு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்குகின்ற அதேவேளையில், அவசரகதியில் சிசி இன் இரத்தம் தோய்ந்த சர்வாதிகாரத்திற்கு பில்லியன் கணக்கான யூரோ மதிப்பிலான ஆயுதங்களை வழங்குகிறார்.
அல்ஜீரிய சர்வாதிகாரத்திற்கு எதிராக முன்னோக்கி செல்வதற்கான வழி, வளர்ச்சி அடைந்துவரும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்திற்கு புரட்சிகர தலைமையை வழங்குவதற்கான போராட்டமாகும். இதன் அர்த்தம் அல்ஜீரியாவிலும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளைக் கட்டமைப்பதற்கான போராட்டமாகும்.