ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bouteflika’s resignation as Algerian president to take place by April 28

ஏப்ரல் 28 இல் அல்ஜீரிய ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புட்டஃபிளிக்காவின் இராஜினாமா

By Alex Lantier
2 April 2019

ஆறு வாரகால வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய போராட்டங்களுக்குப் பின்னர், நேற்று மாலை அல்ஜீரிய ஜனாதிபதி அலுவலகம் அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு இறுதிக்கெடு விதித்தது.

அதன் அறிக்கை அறிவித்தது, “இக்குடியரசின் ஜனாதிபதி மாண்புமிகு அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா 31 மார்ச் 2019 இல் புதிய அரசாங்கத்தைப் பெயரிட்டிருந்தாலும், அதைத் தொடர்ந்தும் அரசியலமைப்பின் வகைமுறைகளுக்கு இணங்க அவர் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், அவர் இராஜினாமா செய்ய முடிவெடுத்தவுடன் தொடங்குகின்ற, இடைமருவு காலகட்டத்தின் போது அரசு அமைப்புகளது செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதை உறுதிப்படுத்த அவரை அனுமதிக்கும். ... இக்குடியரசின் ஜனாதிபதியினது இந்த இராஜினாமா, அவருக்கு வாக்காளர்கள் அளித்த காலம் முடிவடையும் 28 ஏப்ரல் 2019 க்கு முன்னதாக நடக்கும்.”

புட்டஃபிளிக்கா பதவியிலிருந்து விலகுவார் என்பதை இந்த வரிகள் உறுதிப்படுத்துகின்றன என்றாலும், பெப்ரவரியில் இருந்து போராட்டத்தில் இழுக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான அல்ஜீரியர்களின் எந்தவித விருப்பங்களையும் இது திருப்திப்படுத்துவதாக இல்லை. வெறுக்கப்படும் பெயரளவிற்கான தலைவரை விட்டொழிப்பதன் மூலமாக ஒரு புரட்சியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பதவியிலிருந்து இறக்க முயன்று வருகின்ற இந்த ஆட்சியின் ஒரு சூழ்ச்சியாக இது உள்ளது. ஆனால் ஆட்சி ஏகபோகமாக்கிக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்பட்ட செல்வவளம் அதற்குக் கைமாற்றப்படாது, மேலும் அதிகாரமும் இன்னமும் தளபதிகளின் ஒரு கொடூரமான தன்னலக்குழுவினதும் மற்றும் வன்முறையானரீதியில் தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ள உயர்மட்ட அதிகாரிகளினதும் கரங்களில் உள்ளது.

அல்ஜீரியாவின் இரத்தக்கறைப்படிந்த முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றும் அது தயாரிப்பு செய்து வருகின்ற ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டத்தை ஒருங்கிணைக்க, அரசு மற்றும் அதன் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டமைப்பதே முன்னால் உள்ள பாதையாகும்.

பெப்ரவரியில் இருந்து போராடி வந்துள்ள பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அதிகாரத்தில் பிடியை வைப்பதற்கான ஆட்சியினது இந்த வெளிப்படையான முயற்சியை நிராகரிப்பார்கள். புட்டஃபிளிக்காவின் வெளியேற்றமானது, ஜெனரல் அஹ்மெட் கய்ட் சலாஹ் அரசியலமைப்புக்கு விரோதமாக கடந்த வாரம் தலையிட்டு, புட்டஃபிளிக்காவின் நலிந்த நிலைமையைக் கணக்கில் கொண்டு அவரை நீக்குவதற்கு அல்ஜீரிய அரசியலமைப்பின் ஷரத்து 102 ஐ பயன்படுத்த வலியுறுத்திய பின்னர், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு இடையிலான வன்முறையான உட்பூசல் மோதல்கள் மூலமாக தயாரிக்கப்பட்டது.

புதிய அரசாங்கம், இந்த ஆட்சியினது பல்வேறு கன்னைகளின் உட்பூசல்களுக்கு இடையே அபாயகரமான சமநிலைப்படுத்தல்களை பராமரிப்பதாக ஞாயிறன்று அறிவித்தது. முன்னாள் உள்துறை அமைச்சரான புதிய பிரதம மந்திரி நூரெடின் பெடுயி (Noureddine Bedoui), புட்டஃபிளிக்கா குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமானவர் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. விபரங்களின்படி இந்த ஜெனரல் கய்ட் சலாஹ் அரசின் இரண்டாம் நிலை அதிகாரியாக இருக்கிறார் என்ற போதும் கூட, ஆயுதப்படை நிலைப்பாடுகளைப் பலப்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு அமைச்சகமும் ஆயுதப்படை கட்டளையகமும் கய்ட் சலாஹின் கரங்களில் இருக்கும். இதற்கிடையே ஒட்டுண்ணித்தனமான இந்த கன்னைகள், அந்நாட்டின் செல்வவளத்தை யார் கட்டுப்படுத்துவது மற்றும் புட்டஃபிளிக்காவின் ஜனாதிபதி பதவி திவாலானதற்கு யார் மீது ஆளும் உயரடுக்கு பழி போட முயலும் என்பதைத் தீர்மானிப்பதில் வக்கிரமான உட்பூசலில் சிக்கியுள்ளன.

ஞாயிறன்று அதிகாலை 3.00 மணிக்கு, அல்ஜீரிய சுங்க இலாகா வணிக கூட்டமைப்பான தலைமை செயலதிகாரிகள் பேரவையின் (FCE) தலைவரும் புட்டஃபிளிக்காவிற்கு நெருக்கமானவருமான அலி ஹடாட் (Ali Haddad) ஐ துனிசிய எல்லையில் Oum Teboul கைது செய்தது. நேற்று எல் கலா நீதிமன்றம் அவரை அல்ஜியேர்ஸிற்கு மாற்றி தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. ஹடாட் சுங்க இலாகாவிடம் சட்டத்திற்குப்புறம்பான ஆவணங்களை காட்டியதாகவும், அல்ஜீரிய சட்டத்தின்படி பயணியர்கள் 1,000 யூரோவுக்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்வதானால் அதை உரிய முறையில் ஆவணப்படுத்தி இருக்க வேண்டும் என்கின்ற நிலையில், ஹடாட் 5,000 யூரோ ரொக்கப் பணத்தை மறைத்தவாறு எல்லையை கடக்க முயன்றார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நேற்று அல்ஜியேர்ஸ் நீதித்துறை அலுவலகம், புட்டஃபிளிக்கா அணிக்கு நெருக்கமான ஒரு டஜன் கணக்கான ஏனைய பில்லியனிய வர்த்தகர்களுக்கு எதிராக, அதாவது ஹடாட் சகோதரர்களில் இருவர், Kouninef சகோதரர்கள், மற்றும் Maihieddine Takhout மற்றும் அவர் உறவினர்கள் பலர் மீதும் குற்றச்சாட்டுக்களை அறிவித்தது. “ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பண பரிவர்த்தனைகள் மீது ஆரம்ப விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்று நீதித்துறை அலுவலகம் அறிவித்தது. இதற்கும் கூடுதலாக அதன் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அது "சில குறிப்பிட்ட நபர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதித்து" உத்தரவிட்டது.

பெருமுதலாளிகள் அல்ஜீரிய மண்ணிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்க ஏப்ரல் 30 வரையில் அனைத்து தனியார் விமானங்களுக்கும் அல்ஜீரிய அரசு தடைவிதித்தது. “அல்ஜீரியர்களின் சொத்துடைமையாக உள்ள விமானங்களும் மற்றும் அல்ஜீரியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தனியார் விமானங்களும் அல்ஜீரிய வான்வழியில் இருந்து புறப்படுவோ அல்லது தரையிறங்கவோ தடை விதிக்கப்படுகிறது,” என்று ஞாயிறன்று மாலை வெளியிடப்பட்ட ஓர் உத்தியோகபூர்வ அறிவிப்பு குறிப்பிட்டது.

ஜெனரல் கய்ட் சலாஹ் அல்ஜீரிய உளவுத்துறையையும் குறைகூறி வருகிறார், இது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் இரகசிய கூட்டுறவு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார். Echourouk செய்திகளின் தகவல்படி, “ஆயுதப்படையின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தவும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தட்டிக்கழிக்கவும்" நோக்கம் கொண்ட "தீய-உள்நோக்கம் கொண்ட" சக்திகள் இருப்பதாக சனிக்கிழமை தளபதிகள் உடனான ஒரு சந்திப்பில் அவர் அறிவித்தார்.

ஜனாதிபதியின் சகோதரர் சாய்த் புட்டஃபிளிக்கா, புலனாய்வு மற்றும் கண்காணிப்புத்துறைக்கான (Département de Renseignement et de la Sécurité - DRS) முன்னாள் தலைவர் ஜெனரல் Mohamed Mediène (“Toufik”), தற்போதைய DRS தலைவர் ஜெனரல் Athmane Tartag மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு இடையே ஒரு சந்திப்பு நடந்ததாக அவர் கூறினார். கய்ட் சலாஹின் கருத்துப்படி, இந்த சந்திப்பு அல்ஜீரியாவில் "குறிப்பிட்டளவில் அராஜகவாதத்தை உருவாக்க", “அரசியலமைப்பின் ஷரத்து 102 ஐ நிராகரிக்க" மற்றும் "பிராந்தியவாதத்தைத் தூண்டிவிட" முடிவெடுப்பதை நோக்கி சென்றது.

அதிகரிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் மற்றும் அல்ஜீரியாவுக்கு உள்ளேயே ஒடுக்குமுறைக்கு சாதகமாக பீதியான சூழலைத் தூண்டிவிடவும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தலாமென ஐயத்திற்கிடமின்றி ஆயுதப்படை நம்புகிறது.

கய்ட் சலாஹின் குற்றச்சாட்டுக்கள் ஒரு "விகாரமான சூழ்ச்சி" என்று குறிப்பிட்டு, Mediène அவருக்கு Tout sur l’Algérie இல் பதிலளித்தார். அவர் இதையும் சேர்த்துக் கொண்டார், “தேசிய இறையாண்மை சம்பந்தப்பட்ட விடயங்களை விவாதிக்க வெளிநாட்டு முகவர்களை சந்தித்ததாக என்னைக் குற்றஞ்சாட்டுவது எனது மதிப்பைக் கெடுப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். ... நான் ஒருபோதும் தேசிய இறையாண்மையின் பாதுகாப்பு கோட்பாடுகளில் இருந்து எந்தவிதத்திலும் விலகியதில்லை. அது கைபடக்கூடாத சட்டம், அதை நான் எப்போதுமே என் நடவடிக்கைகளிலும் என் அணுகுமுறைகளிலும் மதித்து வந்துள்ளேன்,” என்றார்.

அல்ஜீரிய அதிகாரிகளின் மிகவும் சிக்கலான பைசன்டைன் உட்பூசல்கள் அவற்றின் எளிதில் விளங்காத புதிரான தன்மைக்கு அவமானகரமாக பெயர்போனவை என்கின்ற நிலையில், உயர்மட்ட அல்ஜீரிய அதிகாரிகள் கூறும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரித்துவிடவோ சாத்தியமின்றி உள்ளன. ஆனால் சில விடயங்களை நிச்சயமாக கூறமுடியும்.

அல்ஜீரிய முதலாளித்துவ ஆட்சியின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் எதை மற்றவர்கள் செய்ததாக கூறி குற்றஞ்சாட்டுகிறார்களோ அதில் அல்ஜீரிய முதலாளித்துவ ஆட்சி மொத்தமும் குற்றவாளியாக உள்ளது. அது எரிவாயு வருவாய்களில் நூறு பில்லியன் கணக்கான டாலர்களை முறைகேடாக செலவிட்டுள்ளது, உயர்மட்ட அதிகாரிகளின் குடும்பங்களும் உறவினர்களும் அவர்களின் பைகளை நிரப்பி உள்ளனர், அதேவேளையில் அது வாஷிங்டன், பாரீஸ் மற்றும் ஏனைய நேட்டோ அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்துள்ளது. 2013 இல் இருந்து தொடங்கி பாரீஸால் மாலி மீது குண்டு வீசி படையெடுக்க முடிந்திருக்கிறது என்றால், அல்ஜீரிய வான்வழி பகுதியைப் பிரெஞ்சு போர்-குண்டுவீச்சு விமானங்களுக்கு திறந்து விட்ட அல்ஜியேர்ஸின் ஒத்துழைப்புக்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும்.

ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைத் தூக்கிவீசுவதற்கும் மற்றும் தாங்கள் உருவாக்கிய செல்வவளத்தைத் திரும்ப பெறுவதற்கும் தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே வழி, சர்வாதிகாரத்தை பதவியிலிருந்து இறக்குவதும் மற்றும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைந்து நடத்தப்படும் ஒரு புரட்சிகர போராட்டத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் ஆகும். இதற்கு, ஆட்சியை தந்திரோபாயரீதியில் விமர்சித்தவாறு அதற்குப் பின்னால் இருந்து அல்ஜீரிய முதலாளித்துவத்திற்கு தங்களின் ஆதரவை வழங்கி மறைந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை எதிர்த்து புரட்சிகர தலைமையை வழங்கும் வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஓர் அல்ஜீரிய பிரிவாக ஒரு புரட்சிகர முன்னணிப்படையைக் கட்டமைப்பது அவசியமாகிறது.

பிரான்சின் மதிப்பிழந்த பெருவணிக கட்சியான சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) தொடர்பில் உள்ள சோசலிஸ்ட் சக்திகளின் முன்னணி (Front des forces socialistes - FFS) “ஒட்டுமொத்த அல்ஜீரிய மக்களின் நடைமுறையளவில் நியாயமான மற்றும் அத்தியாவசிய கோரிக்கைகளைப் புறக்கணிக்கவும்" மற்றும் தொடர்ந்து "பொறுப்பின்றி முட்டுச்சந்துக்கு இட்டுச் செல்லவும்,” ஆட்சி முடிவெடுப்பதைக் குறித்து வருத்தம் தெரிவித்தது, "... சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சுய-நிர்ணயத்திற்கான மக்கள் கோரிக்கைகள் மீது முழு திருப்தி ஏற்படும் வரையில் அணித்திரள்வைத் தக்க வைக்க FFS அதன் வாக்குறுதியை மீளவலியுறுத்துகிறது.”

பெடுயி ஐ வேட்பாளராக நிறுத்துவதைக் குறித்து தொழிலாளர் கட்சி (Parti des travailleurs - PT) குறிப்பிடுகையில், “வழக்கற்று போன பழைய அமைப்புமுறையைத் தூக்கியெறிவதற்கான பாரிய பெரும்பான்மையினரின் விருப்பத்தைக் குழப்பும்" முயற்சியில் அது "பயனற்ற மறு-முத்திரையிடும் நடவடிக்கை" என்று குறிப்பிட்டது. பல தசாப்தங்களாக அந்த ஆட்சியுடன் நெருக்கமாக செயலாற்றி வந்துள்ள தொழிலாளர் கட்சி, “புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் நோக்கங்களைக் களவாடுவதற்காக, மக்களில் பாரிய பெரும்பான்மையினரின் புறக்கணிப்பை" புதிய அரசாங்கம் முகங்கொடுக்கும் என்று எச்சரித்தது. இதற்கு பதிலாக இப்போதிருக்கும் அல்ஜீரிய முதலாளித்துவ அரசுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு "தேசிய அரசுக்கான அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு" தொழிலாளர் கட்சி முன்மொழிந்தது.

அல்ஜீரிய அரசியலமைப்பைத் திருத்தி எழுதி, இந்த ஆட்சியின் தற்போதைய உயர்மட்ட அதிகாரிகளுக்கு உள்ளேயே உயர்மட்ட அலுவலகங்களை மறுபகிர்வு செய்வதென்பது, பாரிய பெருந்திரளான தொழிலாளர்கள் இளைஞர்களைப் போராட்டத்திற்குள் இழுத்து வந்த பிரச்சினைகளில் எதையும் தீர்க்கப் போவதில்லை. அரசியல் அதிகாரத்திற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதே முன்னோக்கிய ஒரே வழியாகும்.