ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French “yellow vest” protests defy threat of army repression

பிரெஞ்சு "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் இராணுவ ஒடுக்குமுறையின் அச்சுறுத்தலை எதிர்த்து நிற்கின்றனர்

By Anthony Torres
25 March 2019

ஆயுதப்படை அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தலாம் என்ற பிரெஞ்சு அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள் மீதான "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் கோபத்திற்கு மத்தியில், அவர்களின் சனிக்கிழமை அணிவகுப்புகள் மொத்தத்தில் அமைதியாகவும் வன்முறை சம்பவங்கள் எதுவுமின்றியும் நடந்தது. வெள்ளிக்கிழமை காலை, பாரீஸ் இராணுவ சரக ஆளுநர் ஜெனரல் புரூனோ லு ரே கூறுகையில் "மஞ்சள் சீருடையாளர்களை" எதிர்கொள்ள நிலைநிறுத்தப்பட்டுள்ள சிப்பாய்களிடம் "எந்தவிதமான அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கையிலும், வேறு வேறுவிதமான நடவடிக்கை வழிமுறைகள்" இருக்கும், “அது துப்பாக்கிச்சூடு வரையில் கூட செல்லக்கூடும்,” என்றார்.


19வது நடவடிக்கை தினம்

இறுதியில் இவ்வாரயிறுதி "மஞ்சள் சீருடையாளர்களுக்கும்" ஆயுதப்படைக்கும் இடையே எந்த மோதல்களும் நடக்கவில்லை என்பதோடு, சிப்பாய்களும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. பொலிஸ் படைகள் தான் இந்த வாரயிறுதியின் பெயரைக் கெடுக்கும் விதமாக முக்கிய வன்முறை நடவடிக்கையை நடத்தியிருந்தன. நீஸில், அவர்கள் வன்முறையாக தடியடி நடத்தியதுடன், பொலிஸ் படைகளுக்கு அச்சுறுத்தலாக கூட இல்லாத 73 வயதான ஒரு மூதாட்டியின் தலையில் அடித்தார்கள், இதை பல கண்காணிப்பு கேமிராக்களின் காணொளிகளும் உறுதிப்படுத்துகின்றன. அப்பெண்மணி இரத்தக்கட்டுக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் சுயநினைவிழந்து இருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன.

“அவர் குடும்பத்தினர் உள்ளடங்கலாக வெளியாட்களுடன் மருத்துவமனை தொடர்பு கொள்ள வேண்டாமென பொலிஸ் உயரதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர், அவரைக் குறித்த தகவல்களைப் பெறுவதே அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது,” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வழக்கறிஞர் Arié Alimi தெரிவித்தார். “பலவீனமானவர்கள் மீது அரசு அதிகாரத்தைப் பிரயோகித்து தனிநபர்கள் அவர்களே செய்த வன்முறைக்காக” பொலிஸிற்கு எதிராக அந்த குடும்பம் வழக்கு தொடுக்க உத்தேசித்துள்ளது. "சிற்றரசரின் உத்தரவுகளை மதிக்கும்" கடமைப்பாடுகள் பொலிஸிற்குக் கிடையாது என்று வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவரின் மகள் ஜனாதிபதியின் பொறுப்புக்கள் மீது கேள்வி எழுப்பினார்.


ஒடுக்குமுறை அணிவகுக்கிறது (LREM மக்ரோனின் கட்சியின் பெயர்)

பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் 123,000 “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் பங்கெடுத்ததாக "Yellow Number" பேஸ்புக் பக்கம் அறிவித்தது. உள்துறை அமைச்சகமோ 40,000 க்கும் அதிகம் என்று அதன் மதிப்பை மாற்றி குறிப்பிடுவதற்கு முன்னதாக பிரான்ஸ் எங்கிலும் 8,100 போராட்டக்காரர்கள் பங்கெடுத்ததாக அர்த்தமற்ற எண்ணிக்கையை அறிவித்தது.

பெரிதும் அமைதியாக கட்டவிழ்ந்த இந்த “மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்கள், மார்ச் 16 வன்முறையில் பாதுகாப்பு படைகள் வகித்த பாத்திரம் குறித்து மீண்டும் தீவிர கேள்விகளை எழுப்புகிறது. மார்ச் 16 இல் அடையாளம் தெரியாத நூற்றுக் கணக்கான வன்முறை போராட்டக்காரர்கள் சாம்ப்ஸ் எலிசே வீதியின் டஜன் கணக்கான கடைகள் மற்றும் அங்காடிகளைச் சூறையாடினர். அரசியல் ஸ்தாபக கட்சிகளும் ஊடகங்களும் உடனடியாக விஷமப்பிரச்சாரத்தைக் கொண்டு எதிர்வினையாற்றின. மார்ச் 16 வன்முறையானது, செயல் நேர்த்தி மிக்க அதிஇடது வன்முறை போராட்டக்காரர்களால் நடத்தப்பட்டது என்றும் அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் "மஞ்சள் சீருடையாளர்களின்" ஒத்துழைப்பைப் பெற்றிருந்ததாகவும் மக்ரோன் அரசாங்கம் வாதிட்டது.

ஆயுதப்படைகளை அணிதிரட்டுவது குறித்தும் அத்துடன் நிறைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் அறிவித்துள்ளது, போராட்டங்களுக்குத் தடை விதிப்பது, சட்டவிரோத போராட்டங்கள் மீதான அபராதங்களை 38 யூரோவில் இருந்து 115 யூரோவாக உயர்த்துவது, “குண்டர்கள்-எதிர்ப்பு படைப்பிரிவுகளை" அணித்திரட்டுவது, ட்ரோன்களைப் பயன்படுத்துவது ஆகியவையும் அவற்றில் உள்ளடங்கும். சாம்ப்ஸ் எலிசே போன்ற பாரீஸின் அண்டைப்பகுதிகளில் போராட்டங்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன, இங்கே தான் மார்ச் 16 இல் சண்டை நடந்தது, போராட்டங்கள் பலமாக உள்ள துலூஸின் தலைமைச் செயலக சதுக்கத்திலும், அத்துடன் போர்த்தோவின் அண்டைப்பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளன. நீஸ் மற்றும் மார்சைய்யிலும் போராட்ட தடைகள் உள்ளன.


போராட்டக்காரர்களை சுற்றிவளைக்கும் போலிஸ் படை

அந்த வன்முறைக்குக் காரணமானவர்களை அடையாளம் காணாமலேயே அல்லது அவர்களைக் கைது செய்யாமல், அரசாங்கம் குற்றஞ்சாட்டிய அந்த தொழில் நேர்த்தியான வன்முறை போராட்டக்காரர்கள், இந்த வாரயிறுதி முழுவதிலும் தென்படவில்லை. குறிப்பாக மார்ச் 16 சூறையாடலில் பங்கெடுத்தவர்களைக் கலகம் ஒடுக்கும் பொலிஸார் வீடியோ எடுத்தனர் என்ற நிலையில், அந்த சூறையாடலை நடத்தியவர்களின் அடையாளம் குறித்து இது மீண்டும் பலமாக கேள்வி எழுப்புகிறது. அரசின் உள்ளிருக்கும் சக்திகளே, குறைந்தபட்சம் மறைமுகமாகவேனும், ஓர் ஆத்திரமூட்டலுக்காக அவர்களின் ஒப்புதலை அளித்திருப்பார்களோ என்ற சந்தேகம் இன்னமும் நிலவுகிறது.

“மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக மக்ரோனும் லு ரேயும் கூறிவரும் நடைமுறையளவில் மரணகதியிலான வன்முறை அச்சுறுத்தல்கள் பிரான்சில் நான்கு மாதகால போராட்டங்களுக்குப் பின்னர் வருகின்றன என்றாலும் அல்ஜீரிய அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க அல்ஜீரிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தொடங்கிய பாரிய போராட்டங்களின் வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வருகின்றன. புரட்சிகர வேட்கைகளோடு ஒரு சர்வதேச இயக்கம் மேலுயர்வது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஜெனரல் அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் ஆட்சி தூக்கியெறியப்படுமென அஞ்சி, அவர்கள் பிரான்சில் மக்ரோன் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் குரல் வளையை நெரிக்க எவரொருவர் பக்கமும் திரும்ப விருப்பமுற்றுள்ளனர்.

WSWS செய்தியாளர்கள் பாரீசில் சனிக்கிழமை போராட்டங்களின் போது "மஞ்சள் சீருடையாளர்களுடன்" உரையாற்றினர். பாரீஸ் போராட்டங்களைச் சுற்றி ஆயுதப்படை பிரிவுகளது பிரசன்னத்தின் அவசியம் குறித்து வினவிய போது, ஒரு "மஞ்சள் சீருடையாளர்" WSWS க்குப் பின்வருமாறு விவரித்தார்: “நான் காண்கின்ற வரையில், ஊடகங்களும் இராணுவம் ஒன்றுசேர்ந்து பொதுமக்களைச் சுட்டுத்தள்ள இறங்காது என்றே நான் நினைக்கிறேன். அது சாத்தியமே இல்லை, கற்பனையும் செய்யவியலாது. ஆனால் உள்துறை அமைச்சகம் மற்றும் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து வருகின்ற, இன்றுள்ள உத்திரவுகளைப் பொறுத்த வரையில், பிரச்சினைகள் என்று வந்தால் உண்மையில் சிப்பாய்கள் நேருக்குநேராக நின்று பொதுமக்களைச் சுட்டுக் கொல்வதற்கான வாய்ப்பு உள்ளது.”

வன்முறை குற்றவாளிகளைக் குறித்து அவர் கூறுகையில், அவர்கள் “'மஞ்சள் சீருடை' போராட்டங்களில் கலந்திருப்பதாக காட்ட முயல்கிறார்கள். பொலிஸ் உட்பட இது எல்லோருக்கும் தெரியும், ஒவ்வொருவரும் கண்கூடாக பார்க்கிறார்கள். ஆனால் வழமையாக அவர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் வருவதால் எங்களால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. நாங்கள் அவர்களுடன் பேசுகையில் அவர்கள் கூறுவது என்னவென்றால், 'நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதற்காக போராட எங்களுக்கும் உரிமை உண்டு, ஆகவே இந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்று மக்கள் அவர்களாகவே முடிவெடுக்க கூடாது' என்கிறார்கள்.”

துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக ஜெனரல் லு ரேயின் அச்சுறுத்தல் குறித்து மற்றொரு "மஞ்சள் சீருடையாளர்" WSWS இக்குக் கூறினார்: “இது நிஜமாகவே முற்றிலும் அதிர்ச்சியாக இருக்கிறது. போராட்டங்களுக்கு எதிராக ஆயுதப்படை வரவழைக்கப்பட்ட 1947 க்குப் பின்னர் பிரான்சில் இதுபோல நடந்ததில்லை. இது புதைக்குழிக்குள் இறங்கி கொண்டிருக்கிறது. ... அவர்கள் வெறுமனே கட்டிடங்களை பாதுகாக்க இருக்கிறார்கள், ஆனால் இது பயங்கரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை. சட்டம் ஒழுங்கை ஆதரிப்பவர் தான் தேசபக்தர் என்று தொடர்ந்து கூறியவாறு மக்களுக்கு எதிராக ஆயுதப்படையை வரவழைப்பது உண்மையில் திராணியற்றத்தன்மையை ஒப்புக் கொள்வதாக உள்ளது. இது தெளிவாக ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு புதிய தாக்குதல். ஆயுதப்படையானது எதிரிகளைச் சுடுவதற்கு இருப்பதாக கருதப்படுகிறது, மக்களை அல்ல.”

அல்ஜீரிய சம்பவங்களைக் குறித்து வினவிய போது, இந்த "மஞ்சள் சீருடையாளர்" அந்த ஆர்ப்பாட்டத்தைப் புகழ்ந்துரைத்தார்: “அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அது முற்றிலும் அருமையானது. அவர்கள் முற்றிலும் அமைதியாக இருந்தவாறு, அந்த இயக்கத்தை விரிவாக்குவதில், நாங்கள் ஆரம்பத்திலிருந்து செய்து வந்திருப்பதை விட அதிகமாகவே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போதைக்கு அவர்களுக்கு எங்களை விட நல்ல வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன். புட்டஃபிளிக்காவுக்கு ஏற்கனவே ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, பெருந்திரளான மக்கள் இன்னமும் அணிதிரட்டப்படுவதாக நான் நினைக்கிறேன், அந்த அரசாங்கத்தைப் பதவி விலக நிர்பந்திப்பதில் அவர்கள் வெல்வார்கள் என்றே நினைக்கிறேன்.”


டேவிட், “நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர் ஆனால் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் மக்கள்!

தகவல் தொழில்நுட்ப தொழில் வல்லுனரான டேவிட், மக்ரோனின் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கு தனது எதிர்ப்பை வலியுறுத்தினார்: “சிப்பாய்களுடன் என்ன நடந்து வருகிறது என்பது ஒருபுறம் இருக்க, வன்முறை-தடுப்பு போராட்ட சட்டங்களைக் கொண்டு சுதந்திரத்தைத் தாக்குவது தான் இன்று பிரான்சில் நடந்து வருகிறது என்பதால் தான் அனைத்திற்கும் முதலாவதாக நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்கள் எங்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள், இன்று மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள். மாதத்தின் இறுதி நாட்களில் வாழ முடியாதவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் நிஜமான பிரச்சினையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ... இன்று மக்ரோனிடம் இருந்து நாங்கள் பெறும் ஒரே விடையிறுப்பு ஒடுக்குமுறை தான், அது எங்களுக்கு எதிராக இன்னும் கூடுதலாக பொலிஸை அனுப்ப உள்ளது. இப்போது அவர் எங்களுக்கு எதிராக இராணுவத்தினரை அனுப்பி வருகிறார், அவர் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலமாக அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார்.”

பாரீஸ் போராட்டத்திற்கு வர அவர் ஏன் முடிவெடுத்தார் என்பதை விளக்க பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தைச் சுட்டிக்காட்டிய "மஞ்சள் சீருடையாளரும்" மாணவருமான ஒருவரிடம் இருந்தும் இதேபோன்ற எதிர்ப்பு வந்தது: “இந்த இயக்கம் கலைந்து வருவதாக பெரும்பாலும் கூறப்படுகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கைப் பேணுவதும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதும் இராணுவத்தின் பாத்திரம் இல்லை. சிரமமாக நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களைத் தாக்கியுள்ள, கலகம் ஒடுக்கும் பொலிஸிடமிருந்து ஏற்கனவே நாங்கள் போதுமானளவுக்குப் பெற்றுள்ளோம். இப்போது நிஜமான தோட்டாக்களைக் கொண்டு மக்களைச் சுடும் பிரச்சினை, வெறுமனே எங்களைப் பீதியூட்டுவதற்காகவே என்று நான் நினைக்கிறேன். ... ஆனால் அப்படியென்றால் ஆயுதப்படைகளை ஏன் அனுப்ப வேண்டும்? இந்த இயக்கம் உண்மையிலேயே உயர்மட்டத்தினரைப் பீதியூட்டுகிறது. இது மக்களைப் பயமுறுத்தவும், மக்கள் கருத்தை திசைதிருப்ப முயல்வதற்காகும், ஆனால் நிஜத்தில் மக்கள் கருத்து எங்களுக்குப் பின்னால் உள்ளது.”

அல்ஜீரியா மற்றும் அதற்கு அப்பாலும் தொழிலாளர்களின் போராட்டங்களைக் குறித்து வினவிய போது, அவர் அந்த போராட்டத்தை "மஞ்சள் சீருடை" இயக்கத்துடன் ஒப்பிட்டார்: “ஒவ்வொன்றின் மீதும் நான் அவர்களை முழுமையாக ஆதரிக்கிறேன். ... மற்ற நாடுகளில் என்ன நடக்கின்றன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்,” என்றார்.