Print Version|Feedback
Guaidó returns to Venezuela for next stage of US regime-change operation
அமெரிக்க ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் அடுத்த கட்டத்திற்காக குவைடோ வெனிசுவேலாவுக்கு திரும்புகிறார்
By Bill Van Auken
5 March 2019
"இடைக்கால ஜனாதிபதியாக" தன்னை சுய சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஜுவான் குவைடோ, 11 நாட்கள் வெனிசுவேலாவில் இல்லாத நிலையில் திங்களன்று அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, பிரேசில் மற்றும் பல நாடுகளின் தூதுவர்கள் உட்பட மேற்கத்திய இராஜதந்திரிகள் புடைசூழ பாதுகாப்புடன் வெனிசுவேலாவுக்கு திரும்பினார்.
அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு சதி நடவடிக்கையில் வலதுசாரி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஈடுபாட்டுக்கான ஒரு குற்றவியல் விசாரணையை தொடங்குவதாக அரச வழக்கறிஞர்கள் அறிவித்த பின்னரும், வெனிசுவேலாவை விட்டு வெளியேறுவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக குவைடோவை கைது செய்வதற்கு வெனிசுவேலா அதிகாரிகளால் எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் எதிராக அவர் நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்னரே வாஷிங்டன் பதிலடியாக அச்சுறுத்தல்களை வெளியிட்டது.
வாஷிங்டனின் வெனிசுவேலா கைப்பாவையான குவைடோவுடனான எந்தவொரு குறுக்கீடும் அமெரிக்காவின் "வலுவான மற்றும் குறிப்பிடத்தக்க பதிலடியை" தூண்டும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் எச்சரித்தார்.
இதேபோல், குவைடோவிற்கு எதிரான எவ்வித நடவடிக்கையும் "பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது அத்துடன் விரைவான பதிலடியை சந்திக்கும்" என்று அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ட்வீட் செய்தார்.
சிமோன் பொலிவார் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், குவைடோ வெனிசுவேலாவின் தலைநகரான செழிப்பான மாவட்டமான கிழக்கு கராக்கஸ் நகரில் ஒரு பேரணியை நடாத்தினார். வெனிசுவேலா பாதுகாப்புப் படைகள் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவின் அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிவதில்லை என்பதற்கு ஆதாரமாகவே அவரது வருகையின் போது கைது செய்யப்படவில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறினார். "கட்டளை சங்கிலி உடைந்துவிட்டது," என்றும் அவர் கூறினார்.
அவரது உரை இராணுவத்தை நோக்கியிருந்ததுடன், முட்டாள்த்தனமாக நிற்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், கராக்கஸிலும் ஏனைய நகரங்களிலும் உள்ள ஏழ்மையான குடியிருப்புகளில் மதுரோ அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட colectivos என்றழைக்கப்படும் ஆயுதமேந்திய மதுரோவின் ஆதரவாளர்களை கைது செய்யுமாறு கட்டளையிட்டார்.
படைவீரர்களைச் மறைத்து கொண்டு சென்ற குதிரை பொம்மைகளுக்கு (Trojan horse) நிகரான வாஷிங்டனால் ஏற்பாடு செய்யப்பட்ட "மனிதாபிமான உதவி" நடவடிக்கையை வழிநடத்துவதற்கு பெப்ரவரி 22 ம் திகதி குவைடோ வெனிசுவேலாவை விட்டு வெளியேறினார். அவரும் அத்துடன் அவருடைய அமெரிக்க ஆதரவாளர்களும், கொலம்பியாவிலிருந்து வெனிசுவேலாவின் எல்லை வழியாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) ஒன்றின் மூலம் திரட்டப்பட்ட உணவு மற்றும் இதர பொருட்களை சுமந்து கொண்டுவரும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான டிரக் வண்டிகளை பலவந்தமாக உள்கொண்டுவரச் செய்யும் முயற்சியை அடுத்த நாள் ஊக்குவித்தனர். இதன்மூலம் இராணுவத்தை அரசாங்கத்திற்கு எதிராக திரும்பச் செய்து மதுரோ அரசாங்கத்தை வீழ்த்தலாம் எனக் கருதினர்.
ஆனால் இவ்வாறான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை. பழங்குடி மக்கள் செறிந்து வாழ்கின்ற வெனிசுவேலாவின் பிரேசில் எல்லையில் பல மரணங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்புப் படைகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்களினால் "உதவி" வாகனத் தொடரணிகள் எளிதில் தடுத்து நிறுத்தப்பட்டது.
குவைடோ வாக்குறுதி அளித்த உதவி மற்றும் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களின் "மிகப்பெரும் அலையை" செயல்படுத்தமுடியவில்லை. இந்த முழு நடவடிக்கையும் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு இழிந்த மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் ஆகும். இது உணவுப் பொருள்களின் விநியோகம் ஒரு அற்பமான செயற்பாடு என்பதை விளக்குகிறது. அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நிதிய அமைப்புமுறையிலிருந்து கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதன் மூலம் அதன் எண்ணெய் ஏற்றுமதிகளை தடை செய்து, அதன் மக்களை ஏழ்மையாக்கி, திட்டமிட்டு வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை நொருக்குகிறது. இந்தநாடு உதவி வழங்கப்போகின்றதாம்.
திங்கட்கிழமை கிழக்கு கராக்கஸ் இல் அவரது உரையில், இன்னும் கூடுதலான தடைகள் வரக்கூடும் என்று குவைடோ கூறினார். ஆனால் அவர்களது நோக்கங்கள் பற்றிய எந்த விபரங்களையும் வழங்கவில்லை.
வெனிசுவேலாவுக்கு வெளியே இருந்த 11 நாட்களுக்குள், குவைடோ கொலம்பியாவில் பென்ஸ் மற்றும் கனடாவுடன் சேர்த்து பல இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்களை கொண்ட லிமா குழுவை சந்தித்தார். பிரேசிலின் புதிய ஜனாதிபதியான பாசிச முன்னாள் இராணுவ தளபதி ஜயர் போல்சொனாரோ, ஆர்ஜெண்டினாவின் வலதுசாரி அரசாங்கத்தின் மோரிசியோ மாக்ரி, பராகுவேயில் மரியோ அப்தோ பெனிடெஸ் என்னும் முன்னாள் இராணுவ அதிகாரி, மற்றும் தனியார் செயலாளரான அவருடைய தந்தை ஆல்ஃபிரடோ ஸ்ட்ரோஸ்னெர் ஆகியோரை சந்திப்பதற்காக அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் வாஷிங்டனுடன் நட்பை வளர்க்க முயற்சிக்கின்ற ஜனாதிபதி லெனின் மோரேனோவுடன் ஒரு சந்திப்புக்காக எக்குவடோருக்கும் சென்றிருந்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, குவைடோ அவரது அமெரிக்க விடயங்களை "கையாளுபவரும்" வெளிவிவகாரத் துறையின் மேற்கத்திய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளருமான கிம்பெர்லி பிரையர் உடன் சேர்ந்து பயணம் செய்தார். வெளிவிவகாரத் துறையின் இணைய தளத்தில் "20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட ஒரு கோட்பாட்டு நிபுணர் மற்றும் உளவுத்துறை நிபுணர்" என கிம்பெர்லி பிரையர் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
வலதுசாரி கட்சியான மக்கள் விருப்பம் (Popular Will) கட்சியின் உறுப்பினரான குவைடோ, ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கணிசமான நிதியுதவியை பெற்றுள்ளார். ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை அமெரிக்க உளவுத்துறை சார்ந்தது. இது, ஜனவரி 23 அன்று தன்னை "இடைக்கால ஜனாதிபதியாக" சுய பிரகடனம் செய்வதற்கு முன்னர் வெனிசுவேலா மக்களால் அறியப்படாத குவைடோவுக்கான ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஏற்பாடு செய்தது.
தனது ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு ஆதரவளிப்பவர்களுக்கும் அவர்களின் நலன்களை உத்தரவாதமளிக்கும் எவருக்கும் ஒரு பொது மன்னிப்பு வழங்குவது, மற்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீது அச்சுறுத்தல் விடுப்பது போன்ற வெனிசுவேலா இராணுவத்திற்கு குவைடோவால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள், சில விளைவுகளையே இதுவரை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பிய அரசாங்கமும், வெனிசுவேலா வலதுசாரி எதிர்க் கட்சியும், 235,000 பாதுகாப்பு படைகளில் சுமார் 700 உறுப்பினர்களை படைப்பிரிவில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கின்றன. அதேசமயம், மதுரோ அரசாங்கம் 116 பேர் வெளியேறியதாக தெரிவிக்கிறது.
குவைடோ, பெப்ரவரி 23 ம் திகதி "மனிதாபிமான உதவி" நடவடிக்கையின் தோல்விக்கு முன்னும் பின்னும், மதுரோ அரசாங்கத்தை அகற்றுவதற்காக ஒரு அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு பகிரங்கமாக முறையிட்டார். அவர் ஜனவரி மாதம் ஜனாதிபதி பதவியில் நியமிக்கப்பட்ட வெனிசுவேலா தேசிய சட்டமன்றத்தில் "சர்வதேச சக்தியை" தலையிட்டு "அரசியலமைப்பு ஒழுங்கை மீட்டெடுக்கவும், நமது குடிமக்களின் உயிர்களை காப்பாற்றவும்" அனுமதிக்குமாறு விவாதித்தார். முந்தைய யூகோஸ்லாவியாவிலும் லிபியாவிலும் ஏகாதிபத்திய ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்த "பாதுகாக்கும் பொறுப்பு" (R2P) கோட்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
மதுரோ அரசாங்கத்தை கவிழ்க்க "இராஜதந்திர மற்றும் நிதி அழுத்தங்களை" தெரிவு செய்துள்ளதுடன் வெனிசுவேலாவில் இராணுவ தலையீட்டை லிமா குழு பொதுவாக நிராகரித்துள்ளது.
மார்ச் 1, அமெரிக்காவின் ஸ்பானிய மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் யூனிவிஷன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பட்ரிஷியா ஜானோட்டுடன் வெனிசுவேலாவின் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிறப்பு பிரதிநிதியாக ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட எலியட் ஆப்ராம்ஸ் இன் நேர்காணலில், மதுரோவைக் கவிழ்க்க அல்லது வெனிசுவேலாவின் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள "மனிதாபிமான உதவி" வலுக்கட்டாயமாக அளிப்பதற்கு வாஷிங்டன் இராணுவ சக்தியைப் பயன்படுத்த தயாராகி வருவதை மறுத்தார்.
ஆப்ராம்ஸ், 1980 களில் நிக்கரகுவா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட CIA ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட "கொன்டுராஸ்" பயங்கரவாதிகளுக்கு ஆயுதமளித்ததும் மற்றும் நிதியளித்துமான சட்டவிரோத சதித்திட்டத்தை பற்றி அமெரிக்க காங்கிரசுக்கு தவறான சாட்சியமளித்த குறிப்பிடத்தக்க ஒரு பொய்யர் ஆவர். எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலாவில் அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரத்தின் அட்டூழியங்களை நியாயப்படுத்தவும், மூடிமறைக்கவும் அவர் றேகன் நிர்வாகத்தின் தலைமையாளாக பணியாற்றினார்.
CNN உடன் ஒரு ஞாயிறு பேட்டியில், வெனிசுவேலாவில் அமெரிக்கத் தலையீடு பற்றி முழுத் தொனியில் ஜோன் போல்டன், "இந்த நிர்வாகத்தில் நாம் மொன்றோ கோட்பாட்டை பயன்படுத்த பயப்படுவதில்லை" என்று கூறினார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் 200 ஆண்டுகால நியதி பற்றி மேற்கோள் காட்டி, மேற்கு அரைக்கோளத்தில் ஒரு பாதுகாப்பான நிலையை நிறுவுவதில் வாஷிங்டன் வெளி சக்திகளைத் தடுப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதற்கான உரிமையை அவர் குறிப்பிடுகிறார்.
ஆரம்பத்தில் இது, இலத்தீன் அமெரிக்காவில் புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளை மீண்டும் காலனித்துவப்படுத்துவதற்கு ஐரோப்பிய பேரரசுகளின் எந்த முயற்சியையும் எதிர்ப்பதற்கான ஒரு அமெரிக்க கொள்கையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ஏகாதிபத்திய செல்வாக்கு மண்டலத்தின் அறிவிப்பாக மாறியது மற்றும் அப்பகுதியில் 50 நேரடி அமெரிக்க இராணுவத் தலையீடுகளுக்கு CIA ஆதரவுடைய ஆட்சி கவிழ்ப்புகளை தூண்டிவிட்டு, 20 ஆம் நூற்றாண்டில் அரைப்பகுதியில் இப்பகுதியில் பெரும்பகுதியை பாசிச-இராணுவ சர்வாதிகாரங்களை திணித்தது.
வெனிசுவேலாவிற்கு எதிரான இந்த கோட்பாடு இன்று புதிப்பிக்கப்பட்டால், இது பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ என்பவற்றுடன் கராக்காசால் நிறுவப்பட்ட நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளின் காரணமேயாகும். முன்னதாக, போல்டன் முன்வைத்தபடி அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அமெரிக்க அடிப்படையிலான எரிசக்தி நிறுவனங்களின் மேலாதிக்கத்தின் கீழ் உலகில் மிகப் பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை கொண்ட நாட்டையும் அதன் எண்ணெய் செல்வத்தையும் கொண்டு வர தீர்மானித்திருக்கிறது.
ஸ்பெயின் நாளேடான எல் பைஸில் அமெரிக்க வெளிநாட்டு சேவையில் இலத்தீன் அமெரிக்காவின் ஒரு பயிற்றுவிப்பாளராக உள்ள ஹெக்டர் ஷமிஸ் இன் ஒரு கட்டுரை வாஷிங்டனின் உண்மையான நோக்கங்கள் பற்றிய ஒரு குறிப்பை வழங்கியது.
வெனிசுவேலாவில் "இராஜதந்திர தீர்வு சிறந்தது" என்றும் "பிரச்சனை என்னவென்றால், அரசியலில் இலட்சியமானது யதார்த்தத்தில் அரிதாகவே இடத்தை எடுத்துக்கொள்கின்றது" அவர் எழுதுகிறார்.
"அமெரிக்கத் துருப்புக்கள் இல்லாமல் [யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடான்] மிலோசிவிக் இராஜதந்திர பேச்சுவார்த்தை மேசைக்கு சென்றிருக்க மாட்டார் என்று அவர் கூறுகிறார். 2012 இல் மிலோசிவிக் ஹக்கில் சிறைக் கைதியாக அவர் இறந்துவிட்டார்."
குவைடோ சனிக்கிழமையன்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, இன்று பொது ஊழியர்களின் தொழிற்சங்க தலைவர்களை சந்திப்பதாக அறிவித்துள்ளார். தொழிற்சங்க தலைமைகள், அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் பின்னால் மதுரோவின் முதலாளித்துவ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் பரந்த கோபத்தை மூடிமறைக்க முனைகின்றன.
இந்த நடவடிக்கை வெற்றிபெறுமானால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுமையான சர்வாதிகாரத்தையும், வெனிசுவேலா முதலாளித்துவத்தின் நலன்களையும் உழைக்கும் மக்களின் மீது சுமத்தும், இது மிகவும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ்-அரச ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும்.
வெனிசுவேலாவில் முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட பெரும் நெருக்கடியும், அமெரிக்க இராணுவ தலையீட்டின் அச்சுறுத்தலும் வெனிசுவேலா தொழிலாள வர்க்கம் மதுரோவின் முதலாளித்துவ அரசாங்கத்திலிருந்தும் அதன் கையாட்களான தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக அரசியல்ரீதியாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே எதிர்க்கப்பட முடியும், முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, வெனிசுவேலா தொழிலாள வர்க்கத்தை முழுகண்டத்தின் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்த போராடுவதோடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளித்துவ நலன்களை அகற்றுவதற்கும், நாட்டின் பரந்த எண்ணெய் செல்வத்தின் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கும் தொழிலாளர் அமைப்புக்களை ஒழுங்கமைக்கவேண்டும்.