ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP meetings launch Tamil edition of The Russian Revolution and the Unfinished Twentieth Century

சோச.க. ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்” நூலின் தமிழ் பதிப்பினை வெளியிடும் கூட்டங்களை நடத்தியது

By our correspondents
6 March 2019

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, டேவிட் நோர்த் எழுதிய ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழ்மொழி பதிப்பினை வெளியிடுவதற்காக இரண்டு வெற்றிகரமான பகிரங்க கூட்டங்களை நடத்தியது. சோ.ச.க. 2016 இல் இந்தப் புத்தகத்தின் சிங்கள மொழி பெயர்ப்பை வெளியிட்டது. டேவிட் நோர்த், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவினதும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியினதும் தலைவராவார்.

இந்தக் கூட்டங்கள், பெப்பிரவரி 24 அன்று மத்திய பெருந்தோட்ட பிரதேசமான ஹட்டனில் நகர மண்டபத்திலும் மார்ச் 1 அன்று யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட தீவின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்திலும் நடைபெற்றன.


ஹட்டன் கூட்டம்

ஹட்டன் கூட்டத்தில், எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் அங்கத்தவர்கள் உட்பட பல தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அண்மையில் நடந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தில் கலந்து கொண்டதன் விளைவாக பல தொழிலாளர்கள் பழிவாங்கலுக்கு உள்ளான என்பீல்ட் தோட்டத்தில் இருந்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் மேலும் பல தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். இந்தக் கூட்டங்களிலும் அதற்கு முன்னராக இடம்பெற்ற பிரச்சார நடவடிக்கையின் போதும் புத்தகத்தின் சுமார் 50 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.

ஹட்டன் கூட்டத்திற்கு தலைமை வகித்த சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு அங்கத்தவர் எம். தேவராஜா, டேவிட் நோர்த் சர்வதேச சோசலிச இயக்கத்துக்குள் ஆற்றிய நீண்ட தசாப்த கால பங்களிப்பை விளக்கியதோடு இந்த நூலின் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்ட ஐரோப்பாவில் உள்ள தமிழ் பேசும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.


தேவராஜா

“இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்துக்கும் எதிராக முன்னெடுத்த போராட்டத்தின் மறுபக்கத்தில் மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களும் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்,” என தேவராஜா கூறினார். உலகத்தின் சோசலிச மாற்றத்துக்கான வரலாற்றுப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிலாளர்களுக்கு தேவையான அரசியல் மற்றும் தத்துவார்த்த வழிகாட்டலை இந்த நூல் அவர்களுக்கு நிச்சயம் வழங்கும்,” என அவர் மேலும் கூறினார்.

பிரதான உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ், கடந்த கால சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் குறிப்பாக ரஷ்யப் புரட்சியின் மூலோபாயப் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கினார். இன்று மிகவும் இன்றியமையாத கோரிக்கைகளுக்கான போராட்டத்தைக் கூட வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு இது இன்றியமையாததாகும், என அவர் கூறினார்.

முதலாளித்துவ பெரு நிறுவனங்களுக்கும் மற்றும் முன்னேறிய மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளில் உள்ள அவற்றின் அரசாங்கங்களுக்கும் எதிராக, தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக உலகம் பூராவும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போர்க்குணம் மிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள், என்பதை டயஸ் சுட்டிக்காட்டினார். அமெரிக்க வாகன தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிரான்சில் “மஞ்சள் சீருடை” தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் இந்தியாவில் மில்லியன் கணக்கான அரசாங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் என்பவற்றை அவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமானது “தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்தின் ஒரு பாகமாகும்” என அவர் தொடர்ந்தார்.

1968 மற்றும் 1975 ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற புரட்சிகர போராட்டத்தின் எழுச்சியைப் பற்றியும் பேச்சாளர் குறிப்பிட்டார். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் இணைந்து கொண்ட, ஜனாதிபதி டு கோல் இன் ஆட்சியை கிட்டத்தட்ட கவிழித்துவிட்ட, பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் பொது வேலை நிறுத்தம் பற்றி அவர் தெளிவுபடுத்தினார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் ஸ்பெயினிலும் மற்றும் போத்துக்கல்லிலும் இருந்த பாசிச ஆட்சியை நொருக்கியதுடன் பிரிட்டனில் இருந்த டோரி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்ததோடு வியட்நாம் மற்றும் கம்போடியாவிலும் அமெரிக்க இராணுவ தலையீட்டை தோற்கடித்தது என அவர் தெளிவுபடுத்தினார்.

அந்தக் காலகட்டத்துக்கும் இன்றைக்கும் உள்ள ஒற்றுமைகளை மட்டுமன்றி கணிசமான அரசியல் வேறுபாடுகளையும் டயஸ் சுட்டிக்காட்டினார். “1968 மே – ஜூன் மாதங்களில் பிரான்சில் பொது வேலைநிறுத்த அலைகள் ஆரம்பமானபோது, முதற் பொறிவாக டாலர் – தங்கம் ஒழுங்கமைப்பு முறையான பிரிட்டன் வூட் உடன்படிக்கையின் வெடிப்பு அப்போதுதான் வெளிப்பட்டது. இன்று, உலகம் பூராவும் ஆழமான அரசியல் வெடிப்புக்களுடன், முழு முதலாளித்துவ பொருளாதாரத்தினதும் ஒரு நீடித்த பொறிவின் ஆதாரங்களை நாங்கள் காண்கின்றோம்.

“பின்னர், இப்போது போல், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், புரட்சிகர முன்னோக்கு மற்றும் தலமை பற்றிய தீர்க்கமான பிரச்சினையை எதிர்கொண்டனர். எவ்வாறாயினும், 1968 – 75 காலகட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, அதற்குள்ளே தோன்றிய பப்லோவாத திரிபுவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.


ஹட்டன் கூட்டத்தில் விஜே டயஸ் உரையாற்றுகிறார்

இன்று, அனைத்துலகக் குழுவானது அதன் உறுப்பினர்கள் மத்தியில் இந்த திரிபுவாதத்தை தீர்க்கமாக தோற்கடித்தது மட்டுமன்றி, எங்களுடைய வலைத் தள வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்துள்ளதுடன் அதன் ஊடாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்க அன்றாடம் போராடிக்கொண்டிருக்கின்றது,” என டயஸ் கூறினார்.

டேவித் நோர்த்தின் இந்த நூல், சர்வதேச புரட்சிகர கட்சிக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்த முயன்று வருகின்ற புரட்சிகர மாக்சிசத்தின் எதிரிகளால், திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்மைப்படுத்தல்களை விரிவாக அம்பலப்படுத்துகிறது. எனவே, இது, எதிர்காலத்தில் வர இருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்கான “ஒரு ஆயுதமாகும்”.

“லெனின் மற்றும் ட்ரொஸ்கி தலமையிலான போல்ஷிவிக் கட்சியின் தீர்க்கமான பாத்திரமே, 1917 ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்தது,” என டயஸ் கூறினார்.

1903 இல் லெனினின் என்ன செய்ய வேண்டும் என்ற ஆவணம், “பொருளாதாரவாதத்தின்” –தொழிற்சங்கத்தின் கருத்தியல் அடித்தளத்தின்– மீது போர் தொடுப்பதுடன் தொழிற்சங்க நனவு என்பது ஒரு “முதலாளித்துவ நனவாகும்” அது, உற்பத்திச் சக்திகளினது தனியார் உடமைக்கும் மற்றும் முதலாளித்துவ அரசுக்கும் எதிராக சவால் செய்தது கிடையாது என விளக்கியதாக, டயஸ் தெரிவித்தார்.

“தொழிலாளர் இயக்கத்துக்குள் முதாலாளித்துவத்தின் ஒரு ஆயுதமாக செயற்படும் தொழிற்சங்கத்தில் இருந்து வெளியேறி, புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான வாகனமாக நடவடிக்கை குழுக்கள் போன்ற சுயாதீனமான வர்க்க அமைப்புக்களை ஸ்தாபிக்க வேண்டும் என நாங்கள் கோரும்போது, நாங்கள் லெனினுடன் தோளோடு தோள் நிற்கின்றோம்,” என டயஸ் கூறினார்.

“ஏகாதிபத்திய சாகாப்பத்தில் சீர்திருத்தமும் புரட்சியும்”, “தொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்துக்கு எதிராக உள்ளன” என்ற இரண்டு அத்தியாயங்களை நூலில் இருந்து மேற்கோள் காட்டிய பேச்சாளர், தொழிற்சங்கங்களின் வரலாற்றுத் தோற்றம் மற்றும் அபிவிருத்தி பற்றியும் அதன் பாத்திரம் பற்றியும் விளக்கினார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பை டயஸ் மீளாய்வு செய்தார். தொழிலாளர்களால் அடிப்படை ஊதிய கோரிக்கை, வேலைப் பாதுகாப்பு அல்லது சமூக உரிமைகளைக் கூட தொழிற்சங்கங்களின் ஊடாக வெல்ல முடியாது என்பதை இந்த அனுபவங்கள் காட்டுகின்றன என அவர் கூறினார். தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற அரசாங்கத்தினதும் மற்றும் தோட்ட உரிமையாளர்களதும் பொய்யை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டதோடு முதலாளிமார் 200 ரூபா மட்டுமே சம்பளம் உயர்த்தப்படும் எனக் கூறியபோது தொழிற்சங்கங்கள் முதலாளிமாரின் பக்கம் நின்றன. உண்மையில், நாளாந்த கூலி வெறும் 20 ரூபாவால் மாத்திரமே உயர்த்தப்பட்டது.

"உலக சந்தையில் மந்தநிலை காணப்பட்ட போதிலும், தோட்டத் தொழில்துறையின் தலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பன்நாட்டு நிறுவனங்கள் இன்னும் பெருமளவிற்கு இலாபம் ஈட்டுகின்றன," என கூறிய அவர், கூட்டுத்தாபனங்கள் பெற்ற பிரமாண்டமான இலாபத்தை மேற்கோள் காட்டினார்.

தொழிற்சங்கங்கள் அனைத்தையும் பாதுகாக்கின்றன என அவர் தெரிவித்தார். "எனவேதான் சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து முறித்துக் கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த பிரச்சினை தோட்டங்களில் மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தலைதூக்கியுள்ளது."

கூட்டத்திற்குப் பின்னர், எபோட்சிலி நடவடிக்கை குழுவின் தலைவர் பி. சுந்தரலிங்கம், ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலை தொழிலாளர்கள் படித்து, அதில் விவரிக்கப்பட்டுள்ள படிப்பினைகளை அரசியல் ரீதியாக கற்றுக்கொள்ள வேண்டும், எனக் கூறினார்.

"கூட்டத்தில் இருந்து நிறைய புதிய விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். "சோசலிச சமத்துவக் கட்சி தலைவர் விஜே டயஸ், கம்பனிகள் எவ்வாறு இலாபம் ஈட்டியுள்ளன என்பதையும் மறுபக்கம் தொழிலாளர்கள் மோசமான நிலைமையை எதிர்கொள்வதையும் விளக்கினார். தொழிலாளர்கள் குறைந்தபட்சம் அடிமைகளாக வாழ்வதற்கு உரிய ஊதியத்தை வழங்குவதை கூட இப்போது முதலாளித்துவவாதிகள் மறுக்கின்றனர் என்றும் விளக்கினார்” என சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

என்ஃபீல்ட் தோட்டத்தில் பழிவாங்கப்பட்ட தொழிலாளியான எஸ். பாலசுப்பிரமணியம் கூறியதாவது: "இத்தகைய ஒரு நிகழ்வில் நான் முதன்முறையாக பங்கு பெற்றேன். நான் ஏராளமான தொழிற்சங்கக் கூட்டங்களில் பங்குபற்றியுள்ளேன், ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது. வரலாற்றில் இருந்து நிறைய விஷயங்களை தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற தொழிலாளர்களுக்கு கல்வியூட்டுவதற்கு இந்த புத்தகத்தை நாம் பயன்படுத்த வேண்டும்."


பாணி விஜேசிறிவர்தன

மார்ச் 1 அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்திற்கு பி. திருஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினரான பாணி விஜேசிறிவர்தன பிரதான உரையாற்றினார்.

"1914 ல் முதல் உலகப் போருடன் தொடங்கிய போர்கள் மற்றும் புரட்சிகளின் சகாப்தம் இன்னும் முடிந்துவிடவில்லை. உலகப் போருக்கு வழிவகுத்த சர்வதேச முரண்பாடுகள் இன்றும் மிகவும் கூர்மையடைந்துள்ளன" என்று விஜேசிறிவர்தன தெரிவித்தார். “மனிதகுலம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வு சர்வதேச சோசலிசமே ஆகும். இந்த பணியை நிறைவேற்றுவதற்கான முதல் படி ரஷ்யாவில் 1917 சோசலிசப் புரட்சியில் தொடங்கியது. அந்த பணி இன்னும் எஞ்சியுள்ளதுடன் புரட்சிகர தலைமைத்துவத்தின் கீழ் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அதை இட்டுநிரப்ப முடியும்."

2008 நிதியச் சரிவிற்குப் பின்னர் துரிதமாக விரிவடைந்திருக்கும் பூகோள முதலாளித்துவ வீழ்ச்சியின் மத்தியில், அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கின்றன, என்று விஜேசிரிவர்தன தெரிவித்தார். அணு ஆயுதம் கொண்ட இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் ஆபத்து அதிகரிப்பதை பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

"அமெரிக்காவானது சீனாவிற்கு எதிரான ஒரு மூலோபாய பங்காளியாக இந்தியாவை அரவனைத்துக்கொண்டுள்ள அதேவேளை, பெய்ஜிங் பாகிஸ்தானுடன் உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்றுப் போட்டி, இப்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான பூகோள-அரசியல் மோதலில் ஊடுருவி நிற்பதுடன் பிரதான சக்திகளுக்கு இடையிலான ஒரு உலக மோதலுக்கான உண்மையான அச்சுறுத்தல் நிலவுகிறது" என்று அவர் கூறினார்.

மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மற்றும் சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒரு புறம் இருக்க, இந்திய மற்றும் இலங்கையில் அல்லது இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கேனும் போட்டியிடும் தேசிய உயரடுக்குகளால் போரைத் தவிர்க்க முடியாது. இந்தப் பிரச்சினைகள், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விளக்கியுள்ள புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலில், ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்தை டேவிட் நோர்த் பாதுகாப்பதை விஜேசிறிவர்தன வலியுறுத்தியதுடன், வருகைதந்த அனைவரையும் நூலை வாங்கி கவனமாக வாசித்து அதன் பகுப்பாய்வின் அடிப்படையில் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.