Print Version|Feedback
Sri Lankan tea plantation workers protest victimisations
இலங்கை தேயிலை பெருந்தோட்ட தொழிலாளர்கள் பழிவாங்கலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்
By our reporters
19 February 2019
இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளால் போராட்டம் குணாம்சம் கொண்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதற்கு எதிராகவும் ஏனைய தொழிலாளர் தட்டினர் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஞாயிற்றுக் கிழமை ஒரு பலம்வாய்ந்த மறியல் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டம் மத்திய மலையக நகரான ஹட்டனில் நடந்தது. ஹட்டன் எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
அன்றாட ஊதியத்தை 1,000 ரூபா (55.60 அமெரிக்க டொலர்) வரை உயர்த்தக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த ஒன்பது நாள் போராட்டம் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலைமையின் மத்தியில், சோ.ச.க. இன் வழிகாட்டலின் கீழ் டிசம்பர் மாதம் இந்த நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டது. அவர்களது தற்போதைய சம்பளம் வெறும் 700 ரூபாவாகும். அண்மையில் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கம்பனிகளுடன் தோட்டத் தொழிற்சங்கங்கள் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்துக்கு தொழிலாளர்கள் மத்தியில் பரந்த எதிர்ப்பு நிலவுகிறது.
மறியல் போராட்டம்
மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்த மறியல் போராட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களும் சோ.ச.க. உறுப்பினர்களும் பங்குபற்றினர். ஞாயிற்றுக் கிழமை மட்டுமே தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை கிடைப்பதோடு அயலில் உள்ள தோட்டங்களில் இருந்து நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் நகரத்துக்கு வருகின்றனர். போராட்டத்தின் முடிவில் வழங்கப்பட்ட உரைகளை கேட்பதற்காக பல தொழிலாளர்கள் வீதி ஓரங்களில் நின்றிருந்ததோடு ஆர்வத்தோடு செவிமடுத்தனர்.
தேசிய தொலைக் காட்சி சேவையான சுயாதீன தொலைக் காட்சி மற்றும் சிரச தொலைக் காட்சியும் செய்தி சேகரித்ததோடு முன்னணி தமிழ் பத்திரிகையான வீரகேசரி அதன் இணையத் தளத்தில் படங்களுடன் செய்தியை வெளியிட்டிருந்தது. இன்னொரு தமிழ் பத்திரிகையான தினக்குரல் படங்களுடன் செய்தியை வெளியிட்டிருந்தது. சிரச தொலைக் காட்சியின் பாகமாக சக்தி தொலைக் காட்சி, சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜாவின் உரையில் கணிசமான பகுதியை ஒளிபரப்பியது.
போராட்ட உணர்வு கொண்ட தோட்டத் தொழிலாளி எஸ். பாலசிப்பிரமணியத்தை திட்டமிட்டு பழிவாங்குவதை தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் உடனடியாக கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். பாலசுப்பிரமணியம் தோட்டத் தொழிலாளி மட்டுமல்லாது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தோட்டத் தலைவரும் ஆவார். என்ஃபீல்ட் தோட்ட நிர்வாகம் அவரை வேலை நீக்கம் செய்துள்ளது. அவர் மற்றும் இன்னம் பல தொழிலாளர்களும் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களும் கம்பனியால் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் குற்றப் பத்திரிகைகளை எதிர்கொள்கின்றனர்.
"தொழிலாளர்களை பழிவாங்குவதை நிறுத்து," "தொழிற்சங்கங்கள் வேண்டாம், சதி ஒப்பந்தங்கள் வேண்டாம்," "தொழிற்சங்கங்களில் இருந்து விலகு, காட்டிக்கொடுப்புகளை எதிர்த்திடு," போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷித்தனர்.
தமது அன்றாட துன்பங்களுக்கும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் தேவைக்கும் இடையில் ஒரு இணைப்பை கண்ட அவர்கள், " சர்வதேச சோசலிசத்துக்காக போராடு. தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காக போராடு. உலகப் போரை எதிர்த்திடு," போன்ற சுலோகங்களை எழுப்பினர்.
ஞாயிற்றுக் கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோ.ச.க.வும் முன்னெடுத்த பிரச்சாரத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பலமான ஆதரவு கிடைத்தது.
ராஜேந்திரன்
கொழும்பில் தற்போது ஒரு காவலாளியாக பணி புரியும் எஸ். ராஜேந்திரன், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, 2011ல் தோட்டத் தொழிலாளியாக இருந்தபோது, நிர்வாகம் சோடித்த குற்றச்சாட்டினால் வேலை நீக்கப்பட்டு பழிவாங்கப்பட்டதாக தெரிவித்தார்.
நியாமற்ற வேலை நிலைமைகளை தான் எதிர்த்தமையே தான் வேலை நீக்கம் செய்யப்பட்டமைக்கான உண்மையான காரணம் என அவர் விளக்கினார். அவரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தொழிலாளர் தேசிய சங்கமானது கம்பனியுடன் அவரை ஒரு பயணற்ற சட்ட ரீதியான மோதலில் ஈடுபடுவதற்கு வகை செய்துள்ளது.
"கம்பனியின் நலன்களுக்காக அவர்கள் எங்களை சிரமத்தில் தள்ளுவாகளாயின் நாம் ஏன் தொழிற்சங்கங்களுக்கு சந்தா கட்ட வேண்டும்? பாலசுப்பிரமணியமும் இன்று இதே நிலைமையை எதிர்கொள்கிறார். ஏனெனில் தொழிற்சங்கங்கள் கம்பனிகளை ஆதரிக்கின்றன," என அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பேசிய என்ஃபீல்ட் தோட்டத்தின் ஒரு பெண் தொழிலாளி, தோட்டத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தொழிற்சங்கங்களாலும் அரசியல் கட்சிகளாலும் காட்டிக்கொடுக்கப்பட்டு வந்துள்ளனர் என உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தெரிவித்தார்.
"நாங்கள் பாலசுப்பிரமணியத்தை பழிவாங்குவதை எதிர்க்க வேண்டும்" என அவர் கூறினார். "கொழும்பில் ஒரு கட்டுமான பகுதியில் தொழில் செய்யும் எனது கனவரும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்கிறார். தமது உரிமைகளுக்காக போராடுவதற்கு எமது தோட்டத்திலும், இந்த நாட்டிலும்மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்."
நிகழ்வை குழப்புவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச.) முயற்சித்த போதிலும் ஞாயிற்றுக் கிழமை ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் பங்குபற்றினர். தொ.தே.ச. தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் பங்காளியாக்க இருப்பதோடு அதன் தலைவர் பி. திகாம்பரம் அமைச்சர் பதவி வகிக்கின்றார்.
நடவடிக்கை குழுவை ஆதரிக்கும் தொழிலாளர்களும் கூட தொ.தே.ச. தோட்டத் தலைவர் முணுசாமியால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பை பேணினால் "விளைவுகளை எதிர்கொள்ள" தயாராகுமாறு தொழிலாளர்களை எச்சரிப்பதற்காக அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு லயின் வீடுகளுக்கும் சென்றுள்ளார்.
சுந்தரலிங்கம்
கூட்டத்தில் உரையாற்றிய எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தலைவர். பி. சுந்தரலிங்கம், "பாலசுப்பிரமணியம் போராட்டத்தில் முன்னணி வகித்ததாலேயே" அவர் என்ஃபீல்ட் தோட்ட நிர்வாகத்தால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார், "அவரை பாதுகாக்க தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும்," என தெரிவித்தார்.
கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுப்பதாகும், அதை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும், என சுந்தரலிங்கம் கூட்டத்தினர் மத்தியில் தெரிவித்தார். "கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் அதற்குள் தொழிலாளர்களின் வேலைச் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது."
தொழிற்சங்கங்கள் செய்த துரோகம், ஒரு நடவடிக்கை குழுவை அமைக்க எபோட்சிலி தொழிலாளர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரி என்பதை நிரூபிக்கின்றது. "ஞாயிற்றுக் கிழமைகளில் கொழுந்து எடுக்க வேண்டிய இலக்கு 35 கிலோவில் இருந்து 40 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான சம்பளம் மாறவில்லை. அன்றாடம் கொழுந்து பறிக்கத் தொடங்குவதற்கு முன்னதாக பெண் தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கு அடியில் துப்புரவு செய்ய வேண்டும்."
தேவராஜா
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, தொழிற்சங்கங்கள் பாலசுப்பிரமணியத்திற்கு எதிராக தோட்ட நிர்வாகத்துடனும் பொலிஸ் உடனும் ஒத்துழைப்பதானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எதேச்சதிகார வழிமுறைகள் மேலும் மேலும் பயன்படித்தப்படுவதற்கான இன்னொரு அறிகுறியாகும் என ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். "இது தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு அச்சுறுத்தலும் எச்சரிக்கையும் ஆகும்," என அவர் கூறினார்.
இன்னொரு சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரான பாணி விஜேசிறிவர்தன, தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலானது ஒவ்வொரு நாட்டிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் நிலைமைகள் சம்பந்தமாகவும் தமது ஜனநயாக உரிமைகளைக் பாதுகாக்கவும் போராடி வருகின்ற நிலைமையில், ஆளும் வர்க்கங்களால் பூகோள ரீதியில் முன்னெடுக்கப்படும் தாக்குதலின் ஒரு பாகமாகும், என விளக்கினார்.
"மெக்ஸிகோ, மெடாமொரஸில் சுமார் 70,000 தொழிலாளர்கள் தங்களது முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களை மீறி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்தியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் இங்கு தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அதே வகையான தாக்குதல்களையே எதிர்கொள்கின்றனர்," என அவர் கூறினார்.
விஜேசிறிவர்தன
தொழிற்சங்கங்களின் துரோகத்தை உறுதியுடன் எதிர்க்குமாறும் எபோட்சிலி தொழிலாளர்களை உதாரணமாக பின்பற்றி, தங்களது தோட்டங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு விஜேசிறிவர்தன சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார். "உங்களது உரிமைகளுக்கான போராட்டத்தை உங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான மற்றும் அனைத்துலக சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுங்கள்."
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருந்த தொழிலாளர்கள் எபோட்டசிலி தொழிலாளர் நடவடிக்கை குழுவுடனும் அரசியல் போராட்டத்துக்கான சோ.ச.க. இன் வேலைத் திட்டத்துடனும் தமது உடன்பாட்டைத் தெரிவித்தனர்.
இன்வெறி தோட்டத்தில் இருந்து வந்திருந்த அசோகன் கூறியதாவது: "தோட்டத் தொழிலாளர்களை கம்பனிகள் பழிவாங்குவதற்கு எதிராக சோ.ச.க. மட்டுமே போராடுகின்றது என்பதை உங்களது முந்தைய நாள் பிரச்சாரத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டேன். நாம் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப ஐக்கியப்பட வேண்டும்."
ஒரு ரெஸ்டுரன்ட் தொழிலாளியான பாலசிங்கம் கூறியதாவது: "நான் 1,000 நாள் சம்பளத்தில் என் குடும்பத்தை கொண்டு நடத்த முடியாமல் தவிக்கிறேன். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அது கூட கிடைப்பதில்லை. எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் இதே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நான் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்பதோடு அவர்களது போராட்டத்தில் இணைந்து உதவி செய்வேன்."
முதலாளித்துவ வரம்புக்குள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது என்பதை பெருந்தோட்டத் தொழிலாளர்களில் முக்கியமான தட்டினர் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள் என்பதையே ஞாயிற்றுக் கிழமை ஆர்ப்பாட்டத்திற்கான பலமான பிரதிபலிப்பு சமிக்ஞை செய்கின்றது. தொழிற்சங்கங்களில் இருந்து விலகி ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக ஒழுங்கமைய வேண்டும் என பலர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
மார்ச் 17 ஹட்டன் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ள தொழிலாளர் மாநாட்டில் பங்குபற்றுமாறு தோட்டத் தொழிலாளர்கள், ஏனைய தொழிலாள தட்டினர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் சோ.ச.க. மற்றும் நடவடிக்கை குழுவும் அழைப்பு விடுக்கின்றன. "தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகளும் சம்பளம் மற்றும் சமூக உரிமைகளை வெல்வதற்கான முன்நோக்கிய பாதையும்" என்ற தலைப்பிலான இந்த மாநாடு, தீர்க்கமான பிரச்சினைகள் பற்றிய விபரமான கலந்துரையாடலுக்கான கட்டமைப்பை வழங்கும்.
ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:
இலங்கை தொழிலாளர்கள் போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதை எதிர்க்க வேண்டும்
[16 ஜனவரி 2019]
இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கம் கம்பனிகளுடன் கொடுத்து வாங்கும் உடன்பாட்டைப் பற்றி கலந்துரையாடுகிறது
[3 ஜனவரி 2019]