Print Version|Feedback
From Lordstown to Vietnam and Back
லார்ட்ஸ்டவுனில் இருந்து வியட்நாமுக்கும் திரும்பவும் லார்ட்ஸ்டவுனுக்கு
By David North
7 March 2019
இந்த பேட்டி முதலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு முன்னோடி அமைப்பான வேர்க்கஸ் லீக்கின் வாராந்தர பத்திரிகையான புல்லட்டனில் பெப்ரவரி 12, 1973 இல் பிரசுரிக்கப்பட்டதாகும்.
1970 களின் தொடக்கத்தில் தொடர்ச்சியான பல போர்குணமிக்க போராட்டங்களுக்கு மையமாக இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் லார்ட்ஸ்டவுன் உற்பத்தி ஆலைக்கு, இந்த செவ்வாய்கிழமை தான் கடைசி உற்பத்தி நாளாக இருந்தது. வாகனத்துறையின் ஓர் உலகளாவிய மறுகட்டமைப்பின் பாகமாக இந்த ஆலை மூடப்படுகின்ற நிலையில், இது ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தால் (UAW) முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த் 1973 இல் வாகனத்துறை தொழிலாளர்களை பேட்டி காண்கிறார்.
லார்ட்ஸ்டவுனில் இருந்து வியட்நாமுக்கும் திரும்பவும் லார்ட்ஸ்டவுனுக்கு
“நான் ஒரு தீவிர தன்மையாளனாக ஆவதற்கு திட்டமிட்டேன் என்றோ அல்லது விரும்பினேன் என்றோ இல்லை. ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ் இன்று செய்வது அனைத்திற்கும் நான் எதிரானவன் ஆவேன்.” என்று பாப் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் சற்று முன்னர்தான், அந்த மிகப் பெரிய லாட்ஸ்டவுன் ஜிஎம் உற்பத்தி ஆலையில் பாப் இன் வேலைநேரம் முடிந்திருந்தது; இப்போது அவர் Pink Elephant என்றழைக்கப்படும் உணவகத்தில் அமர்ந்தவாறு, அவரும், அவருடன் ஏனைய ஆயிரக் கணக்கான இளம் தொழிளார்களும் சேர்ந்து கடந்தாண்டு மூன்று வாரங்களுக்கு அந்த ஆலையில் வேலைநிறுத்தம் செய்தது குறித்து அவரின் உணர்வுகளை விவரித்துக் கொண்டிருந்தார்.
“இந்த ஆலையில் எதுவுமே மேம்படவில்லை,” என்றார். “நிர்வாகம் இப்போதும் எங்களை இயந்திரங்களைப் போல தான் கையாள்கிறது. எங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. உற்பத்தியைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் விடயங்களாக இருப்பதில்லை, அதனால் தான் அவர்கள் உற்பத்தியை மேலும் மேலும் வேகப்படுத்துகிறார்கள்.
“இதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். இங்கே வேலை செய்வது எனது தார்மீக நெறிமுறைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பாகிறது. இது ஒரு சில விடயங்கள் குறித்த எனது கருத்துக்களைப் முற்றிலுமாக மாற்றி விட்டது.”
23 வயதான பாப் முதன்முதலில் லாட்ஸ்டவுன் ஆலைக்கு வேலைக்குச் சென்று ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இதற்கிடையே, அவர் கடற்படையில் இரண்டாண்டுகள் செலவிட்டிருந்தார், வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் அவர் வியட்நாமில் இருந்து பணிக்குத் திரும்பி இருந்தார்.
“உங்களுக்குத் தெரியும், வியட்நாம் போர் என்னை மிகவும் கடுமையானவனாக ஆக்கியது. அங்கே இருந்தபோது உண்மையிலேயே நான் அதிர்ந்து போயிருந்ததாக உணர்கிறேன். நான் பயிற்சி முகாமில் இருந்து திரும்பி வந்திருந்த போது, நீங்கள் ஒருபோதும் என்னை சந்திக்க விரும்பாத அளவுக்கு நான் மிகவும் நாட்டுப்பற்று கொண்டவனாக இருந்தேன். இந்நாட்டை விமர்சிக்க முயற்சிக்கும் எவரொருவர் மீதும் உண்மையிலேயே பாய்ந்து விடும் அளவுக்கு இருந்தேன். ஒருவேளை நான் உங்களுக்கு சில தொந்தரவுகளைக் கொடுத்திருக்கலாம்.
“ஆனால் ஒரு மாதம் வியட்நாமில் இருந்த பின்னர், நான் வேறுவிதமாக உணரத் தொடங்கினேன். ஒரு விடயத்தை உங்களுக்குக் கூறுகிறேன்: நாங்கள் அங்கே நல்லவர்களாக இருக்கவில்லை. இங்கு வியட்காங் (வியட்நாம் கொரில்லா இயக்கத்தின் ஓர் அங்கத்தவரின்) அட்டூழியங்களைக் குறித்து ஏறத்தாழ நீங்கள் எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பீர்கள். அது சரி, நீங்கள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை பார்த்திருக்கவேண்டும், தலைகள் வெட்டுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.
“ஒருவர், வியட்நாமில் ஒரு மனிதனைப் போல கூட தன்னை கருத முடியாது. ஒவ்வொருவரும் வெறிப்பிடித்தவராக மாற வேண்டியிருக்கும். அதை விவரிப்பதே கடினம். என் ஒட்டுமொத்த வாழ்வில் அந்தளவுக்கு நாங்கள் வெறுக்கப்படுவதை ஒருபோதும் உணர்ந்ததில்லை. குழந்தைகள் கூட எங்களை வெறுத்தன, நான் அவர்களைக் குறை கூறவில்லை. சொல்லப் போனால், நாங்கள் தானே அவர்களின் கிராமங்களை சின்னாபின்னமாக்கினோம்.”
“அங்கிருந்த பெரும் பணக்கார வியட்நாமியர்களும், பணத்தின் தேவைக்காக அலையும் ஒரு சில விபச்சாரிகளும் மட்டும் ஒருவேளை எங்களைக் கண்டு மகிழ்ந்திருக்கலாம். வியட்நாம் என்னை மிகவும் பாதித்தது. என்னுடன் இருந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள், பின்னர் கிராமத்தவரால் புதைக்கப்படுவதற்காக சாலையில் வியட்நாமியரின் சடலங்கள் கிடத்தப்பட்டிருந்தன. ஒவ்வொருவரும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று பல மாதங்களாக நான் திகைத்து போயிருந்தேன்.
“உண்மையிலேயே என்னை மனமுடைய வைத்த மற்றொரு விடயம் கென்ட் அரச பல்கலைக்கழகமாகும். நான்கு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான விகிதம் இருந்த அங்கே நான் நிறையவே சுற்றித் திரிந்தேன். பின்னர், நான் கடற்படையில் இருந்தபோது, நான்கு மாணவர்கள் தேசிய பாதுகாப்புப்படையால் கொல்லப்பட்டதைக் குறித்து கேள்விப்பட்டேன். நான் திருமணம் செய்து கொள்ளவிருந்த என் மனைவிக்கு கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் நண்பரை தெரிந்திருந்தது. அப்பெண் போராடவும் கூட இல்லை, வெறுமனே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தலையில் ஒரு தோட்டா பாய்ந்தது.
“நான் மிகவும் மனமுடைந்து போனேன். கடற்படையில் இருந்ததால், ஆர்ப்பாட்டங்களின் போது இராணுவம் பயன்படுத்த வேண்டிய சாதனங்கள் குறித்து நான் சிறிது அறிந்து வைத்திருந்தேன். யாரொருவரின் தைரியத்தையும் தகர்த்து விடக்கூடிய குமட்டல் வாயு எதற்காக அவர்கள் கண்டு பிடித்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தோட்டாக்களால் சுட்டனர்.
“சரி, கடற்படையில் இருந்து வந்த பின்னர் நான் லாட்ஸ்டவுனில் வேலைக்குத் திரும்பினேன். இது ஓர் உண்மையான அனுபவம். நான் நிலைமைகளை விவரிக்கத் தொடங்கினால், என்னால் நிறுத்தவே முடியாது.
“இன்று போலத்தான், நான் வேலையிடத்தில் தலையில் மோதி கொண்டேன், தலைச்சுற்ற தொடங்கியது. நான் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினேன், ஆகவே எங்களின் தொழிற்சாலை தொழிற்சங்க பிரதிநிதியை அழைத்தேன். இதற்கிடையே, ஒருசில வேலைகளைச் செய்ய முடியாமல் தவற விட்டிருந்தேன். அவர் இறுதியில் வந்தடைந்த போது, நான் என்னென்ன வேலைகளை அப்போது செய்யாமல் விட்டிருந்தேன் என்பதைத்தான் கவனித்தார்.
“அல்லது வர்ணம் பூசும் பிரிவை எடுத்துக் கொள்ளுங்கள். காற்றோட்டத்திற்கான கருவிகள் உடைந்து போன பின்னர் அதை செப்பனிட யாரும் அக்கறை எடுக்கவில்லை என்பதால், கோடைகாலத்தில், வெப்பம் சிலவேளைகளில் 100 டிகிரிகளுக்கும் கூடுதலாக அதிகரித்தது.
“உங்களுக்கு வேறுசில விடயங்களைக் கூறுகிறேன். நான் கழிவறைக்குச் செல்ல விரும்பினேன், ஆனால் வேலையிடத்தில் எனக்கு பதிலாக வேறொருவரை நிறுத்துவதற்கு என்னால் மேற்பார்வையாளரை அணுக முடியவில்லை. பாருங்கள், அவர் கவனத்தை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் மணியொலிப்பானை (horn) அவர்கள் செப்பனிட்டு வைத்திருக்கவில்லை.
“இங்கே வேறொரு விடயம் என்னை ஆத்திரமடைய செய்தது. ஒருவருக்கு ஒரு நாள் முன்கூட்டியே பணியிலிருந்து வீடுசெல்ல அனுமதிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. பின்னர், கடைசித் தருணத்தில், ஆலையில் போதுமானவர்கள் இல்லை என்று மேற்பார்வையாளர் தெரிவித்ததால் நிறுவனம் அவரை பலவந்தமாக ஆலையிலேயே நிறுத்தியது. ஆனால் வேலைக்கு ஆட்கள் இல்லையெனில் பின்னர் ஏன் அவர்கள் ஆட்களைக் குறைக்கிறார்கள்?
“இந்த எல்லா விடயங்களையும் சேர்த்துப் பாருங்கள், ஜிஎம் உங்களை சின்னாபின்னமாக்க முயன்று வருவதை உணர்வீர்கள். அவர்கள் இதை பல்வேறு வித்தியாசமான வழிகளில் செய்கிறார்கள். Cedar குளத்தை ஒட்டுமொத்தமாக ஒரு துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாற்றி அதை ஜிஎம் எவ்வாறு மாசுபடுத்தி வருகிறது என்பதன் மீது கல்லூரி அறிக்கை ஒன்றை ஒரு பெண் எழுதியது எனக்கு தெரியும். அப்பெண்ணின் தந்தை ஜிஎம் ஆலையில் பணி புரிகிறார் என்பதற்காக, அந்த அறிக்கை வெளியானால் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார் என்று நிறுவனம் அச்சுறுத்தியது. இவ்விதத்தில் தான் ஜிஎம் செயல்படுகிறது.
“விடயங்கள் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றன என்றால், நான் வேலைநிறுத்தம் செய்ய தயாராக இருக்கிறேன், ஆலையில் பெரும்பாலானவர்களும் அவ்விதத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் போராடுகையில் UAW தொழிற்சங்கம் உண்மையிலேயே எங்களை ஆதரிக்க விரும்புவதாக எங்களில் பெரும்பான்மையினர் கருதவில்லை. எப்போதும் எனது விடயங்களை நானே கவனித்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது, ஏனென்றால் என்னால் தொழிற்சங்கங்களை நம்ப முடியவில்லை. வழமையாக நான் எனது குறைகளை நானே தீர்த்துக் கொள்கிறேன். ஆனால் சில விடயங்களில் தனியாளாக உங்களால் போராட முடியாது.
“இந்த நபர் Godfrey (GMAD இன் இயக்குனர்) எங்களை நாசமாக்குவதற்காகவே இருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து ஆட்களை துன்புறுத்திக் கொண்டே இருந்தால் அங்கே மோதல் நடக்கும்.
“ஒரு நிஜமான போராட்டத்தில் நிக்சனுக்கு எதிராக தொழிலாளர்களை ஒழுங்கமைப்பது குறித்து நீங்கள் பேசுகையில் நீங்கள் என்ன அர்த்தத்தில் பேசுகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது என்றே நினைக்கிறேன். ஜிஎம் நிறுவனம் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது என்பதைக் காண்பது ஒன்றும் கடினமல்ல. நிறுவனம் விலையை உயர்த்துவதற்கு நிக்சன் விட்டுவிடுகிறார், ஆனால் எங்கள் கூலிகள் தான் உயராமல் உறைந்து போயுள்ளன.
“நான் மெக்கவர்னுக்கோ அல்லது நிக்சனுக்கோ வாக்களிக்கவில்லை. இந்த நபர்கள் எனது நலன்களுக்காக நிற்பார்கள் என்று என்னால் கருதமுடியவில்லை. அவர்கள் ஜிஎம் உடன் இருக்கிறார்கள். நான் ஒரு தொழிலாளர் கட்சிக்காக நிற்பேன் ஏனென்றால் அதனுடன் ஏதோவொன்றை என்னால் அடையாளம் காண முடிவதாக தெரிகிறது. ஆனால் நான் ஜனநாயகக் கட்சியையோ அல்லது குடியரசுக் கட்சியையோ சேர்ந்தவனில்லை என்பது மட்டும் நிச்சயம்.”