ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Modi government suppresses disastrous unemployment report

இந்தியா: மோடி அரசாங்கம் அழிவுகர வேலையின்மை அறிக்கையை மறைக்கிறது

By Kranti Kumara
13 March 2019

இந்திய வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில், 2017-18 இல் தான் மிக அதிகமாக உயர்ந்திருந்தது என ஒரு பிரபல்யமான இந்திய நாளிதழான Business Standard க்கு சமீபத்தில் கசிந்த ஒரு அரசாங்க ஆய்வு தெரியப்படுத்துகிறது.

அரசாங்க ஆய்வு நிறுவனமான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organization-NSSO) நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி ஆய்வு (Periodic Labour Force Survey-PLFS) என்பது, கடந்த நிதியாண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் சராசரியாக 6.1 சதவிகிதமாக இருந்தது என கண்டறிந்தது.

ஒரு நெருங்கிய கணக்கெடுப்பை நடத்திய PLFS இதை வெளிப்படுத்தியது போல் —இந்த எண்ணிக்கை இந்தியாவை சீர்குலைக்கும் வேலையின்மை நெருக்கடியை முற்றிலும் குறைத்து மதிப்பிடுகிறது— மேலும், குறிப்பிடும் வகையில் கூறுவதாயின், எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லாத உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் இந்த சமூக துயரத்தின் ஒரு தெளிவற்ற குறிப்பையே அது வழங்குகிறது.

இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதாக் கட்சியும் (BJP) இந்த ஆய்வை மறைக்கின்றனர், மேலும், டிசம்பர் இறுதியிலேயே, அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே, இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டிருந்தாலும் அதன் விபரங்களை பொதுமக்களுக்கு வெளியிட மறுத்துவிட்டார்கள்.

காரணம் என்னவென்றால், அரசாங்கம், “வளர்ச்சி” செய்திருப்பதாக கூறும் பொய்யை அந்த ஆய்வு அம்பலப்படுத்தி உள்ளது மேலும் அது இரக்கமற்ற பெருவணிக சார்பு கொள்கைகளினால் ஏற்படுத்தப்பட்ட மனித அழிவுகளையும் வெளிச்சத்தில் காண்பித்துள்ளது.

இந்த ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு பிராந்திய மட்டங்களில் தேசிய தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில், “உலகை பிரமிக்க வைக்கும்” வகையில் 7 சதவிகிதம் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கடந்து முன்னணியில் இருக்கின்றது என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை எது கீழறுத்தாலும் அது குறித்து தீவிரமாக உற்றுநோக்குகிறது.

இந்த கசிந்த ஆய்வுத் தரவுகள், 2008-09 பூகோள அளவிலான நிதிக் கரைப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியா அதிகரித்துவரும் வேலையின்மை நெருக்கடியை எதிர் கொண்டது என்றும் மேலும் வேலைகள் வழங்கல் மற்றும் மேம்படுத்தல் போன்ற வாக்குறுதிகளை வாரி வழங்கி பிஜேபி அமோக வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த 2014 தேர்தலுக்கு முந்தைய வருடங்களில் இந்த நெருக்கடி மிகவும் மோசமடைந்து இருந்தது என்றும் அது மேலும் பிஜேபி ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து இன்னும் பயங்கரமாக மோசமடைந்தது என்றும் எடுத்துக் காட்டுகிறது.

உழைக்கும் வயதுடையவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் தான் “வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்”

PLFS இன் மிக உறைக்கத்தக்க கண்டுபிடிப்புக்களில் ஒன்றாக இருப்பது தொழிலாளர் சக்தி பங்களிப்பு விகிதத்தில் (Labour Force Participation Rate-LFPR) ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சி தான், அதாவது, கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், வீதிகளில் கூவி விற்பவர்கள், கடை உரிமையாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஏனைய சுய-தொழில் செய்வோர் என ஏதோவொரு வகையில், பொருளாதார ரீதியாக செயல்பாட்டில் இருக்கும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இந்திய இளைஞர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை அது குறிப்பதாகிறது.

மிக சமீபத்திய PLFS இன்படி, 2004-05 இல் தொழிலாளர் சக்தி பங்களிப்பு விகிதம் 63.7 என இருந்ததில் இருந்து 2011-12 இல் 55.9 ஆக வீழ்ச்சி கண்டது, மேலும் அடுத்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து 6.1 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து 2017-18 இல் வெறும் 49.8 சதவிகிதமாக மாறியது.

இதன் அர்த்தம் என்னவென்றால், மொத்த உழைக்கும் வயதுடையோர் 860 மில்லியன் பேரில், 2017-18 இல் 428 மில்லியன் பேர் மட்டும் பொருளாதார ரீதியாக செயல்பாட்டில் இருந்தனர் என்பதாகிறது.

45 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் அதன் உச்சத்தை எட்டியதை PLFS புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டிய அதேவேளையில் பத்து மில்லியன் கணக்கான “மறைக்கப்பட்ட வேலையற்றோர்,” இருக்கின்றனர் என LPFR புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன, அதாவது, வேலை தேடுவதை முற்றிலுமாக கைவிட்டவர்கள் மற்றும் சொந்தக்காரர்களைச் சார்ந்திருப்பவர்கள், மற்றும் அல்லது தங்கள் உயிர் பிழைப்பிற்காக ஏமாற்றுபவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்கள் என வேலையற்றோர் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்படாமல் விடுப்பட்டவர்களைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன.

இது வெடிக்கும் தாக்கங்களைக் கொண்டுள்ளதோடு, ஏற்கனவே வேலையற்ற இளைஞர்கள் மற்றும் வறிய விவசாயிகள் மற்றும் நிலமற்ற கிராமப்புறத் தொழிலாளர்கள் போன்றவர்களின் பெரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது,

உயர்ந்து வரும் இளைஞர் வேலையின்மை

பிஜேபி அரசாங்கம் மறைத்த PLFS காட்டுவது என்னவென்றால், இளைஞர் வேலையின்மை 2011-12 க்குப் பின்னர் செங்குத்தாக உயர்ந்து “ஒட்டுமொத்த மக்கள் தொகையில்” காட்டிலும் “மிக அதிகமாக” இருக்கிறது. உதாரணமாக, 15-29 வயதுகுட்பட்ட கிராமப்புற ஆண்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் 2011-12 இல் 5 சதவிகிதமாக இருந்ததில் இருந்து மூன்று மடங்கு அதிகரித்து 2017-18 இல் 17.4 சதவிகிதமானது, மேலும், இளம் பெண்களின் வேலையின்மை விகிதம் 7.8 இல் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து 13.6 சதவிகிதமாக உயர்வு கண்டது.

அதே காலத்தில், நகர்ப்புற இளம் பெண்களின் வேலையின்மை விகிதம் 27.2 சதவிகிதத்தை எட்டிய அதேவேளை, நகர்ப்புற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் இரண்ட மடங்கு உயர்ந்தது.

2017-18 இல், ஒட்டுமொத்த நகர்ப்புற வேலையின்மை விகிதம், கிராமப்புற இந்தியாவில் நிலவும் 5.3 சதவிகிதத்தை விட மிக அதிகளவாக 7.8 சதவிகிதமாக இருந்தது.

இருப்பினும், இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் நம்ப முடியாதவையே. ஏனென்றால், “கிராமப்புற வேலை செய்வோர்” என கருதப்படும் பலரும் சிறு நிலப்பகுதிகளில் விவசாயம் செய்து வாழ்க்கையை நகர்த்த முயற்சிப்பவர்களாகவும், மற்றும் மேம்பட்ட விவசாயிகளிடம் தாமாகவே சென்று கூலி தொழிலாளர்களாக வேலை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆகவே கிராமப்புற இந்தியாவின் இத்தகைய துயரமான நிலைமைகளில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் மக்கள் அங்கிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

இந்தியாவில் இருக்கும் மற்றொரு உறைக்கத்தக்க அம்சமாக தொழிலாளர் சக்திக்குள் இருந்து வெளியேறும் - மிகச்சரியாக சொல்வதானால் வெளியேற்றப்படும் - பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக உள்ளது. 2005-06 இல், 15 முதல் 49 வயதிற்குட்பட்ட 49 சதவிகித பெண்கள் 12 மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 10 வருடங்களுக்குப் பின்னர் வெறும் 31 சதவிகிதமாக அது இருந்தது.

90 சதவிகிதத்திற்கு அதிகமானோர் முறைசாரா துறையில் வேலை செய்கின்றனர்

சென்ற NSSO ஆய்வின் படி, வேலைவாய்ப்பு, 2011-12 இல் இருந்து, சுய தொழில் செய்பவர்கள் – பத்து மில்லியன் கணக்கான வீதியில் கூவி விற்பனை செய்வோர் மற்றும் சிறு வியாபாரிகளையும் உள்ளடக்கிய இந்த பிரிவு - அல்லது சிறியளவிலான விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் என ஏதோவொன்றில் 92 சதவிகிதத்தினர் வேலையில் இருந்தனர்.

இதன் அர்த்தம் என்னவென்றால், பெரியளவிலான தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை உள்ளடக்கிய முறைசார் பொருளாதாரம் என்றழைக்கப்படுவதில் 35 மில்லியனுக்கு குறைவான பேர் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர். முறைசார் துறை என்பது குறைந்தபட்ச அரசாங்க தொழிலாளர் தரங்களுக்கு உட்பட்டதாக இருக்கும், மேலும் முறைசார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும்தான் குறைந்தபட்ச நலன்கள் மற்றும் முறைபடுத்தப்பட்ட உத்தரவாதமுள்ள ஊதியம் பெறுபவர்களாகவும் இருக்கின்றனர். ஏனையோர் முறைசாரா பொருளாதாரத்தில் வேலை செய்கின்றனர், அவர்கள் வறிய ஊதியங்களை பெறுவதுடன், ஒழுங்கற்ற மற்றும் பெரும்பாலும் அபாயகரமான நிலைமைகளில், வாரத்தின் 7 நாட்களுக்கும் வேலை செய்கின்றனர்.

கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் சுமார் 900 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானவர்கள் பரிதாபகரமான வறுமையில் வாழ்கின்றனர். வருடத்திற்கு ஆயிரக்கணக்கில் சிறிய வறிய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு நீடித்த மற்றும் “சாதாரண” நிகழ்வாக உள்ளது.

ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களில் இருந்து ஒருவருக்கு வருடாந்திரம் 100 நாட்களுக்கு திறனற்ற சரீர வேலைக்கு உத்திரவாதம் அளிப்பதான அரசாங்கத்தின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் (National Rural Employment Guarantee Scheme-NREGS), 2014 இல் மோடியும் அவரது பிஜேபி யும் ஆட்சிக்கு வந்த பின்னர் நிதியின்றி திண்டாடுகிறது. பிஜேபி யும் அதன் பெருவணிக ஆதரவாளர்களும் இதை வறுமையை ஒழிப்பதற்கான சாரமற்ற முயற்சியாகவும் – வழங்கப்படும் தினக் கூலிகள் 160 முதல் 260 ரூபாய் (2.20 டாலர் முதல் 3.60 டாலர் வரை இருக்கும்) வரை இருக்கும் - நிதி வீணாவதாகவும் கருதியதுடன், கிராமப்புற உழைப்பு சந்தையை அது “சிதைக்கிறது”, அதாவது கிராமப்புற கூலிகளை செயற்கையாக உயர்த்துகிறது! என இகழ்ந்துரைக்கின்றனர்.

கடந்த பல வருடங்களாக, இந்த NREGS திட்டம் நிதியாண்டின் பாதி காலம் வரை நிதி ஒதுக்கீடுகள் வரப்பெறாமலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, கூலிகள் வழங்குவதில் பல வாரங்கள் மற்றும் பல மாதங்கள் வரையிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. சென்ற ஆண்டில், NREGS தொழிலாளர்களில் பெருமளவாக மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை. அதன் விளைவாக, இந்த திட்டத்தில் இருந்து அதிகரித்தளவில் தொழிலாளர்கள் வேலையை விட்டு விலகினர்.

அரசாங்கத்தை விட சில வழிகளில் புள்ளிவிபரங்களை சிறப்பாக சேகரிக்கும் ஒரு தனியார் வணிக தகவல் நிறுவனமான, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitory Indian Economy-CMIE) படி, மிக சமீபத்திய PLFS ஆய்வில் சித்தரிக்கப்பட்டதை விட மிக மோசமாகவே வேலையின்மை நெருக்கடி உள்ளது. CMIE, இந்தியாவின் தற்போதைய வேலையின்மை விகிதம் 8.6 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடுவதுடன், கடந்த ஆண்டு 11 மில்லியன் வேலைகளை இந்திய பொருளாதாரம் இழந்துவிட்டது எனவும் தெரிவிக்கிறது.

டிசம்பரில், அனைத்து இந்திய உற்பத்தியாளர்களின் அமைப்பு (All India Manufacturers’ Organization-AIMO), 2016 க்குப் பின்னர் இந்திய உற்பத்தித் துறை 3.5 மில்லியன் வேலைகளை இழந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இது, இந்திய நாணயத்தின் 86 சதவிகிதம் 2016 பிற்பகுதியில் செல்லாததாக்கப்பட்டது மற்றும் 2017 இல் பின்னடைந்த தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax-GST) அறிமுகப்படுத்தப்பட்டது என்ற இரண்டு அதிர்ச்சியூட்டும் விடயங்களால் இந்த இழப்புக்கள் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இத்தகைய அறிக்கைகள் மீதான மோடி அரசாங்கத்தின் பதிலிறுப்பு என்பது மவுனம் சாதிப்பதாக அல்லது பழிகூறுவதாக மட்டுமே இருந்து வருகிறது. மிக சமீபத்திய PLFS கண்டுபிடிப்புக்களை சுருங்க விவரித்ததான Business Standard கட்டுரைக்கு பதிலிறுப்பாக, அது அரசியல் ரீதியாக நோக்கம் கொண்ட அவதூறு பிரச்சாரமாக உள்ளது என கண்டிக்கிறது.

திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவுக்கான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசாங்கத்திற்கு சொந்தமான NSSO இன் கண்டுபிடிப்புகளை பின்வருமாறு அபத்தமாக்குகிறார்: “இந்த தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை. ஏதோ சிலர் புனைந்து சில அறிக்கைகளை வெளிவிடும் நிலையில், அதில் அவர்கள் தங்களது கற்பனையை புகுத்தியிருப்பார்கள் என்பதால், அதற்கு என்னிடம் எந்தவொரு பதிலும் இல்லை.”

PLFS சித்தரித்த இருள்சூழ்ந்த புள்ளிவிபரங்களை எதிர்கொள்ள நியமிக்கப்பட்டதான, NITI Aayog என்ற மற்றொரு அரசாங்க அமைப்பு, வலைப்பின்னலாக பலரை இணைக்கும் வேலை உருவாக்கத்திற்கு நிரூபணமாக 2014 க்குப் பின்னர் ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்காக 3 மில்லியன் புதிய வாடகை ஓட்டுநர்கள் உருவானதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த மிகப்பரந்தளவிலான வேலைவாய்ப்பின்மை குறித்த அப்பட்டமான யதார்த்தத்தை மூடிமறைப்பதற்கு மோடியும் இந்து மேலாதிக்கவாத பிஜேபி யும் எப்படி முயற்சி செய்தாலும், அவ்ர்களது பதவிக்காலத்திலும் சரி மற்றும் 2004-2014 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அடுத்த கட்ட ஆட்சியிலும் சரி எண்ணிக்கை மற்றும் தரம் இரண்டு வகையிலும் நடந்த வேலை இழப்புக்களில் இந்திய பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், புதிதாக துளிர்விட்ட 140 பில்லியனர்களும் உட்பட இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கின் செல்வ வளம் அதிகரித்துள்ளது. 2015 இல், இந்தியாவின் உச்ச 1 சதவிகிதத்தினர் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 53 சதவிகிதத்தை சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். அதுவே 2017 இல் 73 சதவிகிதமாக உயர்ந்தது, அதன் அர்த்தம் எஞ்சிய 27 சதவிகித செல்வத்தை ஏனைய 99 சதவிகிதத்தினர் சமமற்ற வகையில் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதாகிறது.

வரவிருக்கும் தேர்தலுக்குப் பின்னர் எந்தவொரு கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி என எது இந்திய அரசாங்கத்தை அமைத்தாலும், “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளை முன்னெடுக்க பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி முதல் ஸ்ராலினிச சிபிஎம் வரை உறுதிபூண்டிருப்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் கொடிய வறுமை என்பது அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து இருக்கும் என்பது மட்டும் உண்மை.