Print Version|Feedback
Nuclear-armed India, Pakistan on brink of all-out war
அணுவாயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முழுப் போருக்கான விளிம்பில் நிற்கின்றன
By K. Ratnayake
28 February 2019
செவ்வாயன்று, இந்திய விமானப் படை, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஆழமாக இலக்கு வைத்து குண்டுவீசி தாக்கிய பின்னர், நேற்று ஆசியாவில் தொடர்ந்து முழுப் போர் வெடிப்பதற்கான அபாயம் நிலவியது. மேலும் நேற்று, மோதல் அதிகரித்த நிலையில், இந்தியாவுக்குள் தானும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தானும் அறிவித்தது.
பாகிஸ்தான் மற்றும் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control-LoC) பகுதி எங்கிலும் நடத்தப்படும் கடும் குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் விமானப் படைகளும் மோதிக் கொண்டதுடன், பல போர் விமானங்களையும் இழந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், அதன் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமான எல்லைக்குள் இருந்து இந்தியாவுக்குள்ளே “இராணுவமல்லாத இலக்குகளை” தாக்கியதாக ஒரு அறிக்கை வெளியிட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என்று உறுதிபூண்டு, இன்னும் கூடுதலான போர் விரிவாக்கத்திற்கும் பாகிஸ்தான் “முழுமையாக தயாராக” உள்ளது என்று அறிவித்திருந்த போதிலும், இது இந்திய தாக்குதலுக்கான “ஒரு பதிலடி” இல்லை என்பதாக சேர்த்து அது அறிவித்தது.
பாகிஸ்தானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் (Asif Ghafoor), இரண்டு இந்திய MiG-21 ரக போர் விமானங்கள் “பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவியபோது அவை சுட்டு வீழ்த்தப்பட்டன,” என்றும், அதன் இரண்டு விமானிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்க தொடங்கிய பின்னர், பாகிஸ்தான் விமானப்படையை (Pakistan Air Force-PAF) சேர்ந்த ஒரு F-16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்று கூறினார். மேலும், பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள விமானி இந்திய விமானப்படை அதிகாரியான அபிநந்தன் வர்த்தமான் என அடையாளம் காணப்பட்டார் என்பதுடன், அவரை காவலில் வைத்திருக்கும் ஒரு படத்தையும் பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டனர்.
மோதல் மேலும் தொடர்ந்து விஸ்தரிப்பதை அவர்கள் எதிர்பார்த்திருப்பதற்கான ஒரு அறிகுறியாக, இரு நாடுகளும் விமான நிலையங்களை மூடுவதற்கும், வணிக விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் அறிவித்துள்ளன. பாகிஸ்தான் அதன் விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது என்பதுடன், இந்திய எல்லைக்கு அருகில் உள்ள நகரங்களில் அமைந்துள்ள மூன்று விமான நிலையங்களை காலவரையறையின்றி மூடியுள்ளது. மேலும், கராச்சி, பெஷாவர் மற்றும் லாகூர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களின் அனைத்து விமானங்களையும் காலவரையறையின்றி தற்காலிகமாக அது நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல, இந்தியாவும், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில விமான நிலையங்களின் அனைத்து விமானங்களையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.
சீனாவுக்கு எதிராக ஒரு இராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியிலான கூட்டாளியாக இந்தியாவை மேம்படுத்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக முயன்று வரும் வாஷிங்டன், இந்திய தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவளித்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. இது மனிதகுலத்திற்கு பெரும் ஆபத்தை முன்வைக்கிறது. இந்த மோதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரு அணுவாயுதத் தாக்குதலாக தொடர்ந்து வெடிப்புறுமானால், அதில் நூறு மில்லியன் கணக்கில் மக்கள் பலியாவர் என்பதுடன், அத்தகைய மோதலே ஒரு பூகோள அளவிலான பெரும் மோதலாக உருவெடுக்கும் வகையில், இரு நாடுகளின் முக்கிய கூட்டாளிகளான அமெரிக்காவையும் சீனாவையும் எளிதாக உள்ளிழுக்கக்கூடும்.
சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறும் ஒரு நடவடிக்கையான செவ்வாய்க்கிழமை குண்டுவீச்சுத் தாக்குதலை சட்டபூர்வமாக்கும் ஒரு அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோ நேற்று வெளியிட்டார். இந்திய தாக்குதலை பொம்பியோ விமர்சிக்கவில்லை. மாறாக, “பிப்ரவரி 26 இந்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து” “எங்களது நெருங்கிய பாதுகாப்பு கூட்டணி பற்றி அவர்களுக்கு வலியுறுத்தவும், மேலும் இந்த பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் தக்க வைத்துக் கொள்ளும் இலட்சியம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்தும்” இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் அவர் கலந்தாலோசித்ததாகக் கூறினார்.
மறுபுறம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியுடன் பேசுகையில், “இராணுவ நடவடிக்கைகளை தவிர்ப்பதன் மூலம் தற்போதைய பதட்டங்களை தணிப்பதற்கு முன்னுரிமை வழங்கவும், மேலும் பாகிஸ்தான் அதன் மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக விரைவாக அரத்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்” அறிவுறுத்தியதை பொம்பியோ அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அனைத்து அரசாங்கங்களும் இந்த மோதலை எதிர்ப்பதாக வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டு வரும் அதேவேளை, வாஷிங்டன், புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத் போன்றவை மோதலை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், “இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் இருக்கவும், எந்தவொரு சூழலிலும் போர் வெடிப்பதை தவிர்க்கவும் அவற்றை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம் என்பதாக இரு அமைச்சர்களிடமும்” அவர் பேசியுள்ளதாக பொம்பியோ தெரிவித்தார்.
சீனாவில், Wuzhen நகரில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீன மற்றும் ரஷ்ய அதிகாரிகளை சந்தித்துப் பேசுகையில், “இந்த நிலைமை மேலும் வெடிப்புறுவதை” தவிர்க்கவே இந்தியா விரும்புகிறது எனத் தெரிவித்தார். இருப்பினும், இந்திய அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு பெய்ஜிங்கும் மாஸ்கோவும் தலைவணங்கியதுடன், காஷ்மீரில், புல்வாமாவில் பிப்ரவரி 14 அன்று இந்தியப் படைகள் கொடூரமாக குண்டுவீசி தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தானை குற்றம்சாட்டிய பின்னர், பாகிஸ்தானை குண்டுவீசி தாக்குவதற்கு புது தில்லி வழங்கும் சாக்குப்போக்காக “பயங்கரவாத உற்பத்தித் தளங்களை வேரோடு அழிக்க” முனையும் அவர்களின் நகர்வுகளையும் அங்கீகரித்தன.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் இவ்வாறு தெரிவித்தார்: “சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்றும், மேலும் இந்த பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரப்பாட்டையும் உறுதிபடுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”
தவறான கணிப்பு மற்றும் உலகப் போர் மூளும் அபாயம் பற்றி எச்சரித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், பாகிஸ்தான் பிரதமரிடம் இருந்து மிக நேரடியான எச்சரிக்கை வெளிவந்தது. “அனைத்து போர்களும் தவறாக கணிக்கப்பட்டவையே, அவர்கள் எங்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. முதலாம் உலகப் போர் ஒரே வாரத்தில் முடிவுறும் என்று கூறப்பட்டது, ஆனால் அதற்கு ஆறு ஆண்டுகள் பிடித்தன (sic)… கடந்த 17 ஆண்டுகளாக பயங்கரவாதம் மீதான போர் என்பதை அமெரிக்கா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று அறிவித்தார். இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் அணுவாயுதங்களைக் கொண்டுள்ளதை மறைமுகமாக நினைவூட்டி, கான் இவ்வாறு தெரிவித்தார்: “போர் வெடிக்குமானால், அது எனது கட்டுப்பாட்டிலோ அல்லது மோடியின் கட்டுப்பாட்டிலோ வெகு நாட்களுக்கு நீடிக்காது.”
இருப்பினும், அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களும் சரி, கானும் சரி, அணுவாயுதப் போர் அபாயம் குறித்து மூடிமறைக்கப்பட்ட குறிப்புக்களை கூறினாலும் கூட, மோதலை விஸ்தரிப்பதையே அவர்கள் தொடர்கின்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளாலும், தெற்காசிய முதலாளித்துவ வர்க்கத்தினாலும் தூண்டப்பட்டதான ஒரு அணுசக்தி பேரழிவின் உடனடி ஆபத்தைப் பற்றி, ஆசியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான உழைக்கும் மக்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்ற இந்த சூழ்நிலை தான் பெரும் ஆபத்தாக தற்போது உள்ளது. யுரேசியாவை ஆதிக்கம் செலுத்த முனையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல தசாப்த காலம் நீண்ட போர் உந்துதல், தற்போது சீனாவை இலக்கு வைத்துள்ளது என்பது, இந்திய துணைக்கண்டத்தின் முதலாளித்துவ வர்க்கங்களின் வரலாற்று திவால் தன்மையுடன் இணைந்தே வருகிறது.
பாகிஸ்தான் உடனான ஒரு பேரழிவுகர போரை நோக்கியே இந்தியா சுழன்று வருவதானது, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஒப்புதலுடன், பிரிட்டிஷ் காலனித்துவம், 1947 இல், இந்து பெரும்பான்மை இந்தியா மற்றும் முஸ்லீம் பெரும்பான்மை பாகிஸ்தான் இடையே உருவாக்கியதான இந்திய துணைக்கண்டத்தின் வகுப்புவாத பிரிவினையில் வேரூன்றியுள்ளது. தேசிய வழிகளில் தொழிலாளர்களை பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கும் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான புரட்சி இரத்தகளரியில் மூழ்கடிக்கப்பட இந்த பிரிவினை பங்களித்தது. 70 ஆண்டுகளுக்கும் மேலான பின்னரும், பல மில்லியன் உயிர்களை விலையாக கொடுத்த இந்திய-பாகிஸ்தானிய போர்களை மூன்று முறை வெடிப்புறச் செய்த, இந்த மோதல்கள், தற்போது ஒரு உலகப் போரை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்திய மற்றும் பாகிஸ்தானிய ஆட்சிகள் இரண்டுமே தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் மிகவும் செல்வாக்கற்று இருக்கின்றன என்பதுடன், குறிப்பாக ஏப்ரல்-மே 2019 இந்திய பொது தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், போரில் தங்களுக்கு பின்னால் அணிதிரட்டுவதற்காக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போர் வெறியை அவர்கள் தூண்டி வருகின்றனர்.
புதன்கிழமை பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு அவசர கூட்டத்தை நடத்தினார். அவர்களது விவாதங்களின் உள்ளடக்கங்கள் பற்றிய அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. PTI ஊடக செய்தியின் படி, மோடி, செவ்வாய் இரவு முழுவதுமாக பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில் இந்திய விமானப்படை நடத்தவிருந்த தாக்குதலை கண்காணித்துக் கொண்டிருந்தார் என்பதும், குண்டுவீச்சு தாக்குதல் நடந்து முடிந்த பின்னரே ஓய்வாக இருந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும், அதனைத் தொடர்ந்து, அடுத்த நகர்வுகள் பற்றி திட்டமிட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டங்களை நடத்தி, “அடுத்த நாளுக்கான வேலை அட்டவணையில் அவர் ஈடுபட்டார்” என்பதும் தெரியவந்தது.
பாகிஸ்தான் மீதான செவ்வாய்க்கிழமை தாக்குதலைத் தொடர்ந்து, நாடெங்கிலும் மோடியின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் (BJP) மற்றும் அதன் இந்து தீவிரவாத கூட்டணி கட்சிகளும் இணைந்து பேரணிகளை ஒழுங்கமைத்துள்ளன.
“எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை” வாஷிங்டன் அங்கீகரிக்கிறது என புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் விடுத்த அறிக்கையால் அவர்கள் ஊக்கமடைந்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தானிலும் போர் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று, பாகிஸ்தானின் Dawn செய்தியிதழ், இந்தியப் படையினரை வீழ்த்திய பின்னர், “மோதலில் வெற்றி பெற்ற ஒரு மனநிலை பாகிஸ்தானின் செய்தி நிலையங்கள் மற்றும் இணைய தளம் எங்கிலும் பரவியது” என செய்தி வெளியிட்டது.
இந்த பெரும் போர் அபாயம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்கு, சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் எனும் அதன் அறிக்கையில் முன்கூட்டி தெரிவித்ததை நிரூபிக்கிறது. எனவே, போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்து, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் ICFI ஐ கட்டியெழுப்புவது மட்டுமே இதற்கான ஒரே வழியாகும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டின் அனைத்து அரசியல் ஸ்தாபகங்களும் இந்த மோதலுடன் முற்றிலும் தொடர்புபட்டுள்ளன. பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள், கான் மற்றும் இராணுவத்தின் பின்னால் அணிவகுக்கின்ற அதேவேளையில், இந்தியாவில் இரண்டு ஸ்ராலினிச கட்சிகள் உட்பட, 21 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஒரு குழுவும் போர் உந்துதலுக்கு ஆதரவளிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினரின் “வீரத்தையும் தீரத்தையும்” பாராட்டி நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நமது ஜனநாயகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட நடைமுறையின் படி” ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுக்கவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். மோடியின் போரின் “அரசியல்மயமாக்கல்” பற்றி அவர்கள் புகார் கூறினர், என்றாலும் போர் காய்ச்சலை அவர் தூண்டி வருவதில் தங்களையும் சேர்த்து கொள்ள கோரினர். அவர்கள் “பாகிஸ்தானின் துரதிர்ஷ்டமான செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், நமது காணாமல் போன விமானியின் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தனர்,” மேலும், “இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் மீதும் நாடு நம்பிக்கை வைக்கும் வகையில் அரசாங்கம் செயல்பட வேண்டும்” என்றும் கோருகின்றனர்.
எனவே, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளில் இருந்தும் ஒரு முறிவை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து ஆதரவைத் திரட்டி, தெற்காசியாவின் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான தங்களது சுயாதீனமான அரசியல் போராட்டத்தை உழைக்கும் மக்களின் தலைமையில் அபிவிருத்தி காண்பது மட்டுமே தொழிலாளர்கள் முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழியாகும். இந்த திட்டத்திற்காக ICFI மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறது, எனவே, இந்த போராட்டத்திற்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் திரும்பவும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலுமான ICFI இன் பிரிவுகளை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் போராடவும் அவர்களை அது வலியுறுத்துகிறது.