Print Version|Feedback
දෙනියාය වත්තේ කම්කරුවන් මත ආදායම් බෙදාගැනීමේ ක්රමය පටවයි
இலங்கை: தெனியாய தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது வருமான பகிர்வு முறை சுமத்தப்பட்டுள்ளது
Nandana Nannethi and A. Malalagama
3 February 2019
தலவாக்கலை பெருந்தோட்டத்திற்குச் சொந்தமான, இலங்கையின் தெற்கில் உள்ள தெனியாய தோட்டத்தில், "வருமானப் பகிர்வு முறை" ஜனவரி 7 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையின் கீழ், சுமார் ஆயிரம் தேயிலைச் செடிகள் அடங்கிய காணித் துண்டு ஒன்று தொழிலாளியிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றில் புல் பிடுங்குதல், கவாத்து வெட்டுதல், உரம் போடுதல் மற்றும் மருந்து அடித்தல் போன்ற சகல பரமாரிப்புகளும் மற்றும் கொழுந்து பறிக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. தொழிலாளியினதும் அவரது குடும்பத்தினதும் உழைப்பு மற்றும் செலவில் இந்த பராமரிப்புகள் நடந்த பின்னர், பறிக்கப்படும் கொழுந்தின் வருமானத்தில் ஒரு பகுதி தொழிலாளிக்கு வழங்கப்படும்.
தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள செழிப்பற்ற தேயிலைச் செடிகள்
பழைய குத்தகை விவசாய முறைக்கு சமமான இந்த முறையின் கீழ், தேயிலைக் கொழுந்துக்கான விலையை கம்பனியே நிர்ணயிக்கின்றது. அதேவேளை, கம்பனியின் இலாபம் பாதுகாக்கப்படும் விதத்திலும், நட்டத்தை தொழிலாள குடும்பத்தின் மீது சுமத்தக் கூடியவாறுமே விலை நிர்ணயிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி, தொழிலாளர்கள் இதுவரை பெற்றுவந்த ஊழியர் சேமலாப நிதி மற்றும் அது போன்ற ஏனைய நன்மைகளும் இந்த புதிய முறையின் கீழ் அகற்றப்படுவதோடு, குடும்பங்களை துண்டு துண்டாக பிரித்து விடுவதன் மூலம் தொழிலாளர்களின் வர்க்க ஐக்கியமும் சிதறடிக்கப்படுகின்றது.
தெனியாய தோட்டத்தில் 17 தொழிலாளர்களுக்கு இவ்வாறு தேயிலைச் செடிகளை ஒப்படைத்துள்ள தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பெனி, தொழிலாளர்கள் அதைக் கடைப்பிடிக்காவிட்டால், வெளியாருக்கு நிலங்களை ஒப்படைப்பதாக தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளது.
தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனியின் தலைவர் மொஹான் பண்டிதரத்னவால் முன் வைக்கப்பட்டுள்ள கம்பனியின் கடந்த ஆண்டு நிதி அறிக்கையில், "2018-2019 இல் முன்வைக்கப்படும் ஊதிய கோரிக்கை, எதிர்காலத்தில் தொழில் துறையால் தாங்கக் கூடியவாறும் நிதி ரீதியில் இட்டு நிரப்பக் கூடியதாகவும் இருக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தொழிற்துறையின் இருப்புக்காக, "இன்றைக்கு பொருத்தமான விதத்தில் தொழிலாளர்களின் மனப்பான்மையை மாற்றவும், நாட்டில் நிலவும் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு நடப்பு சம்பள முறை பொறுத்தமற்றதாக இருப்பதால், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் தோட்ட குடியிருப்பாளர்கள் மத்தியில் வருமான பங்கீடு பொறிமுறையை ஊக்குவிப்பதற்கு தொழிற்சங்க தலைவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
கம்பனிகளின் இலாப நலன்களுக்காக தொழிலாளர்களுக்கு எதிராக தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படும் தொழிற்சங்கங்கள், வருமானத்தை பங்கிடும் முறையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்காக தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வந்துள்ளன. ஜனவரி 28 அன்று கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட புதிய "கூட்டு ஒப்பந்தத்தில்" இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தனது ஆதரவை வழங்குவதற்காக தொழிற்சங்கங்கள் உடன்பட்டுள்ளதற்கு அதிக வாய்ப்புள்ளது.
உக்கிரமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார சரிவின் மத்தியில், சர்வதேச தேயிலை சந்தை சுருங்கி வருவதால், பன்னாட்டு தேயிலை நிறுவனங்கள், தமது உயர்ந்த இலாபங்களை தக்கவைத்துக்கொள்ள, உலகம் முழுவதிலும் தேயிலை தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதற்கு முயல்கின்றன. இதற்கு பிரதிபலிப்பாக, இலங்கையில் போலவே உலக சந்தைக்கு தேயிலை விநியோகிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை பாதுகாப்பதற்காக போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளில் ஒன்றான கென்யாவில் கொழுந்து பறிக்கும் ஒரு தொழிலாளியின் நாள் சம்பளம், 275 ஷிலிங் (2.66 டாலர்) ஆக இருப்பதோடு, 2018 ஏப்ரலில் அந்த தொழிலாளர்கள் 30 சதவீத ஊதிய உயர்வை கோரினர். அந்த கோரிக்கையை நிராகரித்த அந்த நாட்டின் மேன் முறையீட்டு நீதிமன்றம், இது வரை 33 கிலோகிராமாக இருந்த கொழுந்து பறிக்கும் இலக்கை, 45 கிலோவாக உயர்த்திய அதேவேளை, சம்பள அதிகரிப்பை 16 சதவீதத்துக்கு மட்டுப்படுத்தியது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்டில், 370 தோட்டங்களில், 169 இந்திய ரூபா (2.46 டாலர்) தினசரி ஊதியம் பெறும் 400,000 தொழிலாளர்கள் 3 சதவீத சம்பள உயர்வு கோரி மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பங்களாதேஷில் 2015 இல் இருந்து பெறும் 85 டகா (1 டொலர்) நாள் சம்பளத்தை 230 டகாவாக அதிகரிக்குமாறு கோரி 130,000 தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தனர்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்பது நாள் வேலைநிறுத்தம் செய்து கோரிய 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தை தொடர்ந்தும் நிராகரித்த முதலாளிகள், நடப்பில் உள்ள 500 ரூபா தினசரி ஊதியத்தை 100 ரூபாவால் மட்டுமே அதிகரிக்க முடியும் என கடுமையாக கூறி வந்தனர். இறுதியாக, 200 ரூபா கொடுப்பனவை வெட்டிக்கொண்டே தினசரி அடிப்படை ஊதியம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதில் திருப்தியடையாத தோட்ட உரிமையாளர் சங்கம் தொழிலாளரை சுரண்டுவதை உக்கிரமாக்கும் வருமான பகிர்வு முறையை தோட்டப்புறங்கள் பூராவும் அமுல்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றது.
தெனியாய பிரதேசத்தில் உள்ள என்ஸல் தோட்டத்தில் 2015 முதல் இந்த முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சிவப்பு சீனா எனப்படும் பிரிவைத் தவிர ஏனைய ஒன்பது பிரிவுகளிலும், இந்த வருவாய் பகிர்வு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுனாஜினி குடும்பமும் அயலவர்களும்
செழிப்பற்ற தேயிலைச் செடிகளே இவ்வாறு தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகள் பழமையான தேயிலைச் செடிகளில் விளைச்சல் குறைவாகும். ஆரம்பத்தில் இருந்தே அரை ஏக்கர் காணியில் செடிகளைப் பராமரித்து வரும் கணேசனும் அவரது மனைவியும், கொழுந்து அதிகம் இருக்கும் காலத்தில் 30,000 ரூபாய்க்கு கொழுந்து பறித்தனர். இருப்பினும், பல மாதங்கள் உரம் மற்றும் மருந்துகளுக்கான செலவுகள் கழிக்கப்பட்ட பின்னர், 120 ரூபா மட்டுமே மீதம் இருப்பதாக அவர் கூறினார்.
இன்னொரு பெண் தொழிலாளியான சுனாஜினி, தனது குடும்பத்தில் மூன்று பேர் உழைத்தாலும் ஜீவன் அற்ற தேயிலைச் செடிகளில் மாத வருமானம் 3,000 ரூபாவுக்கு மேல் எடுக்க முடியாது என்றார். கொழுந்தை அதிகரிப்பதற்காக மாதா மாதம் உரம் போடுமாறு நிர்வாகிகள் கட்டளையிட்டுள்ளனர்.
வெளியில் சிறு தேயிலை தோட்டங்களில் இருந்து கொழுந்து ஒரு கிலோ 90 முதல் 100 ரூபா வரை கொள்வனவு செய்தாலும், இந்த தொழிலாளர்களிடம் இருந்து கிலோ 39 அல்லது 42 ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்படுகின்றது. அந்த விலையை 62 ரூபா வரை அதிகரிக்குமாறும் உரம் போடுவதை இரண்டு வாரங்களுக்கு விரிவாக்குமாறும் மற்றும் பல மாதங்களுக்கான உரச் செலவுகளை ஒரே நேரத்தில் வெட்டிக்கொள்வதை நிறுத்தி அந்தந்த மாதங்களில் அதை வெட்டிக்கொள்ளுமாறும் கோரி, கடந்த வேலைநிறுத்தத்திலும் இந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள்.
தனக்கு சொந்தமான 16 தோட்டங்களில் 6,680 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனி, கடந்த வருடத்தில் 617 மில்லியன் ரூபா இலாபத்தை பெற்றுள்ளது.
தேயிலை உற்பத்திக்கு நூற்றுக்கு 65-70 சதவீதம் செலவிடுவதாக கூறும் கம்பனிகளுக்கு, உலக சந்தையில் போட்டிக்கு கவர்ச்சிகரமான விலையை முன்வைத்து முகம் கொடுப்பதற்காக, அந்த உழைப்புச் செலவை மேலும் வெட்டிக் குறைப்பது அவசியமாகின்றது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் குடும்ப வருமானம் மற்றும் செலவு ஆய்வின் படி, தோட்டத் தொழிலாளர்களின் சராசரி மாத வருமானம் ரூபா 8,566 ஆகும். அதை தேசிய சராசரி வருமானம் 16,377 ரூபா உடன் ஒப்பிடும் போது, இது கிட்டத்தட்ட அரைவாசியே ஆகும். இலங்கையின் அதிவறிய 40 சதவீதத்தினரில் 64 சதவீதத்தினர் தோட்டத் தொழிலாளர்களே என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
வறுமையால் நசுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் ஒரு வேளை உணவு ஒரு காலமும் பூரண ஆகாரமாக இருந்ததில்லை. அவர்கள் ஒரு மரக்கறியுடன் கோதுமை மாவில் செய்யப்பட்ட ரொட்டி அல்லது சோறு சாப்பிடுகிறார்கள்.
எட்டு பிள்ளைகளைக் கொண்ட தந்தை பெஞ்சமின், காலை மற்றும் இரவு சாப்பாட்டுடன் மட்டுப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தொழிலாள குடும்பங்கள் அதிக புரதம் உள்ள இறைச்சி உணவுகளை உட்கொள்ளாமை அவர்கள் மத்தியில் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதாக அறியப்பட்டுள்ளது.
தோட்டக் கம்பனி தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி கூட செய்து கொடுக்கவில்லை. சமீபத்திய அறிக்கைகள் தோட்ட மக்களில் 57 வீதமானவர்களுக்கு சுத்தமான நீர் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.
உடைந்த லயின் அறைக்கு அருகில் தேவானி
தொழிலாளர்களின் இருப்பிடமான லயன் அறைகளின் பராமரிப்பை கம்பனிகள் கைவிட்டுள்ளதனால், தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதற்காகவும் ஒதுக்க வேண்டியுள்ளது. 2004 வெள்ளத்தில் தமது வீடுகள் மூழ்கிப் போனதாகவும் அதை திருத்தி தர நடவடிக்கைகளை எடுக்குமாறு எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும், கம்பனி அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை என்றும் தெனியாய என்ஸால் தோட்டத்தில் ஓய்வுபெற்ற டி. தேவாணி சுட்டிக்காட்டினார். இரண்டு லயன் அறைகள் முழுமையாக உடைந்து போயுள்ளன. அங்கு மலசல கூடங்களைக் கூட ஒரு தொண்டு நிறுவனமே செய்து கொடுத்துள்ளது.
பிள்ளைகளின் கல்வியை பராமரிக்க போதுமான வருமானம் இல்லாத காரணத்தால், அவர்கள் உயர் கல்வியைப் பெற முன்னரே பாடசாலையை விட்டு விலகி விடுகின்றனர். இதற்கிடையில், அரசாங்க செலவினங்களை வெட்டுவதன் விளைவாக, பள்ளிகளுக்கான பராமரிப்பு செலவீனங்கள், பெற்றோர் மீது தினிக்கப்படுகின்றன. இரு பிள்ளைகளையும் வேறு பாடசாலையில் இருந்து தெனியாய புனித மெத்யூ இருமொழிப் பள்ளியில் சேர்ப்பதற்கு ரூபா 16,500 செலவிட்டு படலை ஒன்றை செய்து கொடுக்க நேர்ந்ததாக தெனியாய தோட்டத்தின் காவலாளியான ஆனந்த குமார கூறினார்.
ஆனந்த குமாரவும் மகள் நிரோஷாவும்
"உடைந்த வெடித்த பகுதிகள், வேலிகள் மற்றும் புத்தர் சிலைகளையும் சரிசெய்யுவதற்கு அவ்வப்போது 100-200 ரூபா பணம் செலுத்த வேண்டும், ஆனால் சரியான கல்வி கிடைப்பதில்லை".
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நிரோஷா, அநேகமான பாடங்களுக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாததால் தொண்டர் ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக கூறுகிறார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி பத்திரம், நீர்கட்டண பட்டியல் போன்றவை இல்லாததால் வசதி உள்ள ஒரு பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு அவர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கிடைப்பதில்லை என நாகியாதெனிய தலங்கஹா தோட்டத்தின் வை. கிருஷ்ணா தெரிவித்தார். தோட்டக் கம்பனிகள் மூலமே அவர்கள் இந்த கட்டணங்களை செலுத்துகிறார்கள்.
நோய்வாய்ப்பட்டால் விடுமுறை கிடைத்தாலும் சம்பளம் அல்லது வேறு கொடுப்பனவுகள் வெட்டப்படுவதால், சிகிச்சைக்கான செலவையும் தொழிலாளர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும். என்ஸால் தோட்டத்தில் ஒரு தொழிலாளி இறந்தால், 22,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கு அவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மாதத்திற்கு 300 ரூபா செலுத்தி வர வேண்டும். இந்த நிலைமைகளின் கீழேயே நுண் கடன் திட்டங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் சிக்க வைக்கப்படுகின்றனர்.
அருண் தேவி
தெனியாய தோட்டத்தின் நீலாங்கனியின் கூற்றுப்படி, ரூபா 50,000 கடனுக்கு 63,600 ரூபா ஒரு வருடத்திற்குள் செலுத்தி முடிக்கப்பட வேண்டும். "பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவும் எல்லாவற்றுக்கும் கடன் வாங்க வேண்டியுள்ளது," என அவர் கூறினார்.
தனக்கென ஒரு சொந்த வீட்டை கட்டுவதற்கு முயன்ற அருண் தேவி, கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தில் 600,000 ரூபா கடன் பெற்று அதை முறையாக செலுத்த முடியாத நிலையில், மொனராகலையில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார். "இரவு பகல் பாராமல் வந்து நெருக்குதல் கொடுப்பார்கள். எங்கள் வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல அவர்களுக்கு சமான் சட்டிகள் ஒன்றும் இல்லை. முடிந்த வரை உழைத்து கடனைத் தீர்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க மக்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல்களின் தோற்றுவாய், உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியே ஆகும். அதனால் இந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம், உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாக, அதாவது சர்வதேச சோசலிசத்திற்கான ஒரு போராட்டமாக இருக்க வேண்டும், என உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தொழிலாளர்களுக்கு விளக்கினர்.
இத்தகைய அரசியல் போராட்டத்திற்கு முற்றிலும் எதிராக இருக்கின்ற தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, தங்களது ஜனநாயக வாக்களிப்பில் தேர்வு செய்து கொள்ளும் தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பிக் கொண்டு, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், போராட்டத்தை தொடர வேண்டிய தேவையை விளக்கிய அக் கலந்துரையாடலை தொழிலாளர்கள் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
கடந்த தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் மத்தியில், சோசலிச சமத்துவ கட்சியின் தலையிட்டில், ஹட்டன் நகருக்கு அருகில் எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்கள் உருவாக்கிக்கொண்ட நடவடிக்கை குழு பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.