Print Version|Feedback
Support grows for Sri Lankan plantation workers’ conference
ஞாயிற்றுக்கிழமை நடபெறவிருக்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மாநாட்டுக்கு ஆதரவு அதிகரிக்கின்றது
By our correspondents
16 March 2019
சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் பிரச்சாரகர்கள், இலங்கையின் மத்திய மலையக பகுதியில் பல தோட்டங்களுக்கு சென்று, மார்ச் 17ம் திகதி, ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள, தோட்டத் தொழிலாளர்கள் மாநாடு பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
“தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகளும் சம்பள உயர்வு மற்றும் ஜனநாயக உரிமைகளை வெல்வதற்கான முன்னோக்கிய பாதையும்” என்னும் தலைப்பில் கலந்துரையாடுவதற்காக, சோ.ச.க. வின் ஆதரவுடன் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் நடவடிக்கை குழு இந்த மாநாட்டினை ஒழுங்குபடுத்தியுள்ளது.
தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர், டிசம்பரில் 100,000 இற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள், தற்போது பெறும் சம்பளத்தில் 100 வீத அதிகரிப்பு, அதாவது 1,000 ரூபா ($US5.50) அடிப்படை நாள் சம்பளம் கோரி வேலை நிறுத்தத்தில் குதித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதாக கொடுத்த போலி வாக்குறுதிகளை மேற்கோள் காட்டி, ஏனைய தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்தியது.
சோ.ச.க. உறுப்பினர்கள் கிளனியூஜி தோட்டத் தொழிலாளர்களுடன் பேசுகின்றனர்
தொழிலாளர்களின் தைரியம் மிக்க போராட்டத்தை சிதைத்த பின்னர், இ.தொ.கா. மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் 40 வீத அதிகரிப்புக்கு உடன்பட்டு கம்பனிகளுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உண்மையில், ஏற்கனவே வென்றெடுக்கப்பட்ட கொடுப்பனவுகளை வெட்டிக்கொண்ட பின்னர், வெறும் 20 ரூபாவே அதிகரிக்கப்பட்டுள்ளது.
காட்டிக்கொடுப்புக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் கோபத்தினை திசை திருப்பும் நோக்கில், அரசாங்கம் கடந்த செவ்வாய்கிழமை 50 ரூபா அற்பத் தொகை அதிகரிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தக் கொடுப்பனவு, அரசுக்கு சொந்தமான தேயிலைச் சபையாலேயே வழங்கப்படவுள்ளது. வருமானத்தினை ஈட்டும் கம்பனிகள் எந்தவிதமான மேலதிக சம்பள அதிகரிப்பை வழங்குவதை எதிர்க்கின்றன.
மாறாக தோட்டக் கம்பனிகள், “சம்பள முறையை” விரைவில் இல்லாமல் செய்ய அழுத்தம் கொடுக்கும் அதேநேரம், தொழிலாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யும் “வெளியார் உற்பத்தி முறையை” அமுல்படுத்த முனைகின்றன. இந்த முறையானது தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக அல்லது நவீனகால கொத்தடிமைகளாக மாற்றும் முறையாகும். இந்த திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு தேயிலைச் செடிகளுடன் ஒரு காணித் துண்டு ஒப்படைக்கப்படும். அவர் (தொழிலாளி), தேயிலைக் கொழுந்தை அறுவடை செய்து கம்பனிக்கு அனுப்பிய பின், கம்பனி தனது செலவுகளையும் மற்றும் இலாபத் தொகையையும் கழித்த பின்னர் வருமானத்தின் ஒருபகுதியை தொழிலாளிக்கு கொடுக்கும்.
இந்த முறை ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களில், தொழிலாளர்கள் ஏற்கனவே அதை எதிர்த்துள்ளார்கள். இதை அமுல்படுத்துவதற்கான உதவியை வழங்குவதாக, அண்மையில் கைச்சாத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் உடன்பட்டுள்ளன. இது, தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தியுள்ளது.
கிளனியூஜி தோட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
கடந்தவாரம், சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், வட்டவள, மஸ்கெலியா மற்றும் கண்டி மாவட்டத்தில் ஹந்தான போன்ற தோட்டங்களுக்கு சென்றிருந்தனர். பதுளை மாவட்டத்தில் பண்டாரவளையில் ஐஸ்லபி தோட்டத் தொழிலாளர்களுடனும் அவர்கள் பேசினர். இரயில், துறைமுகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியிலும் கொழும்பு புறநகர் பகுதிகளிலும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் இடம்பெற்றன.
எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு, டிசம்பர் வேலை நிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர், சோ.ச.க.வின் அரசியல் வழிகாட்டலுடன் ஸ்தாபிக்கப்பட்டது. பிரச்சாரத்தின் போது, தொழிற்சங்கங்களின் இரும்புப் பிடியில் இருந்து விடுபட்டு, தங்களின் வேலைத் தளங்களில் இவ்வாறான கமிட்டிகளை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்தப் பிரச்சாரம், சோலிச கொள்கைகளுக்கான போராட்டத்தின் தேவையையும் மற்றும் அத்தகையை கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர் – விவசாயிகள் அரசாங்கம் அமைப்பதையும் மையமாக கொண்டிருந்தது.
பி. ராஜா
ஹட்டன் அருகில் டிக்கோயா தோட்டத்தில் வசிக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஒரு கமிட்டி உறுப்பினர் பி. ராஜா, “கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களும் கூட்டுச் சேர்ந்து என்ன செய்துள்ளன என்பதில், தொழிலாளர்கள் தெளிவாக உள்ளனர்,” என கோபத்துடன் கூறினார்.
“தொழிலாளர்கள் இத்தகைய தொழிற்சங்கங்கள் சொல்வதை ஏன் மீண்டும் மீண்டும் கேட்கின்றனர்? என அவர் கேட்டார். பிரச்சாரகர்களுடன் உடன்பாடு தெரிவித்த அவர் கூறியதாவது: “தொழிலாளர்கள் தங்களின் சொந்த வலிமையை நம்ப வேண்டும். எங்களுடைய போராட்டத்துக்கு ஏனைய தொழிலாளர்களின் ஆதரவை பெற தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுப்பதில்லை. அவர்கள் தொழிலாளர்களை ஐக்கியப்பட விடமாட்டார்கள். அவர்கள் எந்நேரமும் தொழிலாளர்களைப் பிரிப்பதிலேயே ஈடுபட்டுள்ளார்கள்.”
மஸ்கெலியா கிளனியூஜி தோட்டத்தில், சோ.ச.க. பிரச்சாரகர்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினர். ஒரு தொழிலாளியான எஸ். நகுலேஸ்வரன் ஒரு நல்ல வேலையை தேடி கொழும்புக்கு சென்றார். ஆனால் அவருக்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை கிடைத்தது. தோட்டத் தொழிலாளர்களுடன் அவர் முகம் கொடுக்கும் ஒத்த நிலைமைகளை விளக்கினார்.
“நான் அதிகாலை 5.30க்கு வேலை ஆரம்பித்து, இரவு 10 மணி வரை வேலை செய்ய வேண்டும். காலை உணவுக்கு அரை மணித்தியாலமும் மற்றும் மதிய உணவுக்காக ஒரு மணித்தியாலமும் தருவார்கள். நான் ஒரு நாளைக்கு 17 மணித்தியாலங்கள் வேலை செய்வேன். கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணியளவிலேயே நித்திரைக்கு செல்வேன். நான் வழமையாக 2–3 மணித்தியாலங்களே நித்திரை கொள்வேன். எனது ஒரு நாள் சம்பளம் 1,400 ரூபாவாகும். தொழிலாளர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக வேலை செய்யமுடியாது. எங்களுக்கு புதிய சமூக முறை ஒன்று தேவையாகும்.” ஏனைய தொழிலாளர்களும் கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். தொழிற்சங்கங்களை அவர்கள் உறுதியாக நிராகரித்தார்கள்.
கே. செல்லையா
ஸ்ராம்போட் ஹில் தோட்டத்தில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றி ஓய்வுபெற்ற கே. செல்லையா, 70 வயது, 1961ம் ஆண்டு தனது 17வது வயதில் வேலையில் சேர்ந்திருந்தார். 2001ல், ஒரு முகாமையாளர் அவரை திட்டியதால் தனது வேலையை இராஜிநாமா செய்தார். வேறு மார்க்கம் இல்லாத காரணத்தினால் அவர் திரும்பவும் வேலையில் இணைந்து கொண்டார். அவர் மாதம் 8,000 ரூபா சம்பளமாக பெற்றார். அவரால் வேலையைத் தொடர முடியவில்லை.
கடந்த காலத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக பேரம் பேசியதை அவர் நினைவுகூர்ந்தார். “ஆனால் தற்போது அவர்கள் அதைக் கைவிட்டுள்ளார்கள்” என்றார்.
அவர் தோட்டத்தின் வாழ்க்கை நிலமைகள் சம்பந்தமாக விளக்கும் போது பின்வருமாறு கூறினார்: “நான் இந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்தேன். அது 10”x10” அடி கொண்ட இரண்டு அறைகளைக் கொண்டது. தோட்டங்களை அரசாங்கம் கையேற்ற பின்னர், ஜனவசம மூலம் முன்பக்கமாக ஒரு அறை விரிவுபடுத்தி கொடுக்கப்பட்டது. நாங்கள் நான்கு பேர் வாழ்கின்றோம். இந்த வீடு எங்களுக்கு போதுமானதாக இல்லை. எல்லா குடும்பங்களும் இவ்வாறான நிலமைகளின் கீழேயே வாழ்கின்றன. அண்மையில் தான் நாங்கள், ஒட்டரி தோட்டத்தில் இருந்து நீர் விநியோகத்தை பெற்றுக் கொண்டோம். இதற்கு முன்னர் நாங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்காக சிரமங்களை அனுபவித்தோம்.
“எல்லோரும் சமத்துவமாக வாழும் ஒரு சமூகமே எங்களுக்கு தேவையாகும். இந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காக நான் ஏனைய தொழிலாளர்களுடன் இணைந்து கொள்வேன்.” என்றார்.
ரி. தமிழ்வாணன்
ஹட்டன் பன்மூர் தோட்டத்தைச் சேர்ந்த ரி. தமிழ்வாணன் கூறும்போது, “தொழிலாளர்களின் வறுமையான வாழ்க்கை நிலமைகளுக்கு சகல அரசியல்வாதிகளுமே பொறுப்பாகும். முகாமையாளர்களினதும் மற்றும் தொழிற்சங்க தலைவர்களதும் வீடுகள் ஆடம்பரமான பங்களாக்களாக உள்ளன. நீண்டகாலமாக உழைப்பில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலமையில் உள்ளது,” என்றார்.
தோட்டங்களில் உள்ள ஒடுக்குமுறை நிலமைகளினால், இளைஞர்கள் கொழும்பு போன்ற இடங்களில் வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும் அவர், இதே போன்ற ஒடுக்குமுறை நிலைமைகளின் மத்தியில், கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பனியில், நாளொன்றுக்கு 12 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றார். அவருக்கு சம்பளமாக மாதாந்தம் 35 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது.
எபோட்சிலி தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு இளம் தாய், தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் கடுமையான நிலமைகளை விளக்கினார். “நாங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் மேலதிக வேலை செய்கிறோம். எங்களுக்கு மேலதிக பணம் தேவைப்படுவதால் மேலதிக வேலைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் 40 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். அவ்வளவு தொகையான கொழுந்துகளைப் பறிப்பது என்பது, அவ்வளவு சுலபமான காரியமல்ல, குறிப்பாக கோடைகாலத்தில் மிகவும் கடினம். இன்று, நான் அதிகாலை 5.30 இற்கு வேலைக்கு சென்று மதியம் 12 மணிவரை வேலை செய்துதான் எனது வழமையான இலக்கைப் பூர்த்தி செய்ய முடிந்தது.”
அவருக்கு 2 வயது குழந்தை ஒன்று உள்ளது, ஆனால் வார இறுதியில் கூட வீட்டிலும் மற்றும் குழந்தையுடனும் இருக்க முடியாது. அவரது கணவரும் கொழும்பில், ஒரு கட்டுமானக் கம்பனியில் உதவியாளராக வேலை செய்கின்றார். அவரும் கூட வார இறுதியில் வீட்டுக்கு வந்து இருப்பதற்கு முடியாமல் உள்ளது.
அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலாளி, “நான் இனிமேலும் தொழிற்சங்கங்களை நம்ப தயாரில்லை,” என்றார். தொழிறசங்கங்கள் எங்களுடன் இல்லை என்பதை, அண்மையில் நடந்த வேலைநிறுத்தப் போரட்டத்திலிருந்து அறிந்துகொண்டேன், என அவர் மேலும் கூறினார்.
“எங்களுடையை ஊதியத்தை தீர்மானிப்பதற்கு “கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எந்தவிதமான உரிமைகளும் இல்லை. எங்களுடையை தேவைகளின் அடிப்படையிலேயே சம்பளங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார். எபோட்சிலி நடவடிக்கை குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னைய ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் எதிர்வரும் மாநாட்டுக்கு வருவதற்கு தயாராக உள்ளதாகவும் கூறிய அவர், “ஏனைய பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களும் இந்த மாநாட்டில் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று நான் நம்புகின்றேன்,” எனத் தெரிவித்தார்.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்குச் சிந்தனையுள்ள புத்திஜீவிகள் அனைவரையும், ஹட்டன் நகரில் நகரசபை மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள மாநாட்டில் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.