Print Version|Feedback
Fascist terrorists murder 49 in Christchurch, New Zealand
நியூசிலாந்திலுள்ள கிறிஸ்ட்சேர்ச்சில் பாசிச பயங்கரவாதிகள் 49 பேரைப் படுகொலை செய்தனர்
By Tom Peters and John Braddock
16 March 2019
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் நகரத்தில் நேற்று மதியம் இரண்டு மசூதிகளில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான பயங்கரவாத தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதுடன் மற்றொரு 48 பேர் காயமடைந்தனர். நியூசிலாந்தின் வரலாற்றில் மிகப்பெரிய துப்பாக்கிச் சூடாகவும் மற்றும் பயங்கரவாதத்தின் மிக மோசமான நடவடிக்கையாகவும், சமகால உலகின் மிக மோசமான ஒன்றாகவும் இந்தத் தாக்குதல் காணப்படுகிறது.
நகர மையத்திற்கு அருகிலுள்ள ஹக்லே பூங்கா அருகே மஸ்ஜித் அல் நூர் மசூதியில் 41 பேரும், லின்வூட் மஸ்ஜித் மசூதியில் ஏழு பேரும் இறந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
சர்வதேச அளவில் சாதாரண மக்கள் தாக்குதல் பற்றிய அதிர்ச்சியையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். சனிக்கிழமை இரவும் மற்றும் எதிர்வரும் நாட்களிலும் நியூசிலாந்து நகராட்சிகளிலும் நகரங்களிலும் விழிப்புணர்வு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
வெலிங்டன் மசூதிக்கு வெளியே துக்கம் அனுஷ்டிப்பவர்கள்
படுகொலையுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மசூதியின் அருகிலும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலதிக தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாக ஒரு வாகனத்தில் காணப்பட்ட இரண்டு வெடிக்கும் சாதனங்கள் பொலிசாரால் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதுவரை 28 வயதான அவுஸ்ரேலிய பிரஜையான ப்ரெண்டன் டாரன்ட் எனும் ஒருவர் மட்டுமே கொலையுடன் குற்றஞ்சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இந்தத் தாக்குதல் ஒரு கொடூரமான குற்றம், இனவாதம் மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தின் செயலாகும். இது ஒரு நியூசிலாந்து நிகழ்வு மட்டுமல்ல, ஆனால் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளதும், அரச அமைப்புகளின் உயர்ந்த மட்டங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற வலதுசாரி, பாசிச வலையமைப்புக்களின் எழுச்சியின் விளைவாகும். அவர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் விரைவான அதிகரிப்பு மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிப்பதன் மூலம் எதிர்ப்பை ஒடுக்கும் ஆளும் செல்வந்த தட்டுக்களின் கொடூரமான நடவடிக்கைகள் என்பவற்றுடன் விரிவடைந்துள்ளன.
டாரன்ட் சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி, குடியேற்ற எதிர்ப்பு குழுக்களின் ஆதரவாளர்களிடம் இருந்து அவருடைய உந்துதல்களை வளர்த்தார். டாரன்ட் இன் தலையின் மீது பொருத்தப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவியில் இருந்து தெரிந்த அல் நூர் மசூதி தாக்குதலின் ஒளிப்பதிவு காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பப்பட்டது. தற்போது அகற்றப்பட்டுள்ள அந்தக் காட்சிகள் துப்பாக்கிதாரி மசூதியை வந்தடைந்து கட்டிடத்திற்குள் நுழைந்து அவரது கொடூரமான மற்றும் திட்டமிடப்பட்ட படுகொலைகளை மேற்கொண்டார் என்பதைக் காட்டுகிறது. சிறிய குழந்தைகள் உள்ளடங்கலாக பாதுகாப்பற்ற பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி தோட்டா மழை தாக்குதலில் இருந்து தப்புவதற்கு சிறிது வாய்ப்புகூட இருக்கவில்லை.
பல விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை என்றாலும், இது ஒரு திட்டமிடப்படாத அல்லது "காரணமில்லாத" செயலாக கருதுவதற்கில்லை என்பது தெளிவாகிறது. டாரண்ட் ஆல் இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு 73 பக்க “விளக்க அறிக்கை" படி, அவர் ஐரோப்பாவில் சில காலம் வாழ்ந்த பின்னர் தாக்குதலைத் திட்டமிடுவதற்கு இரண்டு ஆண்டுகள் செலவிட்டுள்ளார்.
"மாபெரும் மாற்றீடு" என்ற தலைப்பில், இந்த அறிக்கையானது, டாரன்ட் ஒரு வெள்ளை மேலாதிக்கவாதி அத்துடன் தன்னை ஒரு "பாசிசவாதி" என்றும் கருதினார் என்பதை தெளிவுபடுத்துகிறது. இஸ்லாமிய விரோத பாரபட்சத்தால் தூண்டிவிடப்பட்டு டஜன் கணக்கான இளைஞர்களையும் குழந்தைகளையும் 2011 ல் நோர்வேஜியன் தொழிற் கட்சி முகாமில் கொலைசெய்த பாரிய படுகொலையாளரான ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரைவிக் இனை இந்த ஆவணம் பாராட்டியுள்ளது. பிரைவிக் உடன் "சுருக்கமான தொடர்பு" இருந்ததாகவும், நியூசிலாந்தின் தாக்குதலுக்கு அவரிடமிருந்து "ஆசீர்வாதம்" கிடைத்திருந்ததாகவும் டாரன்ட் கூறியுள்ளார்.
கடந்த மாதம், சோசலிசக் குழுக்கள், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த கடலோர பாதுகாப்பு லெப்டினன் கிறிஸ்டோபர் போல் ஹாசன் என்பவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். ஹாசன் ஒரு நவ-நாஜி என்பதுடன் பிரைவிக்கை அவரது முன்மாதிரி என்றும் தெரிவிக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை "புதுப்பிக்கப்பட்ட வெள்ளை இனத்திற்கான சின்னமாகவும் மற்றும் பொதுவான நோக்கத்திற்கான அடையாளமாக" டாரன்ட் பாராட்டினார். "நாங்கள் குடியேறிகளை நசுக்க வேண்டும் அத்துடன் ஏற்கனவே நம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த “படையெடுப்பாளர்களை,” வெளியேற்ற வேண்டும் என்று ட்ரம்ப்பை போல புலம்பெயர்ந்தோரை "படையெடுப்பாளர்கள்" என்று விபரித்தார்.
துப்பாக்கி சுடு நடாத்தியவர் இடதுசாரிகளையும் அச்சுறுத்தினார். "பாசிசஎதிர்ப்பு/ மார்க்சிஸ்டுகள்/கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பிட்ட ஒரு பந்தியில்" என் பார்வையில் உங்களை வைக்க விரும்புகிறேன். என்னுடைய காலின் கீழ் உங்கள் கழுத்தை நான் வைக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மார்ச் 12 அன்று, டாரன்ட் அவரது தாக்குதல் துப்பாக்கியின் பல புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். இதில் உள்ளடக்கப்பட்டிருந்தது, 2007 இல் ஸ்பெயினில் இளவயது அராஜகவாதியை படுகொலை செய்த ஜோசு எஸ்தெபானஸ் என்னும் நவ நாஜி பற்றிய விபரத்தையும் உள்ளடக்கி எழுதப்பட்டிருந்தது. மற்றொரு கோஷம் "வியன்னா 1683" ஆகும், இது ஆஸ்திரிய ஆயுதமேந்திய போராளிகளால் ஒட்டோமான் படையெடுப்பாளர்களை விரட்டியடித்தமையை சுட்டிக்காட்டுகிறது.
ஆச்சரியப்படும் வகையில் நியூசிலாந்தோ அல்லது அவுஸ்திரேலிய போலீஸோ அல்லது வேறு முகாமைகளோ டாரன்ட் அல்லது கைது செய்யப்பட்ட மற்றையவர்களை இதற்கு முன் அறிந்திருக்கவில்லை என்று நியூசிலாந்து பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்தார். அவர்களை எந்த தீவிரவாத "கண்காணிப்பு பட்டியல்களிலும்" பார்க்கக்கூடியதாக இல்லை. இது உண்மையாக இருந்தால், அரச அதிகாரிகள் தீவிர வலதுசாரி வலையமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போலும் மற்றும் இதற்கு உடந்தையாக உள்ளனர் என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
போலீசாரின் கவனத்திற்கு வராமல், அத்தகையதொரு தாக்குதல் பல ஆண்டுகளாக எவ்வாறு திட்டமிட முடியும் என்பது பற்றிய எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் ஆயுதங்களை எவ்வாறு பெற்றுள்ளார்கள் என்பது பற்றியும் கேள்விகள் எழுகின்றன. நியூசிலாந்து துப்பாக்கி பதிவுமுறையை கொண்டிருக்கவில்லை, மேலும் 5 மில்லியனுக்கும் குறைவான மக்கள் உள்ள நாட்டில் 1.3 மில்லியன் சட்டபூர்வமான சொந்தமான ஆயுதங்கள் உள்ளன.
பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் வெள்ளிக்கிழமை மாலை ஒரு செய்தியாளர் மாநாட்டில் "இனவாதத்தை நாம் பொறுக்காததாலும், நாம் தீவிரவாதத்தால் சூழப்பட்ட ஒரு பிரதேசம் என்பதாலும் இந்த வன்முறை நடவடிக்கைக்குத் நியூசிலாந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாங்கள் அந்த விஷயங்களில் எதற்கும் ஆதரவானவர்கள் இல்லை என்ற காரணத்தால் அதை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் நாங்கள் பன்முகத்தன்மை, அன்பு, இரக்கம் ஆகியவற்றையே பிரதிநிதித்துவம் செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
உண்மையில், இந்த தாக்குதல் ஏகாதிபத்திய வன்முறை மற்றும் அதிகரித்து வரும் தேசியவாதம், வெளி நாட்டினர் மீது காட்டும் வெறுப்பு மற்றும் இனவெறி ஆகியவற்றால் குணாதிசயப்படும் ஒரு உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் நடந்தது. அமெரிக்கத் தலைமையிலான ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவின் போர்களில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய பங்கேற்பு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகப் பின்தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில் பொதுமக்களுக்கு எதிரான பல படுகொலைகள் மற்றும் அட்டூழியங்கள் ஆகியவற்றில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவின் துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பெருகிவரும் சமத்துவமின்மை மற்றும் வறுமை என்பவற்றால் சீரழிந்து வரும் சமூக நிலைமைகளின் கீழ் நியூசிலாந்தில் "வலதுசாரி" இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு உதவியாக ஒரு திட்டவட்டமான முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இது தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள அட்டூழியம் நோர்வேயில் பிரைவிக்கினால் நடாத்தப்பட்ட பாரிய கொலையை மட்டுமல்ல, ஆனால் ஓக் க்ரீக் நகரில் சீக்கிய கோவிலில் பாசிசவாதிகள் நடத்திய 2012 படுகொலைகள், 2012 ல் விஸ்கான்சின் மற்றும் 2014 ஆம் ஆண்டில் கன்சாஸ் Overland Park இலுள்ள ஒரு யூத பராமரிப்பு இல்லத்தில்; 2015 ம் ஆண்டு சார்லெஸ்டோன், தெற்கு கரோலினாவில் ஆபிரிக்க அமெரிக்க பிராத்தனையாளர்களின் படுகொலை, பிரித்தானிய தொழிற் கட்சி அரசியல்வாதியான ஜோ கொக்ஸின் 2016 கொலை; கனடாவின் கியூபெக் நகரில் ஒரு மசூதியில் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டமை; மற்றும் பென்சில்வேனியாவிலுள்ள பிட்டஸ்பேர்க்கில் யூத வணக்கஸ்தலத்தில் 11 யூதர்களின் பிராத்தனையாளர்கள் 2018இல் கொல்லப்பட்டமை ஆகிய குறிப்பிட்டுக்கூறக்கூடிய ஒருசில வலதுசாரி பயங்கரவாத நடவடிக்கைகளை பின்தொடர்ந்தது வந்துள்ளது.
பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் மீதான சமீபத்திய தாக்குதலை எதிரொலிக்கும் வகையில் நியூசிலாந்து பசுமைக் கட்சித் தலைவர் ஜேம்ஸ் ஷா கடந்த வியாழக்கிழமை ஒரு வெலிங்டன் தெருவில் ஐ.நா.விற்கு எதிரான கோஷங்களை எழுப்பிய ஒரு நபரால் தாக்கப்பட்டார். ஐக்கிய நாடுகளின் குடியேற்ற உடன்படிக்கையில் நியூசிலாந்து கையெழுத்திட்டதற்கு எதிராக தீவிர வலதுசாரி குழுக்களின் சமீபத்திய எதிர்ப்புக்களால் தாக்குதல் நடாத்தியவர் நன்கு ஊக்கப்படுத்தப்பட்டிருக்கலாம்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை தூண்டி எரியவிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய தீவிர வலதுசாரி சுயேட்சை செனட் உறுப்பினர் பிரேசர் அன்னிங், கிறிஸ்ட்சேர்ச் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டி ஒரு பாசிச ஊடக அறிக்கையை வெளியிட்டார். முஸ்லிம் குடிவரவை தாக்குதலின் "உண்மையான காரணம்" என்று விவரித்தார். அன்னிங் சமீபத்தில் பிரபல அவுஸ்திரேலிய நவ-நாஜிக்களால் செயின்ட் கில்டா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை மாலையில் தனது முதல் செய்தியாளர் மாநாட்டில், "வெறுப்புணர்வை" வளர்ப்பவர்களுக்கு "நியூசிலாந்தில் எந்த இடமும் இல்லை" என்று ஆர்டன் அறிவித்தார். எவ்வாறாயினும் 1990 களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட வெளிப்படையான ஆசிய எதிர்ப்பு மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மேடையாக உருவாக்கப்பட்ட நியூசிலாந்து முதலில் (NZ First) என்ற இனவாத, ஜனரஞ்சகவாத கட்சியினை அவரது அரசாங்கத்தின் மத்தியில் கொண்டுவந்து அணைத்துக் கொண்டுள்ளார்.
தொழிற் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கும் நியூசிலாந்து முதல் கட்சி, முஸ்லீம்-விரோத இனவெறியை ஒரு பேர்போன பரப்புவராக உள்ளது. 2017 ல் வெறும் 7.2 சதவிகித வாக்குகளைப் பெற்ற போதிலும், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துணை பிரதமர் ஆகிய பதவிகள் நியூசிலாந்து முதல் கட்சிக்கே வழங்கப்பட்டது.
ஜூன் 2017 இலண்டன் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, நியூசிலாந்து முதல் கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் நியூசிலாந்து “இஸ்லாமிய சமூகத்திடம்” “அவர்களின் குடும்பங்களில்” உள்ள பயங்கரவாதிகளின் சாத்தியப்பாட்டை குறிப்பிட்டு அவர்களின் “வீடுகளை சுத்தமாக” வைத்திருக்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விட்டார். அவ்வாறான தீவிரவாதம் தொடர்பான எவ்விதமான ஆதாரத்தையும் முன்வைக்காது பீட்டர்ஸ் “திரிப்போலியினதும்” “டமாஸ்கஸினதும் கலாச்சாரத்தை” நியூசிலாந்திற்கு கொண்டுவரும் “கட்டுப்படுத்தப்படாத திரிக்கப்பட்ட உணர்வினை” கண்டித்தார். நாங்கள் முதலில் இருந்தே பிரிந்திருக்கும் சமூகங்களை அனுமதிக்கும், அதேமாதிரியான அரசியல்ரீதியாக சரியான பொறிகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் “ஒரு மக்களாகவும், மேற்கிலுள்ள ஒரு கலாச்சாரத்திலிருந்து விலகிப்போவதை தடுக்கவேண்டும்.” என்றார்.
முஸ்லீம்களுக்கும் ஆசிய புலம் பெயர்ந்தோர்களுக்கும் எதிரான நோக்கம் கொண்ட ஒரு தெளிவான தொனியாக, கடந்த ஆண்டு, நியூசிலாந்து முதல் கட்சி (NZ First) புதிதாக குடியேறியவர்களுக்கு நிர்வகிக்கப்படும் ஒரு "நியூசிலாந்து மதிப்புகள் சோதனை" என்று அழைப்பு விடுத்தது. "பெண்கள் எனப்படுபவர்கள் கால்நடைகள் மற்றும் இரண்டாம் தர குடிமக்கள்" என நம்பும் குடியேறியவர்களை இது நிறுத்தும் என்று பீட்டர்ஸ் கூறினார். மற்றொரு நியூசிலாந்து முதல் கட்சியின் உறுப்பினர் ரோஜர் மெல்வில், "பாகிஸ்தான், இந்தியா மற்றும் சில ஆசிய வகை நாடுகளில் உள்ள" மக்கள் "தங்கள் வழிகளை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள்" என்று அறிவித்தார்.
கிறிஸ்ட்சேர்ச் தாக்குதல் எதிர்வரவுள்ள ஆபத்துக்களை பற்றிய ஒரு ஆபத்தான எச்சரிக்கையை வழங்குகிறது. 1930 களுக்குப் பின்னர் முதலாளித்துவம் அதன் மிகப் பெரிய நெருக்கடிக்குள் தட்டுத்தடுமாறி செல்கையில் பாசிசத்தின் மறுபிறப்பிற்கான அடித்தளத்தை வழங்க, நச்சு தேசியவாதம், இராணுவவாதம் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு இனவெறி ஆகியவற்றிற்கான சூழ்நிலை சர்வதேச அளவில் தூண்டப்பட்டு வருகிறது. ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், பாசிச பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டத்திலும் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.