Print Version|Feedback
ශ්රී ලංකාව: බොගවන්තලාව තේ වත්තේ ගින්න පවුල් 16කට නිවාස අහිමි කරයි
இலங்கை: பொகவந்தலாவ தோட்டத்தில் பரவிய தீயினால் 16 குடும்பங்களின் வீடுகள் தீக்கிரையாகின
By A. Suresh and M. Thevarajah
4 February 2019
ஜனவரி 29 அன்று இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தின் ரொப்ஹில் பெருந்தோட்டத்தின் வானக்காடு பிரிவில் பேரழிவை ஏற்படுத்திய தீயினால் 12 லைன் வீடுகள் தீக்கிரையாகின. வேலை நேரமாகிய மு.ப. 11.30 அளவில் ஏற்பட்ட தீயினால் 21 சிறுவர்கள் உட்பட்ட மொத்தம் 66 பேர்களின் குடியிருப்புகள் அழிந்து போயின. இதனால் பாடசாலை சிறுவார்களின் புத்தகங்கள், சீருடைகள் உட்பட ஆடைகள், சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்கள், பிறப்புசாட்சி பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய ஆவணங்களுமாக அனைத்தையும் இந்த 16 குடும்பங்கள் இழந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது போதுமான உணவுகளோ, சுகாதார வசதிகளோ அற்ற தோட்டத்தின் கலாசார மண்டபத்திலும் இந்துக் கோவிலிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தோட்டம் கலனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பொகவந்தலாவையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் ஹட்டனில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்திலும் இது அமைந்துள்ளது. வானக்காடு பிரிவில் 110 தொழிலாளார்கள் வேலை செய்கின்றனர்.
ரொப்ஹில் தோட்டத்தில் தீப்பற்றி எரியும் லயின் அறைகள்
தீப்பற்றியதற்கான காரணம் இன்னமும் உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படாவிட்டாலும் பிரதான காரணம் பெரும் இரகசியமல்ல. முற்றிலும் போதுமானதாக அல்லாத, நெருக்கடி நிறைந்த மற்றும் பாதுகாப்பற்ற பௌதீக நிலைமைகளுள் இந்த கட்டடம் அமைந்திருப்பதன் விளைவே இதுவாகும். இலங்கையின் மிகப்பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஒரேயொரு படுக்கை அறையும் ஒரு வரவேற்பறையும் மற்றும் ஒரு சமையலறையும் மட்டு கொண்ட, பிரிட்டிஷ் காலணித்துவ காலத்து லைன் அறைகளிலேயே வசிப்பதற்கு விடப்பட்டிருந்தனர். ஒரு லைன் அறையில் சாதாரணமாக இரண்டு அல்லது அதற்கும் அதிகமான குடும்பங்கள் கூட வசிக்கத் தள்ளப்பட்டுள்ளன.
பின்வரும் பட்டியல் வெளிப்படுத்துவது போல், இலங்கையின் தோட்டங்களில் தீப்பிடித்தல் சம்பவங்கள் சாதாரணமாக இடம்பெறுபவை ஆகும்.
· 2011 ஏப்ரலில் மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் 20 லைன் அறைகள் தீக்கிரையாகின. இதே தோட்டத்தில் 2016 ஜனவரியில் பல லைன் அறைகள் தீயினால் மோசமாக எரிந்து சேதமடைந்தன.
· 2012 மே மாதத்தில் மஸ்கெலியாவின் மொக்கா தோட்டத்தில் 22 வீடுகள் தீயில் எரிந்து அழிந்தன. 100 போர் வரையில் இடம் பெயர்ந்தனர்.
· 2014 நவம்பரில் நுவரெலியாவுக்கு சமீபமாகவுள்ள டயகம தோட்டத்தில் 22 வீடுகள் தீக்கிரையாகி 80 பேர் இடம்பெயர்ந்தனர்.
· கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று டிக்கோயாவின் போடைஸ் தோட்டத்தில் ஏற்பட்ட தீயில் 20 வீடுகள் எரிந்தன. புதிய வீடுகள் தருவதாக நிர்வாகம் வாக்குறுதி அழித்திருந்தாலும் அக்குடும்பங்கள் தற்போது தற்காலிக கொட்டில்களிலும் வசதிகளற்ற நிலையிலும் இருந்து வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான லைன் அறைகள் தீக்கிரையாகியும், மண்சரிவு மற்றும் முற்றிலும் தவிர்கக் கூடிய காரணங்களாலும் அழிந்துள்ளன. அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களும் தோட்டக் கம்பனிகளும் தோட்டத் தொழிலாளருக்கு சிறந்த வாழ்விடங்களை தருவதாக வாக்குறுதியளித்தாலும் எதுவும் நடைபெறுவதில்லை.
மதிப்பீடுகளின் படி தோட்டத் தொழிளாளர்களில் 67 வீதமானோர் சிறந்த காற்றோட்ட வசதிகளற்ற 120 சதுர அடி பரப்புள்ள லைன் அறைகளிலேயே வாழ்கின்றனர். இவற்றில் 25 வீதமானவற்றிற்கு கழிவறை வசதிகள் இல்லை.
ரொப்ஹில் தோட்டத்தில் கோவிலில் தஞ்சமடைந்துள்ள மக்கள்
இலங்கையின் நகரப்பகுதிகளின் வீடுகளில் காற்றோட்ட வீதம் 92 ஆக இருக்கையில், தோட்டப்புற மாவட்டங்களில் இந்தவீதம் 67 ஆகும். இப்பகுதிகளின் பாடசாலைகள் போதிய பாட ஆசிரியர்கள் இன்றியும் வசதிகள் உபகரணங்கள் இன்றியும் நன்கு பராமரிக்கப்படாமலேயே உள்ளன.
ரொப்கில் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்வர்கள் கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தமது வாழ் நிலைமைகள் பற்றி பேசியதுடன் அரசாங்கத்தையும் தொழிற்சங்கங்களையும் கண்டித்தனர்.
தொழிலாளி சாந்தி கூறுகையில், தீயினால் முற்றிலும் அழிந்த வீடுகளில் தலா 11 உறுப்பினர்களை கொண்ட மூன்று குடும்பங்கள் உள்ளதாகவும், அனைத்து உடைமைகள், ஆவணங்களையும் இழந்துள்ளதாகவும் உணவுக்கே போதுமானதாக இல்லாத வருமானத்தில் இழந்தவற்றை ஈடுசெய்வது இயலாத காரியம் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அண்மையில் பெருந்தோட்ட முதலாளிமார்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட காட்டிக்கொடுப்பு ஒப்பந்தம் இதற்கு முன்னர் நடப்பிலிருந்த கொடுப்பனவுகள் பலவற்றை இல்லாமற் செய்துள்ளது என்றார். எமது நாட்கூலி 20 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு எமது இழக்கப்பட்ட ஆவணங்களை மீளப்பெறும் வழிகளை பற்றி கற்பனை செய்ய முடியாது. ஒரு முறைப்படியான வாழ்விடமோ வீட்டுத்திட்டமோ இருந்திருப்பின் நாம் இந்த அழிவுகளை சந்தித்து இருக்கமாட்டோம் என்றார்.
மலைப் பகுதியில் அமைந்துள்ள வானக்காடு பகுதிக்கு பஸ்வண்டிச் சேவை இல்லாததால் பிரதான வீதிக்கு செல்வதற்கு மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியுள்ளது. உள்ளூர் வீதிகள் குன்றும் குழியுமாக உள்ளதால் சிறுவர்கள் பாடசாலை செல்வதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.
ரஞ்சித் குமார் என்னும் முச்சக்கரவண்டிச் சாரதி கூறுகையில், அண்மையில் உள்ள பொகவத்தலாவ வைத்தியசாலைக்கு நோயாளரை ஏற்றிச் சென்ற வேளைகளில் மூன்று நோயாளிகள் வழியிலேயே இறந்துள்ளனர் என்றும் கர்ப்பவதிகளான ஆறு பெண்கள் முச்சக்கர வண்டியினுள்ளேயே பிள்ளைகளை பெற்றிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
எரிந்து போன லயின் வீடுகளில் ஒரு பகுதி
ஆனந்தகுமார் (42) பேசும் போது, தோட்டத்தில் தொழில் நிலைமைகள் மோசமானவை, ஆயினும் அவை பற்றி வெளிப்படையாக கருத்துக் கூறியதற்காக ஏற்கனவே எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என்றார். எமக்கு அன்றாட இலக்கு 18 கிலோ தேயிலை கொழுந்து. கொழுந்து நிரப்பும் பையின் நிறை ஒரு கிலோவாகும். ஆனால் அதற்காக அவர்கள் 2 அல்லது 3 கிலோவை கழித்து விடுவார்கள். இதனை சுட்டிக்காட்டுபவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த தோட்டத்தில் கொழுந்துகள் வெகு குறைவாகவே உள்ளன. மகப்பேற்றிற்காக விடுமுறையில் செல்பவர்கள், மேலதிகமாக சுகவீன காரணங்களுக்காக ஒரு மாத விடுமுறை எடுத்தால் அப்பெண்களை வேலையிலிருந்து நீக்கிவிடுகின்றார்கள். எமது தொழிற்சங்கங்கள் எமது நன்மைகளுக்காக போராடுவதாக இல்லை. இச்சங்கங்கள் எமது சம்பளப் போராட்டத்தை காட்டிக் கொடுத்துவிட்டன, என அவர் மேலும் கூறினார்.
பிரபாகரன் (31) கூறியதாவது: “தீ பரவிய நேரத்திலிருந்து எந்தவொரு தொழிற்சங்க தலைவரும் இந்தப்பக்கம் வரவும் இல்லை. வீடுகளை இழந்த குடும்பங்களுடன் பேசியதும் இல்லை. எமது சம்பளப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டு எம்முன்னே வருவதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். 150 ரூபா சந்தாப்பணத்தை சங்கங்களுக்கு கொடுப்பது வீண்வேலை. சந்தா கொடுப்பதை நிறுத்திக் கொண்டு எமது உரிமைகளுக்காக நாமே போராடுவதென்று தீர்மானித்துள்ளோம்”.
“தோட்டத்தில் வருவாயை பகிரும் முறை ஒன்றினை அறிமுகம் செய்யப்போவதாக நிர்வாகம் அறிவித்தது. எமது எதிர்ப்பின் காரணமாக அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். கலனிவெளி பெருந்தோட்டம் டில்லிறி தோட்டத்திலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. ஆனால் அங்கே தொழிலாளார்கள் பெருமளவு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” என அவர் மேலும் கூறினார்.
எரிந்து போன வீடுகளின் இடிபாடுகள்
மூன்றரை வருடங்களாக தற்காலிக அடிப்படையில் வேலைசெய்யும் ஒரு தாயான ரன்ஜனி (21) தெரிவித்ததாவது: என்னைப் போலவே இன்னும் பல தற்காலிகத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எம்மை நிரந்தர ஊழியர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் பாடுபடுவதாக இல்லை. என்னால் 10 கிலோ கொழுந்தை மட்டுமே பறிக்க முடிகிறது. இதனால் எனக்கு நாளொன்றிற்கு 300 ரூபா கூலியே கிடைக்கும். தேயிலை பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்திருப்பேனாயின் 500 ரூபா கிடைத்திருக்கும். ஆனால் அது மூடப்பட்டுவிட்டதே.
தேயிலை தொழிற்சாலையின் 60 ஊழியர்கள் வெளிக்களப் பணிகளுக்கு மாற்றப்பட்டு அவர்களின் வேலை நாட்களும் குறைக்கப்பட்டன. எதிர்காலத்தில் எமது வேலைகளுக்கு உத்தரவாதம் கிடையாது என்பது இன்னுமொரு தொழிலாளியின் ஆதங்கம்.
ரொப்ஹில் தொழிலாளர் எதிர்கொள்ளும் நிலைமைகள் இலங்கையின் எல்லா பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அனுபவிக்கும் நிலைமைகளே தான். தமக்கான கூலியையும் வாழ்நிலைமைகளையும் முன்னேற்றுவதற்கு அவர்கள் கடும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.
நாளொன்றிற்கான கூலியை 500 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரும் உறுதியான போராட்டம் ஒன்றினை தோட்டத் தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தனர். டிசம்பர் மாதத்தில் இப்போராட்டம் ஒரு இலட்சம் பேர் பங்கு பற்றிய ஒன்பது நாள் தேசிய மட்டத்திலான போராட்டமாக பரிணமித்திருந்தது.
சில வாரங்களாக நடைபெற்ற மறைமுக அரசியல் திட்டமிட்டல்கள் மற்றும் இரகசிய பேச்சுவர்த்தைகளின் பின், கடந்த திங்களன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் இதில் முற்று முழுதாக காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தமது தலைவர்களை அரசாங்கத்தின் அமைச்சர்களாக வைத்திருக்கும் தேசிய தொழிலாளர் சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தோட்ட தொழிற் சங்கங்கள், மேற்படி துரோகத்தனமான ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பை வழங்கின. (பார்க்க: இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் விற்றுத்தள்ளும் ஊதிய ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்)
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிலைமை, தொழில் நிலைமைகள், காலத்திற்கேற்ற பாதுகாப்பான வீட்டு வசதிகள் என்பனவற்றை தொழிற்சங்கங்கள் மாற்றிவிடப் போதில்லை என்பதையே அன்மையில் நடைபெற்ற சம்பளப் போராட்டங்கள் உறுதி செய்கின்றன. தொழிற் சங்கங்களோ முதலாளிமார்களின் இலாபங்கள், அவர்களின் அரசாங்கம் மற்றும் முழு முதலாளித்துவ முறையையும் பாதுகாக்கின்றன.
வாணக்காடு பிரிவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் ரொப்ஹில் தோட்டத்தின் ஏனைய தொழிலாளர்களும் எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் வழிகாட்டலை பின்பற்றி, பாதுகாப்பான வீட்டு வசதிகள் கண்ணியமான வாழ்க்கைக்கான சம்பளம் மற்றும் அடிப்படையான சமூக உரிமைகளையும் அடைவதற்காகப் போராடக் கூடிய சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை தத்தமது தோட்டங்களில் அமைக்க முன்வர வேண்டும்.
தொழிற் சங்கங்களிலிருந்து முற்றாக விலகி, பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருது உட்பட, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தவல்ல தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கும் போராட்டத்தில் தொழிலாள வர்க்க சக்தியின் பக்கம் திரும்பி செயற்படுவதே இப்போது அவசியமானதாகும்.
(இலங்கையின் தோட்டத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம்)