Print Version|Feedback
Hundreds of thousands march in Algeria to demand fall of Bouteflika regime
அல்ஜீரியாவில் புட்டஃபிளிக்கா ஆட்சியின் வீழ்ச்சி கோரி நூறாயிரக்கணக்கானோர் அணிவகுப்பு
By Will Morrow
9 March 2019
வெள்ளியன்று, 1999 இல் இருந்து அல்ஜீரியாவை ஆட்சி செய்து வரும் இராணுவ ஆதரவு பெற்ற ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கோரி அல்ஜீரியா எங்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் நூறாயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டனர்.
சமூக ஊடகங்கள் காண்பித்ததான ஆர்ப்பாட்டக்காரர்கள் அலையென திரண்ட காணொளிகளில், அந்நாட்டின் தலைநகரம் அல்ஜீயர்ஸ், துறைமுக நகரம் Bejaia, மற்றும் ஏனைய நகரங்களில் தெருக்கள் நிரம்பி வழிந்ததான அணிவகுப்புகளில் பெரும்பாலும் இளைஞர்கள் பங்கேற்றிருந்ததைக் காண முடிந்தது, அப்போது அவர்கள், “கொலைகார ஆட்சி,” “இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்,” மேலும் “திருடர்களே, நீங்கள் நாட்டை விழுங்கி விட்டீர்கள்!” என்பது போன்ற கோஷங்களை முழங்கினர். அதே வேளையில், வடகிழக்கு துறைமுக நகரம் அன்னபாவில், தொழிலாளர்கள், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மத்திய தரைக்கடலில் மூழ்கிப்போன தங்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆளும் தேசிய விடுதலை முன்னணி (FLN), பிப்ரவரி 10 அன்று, இந்த ஏப்ரல் தேர்தலில் புட்டஃபிளிக்காவை நிறுத்தவிருப்பதாக அறிவித்ததில் இருந்து தொடர்வதான மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பிரதி வாரம் ஆர்ப்பாட்டங்கள் பெரிதும் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், புட்டஃபிளிக்காவிற்கான தேர்தல் வேட்பாளர் படிவங்களை அவரது உதவியாளர்கள் சனியன்று சமர்பித்ததை அடுத்து அவை மேலும் வெடிப்புற்றன, அதே நேரத்தில், தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓராண்டுக்குள் பதவி விலகுவார் என வாக்குறுதி அளித்துள்ளார்.
எகிப்திய மற்றும் துனிசிய ஆட்சிகளை தூக்கியெறிந்த புரட்சிகர எழுச்சி தோன்றி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 2019 ஆரம்பத்தில் இருந்து சமூக சமத்துவமின்மைக்கு எதிராக மக்ரெப் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உழைக்கும் வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் தீவிரமயமாதல் மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் விரிவாக்கம் போன்றவற்றின் பகுதியாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் இருக்கின்றன.
82 வயதான புட்டஃபிளிக்கா கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 க்கு பின்னர் பொதுவிடங்களில் உரையாற்ற இயலாத ஒரு அரசியல் வெற்றுடலாக இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக சுவிட்சர்லாந்து ஜெனிவா மருத்துவமனை ஒன்றில் அவர் தங்கியிருப்பது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர்கள் “வழமையான” மருத்துவ சோதிப்புக்கள் அவருக்கு நடைபெறுவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், அவரது ஆட்சியின் உள்வட்டாரங்கள் அடுத்த பொருத்தமான ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் அவகாசத்தை நாடி காத்திருக்கின்றனர்.
வறுமை, வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக போராடுவதற்கு பாரியளவில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் உந்தித் தள்ளிய பிரச்சினைகளுக்கும், நடைமுறையில் இருக்கும் ஆட்சிக்குள் தங்களது நிலைமைகளை மேம்படுத்துவதற்கு புட்டஃபிளிக்காவின் பதவி விலகல் மட்டும்தான் ஒரே வழி எனக் கருதும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உத்தியோகபூர்வ “எதிர்” கட்சிகளுக்கும் இடையே ஒரு இணைக்கமுடியாத வர்க்கப் பிளவு உள்ளது.
கால் பங்கிற்கும் மற்றும் மூன்றில் ஒரு பங்கிற்கும் இடையிலான ஏதோவொரு எண்ணிக்கையளவில் அல்ஜீரிய இளைஞர்கள் வேலையற்றவர்களாக இருக்கின்றனர், இந்நிலைமைகளின் கீழ் அந்நாட்டில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கினர் 30 வயதிற்கு குறைந்தவர்களாக உள்ளனர். மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான அல்ஜீரிய லீக் (Algerian League for the Defence of Human Rights) எனும் அமைப்பு சென்ற ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கை, ஒவ்வொரு ஆண்டிலும் 400,000 அல்ஜீரிய குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியேறுகின்றனர், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகமாக உள்ளனர், ஏனென்றால், அங்கு “வகுப்பறைகளில், மின்சாரம், தண்ணீர் மற்றும் வெப்பமூட்டுதல் வசதிகள் அமைந்திருப்பதில்லை, அல்லது கழிப்பறை மற்றும் பள்ளி மருத்துவ சுகாதார பராமரிப்பு வசதிகள் அங்கு குறைவாக இருப்பது” போன்றவை தான் காரணம் என்று தெரிவித்தது. இதற்கிடையில், கடந்த 20 வருடங்களாக, பில்லியனர்கள் மற்றும் பல மில்லியனர்களைக் கொண்ட மிகச்சிறிய அடுக்கு ஒன்று அங்கு செழித்தோங்கியுள்ளது.
இந்த ஆண்டு, துறைமுக தொழிலாளர்கள் போராட்டம், பிப்ரவரி இறுதியில் தேசியளவில் நடந்ததான ஆசிரியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம், மற்றும் கபில்யா பிராந்தியத்தில் நடந்த போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் என நாடெங்கிலும் பல வேலைநிறுத்தங்கள் தீவிரமடைவதைக் கண்டுள்ளது.
ரெலிஜேன் மாகாணத்தில், சிடி கெட்டாப் பகுதியில், ஐரோப்பாவிற்கு ஆடை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய Tayal ஆடைத் தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்கள், கடுமையான வேலை நிலைமைகளையும், சட்டபூர்வ குறைவூதியத்திற்கு குறைவாக ஊதியம் வழங்குதலையும் எதிர்த்து, பிப்ரவரி 27 அன்று ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். “நாளொன்றுக்கு 600 டினார்கள் (5 அமெரிக்க டாலர்கள்) அல்லது மாதத்திற்கு 18,000 டினார்கள் என்ற அளவிற்கு மட்டுமே எங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது, அதிலும் நாங்கள் விடுப்பு எடுக்கும் பட்சத்தில், எங்களிடமிருந்து நாளொன்றுக்கு 1,000 டினார்களை அவர்கள் பிடித்தம் செய்து விடுகிறார்கள்” என்று ஒரு வேலைநிறுத்தக்காரர் பிரெஞ்சு மொழி Reflexion பத்திரிகைக்கு கடந்த வாரம் தெரிவித்தார். மேலும், திங்களன்று, Tiaret இல் ஹூண்டாய் கூட்டு வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் வாகனத் தொழிலாளர்கள் அவர்களது வேலை நிலைமைகளை எதிர்த்து வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
அல்ஜீரிய தொழிற் சங்கங்கள், தொழிலாள வர்க்க இயக்கத்தை தங்களது சக்திக்குள் அடக்கி வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்கின்றன. வியாழனன்று, பிரெஞ்சு மொழி நாளிதழ் El Watan, “அங்கு பொது வேலைநிறுத்தம் நிகழ்ந்தால் என்ன ஆகும்?” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது, SNPSP தேசிய சுகாதார ஒன்றியத் தலைவர் லீஸ் மெராபெட்டை மேற்கோளிட்டு, புட்டஃபிளிக்காவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் கோருவதை தொழிற்சங்கம் ஆதரிக்கும் அதேவேளையில், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு “சமூக ஊடகங்களில் வரும் அநாமதேய அழைப்புக்கள்” பற்றி அவர் பதட்டத்துடன் குறிப்பிட்டு பதிலிறுக்கும் அளவிற்கு அது “முன்கூட்டியதாக” இருக்கும் என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களை உள்ளடக்கிய தேசிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு, மார்ச் 13 அன்று தேசியளவிலான வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, இந்த நிலைமைகளில் ஆசிரியர்கள் அவர்களது மாணவர்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஏற்கனவே அவர்களை கூட்டங்களுக்கு அழைத்துள்ளனர். அல்ஜீரியாவின் மிகப் பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான அல்ஜீரிய தொழிலாளர்களுக்கான பொது சங்கம் (UGTA) தான் FLN ஐ உருவாக்கியது என்பதுடன், புட்டஃபிளிக்காவை வெளிப்படையாக ஆதரிக்கிறது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான சமூக அக்கறைகள் குறித்து பேசுவதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் தயாராக உள்ள ஆட்சியின் முன்னணி வட்டாரங்கள் கொண்டிருக்கும் குரோதத்திற்கு எவ்வித குறைவுமின்றி புட்டஃபிளிக்காவை பதவி நீக்கத்திற்கு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் தற்போது அழைப்பு விடுக்கின்றன. ஒருவேளை உடனடியாக புட்டஃபிளிக்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டால், பணியாளர்களை மாற்றியமைப்பதைத் தவிர ஆட்சியில் அடிப்படை மாற்றம் எதையும் செய்யாமல், அதன்மூலம் ஒரு ஒழுங்கான “மாற்றம்” செயல்படுத்தப்படும் என்பதை உறுதி செய்ய ஒரு பெரும் அரசியல் நடவடிக்கை தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Al Jazeera நேற்று, இந்த பிரமுகர்களின் கேவலமான சூழ்ச்சிகள் பற்றிய ஒரு கணக்கீட்டை வழங்கியது. மேலும் இது, மார்ச் 7 அன்று அல்ஜியர்ஸில், அலி பென்ஃபிலிஸ் ஸ்தாபித்த Talaie El Hourriyet கட்சியின் தலைமையகத்தில் முப்பது எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூட உள்ளனர் என்றும் தெரிவித்தது. Al Jazeera, புட்டஃபிளிக்காவின் கீழ் பணியாற்றியவரும், அத்துடன் அவரது “முதன்மை போட்டியாளராக 2015 இல்” இருந்தவருமான முன்னாள் பிரதமர் பென்ஃபிலிஸை பற்றி இராஜதந்திர ரீதியாக குறிப்பிடுகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில், தொழிலாளர் கட்சி (Workers Party-PT) தலைவி லூயிசா ஹனூன், கலாச்சார மற்றும் ஜனநாயகத்திற்கான பேரணியின் (Rally for Culture and Democracy - RCD) தலைவர் மொஹிசின் பெலப்பாஸ், அமைதிக்கான சங்கத்தின் இஸ்லாமிய இயக்க (Islamist Movement of Society for Peace - MSP) தலைவர் அப்தெரஸாக் மக்ரி மற்றும் ஏனைய பொது பிரமுகர்களும் அடங்குவர். RCD இன் பெலப்பாஸ் செய்தியிதழுக்கு, “இந்த ஆட்சியின் தன்மை பற்றி நாங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதுடன், இந்த நீடித்த அமைப்பின் உள்வெடிப்புக்குப் பின்னர் நாங்கள் ஸ்தாபிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
Al Jazeera, முவட்டானா மற்றும் ஜில் ஜதித் போன்ற அமைப்புக்கள் மட்டும் இந்த ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததையும், அவை கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே ஏனைய கட்சிகள் முதலில் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்ததாகவும் குறிப்பிட்டது. முவட்டானா மற்றும் ஜில் ஜதித் அமைப்புக்களும் கூட ஆட்சியின் அதிருப்தி கன்னைகளை சேர்ந்தவைகளாகும்; இந்த முவட்டானா குடை அமைப்பு புட்டஃபிளிக்கா ஆட்சியின் கீழ் மற்றொரு முன்னாள் பிரதமரால் உருவாக்கப்பட்டதாகும்.
கட்டுரை, “இந்த மாற்றத்திற்குரிய போக்கை கையாள” ஒரு “அரசியல் சட்டமன்றம்” அல்லது “தற்காலிக அரசாங்கம்” அமைக்கப்படுவதற்கான பிரேரணைகளை குறிப்பிடுகிறது. மேலும், அத்தகைய எந்தவொரு அரசியல் உருவாக்கமும், அதிகாரத்தில் உண்மையாக முடிவெடுப்பவர்களாக இருக்கும் எஞ்சியுள்ள ஜெனரல்களை கொண்டு தற்போதைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு போலி-ஜனநாயக முகப்பாக அது இருக்குமேயன்றி வேறொன்றுமாக இராது என்பதில் மட்டும் தொழிலாளர்களும் இளைஞர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நேற்று Financial Times பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் இராணுவ தலையீட்டிற்கு மறைமுகமாக அழைப்புவிடுத்த பென்ஃபிலிஸ் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டது என்பதுடன், இதையும் அவர் அறிவித்தார்: “மில்லியன்களாக மக்கள் வெளியேறி உள்ளனர், மேலும் தேசிய மக்கள் இராணுவம் (National Popular Army) அவர்களுக்கு செவி சாய்க்கத் தவறும் என்பதை என்னால் கற்பனையும் செய்து பார்க்கவும் முடியவில்லை.”
அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் தங்களது நலன்களை பாதுகாப்பதற்காக, வட ஆபிரிக்காவில் ஒரு முக்கிய எரிவாயு உற்பத்தியாளராகவும் புவி-மூலோபாய மையமாகவும் திகழும் அல்ஜீரியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்தும் தலையீடு செய்தும் வருகின்றன.
நேற்று, Economist பத்திரிகை, “பழையவர்களின் வெளியேற்றத்துடன்: அல்ஜீரியாவிற்கு எப்படி புத்துயிரூட்டுவது,” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு புட்டஃபிளிக்காவின் பதவி விலகலுக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இது, “மற்றொரு உள்நாட்டுப் போரை தடுப்பதற்குப் பதிலாக, அபாயங்களுக்கு எரியூட்டுவதாக இந்த ஆட்சி உள்ளது” என்று பதற்றத்துடன் எச்சரித்தது. தலைமையை மட்டும் நீக்கிய ஒரு ஆட்சியை பாதுகாக்கும், ஒரு மோசடியான “மாற்றத்திற்கான” அதே போன்ற அழைப்புக்களை New Yorks Times மற்றும் Le Monde போன்ற பத்திரிகைகளும் விடுத்திருந்தன.
Financial Times பத்திரிகை அதன் கட்டுரையின் தலைப்புச் செய்தியாக இதை பதிவிட்டது: “வளர்ந்து வரும் புட்டஃபிளிக்கா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க அல்ஜீரிய இராணுவம் அழுத்தம் கொடுத்தது: மிகவும் உடல் நலிவுற்ற ஜனாதிபதி ஐந்தாவது முறை பதவிக்கான வாய்ப்பை நாடும் நிலையில் அதில் இராணுவம் தலையீடும் செய்யும் என்ற ஊகங்களும் அதிகரிக்கின்றன.”
அதற்கு முந்தைய நாளில் மற்றொரு கட்டுரையில் Times பத்திரிகை, “அல்ஜீரிய எதிர்ப்புக்கள் ஹொஸ்னி முபாரக்கின் கடைசி நாட்களின் நினைவை புதுப்பிக்கின்றன” என்று தெரிவித்தது. மேலும் அது இவ்வாறு அறிவித்தது: “தேர்தல்கள் தற்போது தொடரலாம் என சிலர் நம்புகிறார்கள். மற்றொரு முன்னாள் விடுதலை படைத்துறை வீரரான இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஹ்மத் கைட் சலாஹ் ஐ தான் அது மிகுந்தளவு சார்ந்திருக்கக்கூடும். அதாவது எகிப்தைப் போல, அரசியல்வாதிகளுக்குப் பின்னால் இராணுவம் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும். இதற்கான ஒரு செயல் திட்டத்தை ஆயுதப் படைகள் கொண்டுள்ளனவா என்பதும் தெரியவில்லை.”
ஜெனரல் அல்-சிசி இன் கீழ் உள்ள எகிப்திய இராணுவத்தை Times பத்திரிகை குறிப்பிடுவது என்பது, ஒரு புரட்சிக்கும், கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் புரட்சியை குருதியில் மூழ்கடிக்கவும் இட்டுச் சென்றது என்பது ஒரு கடுமையான எச்சரிக்கையாக உள்ளது.
மேலும் இது, எகிப்தின் 2011 தொழிலாளர்கள் எழுச்சியின் அனுபவத்தில் இருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியல் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஏனென்றால், ஒரு புரட்சிகர, சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கு மற்றும் தலைமையை அவர்கள் கொண்டிராத நிலையில், தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த போராட்டங்கள் முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் அணிதிரண்டமையானது, எகிப்திய இராணுவம் அதன் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நிறைவேற்றவும் ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரத்தை மீண்டும் திணிக்கவும் வழி வகுத்தது.
மக்ரெப் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களின் அரசாங்கங்களுக்காக போராடுவது, மற்றும் தனியார் இலாபத்தைக் காட்டிலும், சமூகத் தேவைக்கு ஏற்ப சோசலிச மறுசீரமைப்பை மேற்கொள்வது என்ற வகையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக தற்போது இந்த திருப்பம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்குடன் கூடிய சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் அபிவிருத்திக்கு உதவும் வகையில், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவது மட்டும் தான் தற்போது முக்கிய பணியாக உள்ளது.