ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Algerian protests continue after Bouteflika launches presidential bid

புட்டஃபிளிக்கா ஜனாதிபதி பதவிக்கான முயற்சியை தொடங்கியதும் அல்ஜீரிய போராட்டங்கள் தொடர்கின்றன

By Will Morrow
5 March 2019

ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா பதவி விலக வேண்டுமென கோரி வருகின்ற பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அவர் பணியமாட்டார் என்றும், ஆளும் தேசிய சுதந்திர முன்னணி (FLN) ஐந்தாவது முறையாக பதவியைத் தக்க வைக்க புட்டஃபிளிக்காவை தேர்தலில் நிறுத்தும் என்றும் அரசு அறிவித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்களன்று அதிகாலையும் அல்ஜியேர்ஸிலும் ஏனைய பிரதான அல்ஜீரிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.


அல்ஜீரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்களில் ஒன்று

அவர்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க அனைத்து வேட்பாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவுதான் இறுதிக் காலக்கெடுவாக இருந்தது. புட்டஃபிளிக்கா சார்பாக ஆவணங்களைச் சமர்பிக்க, அவரின் உதவியாளர்கள் கடைசி நாள் வரையில் காத்திருந்தனர். 1999 இல் இருந்து பதவியில் இருந்து வருகின்ற 82 வயதான அவர், சுவிட்சர்லாந்தில் மருத்துவச் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. 2013 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில் இருந்து அரிதாகவே பொதுவிடங்களில் தென்பட்ட அவர், இப்போதெல்லாம் பொதுமக்கள் முன்னால் வருவதே இல்லை. பிரான்சுக்கான அல்ஜீரிய தூதர் CNews வலையமைப்புக்கு ஒரு பேட்டியில் நேற்று கூறுகையில், "நிச்சயமாக, அவர் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார்,” என்று உத்தரவாதங்களை வழங்க நிர்பந்திக்கப்பட்டார்.

போராட்டங்கள் பரவுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக ஞாயிறன்று மாலை தேசிய தொலைக்காட்சியில் புட்டஃபிளிக்காவின் ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டால், புட்டஃபிளிக்கா ஒரேயொரு ஆண்டு மட்டும் பதவியில் இருப்பார் என்றும் பின்னர் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும், அதில் அவர் போட்டியிட மாட்டார் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவையின் மீது தங்கியுள்ள ஆட்சியின் வெவ்வெறு கன்னைகள், ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து கலந்தாலோசித்து அடுத்த நபரைத் தேர்ந்தெடுக்க நோக்கம் கொண்டுள்ளன.

“அதன் அரசியலமைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தேசிய மக்கள் இராணுவம் அதன் அணிதிரள்வுக்காக" அதற்கு வணக்கம் செலுத்தி, புட்டஃபிளிக்காவின் கடிதம் உள்ளார்ந்து ஓர் அச்சுறுத்தலை உள்ளடக்கி இருந்தது. அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைச் சாந்தப்படுத்தும் ஒரு முயற்சியில், "தேசிய செல்வவளத்தை அதிக சமநிலையோடு மறுபங்கீடு செய்வதையும், அன்னியப்படுத்துவது மற்றும் சமூக பாரபட்சங்களை நீக்குவதையும் உத்தரவாதப்படுத்தும் மக்கள் கொள்கைகளை விரைவில் கொண்டு வருவதற்கான" ஒரு வெற்று வாக்குறுதியை அது வழங்கியது.

அந்த அறிவிப்பானது, ஞாயிறன்று மாலை, குறிப்பாக பெப்ரவரி 22 இல் இருந்து ஆர்ப்பாட்டங்களின் மையத்தில் இருந்து வரும் மாணவ இளைஞர்களிடையே போராட்டங்களைத் தூண்டியது. அல்ஜியேர்ஸ், திலெம்சென், கார்தியா மற்றும் பிற நகரங்களிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் "புட்டஃபிளிக்காவுக்கு ஐந்தாவது பதவிக்காலம் கிடைக்காது,” என்று கோஷமிட்டனர். போலிஸ் அல்ஜியேரிஸ் இல் மெட்ரோ, இரயில் நிலையங்களை மூடியது, கலகம் ஒடுக்கும் போலிஸ் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருந்து அரசியலமைப்பு கவுன்சில் கட்டிடம் வரையில் அணிவகுத்த மாணவர்களைக் கலைக்க நீர்ப்பீய்ச்சி வாகனங்களைப் பயன்படுத்தியது.

கடந்த இரண்டு வாரங்களில் தீவிரமடைந்துள்ள போராட்டங்கள், கடந்த வெள்ளிக்கிழமை நூறாயிரக் கணக்கானவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு இட்டுச் சென்றது. இத்தருணத்தில், இப்போராட்டங்கள் சமூகரீதியில் பலபடித்தான தன்மையைக் கொண்டுள்ளன; கோஷங்கள், அந்நாட்டின் 40 மில்லியன் மக்களின் அளப்பரிய சமூக சமத்துவமின்மை மீதான கோபத்தால் எரியூட்டப்பட்டிருந்தாலும் கூட, அவை பிரதானமாக புட்டஃபிளிக்காவை வெளியேற்றுவதை நோக்கியே திரும்பி உள்ளன.

இப்போராட்டங்கள் பரந்த வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான சமூக கோரிக்கைகளை மேலெழுப்பி ஒரு பரந்த தொழிலாள-வர்க்க இயக்கத்திற்குள் ஒன்றுதிரண்டு விடுமோ என்று ஆளும் வர்க்கம் பெரியளவில் அஞ்சுகிறது. அல்ஜீரியாவில் சமூக நிலைமைகள் வெடிப்பார்ந்து உள்ளன. சராசரி நடுத்தர வயது 28 ஆகவும், அவர்களுள் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்ளது. இப்போராட்டங்கள் ஏறத்தாழ முற்றிலுமாக சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டன என்பதோடு, ஆரம்பத்தில் இது எந்தவொரு அரசியல் கட்சியாலும் அழைக்கப்படவில்லை.

பல்கலைக்கழக பட்டதாரிகள் உட்பட மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு ஒரு கண்ணியமான எதிர்காலத்திற்கான எந்த சாத்தியக்கூறும் வாய்ப்பும் இல்லை என்பதோடு, ஆயிரக் கணக்கானவர்கள் நல்லதொரு வாழ்வைத் தேடி ஐரோப்பாவுக்கு செல்ல மத்தியத்தரைக் கடலை கடக்க முயல்கையில் மூழ்கி இறந்துள்ளனர். இதற்கிடையே, ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்களின் ஓர் அடுக்கு தொடர்ந்து தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்டுள்ளது.

பில்லியனர் இஸ்ஸாட் ரெபிராப் தலைமையிலான வேளாண் உணவு பண்டங்கள் மற்றும் விற்பனை நிறுவனமான செவிட்டால் (Cevital), கபிலியாயா பிராந்தியத்தில் செவிட்டால் நிறுவன செயல்பாடுகள் மீதான அரசு கட்டுப்பாடுகளை நீக்குமாறு கோருவதற்கு, வேலைவாய்ப்பின்மை மீதான கோபத்தை பற்றிக்கொண்டு, முன்னதாக சம்பந்தமில்லாமல் இன்று ஒரு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது. கடந்த டிசம்பரில் நடந்த முந்தையவொரு போராட்டம் ஆயிரக் கணக்கானவர்களை ஈர்த்திருந்தது. ஆனால் எந்தவொரு சமூக பிரச்சினைகளை மேற்கோளிடுவதும் அபாயகரமானதும் வெடிப்பார்ந்ததும் என அஞ்சி, செவிட்டால் நேற்று அப்போராட்டத்தை இரத்து செய்தது.

“துறைசார்ந்த கோரிக்கைகள் இது முதல்முறையல்ல,” என்று குறிப்பிட்ட செவிட்டால் நிறுவன அறிக்கை, “ஆட்சி மாற்றத்திற்கான" கோரிக்கையே நடந்துவரும் போராட்டங்களின் "பிரத்தியேகமான மற்றும் ஒரே கோஷமாக" இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொண்டது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழல்களோ, அல்ஜீரிய நிலைமை கட்டுப்பாட்டை மீறி கொண்டிருப்பதைக் குறித்து அதிகரித்தளவில் பதட்டத்துடன் உள்ளன. 1962 வரையில் அந்நாட்டை மூர்க்கமாக ஆட்சி செய்து வந்த பிரான்சின், Le Monde நேற்று, அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பின்னர், “அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா: மிகவும் குறைவானது, மிகவும் தாமதமானது" என்று தலைப்பிட்டு ஒரு தலையங்கம் வெளியிட்டது. அடுத்து பதவியேற்பவரை நியமிக்க புட்டஃபிளிக்கா ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியதில்லை, ஆட்சியைத் தக்க வைக்க —அதன் தலைமை பிரமுகர்கள் நீங்கலாக—இப்போதே பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று வாதிட்டது.

Le Monde குறிப்பிட்டது, “வீதிகளில் இறங்கியுள்ள நூறாயிரக் கணக்கான அல்ஜீரியர்கள் இதுவரையில் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டுடனேயே அதை செய்துள்ளனர்,” அதேவேளையில் போலிஸ் "கண்மூடித்தனமான ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுக்கக் கூடாது என்ற உத்தரவுகளைத் தெளிவாக பெற்றுள்ளது.” பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பகிரங்கமான அறிக்கைகள் வெளியிடவில்லை என்றாலும், அவர் அல்ஜீரிய நெருக்கடியைக் கண்காணிக்க ஒட்டுமொத்த இராஜாங்க விவகார எந்திரத்தையும் அணித்திரட்டி உள்ளார்.

மக்ரோன் அரசாங்கம், பிரான்சுக்கு உள்ளேயும் மற்றும் அதன் மிகப்பெரியளவிலான புலம்பெயர்ந்த அல்ஜீரிய மக்கள்தொகைக்கு உள்ளேயும் அப்போராட்டங்களின் தாக்கம் குறித்து ஆழமாக அஞ்சுகிறார். நடந்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் வெளிப்பட்டுள்ளவாறு சமூக சமத்துவமின்மை மீது பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தில் சீறிக் கொண்டிருக்கும் கோபத்திற்கு மத்தியில், பாரீசில் 6,000 பேர் உட்பட ஞாயிறன்று ஆயிரக் கணக்கானவர்கள் அல்ஜீரிய போராட்டங்களுக்கு ஐக்கியத்தை வெளிப்படுத்த பிரெஞ்சு நகரங்களில் போராட்டம் நடத்தினர். பிரான்சிலும் வடக்கு ஆபிரிக்காவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்தும் ஓர் இயக்கம் குறித்து பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அதிகளவில் அஞ்சுகிறது.

அளப்பரிய புவிசார்மூலோபாய நலன்கள் பணயத்தில் உள்ளன. அல்ஜீரியா, ஐயத்திற்கிடமின்றி வட ஆபிரிக்காவில் மிக அதிகளவில் எரிவாயு வளங்களைக் கொண்டுள்ளது, கடந்தாண்டு அதன் மொத்த எரிவாயு உற்பத்தி ஆபிரிக்காவிலேயே மிக அதிகமாக இருந்தது. ஸ்பெயினின் எரிவாயு தேவையில் பாதியைப் பூர்த்தி செய்து வரும் அது, ரஷ்யா மற்றும் நோர்வேக்கு அடுத்து, ஐரோப்பாவின் மிகப் பெரிய எரிவாயு வினியோகஸ்தராக விளங்குகிறது.

பிரெஞ்சு அரசோ, வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்கா எங்கிலும் அதன் போர்கள் மற்றும் உளவுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அல்ஜீரியாவைச் சார்ந்துள்ளது. ஆபிரிக்காவில் போர்கள் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் தோற்றுவிக்கப்பட்ட நிலைமைகளில் இருந்து தப்பிக்க ஐரோப்பாவுக்கு வர முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க, ஐரோப்பிய அரசுகளும் அவற்றின் குற்றகரமான முயற்சிகளுக்காக புட்டஃபிளிக்கா ஆட்சியைச் சார்ந்துள்ளன.

கடந்த இரண்டாண்டுகளில், பேஜோ-சித்ரோன், டொயோட்டா மற்றும் வோல்ஸ்வாகன் உட்பட வாகனத்துறை பெருநிறுவனங்கள் ஆபிரிக்காவில் வாகன உற்பத்தியை அதிகரிக்க உத்தேசித்து அல்ஜீரியா மற்றும் மொரொக்கோவில் உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. பிரான்ஸ் குறிப்பாக அல்ஜீரிய அரசாங்கத்துடன் சீனப் பொருளாதார உறவுகள் அதிகரித்து வருவதைக் குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளது. சீனாதான் இப்போது அல்ஜீரியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.

அல்ஜீரிய அரசாங்கம் உலக முதலாளித்துவ நெருக்கடியில் வேரூன்றிய ஆழமடைந்து வரும் பொருளாதார பிரச்சினைகளை முகங்கொடுக்கிறது. 1954-1962 அல்ஜீரிய போரில் பிரெஞ்சு காலனித்துவத்தை தோற்கடித்து அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் (FLN) தேசியவாத வேலைத்திட்டம், ஏகாதிபத்தியத்தால் வரலாற்றுரீதியில் அல்ஜீரியா ஒடுக்கப்பட்டதனால் விளைந்துள்ள எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்க இலாயக்கற்றுள்ளது.

20 ஆண்டுகளாக, சமத்துவமின்மை அதிகரித்திருந்த போதினும், உலகளவிலான பண்டங்களின் விலை உயர்வுகள், ஒரு சமூக வெடிப்பைத் தவிர்க்க அந்த அரசாங்கத்தை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வீட்டுவசதிகள், மருத்துவக் கவனிப்பு மற்றும் உணவு மானியங்களை வழங்க அனுமதித்திருந்தது. ஆனால் அல்ஜீரிய ஏற்றுமதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வருவாய் வழங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய்கள், 2007 இல் 74 பில்லியன் டாலரில் இருந்து 2017 இல் 24 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்தது, அதேவேளையில் எண்ணெய் விலைகளும் 2014 இக்குப் பின்னர் சரிந்தன. கடந்தாண்டு மானியங்களை வெட்ட அரசாங்கம் சூளுரைத்தது, ஆனால் பாரிய சீற்றத்தின் முன்னால் கடந்த நவம்பரில் அது பின்வாங்கியது.

இந்த ஆட்சி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பெருந்திரளான மக்களின் புரட்சிகர உணர்வுகளை ஒடுக்க உத்தியோகபூர்வ முதலாளித்துவ "எதிர்கட்சிகளின்" முற்றிலும் அடிமைத்தனமான இயல்பைச் சார்ந்துள்ளது. இந்த ஆட்சியின் தீவிர இடது எதிர்ப்பாளராக சித்தரிக்கப்படும் லூயிசா ஹனூன் தலைமையிலான தொழிலாளர் கட்சி (PT) தசாப்தங்களாக FLN ஐ ஆதரித்துள்ளது. கடந்த முறை 2014 இல் நடந்த தேர்தல்களில் தொழிலாளர் கட்சி, புட்டஃபிளிக்கா போட்டியிடக்கூடாது என்ற அழைப்பை எதிர்த்தது.

ஏப்ரல் தேர்தல்களை அது புறக்கணிக்கப் போவதாக தொழிலாளர் கட்சி இன்று அறிவித்தது. சொல்லப் போனால் தேர்தல்கள் நடக்குமா என்பதே தெளிவாக இல்லாத நிலைமைகளின் கீழ், மற்றும் புட்டஃபிளிக்கா வேட்பாளராக இறங்குவதைப் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் எதிர்க்கின்ற நிலைமைகளின் கீழ், தேர்தலில் போட்டியிடுவது அதை இன்னும் பகிரங்கமாக அம்பலப்படுத்தும் என்று அது கவலைக் கொண்டுள்ளது.

ஹனூன் Le Monde இன் வரிகளை எதிரொலித்து, புட்டஃபிளிக்காவின் இராஜினாமா "மட்டுந்தான் இக்கட்டான நிலைமையைத் தவிர்க்க ஒரே தீர்வு" என்று ஆட்சியை எச்சரித்தார். “புட்டஃபிளிக்காவின் வேட்புமனுவை சமர்பிக்கும் நடப்பு நடைமுறையில் கட்சிக்காரர்கள் விடாப்பிடியாக" இருந்தால், “எதிர்கால விளைவுகள் மற்றும் பெரும்பான்மையினரின் எதிர்நடவடிக்கைகள் எதுவும் முன்கூறவியலாது,” என்றார்.