Print Version|Feedback
Twelfth “yellow vest” protest marches against police repression in France
பிரான்சில் பன்னிரெண்டாவது "மஞ்சள் சீருடை" போராட்டம் போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக அணிவகுக்கிறது
By Anthony Torres
4 February 2019
இந்த சனிக்கிழமை “மஞ்சள் சீருடையாளர்களின்" 12 ஆவது போராட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களின் இயக்கத்தில் போலிஸ் காட்டுமிராண்டித்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தேசியளவில் 58,600 பேர் அணிவகுத்ததாக உள்துறை அமைச்சக புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டன. போர்தோவில் 4,000 ஆர்ப்பாட்டக்காரர்கள், லீல் நகரில் 2,000 பேர், மார்செய்யில் 2,000 பேர் பங்கெடுத்திருந்தனர், மார்செய்யில் மோசமான வீட்டு வசதியை எதிர்த்த மற்றொரு போராட்டத்தில் 2,500 பேர் அணிவகுத்தனர். பெரும் எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் அணிவகுத்த துலூஸில், போலிஸ் அதிகார வட்டம் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீட்டை வழங்க
“பன்னிரெண்டாவது ஆர்ப்பாட்டம் - போலிஸ் வன்முறைக்கு எதிராக வெண்மை அணிவகுப்பு"
வலென்சில், போலிஸ் அதிகார வட்டம் 5,400 மஞ்சள் சீருடையாளர்கள் ஒன்றுகூடிய ஒரு பிராந்திய கூட்டத்திற்கு எதிராக கனரக போலிஸ் படைப்பிரிவுகளை அணித்திரட்டியது.
ஸ்ராஸ்பேர்க்கில், பதிவு செய்யப்படாத ஓர் ஆர்ப்பாட்டத்தில் 8,000 பேர் போராடியதாக "மஞ்சள் சீருடை" பத்திரிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். அந்நாளில் பாதுகாப்பு படைகளுடன் பல மோதல்கள் நடந்தன, பாதுகாப்பு படை 19 நபர்களைக் கைது செய்தது.
அணிவகுப்பு பாரீசில் பாஸ்டி சதுக்கத்தை கடக்கிறது
பாரீசில் முந்தைய வாரத்தை விட அதிக "மஞ்சள் சீருடையாளர்கள்" அணிவகுத்தனர்—அக்குரென்ஸ் கலந்தாய்வு நிறுவனத்தின் தகவல்படி 13,800 பேர் கலந்து கொண்டிருந்தனர், 33 கைது நடவடிக்கைகளுடன் 21 பேர் காவலில் வைக்கப்பட்டனர். “ஒடுக்குமுறைக்கு எதிராக பெருமிதத்துடன் ஒன்றுபடுவோம்,” என்றும், “உங்கள் சொந்த மக்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்தாதீர்கள்,” என்றும், “பீன்-விதைத் தோட்டாக்கள் மற்றும் உடனடி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதை நிறுத்துங்கள்,” என்றும் எழுதப்பட்ட வாசகங்களுடன் போராட்டக்காரர்கள் அட்டைகளை ஏந்தியிருந்தனர், பீன்-விதை (Bean-Bag) தோட்டாக்களால் கண்களை இழந்த 20 க்கும் அதிகமான "மஞ்சள் சீருடையாளர்களை" குறிப்பிட்டு காட்டும் வகையில், “நாங்கள் கண்களை இழக்கிறோம், நீங்கள் குருடாக இருக்கிறீர்கள்,” என்ற வாசகங்களையும் ஏந்தியிருந்தனர். குடியரசு சதுக்கத்தில் மோதல்கள் ஏற்பட்டன. பீன்-விதைத் தோட்டாவினால் ஒருவர் முகத்தில் சுடப்பட்டதும், தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டதாக AFP குறிப்பிட்டது.
கடந்த நவம்பரில் "மஞ்சள் சீருடை" இயக்கம் தொடங்கிய பின்னரில் இருந்து முதல்முறையாக, தொழிற்சங்கங்கள் பெப்ரவரி 5 இல் ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதால், தொழிற்சங்கங்களின் சில அதிகாரிகள் அல்லது தொழிலாளர்கள் போராட்டம் (Lutte ouvrière – LO) போன்ற தொழிற்சங்கங்களுடன் கூட்டு சேர்ந்த குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் அதிகாரிகள் அந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். “மஞ்சள் சீருடை" போராட்டங்களின் குரல் வளையை நெரிப்பதற்கான பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்! என்ற WSWS இன் துண்டறிக்கையை LO அங்கத்தவர்கள் விமர்சிக்க முயன்றனர். ஆனால், பெருந்திரளான “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு விரோதமாக இருந்ததைப் போலவே அதிகரித்தளவில் ஒரு புதிய முன்னோக்கின் தேவையை உணர்ந்திருந்தனர்.
பாப்டிஸ்ட்
முதலாளித்துவத்திற்கு எதிராக அணிவகுத்து செல்வதாக தெரிவித்த ஒரு தற்காலிக தொழிலாளரான பாப்டிஸ்ட் உடன் உலக சோசலிச வலைத் தளம் பாரீசில் கலந்துரையாடியது: “நாங்கள் மக்ரோனை எதிர்க்கிறோம், அவரது சுதந்திர-சந்தை கொள்கைகளையும், அதனுடன் சேர்ந்து செல்லும் ஒவ்வொன்றையும் எதிர்க்கிறோம், இதன் அர்த்தம் முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்பதாகும், அதாவது அதிக தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகின்ற வணிக-சார்பு கொள்கைகள் அனைத்தையும் எதிர்க்கிறோம் என்றே கூற வேண்டும். நான் இப்போது வேலை தேடும் சந்தையில் உள்ளேன், நீங்கள் எந்தளவுக்கு அடிமட்டத்திற்குப் போகிறீர்களோ, அந்தளவுக்குத் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும். இந்த இயக்கம் மக்ரோனுக்கும் அவரின் அனைத்து சீர்திருத்தங்களுக்கும், முதலாளிமார்களுக்கும், இன்னும் இதர பிறவற்றிற்கும் உண்மையிலேயே முடிவு கட்டும் என்று நான் நம்புகிறேன். ... நாங்கள் வெல்வோம் என்று இப்போது நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
இந்த இரண்டு மாத கால போராட்டத்திலிருந்து அவர் என்ன படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொண்டிருக்கிறார் என்று பாப்டிஸ்ட்டை WSWS வினவிய போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “சொல்லப் போனால், என்ன செய்வது என்பதன் மீது ஒரு தெளிவான முன்னோக்கு இல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து குழுமிய பின்னர், நாங்கள் சிறிது மந்தமடைந்துள்ளோம். இன்னும் அதிக ஆக்ரோஷமான இயக்கத்தைக் கட்டமைக்க அங்கே நிறைய வழிகள் உள்ளன என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.”
நவம்பர் 13, 2018 இல் இருந்து இந்த ஆட்சி மக்கள் மீது 9,228 bean-bag தோட்டாக்களைப் பிரயோகித்துள்ளது.
“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளின் சர்வதேச தன்மையை பாப்டிஸ்ட் வலியுறுத்தினார்: “இதுவொரு சர்வதேச பிரச்சினையென நினைக்கிறேன், ஏனென்றால் ஒருவர் ஒவ்வொரு நாட்டிலும் சுதந்திர-சந்தை கொள்கைகளுக்கு எதிர்ப்பைக் காண்கிறார். ஆகவே பிரிட்டனில் இடது உள்ளது, அது மிகவும் பலமடைந்து வருகிறது. அமெரிக்காவில் ட்ரம்புக்கும் அனைத்து வகையான வெகுஜனவாத சக்திகளுக்கும் மற்றும் அது போன்றவற்றுக்கும் வாக்குகள் உள்ளது. ... பிரான்சில் நாம் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த கொள்கைகள் நம்மை எங்கேயும் முன்நகர்த்துவதாக இல்லை. கண்கூடாக என்ன நடந்து வருகிறது என்றால் 'மஞ்சள் சீருடையாளர்களின்' இயக்கம் தான், ஆனால் உண்மையில் இது எல்லா முதலாளித்துவ சமூகங்களிலும் நிலவும் ஒரு பொதுவான பிரச்சினை தான்,” என்றார்.
போராடுவதற்கான உரிமையை மறுக்கும் குண்டர்கள்-எதிப்பு மக்ரோனின் சட்டம் குறித்து வினவிய போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “அது சுதந்திரத்தைப் படுகொலை செய்கிறது. ... மனித உரிமைகளுக்கான அரசு என்றழைக்கப்படுவது அதன் உண்மையான முகத்தைக் காண்பிக்கிறது. உண்மையில் தொடக்கத்திலிருந்தே அது இவ்வாறு இருந்து வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம், பொலிஸ் ஒடுக்குமுறை மிகவும் பலமாக உள்ளது,” என்றார்.
இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பதாஹ் சிசி ஐ மக்ரோன் எகிப்தில் சென்று சந்தித்ததைக் குறித்து WSWS செய்தியாளர்கள் குறிப்பிட்ட போது, பாப்டிஸ்ட் பதிலளித்தார்: “ஆயிரக் கணக்கானவர்கள் சிறையில் வைத்திருக்கும் திகைக்க வைக்குமளவில் சர்வாதிகாரம் கொண்டிருக்கையில், நாம் அங்கே சென்று எதற்காக ஆயுதங்கள் விற்க வேண்டும்? அதன் மக்களை நசுக்க விரும்பும் ஓர் ஆட்சிக்கு இறுதியாக ஆயுதங்கள் வழங்க அவர் 'மனித உரிமைகள்' குறித்த நல்ல சொற்பொழிவுகள் வழங்குவார்.”
பெனுவா
Auvergne பிராந்தியத்திலிருந்து பாரீசுக்கு வந்திருந்த பெனுவாவையும் WSWS பேட்டி கண்டது: “நான் நல்வாழ்வின் பக்கம் நிற்கிறேன் ... என்னை ஆதரிக்கும் அனைவருக்காகவும் பேசவும் நான் இருப்பேன். அவர்களின் எதிர்ப்பு நீண்டகாலமாக, 25, 30 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. எனக்கு வயது 40. நாம் உலகில் வெறுமனே வாழவில்லை என்பதை நான் புரிந்து கொண்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லா விடயத்திலும், அநீதியே உலகளவில் உள்ளது. மக்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருப்பதும், அவர்கள் இப்போது மாதத்திற்கு 300 இல் இருந்து 400 யூரோவில் வாழ விடப்படுவதும் வழமையானதா?”
“மஞ்சள் சீருடையாளர்களை" எவ்வாறு சமாதானப்படுத்துவது என்பதன் மீது ஒரு "மாபெரும் தேசிய விவாதம்" நடத்துவதற்கான மக்ரோனின் திட்டம் குறித்து வினவிய போது, அவர் கூறினார்: “நான் 25 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நம்முடைய வாழ்க்கை குறித்து அவர்களுக்கு எந்த யோசனையும் இல்லை. ஒரு தொழிலாளியின் வாழ்க்கை அல்லது விவசாயியின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அருமையான வசனங்களை வைத்திருக்கிறார்கள், ஆனால் நாங்கள் நிஜமான நடவடிக்கையை விரும்புகிறோம். அதனால் தான் நாங்கள் ஓர் இயக்கத்தை ஒழுங்கமைத்து வருகிறோம். இந்த பூமியில் நல்ல முறையில் வாழ, உணவருந்த, கண்ணியமான வீட்டுவசதியைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது,” என்றார்.
“இந்த வாரத்தில் எங்களைக் குறித்து அவர்கள் ஒரு மாபெரும் தேசிய விவாதம் நடத்துகிறார்கள், வாரயிறுதியில் எங்களைச் சுட்டுத் தள்ளுவார்கள்.”
ஓர் உண்மையான ஜனநாயகமே அவரின் இலக்கு என்று பெனுவா தெரிவித்தார்: “ஒவ்வொருவரும் அதிகாரத்தை எடுக்க வேண்டும், ஒவ்வொன்றும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். நமது குரலை நாம் ஒலிக்க வேண்டும். ... நம்முடைய வாழ்க்கை பிரச்சினைகளையும், அர்த்தமற்ற அவலத்தையும் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கக் கூடிய இடத்தில் நாங்கள் தான் இருக்கிறோம்,” என்றார். ஐரோப்பிய தேர்தல்களில் "மஞ்சள் சீருடையாளர்களின்" வேட்பாளர் பட்டியல் எதை உருவாக்கும் என்பதில் அவரது ஐயப்பாட்டை அவர் சேர்த்துக் கொண்டார்: “என்னுடைய பார்வையில், சில காலத்திற்குப் பின்னர் அவர்களும் எல்லோரும் விலைக்கு வாங்கப்படுவார்கள்.”
“நாங்கள் 'ஜனநாயக' ரப்பர் தோட்டாக்கள், ஊனமாக்கும் கையெறிகுண்டுகள், கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் லத்திகளை எதிர்த்து நிற்கிறோம்,” என்று ஆர்ப்பாட்டத்தில் இருந்த ஓர் அறிவிப்பு.
நாளைய ஒருநாள் போராட்ட வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்திருக்கும் தொழிற்சங்கங்களது பாத்திரம் குறித்து வினவிய போது, பெனுவா பின்வருமாறு பதிலளித்தார்: “எனக்கு இந்த தொழிற்சங்கங்களின் மீது நம்பிக்கை இல்லை. நான் ஆலைகளில் பணியாற்றி உள்ளேன், அவை நிர்வாகத்தைச் சார்ந்திருப்பதை தெளிவாக நீங்கள் பார்க்கலாம். அவை என்ன செய்து கொண்டிருக்கின்றனவோ அதை தவிர வேறொன்றும் அவை வித்தியாசமாக செய்யப் போவதில்லை.”
கியோம்
இந்த கருத்தை Eure-and-Loir துறையைச் சேர்ந்த உலோகத்துறை தொழிலாளரான கியோமும் பகிர்ந்து கொண்டார், அவர் "நம்மில் காயமடைந்தவர்கள், ஊனமடைந்தவர்கள் மற்றும் நம்மில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி" செலுத்துவதற்காக போராடி வருவதாக தெரிவித்தார். "அதில் நம்மில் யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், நாம் அமைதிவாதிகளோ இல்லையோ, நாம் போராட்டத்தின் உக்கிரமான இடத்திற்குச் செல்கிறோமோ இல்லையோ, நம் மீது சுடப்படுகிறது. ஆகவே இந்த இயக்கத்தில் ஊனமடைந்த நமது சக போராட்டக்காரர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக இப்போது நாங்கள் இங்கே இருக்கிறோம்,” என்றார்.
தொழிற்சங்கங்களை நம்பவில்லை என்று கூறிய கியோம், “நாம் ஓர் அழுகிய அரசியல் அமைப்புமுறையை முகங்கொடுக்கிறோம் இதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, இந்த தொழிற்சங்க அமைப்புமுறையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவை எங்களை ஆதரிக்கவில்லை, அவை எங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. ... இதற்கு முன்னர், எங்களின் பெற்றோர் காலத்தில், நிறுவனங்களில் இருந்த பலரும் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றோ ... தொழிலாளர்களில் 10 சதவீதத்தினர் கூட தொழிற்சங்கங்களில் இல்லை. சில கேள்விகளைத் தொழிற்சங்கங்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
கியோம் இன்றைய போராட்டங்களின் சர்வதேச தன்மையையும் சுட்டிக் காட்டினார்: “நாம் மற்ற நாடுகளைக் குறித்து போதுமானளவுக்குப் பேசவில்லை, உண்மையில், பல நாடுகளில் விடயங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கம் இன்றியமையா விதத்தில் ஒரு தேசிய அடித்தளத்தில் தான் தொடங்கியது, ஒருவேளை அது முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் எங்களின் சிறிய பிரான்சைக் குறித்து சிந்தித்திருக்கலாம், ஆனால் சொல்லப்போனால் விடயங்கள் இன்னும் கூடுதலாக அதையும் கடந்து செல்கின்றன. நாம் மிகப் பெரியளவிலான சர்வதேச நலன்களால், அடிப்படையில் வங்கிகளால், ஆளப்பட்டு வரும் ஒரு காலத்தில் இருப்பதைக் காண்கிறோம். நாம் மனிதர்களாகவே நடத்தப்படுவதில்லை, உலகெங்கிலுமான மக்கள் போதியளவுக்கு பொறுத்து இருந்து விட்டார்கள்,” என்றார்.