Print Version|Feedback
French “yellow vests” applaud workers’ struggles against social inequality
பிரெஞ்சு "மஞ்சள் சீருடையாளர்கள்" சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களைப் பாராட்டுகின்றனர்
By Anthony Torres
29 January 2019
பிரான்சின் உள்துறை அமைச்சக தகவல்களின்படி, “மஞ்சள் சீருடையாளர்களின்" பதினோராவது வார போராட்டத்தில் சுமார் 69,000 பேர் பங்கெடுத்திருந்தனர். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முன்மொழிந்த "மாபெரும் தேசிய விவாதத்தை" அவர்கள் நிராகரித்திருப்பதாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், உலகெங்கிலுமான சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.
“மஞ்சள் சீருடையாளர்கள்" உடனான விவாதங்கள், மக்ரோன் மற்றும் வங்கிகள் மீதான பரந்த எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு ஒரு வழியைக் காண்பதற்கான பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
பிரதான மாகாணங்களின் நகரங்கள்—குறிப்பாக துலூஸ் மற்றும் போர்தோ—மாபெரும் போராட்டங்களைக் கண்டன, அங்கே முறையே 10,000 மற்றும் 6,000 பேர் திரண்டிருந்தனர். பொலிஸ் உடனான மோதல்கள் அந்நகரங்களில் எண்ணற்ற கைது நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. டிஜோன், மொன்பெலியே, அவினியோன், நாந்தேர், லியோன் மற்றும் ஈவ்று ஆகிய இடங்களிலும் பொலிஸூடன் மோதல்கள் நடந்தன, பொலிஸ் வட்டாரங்களின் தகவல்படி அங்கே இரண்டு கார்கள் எரிக்கப்பட்டதுடன், பிரெஞ்சு மத்திய வங்கி கட்டிடம் தாக்கப்பட்டது.
போராட்டங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக, மார்சைய்யில் "மஞ்சள் சீருடையாளர்கள்" அனைவரும் "போராட்டத்தை ஐக்கியப்படுத்துவதற்கு" அழைப்புவிடுத்து, ஒருமித்து அணிவகுத்தனர். அங்கே சுமார் 4,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மார்சைய்யில் பொலிஸ் திடீரென வீசிய கண்ணீர் புகைக்குண்டுக்கு அருகில் குழந்தையை கொண்டு செல்லும் வண்டியுடன் நின்றிருந்த ஒரு சுற்றுலா தம்பதியினரை மீட்க போராட்டக்காரர்கள் தலையிட்டனர்.
அந்த இடத்தில் இருந்த இலிஸ் Sputnik News இக்குப் பின்வருமாறு கூறினார்: “நாங்கள் பாட்டு பாடியவாறு பழைய துறைமுகத்திற்கு அருகே அணிவகுத்து... சென்று கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் நல்ல உத்வேகத்துடன் இருந்தோம். கலகம் ஒடுக்கும் பொலிஸ் போராட்டத்தைச் சாலையின் குறுக்காக நிறுத்தி, அதைச் சுற்றி வலப்புறமும் இடப்புறமும் ஆயத்தமானார்கள். எந்த காரணமும் இன்றி ஒரு பொலிஸ்காரர் ஒரு கையெறிகுண்டை வீசிய வரையில் அங்கே அனைத்தும் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.”
நண்பகல் வரையில் மோதல்கள் நடந்தன. பாரீசில் 66 பேர் உட்பட, மொத்தத்தில், பிரான்ஸ் எங்கிலும் 300 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கே 4,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் தெரிவித்தது.
பல்வேறு அணிவகுப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன—சாம்ப்ஸ்-எலிசே மற்றும் பாஸ்டி சதுக்கத்திற்கு இடையே ஒரு அணிவகுப்பும், மற்றொன்று தேசிய சதுக்கத்திற்கும் பாஸ்டி சதுக்கத்திற்கும் இடையேயும், இறுதியாக "தொலைதூர பகுதிகளின் மஞ்சள் சீருடையாளர்களுடனான நல்லிணக்கத்திற்காக ஒரு அணிவகுப்பு" வெளிநாட்டு அமைச்சகத்திலிருந்து தொடங்கி பேஸ்புக்கின் பாரீஸ் தலைமையகம் வரையில் செல்லவும் பொலிஸ் அனுமதிபெற்றிருந்ததாக ஒருவர் தெளிவுபடுத்தினார்.
போராட்டங்கள் தொடங்கியதற்குப் பின்னர் முதல்முறையாக, “மஞ்சள் சீருடையாளர்கள்" ஒரு "மஞ்சள் இரவு" போராட்டங்களைத் தொடர குடியரசு சதுக்கத்தில் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். பொலிஸ் தொடர்ச்சியான கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, அந்த நிகழ்வை முறித்தது.
அன்றைய நண்பகலுக்கு முன்னதாக, இந்த போராட்டங்களில் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த "மஞ்சள் சீருடையாளர்களுக்கான" செய்தி தொடர்பாளர் எரிக் துருவேயின் சக-கூட்டாளி ஜெரோம் ரொட்ரிக்கேஸ் க்கு, அவர் நின்றிருந்த இடத்திலிருந்து ஐந்து மீட்டருக்கும் குறைவான தூரத்தில் பொலிஸ் வீசிய கையெறி குண்டு வெடித்து ஒரு கண் இழப்பு ஏற்பட்டது. அவர் அவசர அறுவைச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
“மக்ரோன் பணக்காரர்களுக்கு தான் ஆதரவாக உள்ளார், ஏழைகளுக்கோ, ஓய்வூதியதாரர்களுக்கோ, ஊனமுற்றவர்களுக்கோ இல்லை என்பதால், நம் நாட்டில் சமூக நீதி, வரி மற்றும் பொருளாதார நீதிக்காக" போராடி வரும் ஒரு உணவக விடுதி சேவகி Quyn உடன் WSWS பாரீசில் உரையாற்றியது. “நாங்கள் மக்ரோனின் இராஜினாமாவைக் கோரி வருகிறோம்,” என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.
சமூக சமத்துவமின்மை மற்றும் எதேச்சதிகாரத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வளர்ந்து வருவதை Quyn பாராட்டினார்: “இந்த இயக்கம் உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வருகிறது — சான்றாக, புர்க்கினா பாசோவில் சிவப்பு சீருடைகள் போராட்டங்கள் உள்ளன; பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் கனடாவில் எங்கெங்கிலும் நடக்கின்றன. இந்த இயக்கம் பல்வேறு வடிவங்களில் தொடருமென்றே நான் நினைக்கிறேன். இது ஒவ்வொருவரையும் விழித்தெழ வைத்து நமது சகாப்தத்தில் கோலோச்சும் பிரதான சக்திகளின் சர்வாதிகாரங்களுக்கு எதிராக போராட ஊக்கப்படுத்துகிறது. உலகெங்கிலும் ஒவ்வொருவரும் விழித்தெழுவார்கள் என்று நம்புகிறேன்.”
உலகெங்கிலும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையை சுட்டிக்காட்டிய ஆக்ஸ்ஃபோம் அறிக்கை குறித்து Quyn கூறுகையில், “செல்வவளத்தின் பெரும்பகுதியை சிறிய சிறுபான்மையினர் சொந்தமாக்கிக் கொண்டிருப்பது மோசடியானது. பொருளாதார, சமூக மற்றும் வரி முறையானது இந்த தலைமை செயலதிகாரிகள் அனைவரையும் அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும் பணத்தைச் செலுத்துமாறு செய்ய வேண்டும், செல்வவளத்தைப் பங்கீடு செய்ய வேண்டும், தொழிலாளர்கள் வாழ்வதற்கேற்ற கண்ணியமான சம்பளம் பெறும் வகையில் அவர்களுக்குப் பரவலாக வழங்கப்பட வேண்டும்,” என்றார்.
"மக்களை அடிமைப்படுத்துவதற்கு எதிரான இயக்கங்கள் அனைத்தையும் மற்றும், சுதந்திரச் சந்தை முதலாளித்துவம் மற்றும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் செல்வந்தத்தட்டுக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மஞ்சள் சீருடையாளர்களைப் போல கிளர்ந்தெழும் அனைவரையும்" அவர் ஆதரிப்பதாக வலியுறுத்தினார். அவர் தொடர்ந்து கூறினார்: “மக்களுக்கு வேறொரு வாழ்வை வழங்க நம்மால் போதுமானளவுக்கு உற்பத்தி செய்ய நமக்கு போதிய சக்தி இருக்கிறது என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க ... நாம் இப்போது கிளர்ந்தெழ வேண்டும். நம்மிடம் அவை அனைத்தும் உள்ளன, ஆனால் அரசாங்கங்களும் தலைவர்களும் நம்மிடம் என்ன இருக்கின்றன என்பதை மறைக்கிறார்கள், வாழ்வதற்குப் போதுமானளவுக்கு நம்மிடம் இல்லை என்கிறார்கள், ஆனால் உண்மையில் ஒவ்வொன்றும் மக்களுடையது தான், எல்லாம் மக்களுடையதும் தான். இந்த போராட்டத்தில் ஜெயிப்பது அவர்கள் வசம் உள்ளது,” என்றார்.
லிமோஜில் இருந்து பயணப்பட்டு வந்திருந்தவரும் தொழில்துறை பராமரிப்பு பிரிவில் பணியாற்றுபவருமான ரூடிஸ் என்பவரை WSWS செய்தியாளர்கள் பேட்டி கண்டார்கள்: “நமக்கு ஒரு நல்ல செல்வவள பங்கீட்டு முறை தேவைப்படுகிறது,” என்ற அவர், “தேவைப்படுபவர்களுக்கு அதை வினியோகிப்பது மிகவும் சுலபமானது தான். ஒட்டுமொத்த உலகையும் மாற்றுவது நல்லதே. செவிலியர்கள், ஓய்வூதியதாரர்கள், அடிப்படையில் ஒவ்வொருவரும் இங்கே இருக்கின்றோம்.”
“மாபெரும் தேசிய விவாதம்,” மீது ரூடிஸ் குழப்பத்திற்கிடமின்றி விரோதத்துடன் இருந்தார்: “அது வெறும் பேச்சு. அங்கே நாம் சுதந்திரமாக செல்ல முடியாது, நாம் விரும்பியதை நம்மால் கூற முடியாது... எது எப்படியோ, பல ஆண்டுகளாக அனைத்துமே வெறும் பேச்சாக இருந்து வருகிறது,” என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு ரூடிஸ் அழைப்பு விடுத்தார். “அதுவொரு நல்ல யோசனையாக இருக்கும்,” என்று கூறிய அவர், “ஐரோப்பிய மக்கள், ஐரோப்பியர்கள் உலக மக்களுக்கு இடையே கூட நாம் தேர்ந்தெடுக்கும் போக்கில் ஐரோப்பாவை மாற்றிக் கட்டமைப்பதற்கான ஒரு வழியாகும். அது நம்மால் முடிந்தால், அது வெறுமனே நம்மால் மட்டுமே ஆனதாக இருக்காது என்பதால் அதுவே சரியானதாக இருக்கும். ஆபிரிக்காவிலும் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நிறைய குறை கூற வேண்டிய அவசியமில்லாத ஒரு நாட்டில் நாம் இருப்பதாக ஒருவர் கூறலாம், ஆனால் ஆபிரிக்காவை மற்றும் அது போன்ற சூறையாடலை நிறுத்த, பெருமையோடு எதிர்த்து நிற்க முடிந்தால் ஒவ்வொருவருக்கும் நல்லதாக இருக்கும்,” என்றார்.
தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம் மற்றும் "மஞ்சள் சீருடையாளர்கள்" குறித்த அவற்றின் நிலைப்பாடுகள் மீது ரூடிஸ் கூறினார்: “தொழிற்சங்கங்கள் இரகசிய அரசியல்வாதிகளாக உள்ளன. அவை வெறுமனே அவற்றின் சொந்த நலன்களுக்காக உடன்படிக்கைகளைச் செய்கின்றன. நான் 50 தொழிலாளர்கள் உள்ள ஒரு ஆலையில் வேலை செய்கிறேன் ஆனால் அங்கே இரண்டு தொழிற்சங்கங்கள் உள்ளன. அவை எங்களுக்கு ஒன்றும் பெற்றுத் தருவதில்லை. தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் ஆலைகளில் சொகுசாக உட்கார்ந்து கொள்ள முடிகிறது.”
“குறிப்பிட்ட பிரச்சினைகள் மீது பிரெஞ்சு மக்களே முடிவெடுக்க அனுமதிக்கும், மக்களின் நலன்களுக்கு விரோதமான சட்டங்களை நீக்கவோ அல்லது சட்டங்களை முன்மொழியவோ அனுமதிக்கும், அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால் அவரின் பதவியைப் பறிப்பதை அனுமதிக்கும், மக்கள்-நடத்தும் வெகுஜன வாக்கெடுப்பை" ஏற்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த ஸ்ரெபானும் WSWS உடன் உரையாடினார். அவர் தொடர்ந்து கூறினார்: “பிரான்சின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு மக்கள் ஒன்றுகூடுகின்றனர், அது ஆர்வத்திற்குரியதாக உள்ளது, அங்கே மக்கள் விவாதிக்கிறார்கள், கற்றுக் கொள்கிறார்கள் அல்லது அரசியல்ரீதியில் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள், ஏனென்றால் நாம் நீண்ட நாட்களாக அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு வந்துள்ளோம்,” என்றார்.
மக்ரோன் முன்மொழியும் இந்த "மாபெரும் தேசிய விவாதத்தில்" இருந்து தொழிலாளர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்று ஸ்ரெபான் வலியுறுத்தினார்: “திரு. மக்ரோனின் தேசிய விவாதம் குறித்து 'மஞ்சள் சீருடையாளர்களுக்கு' எந்த கவலையும் இல்லை. இது அவரின் பெருமைபீற்றுவதற்குரிய ஒரு தேசிய விவாதமாக இருக்கும். ஐரோப்பிய தேர்தல்கள் விரைவில் வரவிருக்கின்றன. இதுவொரு மக்கள் தொடர்பு நடவடிக்கை.”
ஐரோப்பிய தேர்தல்களுக்கு ஒருமித்த "மஞ்சள் சீருடையாளர்களின்" வேட்பாளர் பட்டியல் ஒன்றை முன்வைப்பதற்கான முயற்சிகளை அவர் எதிர்ப்பதாக ஸ்ரெபான் WSWS இக்குத் தெரிவித்தார்: “ஐரோப்பிய தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னெடுக்கையில், சில 'மஞ்சள் சீருடையாளர்கள்' அதில் இணைய முயன்று வருவதை இப்போது நாம் பார்க்கிறோம். 'மஞ்சள் சீருடையாளர்களின்' பரந்த பெரும்பான்மையினர் முற்றிலும் அதற்கு எதிராக உள்ளனர்... நாங்கள் கட்சிக்காரர்கள் இல்லை, ஏனென்றால் 'மஞ்சள் சீருடை' என்பது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இயக்கமாகும்,” என்றார்.