ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan SEP public meetings to launch Tamil edition of The Russian Revolution and the Unfinished Twentieth Century

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழ் பதிப்பை வெளியிடுவதற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளது

7 February 2019

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழ் மொழிப் பதிப்பை வெளியிடுவதற்காக தொடர் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளது. இந்த புத்தகம் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வெளியீட்டகமான தொழிலாளர் பாதை வெளியிட்டுள்ளது. பெப்பிரவரி 24 அன்று மத்திய பெருந்தோட்ட நகரான ஹட்டனிலும், மார்ச் 1 அன்று வட இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் எழுதிய இந்த நூல், 2014 நடுப்பகுதியில் ஆங்கிலத்திலும் இலங்கையில் அதன் சிங்கள மொழிபெயர்ப்பு 2016 முற்பகுதியிலும் வெளியிடப்பட்டன. இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள், 1917 இல் ரஷ்யப் புரட்சி மற்றும் அதை அடுத்து வந்த சோவியத் ஒன்றியத்தின் சீரழிவு பற்றிய திரிக்கப்பட்ட பல பொய்களை தீர்க்கமாக அம்பலப்படுத்தியுள்ளது.

நோர்த்தின் புத்தகத்தில் அடங்கியுள்ள மார்க்சிச பகுப்பாய்வின் முக்கியத்துவம், ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கங்கள் மற்றும் பெருவர்த்தகர்களால் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக, உலகம் பூராகவும் வெடிக்கும் தொழிலாளர் போராட்டங்களின் மூலம் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழாக்கம் ஹட்டனில் வெளியிடப்படுவது குறிப்பாக முக்கியத்துவமானதாகும். ஹட்டன், இலங்கையின் தேயிலை பெருந்தோட்டத் துறையின் மையத்தில் அமைந்துள்ளதோடு பெரும்பான்மையான தொழிலாளர் படையினர் தமிழ் பேசுகின்றனர். கடந்த ஆண்டு முடிவில் பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்ததுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். இந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே வேளை, சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வழிகாட்டலில், ஹட்டனில் எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், சிறந்த ஊதியம், வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கான தமது போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக ஒரு சுயாதீனமான குழுவை அமைத்து பதிலளித்தனர்.

இலங்கையின் கொடூரமான உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும், தீவின் வடக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டினரும் யாழ்ப்பாணத்திலும் அருகிலுள்ள நகரங்களிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யக் கோரியும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரியும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ரஷ்ய புரட்சியின் இன்றியமையாத பாடங்களை புரிந்து கொள்ள முயலும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளும், சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டங்களுக்கு வருகை தந்து, இந்த அத்தியாவசிய புத்தகத்தை பற்றிய கலந்துரையாடலிலும் பங்கேற்க வேண்டும்.

கூட்ட விபரங்கள்

ஹட்டன்:

பெப்ரவரி 24, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி

ஹட்டன் நகர மண்டபம்

 

யாழ்ப்பாணம்:

மார்ச் 1, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி

வீரசிங்கம் மண்டபம்

எதிர்கால கூட்டங்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.