Print Version|Feedback
ආන්ඩුවේ ව්යවස්ථා සම්පාදන පාජාව සහ අව්යාජ ප්රජාතන්ත්රවාදී අයිතීන් සඳහා අරගලය
இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு பாசாங்கும் உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமும்
By K. Ratnayake
16 January 2019
கொழும்பு அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போர்வையில் முன்னெடுத்து வரும் மோசடி கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபை எனப்படுவதன் கூட்டத்தில் அம்பலத்துக்கு வந்தது. தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் இந்த புரட்டுக்கும் இடையில் எந்த தொடர்பும் கிடையாது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமை அரசியல் அமைப்பு சபையாக கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு, "நிபுணர்களால்” தயாரிக்கப்பட்டது என கூறப்படும் அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளதும் உடன்பாட்டில் 2016 மார்ச் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு சபையின் செயற்குழு, மூன்று வருடங்கள் காலம் கடத்திய பின்னரும் இன்னமும் உத்தேச வரைவைக் கூட முன் வைக்கவில்லை.
வெள்ளிக்கிழமை கூடிய சபைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருக்க வேண்டிய போதிலும், அன்று கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒன்றை விட குறைவானதாகும். 56 பாராளுமன்ற உறுப்பினர்களே வருகை தந்திருந்தனர். "மக்கள் பிரதிநிதிகள்" என தம்மை மிகைப்படுத்திக்கொள்கின்ற, நாட்டின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தங்களுக்கு மக்கள் ஆணை இருப்பதாக பிதற்றிக் கொள்கின்ற இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயக உரிமைகள் தொடர்பாக இருக்கும் நிலைப்பாடு இவ்வாறே வெளிப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பான ஆரவாரங்கள், 2015 ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவை முன்னிலைப்படுத்திய வலதுசாரி அரசியல் இயக்கத்தினாலேயே புதிதாக தொடங்கப்பட்டன. அந்த இயக்கம், முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில், 1978 தொடக்கம் அமுலில் இருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை உட்பட 60 ஆண்டு கால முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு எதிராகக் குவிந்த வெகுஜன எதிப்பை திசைதிருப்பிவிடும் நோக்கில், புதிய அரசியலமைப்பை உருவாக்கி பாராளுமன்றத்தை பலப்படுத்தும் "நல்லாட்சியை" ஸ்தாபிப்பதாக வாக்குறுதியளித்தது.
யுத்தத்தினால் ஏற்றப்படுத்தப்பட்ட பாரிய அழிவு, சமூக நிலைமைகள், வாழ்க்கை நிலைமகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கியமை உட்பட இராஜபக்ஷ அரசின் சகல கொடூரங்களையும், அவரது மற்றும் அவரை சூழ்ந்திருந்த துஷ்டர்களின் தனிப்பட்ட சீரழிவாக மிகைப்படுத்தப்பட்டது. சிறிசேன, ஒரு தொகை போலி வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வென்றபோது, புதிய அரசியலமைப்புக்கான "மக்கள் ஆணை" கிடைத்துள்ளது என, அவரை சூழ்ந்திருந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.
நல்லாட்சி வாக்குறுதிக்கு பின்னால் வேறொரு பிற்போக்கு வேலைத்திட்டமே செயற்பட்டது. அதாவது, அமெரிக்கா, விக்ரமசிங்கவினதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினதும் உதவியுடன், சிறிசேனவை முன்னிலைப்படுத்தி இராஜபக்ஷவை வெளியேற்றும் ஆட்சி மாற்றத்தை செயற்படுத்தியது. இராஜபக்ஷவின் யுத்தத்திற்கும் ஜனநாயக விரோத ஆட்சிக்கும் ஆதரவு வழங்கிய வாஷிங்டன், அவர் சீனாவிடமிருந்து முதலீடு, கடன் மற்றும் யுத்த தளவாடங்களை பெற்றுக்கொள்ளவதற்காக உறவுகளை ஏற்றப்படுத்திக்கொண்ட போது, அவருக்கு எதிராகத் திரும்பியது. பெய்ஜிங்குடன் அவர் ஏற்றப்படுத்திக்கொண்ட உறவை நிறுத்தி, சீனாவிற்கு எதிரான தமது யுத்தத் தயாரிப்புகளுடன் இலங்கையை உள்வாங்கிக்கொள்வதே அமெரிக்காவின் தேவையாக இருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட முதலாளித்துவ கட்சிகளும், போலி இடது குழுக்களும் சிவில் சமூக செயற்றப்பட்டாளர்களும் ஒன்றாக சேர்ந்தே இந்த ஆட்சி மாற்றத்திற்கு ஜனநாயக முலாம் பூசின.
அரசியல் அமைப்பு சைபையை ஆரம்பித்த தினத்தன்று, விக்ரமசிங்க, "சகல கட்சிகளின் இணக்கத்துடன்" இதுபோன்றதொரு சபையை அமைத்தது இதுவே முதல் சந்தர்ப்பம் என வருணித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதை தமிழ் முதலாளித்துவத்தின் வரப்பிரசாதங்களுக்காக பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பமாக கருதி, அதில் பங்கெடுத்துக்கொண்டு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனக் கூறியது. "நடைமுறையிலிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்த சர்வாதிகார அரசியலமைப்பை" போலியாக தாக்கிப் பேசிய ஜே.வி.பி., கடந்த காலத்தில் ஜனாதிபதிகளுக்கு எதேச்சதிகாரத்தை பயன்படுத்த உதவியமை உட்பட, தாம் செய்த ஜனநாயக விரோதச் செயல்களை மூடி மறைப்பதற்கு முயன்ற அதேவேளை, புதிய அரசியலமைப்புக்கு வழி கிடைத்துள்ளதாக கொண்டாடியது.
இந்த அனைத்து கட்சிகளதும் "இணக்கப்பாடு" கூட மிகைப்படுத்தலாகும். கடந்த மூன்று வருடகாலமாக இந்த கட்சிகள் கூறியவற்றையும் செய்தவற்றையும் ஒரு புறம் வைத்தாலும், ஒரு சில தினங்களுக்கு முன்னர் செயற் குழுவின் வரைவு முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட உடனேயே, அவற்றின் சிங்கள இனவாத ஆலைகள் இயங்க ஆரம்பித்தன. நாட்டை பிளவுபடுத்தும் ஒரு அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜபக்க்ஷ குற்றம்சாட்டினார். இன்னுமொரு அறிக்கையில், நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் "முன்று ஆபத்துக்களில்" ஒன்று என்னவெனில், அது நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரமான அரசியலமைப்பே, என அவர் குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கை பிரித்து கொடுக்கப் போவதாகவே அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை கூட்டத்தில் இதற்கு பதிலளிக்கும்போது, அரசியலமைப்பு வரைவொன்று இன்னமும் தயாரிக்கப்படவில்லை என விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், அவருடைய அரசின் அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடு அப்பட்டமான மோசடி என்பதே அம்பலத்திற்கு வந்துள்ளது. நாட்டை பிளவுபடுத்த தாம் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பௌத்த மதத்தின் முதன்மை ஸ்தானத்தையும் அப்படியே வைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். சிறிசேன, விக்கிரமசிங்க, இராஜபக்ஷ உட்பட இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சகல குழுவினரும், சிங்கள இனவாத விஷத்தில் மூழ்கிப் போனவர்கள் ஆவர்.
அக்டோபர் மாத இறுதியிலிருந்து இரண்டு மாதமளவில் இந்த முதலாளித்துவ கன்னைகள் அரசியல் யுத்தமொன்றில் ஈடுபட்டிருந்தன. அரசியலமைப்பை மீறி எதேச்சதிகாரியாக செயற்றப்பட்ட சிறிசேன, அரசியல் சூழ்ச்சி ஒன்றின் மூலம் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, இராஜபக்ஷவை அந்தப் பதவியில் நியமித்தார். ஆட்சி மாற்றத்தின் ஊடாக பதவிக்கு தாவிக்கொண்ட இராஜபக்ஷ, சட்டவிரோதமாக அதிகாரத்தை பயன்படுத்த முனைந்த அதேவேளை, விக்கிரமசிங்க, வாஷிங்டனின் உதவியோடு மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதில் வெற்றி கண்டார்.
முதலாளித்துவத்தின் இந்தக் குழுக்கள், தம்மிடையேயான மோதலின் மூலம், சர்வதேச தொழிலாள வர்கத்தின் மீளெழுச்சியின் ஒரு பகுதியாக இலங்கைக்குள் அபிவிருத்தியடையும் சமூக எதிர்பினை அடக்கி ஒடுக்கி, முதலாளித்துவ வர்க்க ஆட்சியினை பாதுகாத்துக்கொள்வதற்காகவே தயாராகி வந்தன.
இராஜபக்ஷ, நாட்டை பிளவுபடுத்த இடமளிக்கமாட்டேன் என கூச்சலிட்டுக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முதலாளித்துவ வர்க்கத்தின் நீண்ட கால நச்சு ஆயுதத்தை கூர்மைப்படுத்திக் கொண்டிருப்பது, சிங்கள இனவாத குழுக்களை கட்டவிழ்த்து விட்டு, வலதுசாரி இயக்கங்களை தூண்டி விட்டு, மீண்டும் அதிகாரத்திற்கு வந்து பொலிஸ்-ஆட்சியை ஸ்தாபிப்பதற்கே ஆகும். அவருக்கு சிறிசேன முண்டு கொடுக்கின்றார். இராணுவத் தலைமைகளின் யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கும் சிறிசேன, அண்மையில் யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவத்தின் பிரதம தலைவராக நியமித்தமை ஒரு தற்ச்செயலான சம்பவம் அல்ல.
விக்ரமசிங்கவும், தன்னுடைய பக்கத்தில் பௌத்த கோவில்களுக்கு சென்று, தமது சிங்கள-பௌத்த சான்றிதழை காட்டி, வலதுசாரி சக்திகளை பலப்படுத்த செயற்படுவதும், அதேபோன்ற ஒரு பொலிஸ்-அரசுக்கு மாறும் குறிக்கோளுடனேயே ஆகும்.
முதலாளித்துவ அபிவிருத்திகள் காலம் கடந்த அனைத்து நாடுகளினதும் முதலாளித்துவ வர்க்கத்தைப் போன்றே, இலங்கையின் ஆளும் வர்க்கமும், மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த முற்றிலும் இலாயக்கற்றது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் சுதந்திர அரசு என்பது, 1947-1948 இல் இப் பிராந்தியத்தின் முதலாளித்துவ வர்க்கம், கிளர்ச்சியடைந்த தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடனான சூழ்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்ட அரச அமைப்பின் ஒரு பகுதியே ஆகும். இந்த முதலாளித்துவவாதிகள் பிரித்தானியாவுடன் கூட்டுச் சேர்ந்து, இந்திய உபகண்டத்தில் இந்து இந்தியா மற்றும் முஸ்லீம் பாகிஸ்தான் என இரு அரசுகளை உருவாக்கி, தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பிளவுபடுத்தி, இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தே தமது ஆட்சியினை ஆரம்பித்தனர்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களுடன் சமரசத்துடன் 1948 இல் அதிகாரத்தினை தன் வசப்படுத்திய இலங்கை முதலாளித்துவவாதிகளின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், அந்த வருடத்திலேயே தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்து, தொழிலாள வர்க்கத்தை இனரீதியாக பிளவுபடுத்துவதை ஆரம்பித்து வைத்தது. அப்போதிருந்து, நெருக்கடிகள் உக்கிரமடையும் எல்லா சந்தர்ப்பங்களிலும், முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாத்துக்கொள்ள தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக, தமிழர் விரோத இனவாதத்தை மேலும் மேலும் உக்கிரமடைய செய்து, ஆட்சியை நடத்தி வந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் கட்சிகள், 1983 இல் 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்திற்கு வழியமைத்தன. வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியாக பராமரிக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்பே, இனவாதத்தை உச்சத்தில் கொண்ட இந்த அடக்குமுறை ஆட்சியின் அடையாளமாக இருக்கின்றது.
முதலாளித்துவ வர்க்கத்தின் நெருக்கடியின் மத்தியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியையும் உள்ளடக்கிய கூட்டரசாங்கம், ஜனநாயகத்தை உருவாக்கும் போர்வையில், 1972 இல் பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்புச் சபை என பலாத்காரமாக பெயர் சூட்டி, சிங்களத்தை அரச மொழியாகவும் பௌத்தத்தை அரச மதமாகவும் மகுடம் சூட்டி, ஒரு ஜனநாயக-விரோத அரசியலமைப்பை நிறைவேற்றின. அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இனப் பாகுபாடு மேலும் ஆழமாக்கப்பட்டது.
கூட்டரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிப்பை சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை உருவாக்குவதன் பேரில், பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றியது. தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி, சர்வதேச மூலதனத்தின் அவசியத்தின் நிமித்தம், திறந்த பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்துவதே அந்த ஆட்சி மாற்றத்தின் இலக்காக இருந்தது. பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றிய இந்த இரு நடவடிக்கையைப் போலவே, விக்ரமசிங்க-சிறிசேன அரசின் அரசியலமைப்புச் சபையும், ஜனநாயக விரோத நடவடிக்கையே ஆகும்.
இந்த ஜனநாயக விரோத கடந்த காலத்துக்கு மத்தியில் வந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் பாராளுமன்ற நிர்வாகத்தின் நாற்றமெடுப்பு உச்சக் கட்டத்தினை அடைந்திருப்பதுடன், ஆளும் வர்க்கத்தின் சகல பிரிவுகளும் பொலிஸ்-அரச ஆட்சிக்கு மாறுவதற்கு துடித்துக் கொண்டிருப்பதையே இப்போது காண்கின்றோம். முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொண்டுள்ள பாரதூரமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களது கிளர்ச்சியை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கத்துக்கு வேறு மாற்றிடு கிடையாது. அதாவது, இது, பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடியின் மத்தியில், ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்கா முதற்கொண்டு அனைத்து நாடுகளினதும் ஆளும் வர்க்கங்கள், இராணுவவாதத்தித்ற்கும் சமூக உரிமைகளை வெட்டுவதற்கும் எதிராக போராடும் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு பொலிஸ்-அரச ஆட்சி முறைகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற ஒரு சர்வதேச போக்கின் பாகமாகும்.
பிற்போக்குத்தனத்தில் தலை முதல் கால் வரை அழுகிப் போயுள்ள முதலாளித்துவத்தின் சகல பகுதியினரும், தொழிலாளர்களினதும் வறியவர்களினதும் ஒடுக்கபட்ட மக்களினதும் ஜனநாயக உரிமைகளுக்கு விரோதிகள் ஆவர். உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது சகல விதமான இன மற்றும் மத வேறுபாடுகளை இல்லாதொழிக்கின்ற, மதம் அற்ற ஜனநாயக அரசுக்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது .
தொழிலாள வர்கமானது சகல முதலாளித்துவக் குழுக்களில் இருந்தும் தமது அரசியல் சுயாதீனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, நகர மற்றும் கிராமப்புற வறியவர்களை வழி நடத்திக்கொண்டு, சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாள-விவசாயிகள் அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதன் ஊடாக மாத்திரமே, அந்த போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும். அதாவது, சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டு, தெற்காசிய சோசலிச குடியரசின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராட வேண்டும்.
உண்மையான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வேறு மார்க்கம் கிடையாது என்பது, இலங்கையினதும் இந்த பிராந்தியத்தினதும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்கத்தினது வரலாற்று அனுபவமாகும். இதனாலேயே, இந்த முன்னோக்குக்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு புத்திஜீவிகளும் இணைந்துகொள்வது அவசியமாகின்றது.