Print Version|Feedback
Munich Security Conference overshadowed by rising great power conflicts
வல்லரசுகளுக்கு இடையேயான அதிகரித்து வரும் மோதல்களால் மேலாதிக்கம் செலுத்தப்படும் மூனிச் பாதுகாப்பு மாநாடு
By Peter Schwarz
15 February 2019
பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களினால் மேலாதிக்கம் செலுத்தப்படும் 55 ஆவது மூனிச் பாதுகாப்பு மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாடானது, அமெரிக்காவும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் போருக்கான தயாரிப்புகளாலும், அதேவேளை மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையேயான அதிகரிக்கும் பதட்டங்களினாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது.
ஒரு திகிலூட்டும் ஆவணமான, மூனிச் பாதுகாப்பு அறிக்கை 2019, மாநாட்டின் ஒழுங்கமைப்பாளர்களால் வாரத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அது பிரதான அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான மோதல் தவிர்க்க முடியாதது என்று கருதுகிறது. இந்த பேரழிவை எவ்வாறு தவிர்ப்பது என்ற கேள்வியில் கவனம் செலுத்துவதை குறைத்து, அதற்கு பதிலாக, ஒரு மோதலுக்கு சிறப்பாக எப்படி தயாராவது மற்றும் மோதலுக்கு பின்னர் நிலைமையை எவ்வாறு சீராக்கிக்கொள்வது என்பது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
முதலாம் உலகப் போருக்கான மூலகாரணங்கள் பற்றிய விவாதங்களில், பெரும் வல்லரசுகள் பேரழிவுகளுக்கு நித்திரையில் தட்டுத்தடுமாறின சென்றன என்று பலமுறை கூறப்பட்டு வருகின்றது. இது போருக்கு ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பை நம்பமுடியாத அளவு முக்கியமற்றதாக்க முயல்கின்றது. இருப்பினும், முதலாம் உலகப் போருக்கான முன்னான காலகட்டத்தையும் வல்லரசுகளுக்கு இடையிலான தற்போதைய மோதல்களையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் தட்டுத்தடுமாறவில்லை, மாறாக ஆனால் கண்களை அகலத் திறந்த நிலையில் அழிவை நோக்கி ஓடுகிறார்கள் என்பதை காணமுடியும்.
மூனிச் பாதுகாப்பு அறிக்கை 2019, அரசியல் நிகழ்வுகளின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு ஆளும் உயரடுக்கின் உணர்வை வெளிப்படுத்துகிறது. அவை மீள ஆயுதமேந்துவதன் மூலமும் குற்றவியல் போர்களுக்கு தயாராவதன் மூலமும் பதிலளித்து மனித இனத்தின் உயிர்வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஏற்கனவே அறிக்கையின் முன்னுரையில், மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் தலைவரான வொல்ஃப்காங் இஸ்ஷிங்கர் (Wolfgang Ischinger) எழுதுகிறார்: "தாராளவாத சர்வதேச ஒழுங்கு எனக்கூறப்படும் ஒரு குறிப்பிட்ட தலைமைத்துவ வெற்றிடத்துடன் சேர்ந்து ,அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இடையே ஒரு வல்லரசு போட்டியின் ஒரு புதிய சகாப்தம் வெளிப்பட்டு வருகிறது. எதிர்கால ஒழுங்கு எப்படி இருக்கும் என்பதை எவரும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு திருத்திக்கொள்ள முடியாத ஒரு நிலைமையை சீராக்குவதற்கு புதிய முகாமைத்துவ அமைப்புக்கள் தேவைப்படுவது வெளிப்படையாகிவிட்டது."
ஆவணம் காட்டுவது போல, இந்த நிர்வாக அமைப்புகள் போட்டியிடும் நாடுகளை அச்சுறுத்தி அழிப்பதற்கான பிரதான ஆயுத மற்றும் இராணுவ சக்தி ஆகும்.
முதல் அத்தியாயம், "மிகப்பெரிய புதிர்: யார் நிலமையை மீள சீராக்குவது?" அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு மூலாபாயத்திலிருந்து மேற்கோளிட்டு, இது பின்வருமாறு அறிவிக்கிறது. “…நாங்கள் எல்லோரும் நீடித்த வல்லரசுப் போட்டியின் சகாப்தத்திற்கு செல்கிறோம். இதற்கு மேற்கு நாடுகள் கூட்டாக தயாராக இருக்கவில்லை”. சீனா மற்றும் ரஷ்யாவை வாஷிங்டன், அதன் முக்கிய போட்டியாளர்களாக கருதுகிறது: "அமெரிக்க மூலோபாய ஆவணங்கள் சீனாவையும் ரஷ்யாவையும் இரு முக்கியமான சவால்களாக தெரிவு செய்துள்ளன. மற்றும் பல முக்கிய நிர்வாக அதிகாரிகள் பொதுப் பேச்சுக்களில் இந்த அச்சுறுத்தலை வலியுறுத்தியுள்ளனர்.”
சீனா "நவீன வரலாற்றில் மிகுந்த ஆற்றல் வாய்ந்த மற்றும் வல்லமைமிக்க போட்டியாளராக" இருக்கின்றது என்று இப்போது வாஷிங்டனில் பரவலாக பேசப்படுகிறது என மூனிச் பாதுகாப்பு அறிக்கை தொடர்கிறது. இதற்கு ஆதாரமாக, அறிக்கை அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸை மேற்கோளிட்டுள்ளது, "அமெரிக்காவின் இராணுவ நலன்களை தரையில், கடலில், காற்றில், மற்றும் விண்வெளியில் அகற்ற முயன்றது" என்று சீனாவை குற்றம் சாட்டினார். "நாங்கள் பயப்பட மாட்டோம், நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்று எச்சரித்தார். மூனிச் பாதுகாப்பு அறிக்கை 2019 முடிவில் "பென்ஸ்ஸின் உரையை பலர் ஒரு புதிய பனிப்போருக்கான அறிவிப்பாக படித்தார்கள்" எனக் கூறியது.
"சமாதான அமெரிக்காவிலிருந்து மோதல் அமெரிக்காவாக” (From Pax to Crux Americana) என்ற துணைத் தலையங்கத்தின் கீழ், வல்லரசுகள் சம்பந்தப்பட்ட ஒரு மோதலில் ஐரோப்பா தனது சொந்த நலன்களைச் செயல்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிக்கை விரிவாக விவாதிக்கிறது. "ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பாக வல்லரசு போட்டியின் ஒரு புதிய சகாப்தத்திற்கு தயாரற்ற நிலையில் உள்ளது" என்று அறிக்கை கூறுகிறது. "அதைவிட, அமெரிக்காவின் எதிர்கால பாத்திரத்தை பற்றிய நிச்சயமற்ற தன்மை ஐரோப்பாவின் "மூலோபாய சுயாட்சி" பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது."
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜேர்மன் அரசாங்கம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டை இராணுவ கட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை அறிவிக்கப் பயன்படுத்தியது. "முன்னதாக மேலும் தீர்க்கரமாக மற்றும் இன்னும் கணிசமாக, வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் ஈடுபட ஜேர்மனி தயாராக இருக்க வேண்டும்,” அந்த நேரத்தில் வெளியுறவு அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் கூறினார்.
அப்போதிருந்து, ஜேர்மனியும் பிற ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் ஆயுதமயமாகிக்கொள்ள கணிசமாக தங்கள் இராணுவ செலவை அதிகரித்துள்ளன. மூனிச் பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையின் படி, ஆனால் இது மூலோபாய சுயாட்சியை அடைவதற்கு அருகாமையில் கூட இல்லாததுடன் மற்றும் அமெரிக்காவிலிருந்து சுயாதீனமாக உலக வல்லரசு நலன்களைப் பின்தொடர்வதற்கும் இயலாமல் உள்ளது என்று கூறுகிறது.
"கடந்த ஆண்டு மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜோன் - குளோட் ஜூங்கர், ‘உலக அரசியல் தகமை’ (Weltpolitikfähigkeit) என்றழைக்கப்பட்டதை அடைய, இன்னும் ஒரு நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று அறிக்கை கூறுகிறது. "மற்றும் 'உலக அரசியல் தகமை', அல்லது உலக அரசியலில் ஒரு அர்த்தமுள்ள பாத்திரத்தை வகிக்கும் திறன் மிக அவசியசமாக தேவைப்படுகிறது. ஐரோப்பாவில் கூடுதலான மூலோபாய சிந்தனையாளர்கள் வலுவான அட்லாண்டிக் இடையிலான கூட்டானது ஐரோப்பாவிற்கு சிறந்த பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்கும் என்று உடன்பட்டபோதிலும், இந்த விருப்பத்தேர்வு எதிர்காலத்தில் இருக்காது" என ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த அறிக்கை மீண்டும் தங்கள் இராணுவ செலவை அதிகரிக்க வேண்டும் என்று ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு அவசர வேண்டுகோள் விடுக்கின்றது. "மாற்றம் துரித வேகத்தில் நடைபெறுவதால், ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள் நீண்டகால மூலோபாய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும், மற்ற நடிகர்களுக்காக ஐரோப்பா 'தீவிர மூலோபாய போட்டியின் ஒரு மேடையாக மட்டும்’ இல்லாமலிருக்கவேண்டும் என்றால் அவசியமான ஆதாரங்களை வழங்க வேண்டும்."
மூனிச் பாதுகாப்பு மாநாடு தொடங்குவதற்கு முன்னர் வார்சோவில் நடைபெற்ற மத்திய கிழக்கு மாநாடு, அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான மோதல், மற்றும் குறிப்பாக ஜேர்மனியுடன் எவ்வளவு கூர்மையானவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐரோப்பாவை பிளவுபடுத்த வேண்டுமென்ற முயற்சி என்று ஜேர்மன் செய்தி ஊடகம் மாநாட்டை கண்டனம் செய்தது. "[அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்] பொம்பியோ பிரஸ்ஸல்ஸிற்கு எதிராக போலந்து மற்றும் ஹங்கேரியின் ஆழ்ந்த விரோதப் போக்கை, அதேபோல் இந்த நாடுகளுக்கும் ஜேர்மனியர்களுக்கும் இடையேயான உரசல்களை, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு ஆப்பு வைக்க பயன்படுத்தினார்," என்று Süddeutsche Zeitung பத்திரிகை புகார் செய்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் மோதல்கள் தீவிரமடைகின்றன. பாரிஸ் மற்றும் ரோம் இற்கு பின்னணியிலிருந்த தாக்குதல்களின் பல மாதங்களுக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மற்றும் நேட்டோவின் ஸ்தாபக உறுப்பினரான இத்தாலியில் இருந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக பிரான்ஸ் அதன் தூதரை திருப்பி அழைத்தது. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் இணைந்து தோற்றமளிப்பதை இரத்து செய்துவிட்டார். உள்நாட்டு அரசியல் கடமைகளை காரணங்காட்டி தனது தீர்மானத்தை நியாயப்படுத்திய போதிலும், பேர்லின் மற்றும் பாரிஸ் இடையேயான உறவு சமீபத்திய மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு உறைந்துபோயுள்ளது.
ஐரோப்பிய வல்லரசுகள் அவர்களின் மீள்ஆயுதபாணியாகும் உந்துதலை துரிதப்படுத்துவதன் மூலம் இந்த பெருகிவரும் மோதல்களுக்கு பதிலளித்து வருகின்றன. பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் உடன் மாநாட்டை திறந்து வைத்து, திங்களன்று ஒரு இரத்தவெறி கொண்ட உரையை வழங்கினார். அதில் பிரித்தானிய வெளியேற்றத்தை தொடர்ந்து பிரிட்டிஷ் இராணுவவாதத்தை பலப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பிரிட்டன், "நமது உலகளாவிய நலன்களைப் பாதுகாக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
மூனிச் பாதுகாப்பு மாநாடு என்பது அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், ஆயுத தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் உலகின் இராணுவ நிபுணர்களின் மிகப்பெரிய கூட்டமாகும். இந்த ஆண்டு, 500 க்கும் மேற்பட்ட சர்வதேச விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 35 நாட்டு மற்றும் அரசுகளின் தலைவர்கள், 50 வெளிநாட்டு அமைச்சர்களும், 30 பாதுகாப்பு அமைச்சர்களும் உள்ளடங்குவர்.
அமெரிக்கா மிகப் பெரிய பிரதிநிதிகள் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. துணை ஜனாதிபதி பென்ஸுடன் இணைந்து காங்கிரஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் அடங்குவர். ஜேர்மனியில் இருந்து சான்ஸ்லர் மேர்க்கெல் மற்றும் ஆறு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோசெங்கோ, எகிப்திய சர்வாதிகாரி அப்தெல்- ஃபட்டா அல் சிசி, ஆப்கான் ஜனாதிபதி முகமது அஸ்ரஃப் கானி, பங்களாதேஷ் பிரதமர் ஹசினா வஜீட் மற்றும் கட்டாரின் அரசர் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோர் அடங்குவர். நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், வெளிவிவகாரத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி ஃபெடரிகா மொகெரினி, சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டின் லகார்ட் மற்றும் இடைக்கால உலக வங்கியின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா ஆகியோர் மூனிச்சில் உள்ளனர்.
இந்த உயர்மட்ட கூட்டம் எதிர்கால போர்களை தயாரிப்பது எப்படி என்பதை மூன்று நாட்கள் விவாதிக்கும். அவ்வாறான போரானது மில்லியன் கணக்கான மக்களுக்கு துன்பம் மற்றும் மரணம் என்பதையே அர்த்தப்படுத்துகின்றது. அத்தகைய மோதல்களை ஆளும் வர்க்கத்திடம் நியாயத்திற்காகவும் மனசாட்சிக்காகவும் முறையீடு செய்வதன் மூலம் தடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த போதுமான சான்றுகள் உள்ளன.
மூனிச் பாதுகாப்பு அறிக்கை 2019 ஒரு சுவாரஸ்யமான கருத்து கணிப்பு முடிவையும் உள்ளடக்கியுள்ளது. எந்த நாட்டின் சக்தி மற்றும் செல்வாக்கு அவர்கள் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை பிரதிபலிக்கின்றது என்று அவர்கள் கருதுவதாக கேட்டதற்கு, ஜேர்மனியர்களில் 49 சதவிகிதத்தினர் அமெரிக்காவை கூறினார்கள், 30 சதவீதம் பேர் ரஷ்யாவும் 33 சதவீதம் சீனாவைத் தேர்ந்தெடுத்தனர். பிரான்சின் பெறுபேறும் இதுபோன்றது. உலக விவகாரங்களில் சரியானதை யார் செய்வதாக அவர்கள் கருதுகின்றார்கள் என்று கேட்டதற்கு, 10 சதவிகித ஜேர்மனியர்கள் ட்ரம்ப் என்றனர், ஒப்பிடும்போது 35 சதவிகிதம் புட்டினும், ஜி ஜின்பிங் இனை 30 சதவிதத்தினர் தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவிலும் கூட, 48 சதவிகிதத்தினர் மட்டுமே ட்ரம்ப் என தெரிவித்தவர்கள், ஜி இக்கு 39 சதவிகிதத்தினரும், 21 சதவிகிதத்தினர் செய்திகளில் தொடர்ச்சியாக பேயாக காட்டப்படும் புட்டின் என்றனர்.
இந்த முடிவுகள் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதிகள் மீது அனுதாபம் அரிதாகத்தான் இருப்பதை காட்டுகிறது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ், மற்றும் அமெரிக்க மக்கள் தங்கள் சொந்த அரசாங்கங்களின் யுத்தவெறி கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போருக்கு எதிரான இந்த பரந்த எதிர்ப்பிற்கு ஒரு நிலைநோக்கும் மற்றும் அரசியல் முன்னோக்கும் தேவைப்படுகிறது. அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது தன்னை அடித்தளமாக கொள்வதால் மட்டுமே வெற்றியடைய முடியும். அத்துடன் இராணுவவாதத்தினதும் மற்றும் யுத்தத்தினதும் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பை தூக்கிவிச ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதும் தேவையாக உள்ளது.