ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Matamoros, Mexico maquiladora workers threatened with mass plant closures

மெக்சிக்கோவில் மத்தாமோரொஸ் மக்கில்லாடோரா தொழிலாளர்களுக்கு பரந்த ஆலை மூடல்கள் மூலமாக அச்சுறுத்தல்

By Alex González 
31 January 2019

மெக்சிக்கோ, மத்தாமோரொஸின் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி மற்றும் இலத்திரனியல் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச தன்மையை சக்திவாய்ந்த வகையில் நிரூபித்துள்ளது.

வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி மற்றும் இலத்திரனியல் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டு மூன்றாவது வாரத்தில், 31 ஆலைகளை பிரதிநிதித்துவம் செய்யும் 23 நிறுவனங்கள், அத்தொழிலாளர்கள் கோரிய 20 சதவிகித ஊதிய உயர்வையும், 1,700 டாலர் மேலதிக கொடுப்பனவையும் வழங்க ஒப்புக் கொண்டுள்ளன. மேலும், மறைமுக அரசாங்க ஆதரவு பெற்ற 13 ஆலைகள், இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என அறிவித்து, 24 மணி நேரத்திற்குள் தொழிலாளர்கள் அவர்களது பணிக்கு திரும்பாத பட்சத்தில், 25,000 பேர் அளவிற்கு பாரிய பணிநீக்கம் செய்ய போவதாக அவர்களை அச்சுறுத்தியுள்ளன. இன்னுமொரு 10 நிறுவனங்கள், அவையும் அதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.


20 சதவிகித ஊதிய உயர்வையும், 1,700 டாலர் மேலதிக கொடுப்பனவையும் பெற்ற பார்க்கர் ஹன்னிஃபின் (Parker Hannifin) நிறுவனத் தொழிலாளர்களின் கொண்டாட்டம்

சில ஆலைகள் இலாபம் ஈட்டி வருகின்ற போதிலும், நிறுவனங்களுக்கு இடையிலான “போட்டித்தன்மை” குறித்து இந்த சிறியளவிலான சலுகைகள் கூட ஒத்துக்கொள்ள முடியாதவை என நிராகரிப்பதாகவே தற்போதைய பதிலிறுப்பு உள்ளன. பிற நாடுகளின் தொழிலாளர்களும் அவர்களது தொழிற்சங்கங்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முனையும், மற்றும் அவர்களது வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த போராடும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இருப்பிற்கான அச்சுறுத்தல் முதலாளித்துவ அமைப்பு முறைக்கே இருப்பதை இந்த வேலைநிறுத்தம் முன்னறிவிப்பு செய்வது குறித்து நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆலைகளிலுள்ள தொழிலாளர்கள், வேலைநிறுத்தத்தின் போது அவர்கள் “அனுமதியின்றி பணிக்கு வரவில்லை” என்ற சாக்குபோக்கை காரணம் காட்டி நிறுவனங்கள் பணிநீக்கங்களை செய்து வருவதாகக் கூறுகின்றனர். பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களை புதிய ஒப்பந்தங்கள் பாதுகாக்கும் என்று கூறப்பட்டாலும், இது நடந்துள்ளது. ஏனைய ஆலைகள் அவர்கள் உறுதியளித்திருந்த மேலதிக கொடுப்பனவை ரொக்கத்திற்கு பதிலாக கூப்பன்களாக வழங்கி வருவதாகவும், அதற்கு அரசாங்கம் 16 சதவிகிதம் வரை வரி விதிக்கும் என்றும் கூறியுள்ளன. அடிபட்ட காயத்தை மேலும் புண்படுத்தும் வகையில், உள்ளூர் அரசாங்கம், தண்ணீருக்கான விலையை மேலும் 30 சதவிகிதம் அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

மக்கில்லாடோரா மற்றும் ஏற்றுமதி தொழில்துறையின் (Maquiladora and Export Industry – Index) தொழில் சார்பு தேசிய குழுவின் (National Council) தலைவரான Luis Aguirre Lang, மெக்சிக்கன் செய்தி நாளிதழான La Jornada இல், நிறுவனங்கள் வேறு இடங்களுக்கு மாறுவதற்கு முனையும் நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தங்கள் என்பவை ஆறு முதல் எட்டு மாதங்கள் வரையிலான காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்தார். Cepillos, Packard, Kearfortt மற்றும் Signal Processing போன்ற நான்கு நிறுவனங்கள், அவர்களது நிறுவனங்களை மூடிவிட்டு நகரை விட்டு கிளம்புவதற்கு அவர்கள் உள்நோக்கம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். Aguirre பொறுத்தவரை, நாளொன்றுக்கு 50 மில்லியன் டாலர், அல்லது ஒட்டுமொத்த வேலைநிறுத்த காலத்திற்கும் 900 மில்லியன் டாலர் இழப்பை இந்த வேலைநிறுத்தம் ஏற்படுத்தியுள்ளது என அதிர்ச்சியூட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.

ஆளும் வர்க்கமோ, எதிர்கால வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் வகையில், வேலையின்மை மற்றும் பாரிய தொழில்துறை ஒழிப்பு போன்ற அச்சுறுத்தல்களை விடுத்து தொழிலாளர்களை மிரட்ட முனைந்து வருகிறது. பல வாரங்களாக மத்தாமோரொஸ் வேலைநிறுத்தப் போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிட பெருநிறுவன ஊடகங்கள் மறுத்துவந்த போதிலும், இந்த வேலைநிறுத்தத்திற்கு தண்டனை வழங்கும் விதமாக, மத்தாமோரொஸை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும் விட்டு முற்றிலும் வெளியேறவிருப்பதாக பதினைந்து நிறுவனங்கள் அச்சுறுத்தி வருவது பற்றி புதனன்று வெளியான ஒரு அறிவிப்பை மட்டும் அதிவிரைவாக சேகரித்து வெளியிட்டுள்ளன.

“நாட்டை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்துள்ள, வாகன மற்றும் இலத்திரனியல் பிரிவைச் சேர்ந்த 15 நிறுவனங்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களது வாரியத்தில் இருந்து அங்கீகாரம் கிடைத்தவுடன் இந்த நிறுவனங்கள் ஒரு அறிவிப்பை வெளியிடும்,” என்று Aguirre தெரிவித்தார்.


APTIV வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் தொழிலாளர்கள், அவர்களது வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்ற அரசாங்க ஆணைகளின் அறிவிப்பை மீறி, அவர்களது ஆலைகள் மூடப்படாமல் பாதுகாக்கிறார்கள் [நன்றி: ரெய்னா சேவியர்]

இந்த அச்சுறுத்திய ஆலை மூடல்கள் 30,000 வேலை இழப்புக்களை உள்ளடக்கியிருந்தாலும், தொழில்துறை பிரிவு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை மறைமுகமாக பணியமர்த்தியுள்ள நிலையில், வேலை இழப்புக்களின் உண்மையான எண்ணிக்கை அதைப்போல பல மடங்காக இருக்கும். வெளியேறப் போவதாக அச்சுறுத்தும் நிறுவனங்களில், நாடு முழுவதிலும் ஏழு மாநிலங்களில் 17 ஆலைகளைக் கொண்டுள்ள APTIV வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமும் அடங்கும்.

மக்கில்லாடோராக்கள், இந்த வேலைநிறுத்தத்தை முறிக்க பொலிஸ் அல்லது இராணுவத்தை பயன்படுத்த மத்திய அரசாங்கத்திற்கு பலமுறை முறையீடு செய்துள்ளனர். மத்தாமோரொஸில் நகராட்சி பொலிஸ் சேவை கிடையாது என்பதை குறிப்பிட்டு, மத்தாமோரொஸின் மக்கில்லாடோரா சங்கத்தின் தலைவர் பின்வருமாறு தெரிவித்தார்: “இதற்கு தண்டனை வழங்க மெக்சிக்கோவிடம் ஆயுதங்கள் கிடையாது, மெக்சிக்கோவில் முதலீடுகளுக்கு சட்ட நிலையற்ற தன்மை இருக்கும் நிலையில், நமது மக்களை கட்டுப்படுத்தும் கருவிகள் மெசிக்கோவிடம் கிடையாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் என்ன விரும்பினாலும் அதை கேட்க முடியும் என்பதை அறிந்து வைத்துள்ளனர் என்பதோடு, இங்கே சட்டத்திற்கு மதிப்பில்லாத நிலையில், [ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் படி] மே இல், அவர்கள் இன்னும் அதிகமாக கேட்பார்கள் என்ற அபாயம் உள்ளது.”

இந்த கடுமையான அச்சுறுத்தல்கள் சர்வாதிகாரம் குறித்த ஒரு வாதமாக உள்ளது. வன்முறை தேவைப்படுகிறது, என்றாலும் தொழிலாளர்களுக்கு “அங்கு பணம் இல்லை” என்ற கூற்று பொய்யானது.

நிறுவன சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்கள் அவர்களது பங்கிற்கு, “வேலைகளை பாதுகாக்க” நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்க தொழிலாளர்களை அறிவுறுத்த பங்காற்றுகின்றன. நிறுவனங்களோ அதன் இலாப நோக்குள்ள அமைப்போ வேலை இழப்பிற்கு காரணம் என்றல்லாமல், பிற நாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களது சகோதரர்களும் சகோதரிகளும் கூட அதற்கு காரணம் என்று நம்ப வைக்க நோக்கம் கொண்ட நச்சுத்தன்மைவாய்ந்த தேசியவாதத்துடன் இதுவும் இணைந்ததாகிறது. இந்த சூழ்ச்சிகளின் விளைவு உலகளவில் தொழிலாளர்களுக்கு ஒரு பேரழிவாக இருக்கின்றது. அதாவது, பூகோளமயமாக்கல் சகாப்தத்தில் ஒரு தேசிய கட்டமைப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை கூட அடைவது சாத்தியமல்ல என்ற நிலையை உருவாக்கியுள்ளது.


மருந்து விநியோக நிறுவனம் Spellman இல் தொழிலாளர்கள் புதனன்று நடத்திய திடீர் வேலைநிறுத்தம்

ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors-GM) நிறுவனம் அதன் ஐந்து ஆலைகளை மூட நடவடிக்கை எடுத்து 15,000 அமெரிக்க மற்றும் கனேடிய வாகனத் தொழிலாளர்களை வெளியேற்றிய நிலையிலும், அத்துடன் இந்த ஆண்டு, அவர்களது ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது சலுகைகளை ஏற்றுக்கொள்ளுமாறு 140,000 அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் இறுதியில் அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் தான், மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் உருவெடுத்தது. சென்ற வாரத்தில், 13,000 ஹங்கேரிய ஆடித் (Hungarian Audi) தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், பிரேசிலில் Taubaté ஆலை தொழிலாளர்கள் வேலை வெட்டுக்களுக்கு எதிராக உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் என்று வாக்களித்தனர். ஆர்ஜெண்டினாவில், மெக்சிக்கோவில் வாகனம் மற்றும் பிற தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு எஃகு ஆலையை தொழிலாளர்கள் ஆக்கிரமித்தனர்.

மத்தாமோரொஸிலேயே, மேலும் மேலும் தொழிலாளர்கள் தங்களது நிலைமைகளை மேம்படுத்த கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். முன்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத, மருந்து விநியோக நிறுவனமான Spellman இன் 1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களுக்கு சொந்தமான 1,700 டாலர் மேலதிக கொடுப்பனவை வழங்க கோரி புதனன்று காலை தங்களது கருவிகளை கீழே போட்டனர். மேலும், மத்தாமோரொஸில் கோகோ கோலா ஆலை தொழிலாளர்களும் கூட, புதனன்று ஒரு திடீர் வேலைநிறுத்தம்  செய்தனர்.

வாகனத் தொழிலாளர்களின் பூகோள அளவிலான தற்போதைய போராட்டம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ கட்சிகளை முற்றிலும் தவிர்த்து சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைப்பதன் மூலமாக, ஒரு சர்வதேசவாத மற்றும் சோசலிச பதாகையின் கீழ் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதற்கான பெரும் சாத்தியத்தை காட்டுகின்றது. அதனால் தான், சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டல் குழுவும் (Steering Committee of the Coalition of Rank-and-File Committees), உலக சோசலிச வலைத் தள வாகனத் தொழிலாளர் செய்தியிதழும் (World Socialist Web Site Autoworker Newsletter) இணைந்து, இந்த முன்னோக்கின் மிக உயர்ந்த வெளிப்பாடாக, டெட்ராய்ட்டில் GM தலைமையகத்தில் பிப்ரவரி 9 அன்று ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டங்களின் புறநிலை தர்க்கம் என்பது, அரசியல் அதிகாரத்தை வெற்றி கொள்வதற்கும், மற்றும் உலக பொருளாதாரத்தில் சோசலிச மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒட்டுமொத்த சமூக சக்தியை ஈர்க்கும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை உருவெடுக்கச் செய்வதாகும்.

ஒரு பொதுவான சர்வதேச மூலோபாயத்தை உருவாக்க விரும்பும் தொழிலாளர்கள், இந்த முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதை முன்னிட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எங்களது முகநூல் பக்கம் வழியாகவோ எங்களை தொடர்பு கொள்ளவும். அத்துடன், டெட்ராய்ட்டில் நடைபெறவுள்ள பிப்ரவரி 9 பேரணி பற்றிய மேலதிக தகவல்களைப் பெற, wsws.org/auto என்ற இணைய பகுதியை பார்வையிடவும்.