Print Version|Feedback
French National Assembly passes police state “anti-riot” law targeting protests
பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றம் போராட்டக்காரர்களை இலக்கில் வைத்து "கலகம்-ஒடுக்கும்" போலிஸ் அரசு சட்டத்தை நிறைவேற்றுகிறது
By Will Morrow
7 February 2019
பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றம், போராடுவதற்கான உரிமைக்குக் குழிபறிக்கவும் மற்றும் போலிஸ் அதிகாரங்களைக் கூடுதலாக விரிவாக்கவும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் "கலகம் ஒடுக்கும்" சட்டத்திற்கு திங்களன்று பெருவாரியாக வாக்களித்தது.
இந்த சட்டம் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு விடையிறுப்பதில் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பால் முதலில் ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இது பிரான்சை ஒரு போலிஸ் அரசாக மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. ஹங்கேரியில் இருந்து, பிரேசில் வரையில், அமெரிக்கா வரையில் மற்றும் ஏனைய இடத்திலும் என, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ அரசாங்கங்கள் இதுபோன்ற திருப்பத்தை எடுத்து வருவதற்கு இணங்க, பிரெஞ்சு ஆளும் வர்க்கமும் முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மை அதிகரிப்பின் மீது தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்புக்கு ஒடுக்குமுறைக்கான அதன் அதிகாரங்களை விரிவாக்குவதன் மூலமாக விடையிறுத்து வருகிறது.
இந்த சட்டமசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் பிரான்சின் மேல் அவையான செனட்டில் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். இது பின்வருவதை நிர்ணயிக்கிறது:
- ஒரு மாதத்திற்கு எந்தவொரு பொது போராட்டத்திலும் கலந்து கொள்வதிலிருந்து எவரொருவருக்கும் போலிஸ் உயரதிகாரிகள் தடை விதிக்க முடியும். இதற்கு அவசியப்படுவது எல்லாம், “அவர்களின் நடவடிக்கை பொது ஒழுங்கிற்கு குறிப்பாக பெரும் அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக கருத ஆழ்ந்த காரணங்கள் இருப்பதாக" அரசு நம்ப வேண்டும்.
- போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து தடை விதிக்கப்பட்ட எவரொருவரும் அரசின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார். “பொதுப் போராட்டங்களில் பங்கெடுப்பதில் இருந்து தடை விதிக்கப்பட்டவர்கள் மீது, தேசியளவில், கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக, தனிநபர்களின் தகவல்களுக்கான தானியங்கி கண்காணிப்பை அமைப்பதற்கு" உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
- போராட்டத்தில் அல்லது "அதன் அருகில் சுற்றுவட்டப் பகுதியில்" எவரொருவரின் பைகள் மற்றும் கார்களைச் சோதனையிட, அரசு வழக்கறிஞரின் உத்தரவின் பேரில், போலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். இது இப்போதைய சட்ட நடைமுறைகளுக்குள் உள்ளடக்கப்படுகிறது: “திடீர் ஆயுதமாக” பயன்படுத்தப்படலாமென அவர்களால் கூறக் கூடிய எந்தவொரு பொருளையும் தேடுவதற்காக என்று, போலிஸ் இப்போது வழமையாக "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் கார்கள் மற்றும் பைகளைச் சோதனையிடுகிறது.
- “பொது ஒழுங்கிற்கு ஓர் அச்சுறுத்தலான பயங்களை ஏற்படுத்தும் சூழல்களில் தன்னுடைய முகம் தெரியக் கூடாதென ஒருவர் வேண்டுமென்றோ, மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ" மூடுவதை இப்போது இச்சட்டம் ஒரு குற்றமாக ஆக்கும். ஒரு போராட்டத்தில் முகமறைப்பை அணிந்திருத்தல் ஏற்கனவே 1,500 யூரோ அபராதத்துடன் தண்டனைக்குரியதாக இருந்தது, ஆனால் இந்த உச்சவரம்பு இப்போது 15,000 யூரோ மற்றும் ஓராண்டு சிறை தண்டனையாக உயர்த்தப்படும்.
ஒருவரின் முகத்தைப் "பகுதியாக" மூடுவதற்கான போலிஸ் தடை என்பது பெரிய சூரிய-ஒளிக்கான கருப்பு கண்ணாடிகள் மற்றும் மேல்துண்டுகளுக்கும் பொருந்தலாம் என்று பரவலாக குறிப்பிடப்படுகிறது. கண்ணீர் புகைக்குண்டுகளால் போலிஸ் தாக்கலாம் என்று உத்தேசித்து சிலர் "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் கொண்டு வந்திருந்த சுவாச முகமூடிகளும், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் உணர்விழக்கச் செய்யும் கையெறிகுண்டுகள் முகத்திலோ தலையிலோ சுடப்படுவதிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களைத் தற்காத்துக் கொள்வதற்கான தலை கவசங்களும் இதில் உள்ளடக்கப்படலாம்.
உண்மையில் அந்த சட்டமசோதா, ஒரு நபர் ஒரு குற்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்காக முகத்தை மறைத்து கொண்டிருந்தால் தான் அது பொருந்தும் என்று குறிப்பிட்டது. ஆனால் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அது சட்டத்தை "பயன்படுத்த முடியாது" செய்து விடுமென அறிவித்த பின்னர் கடந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்திருத்தத்தின் மூலமாக அது நீக்கப்பட்டது. மாறாக, கைது செய்யப்பட்ட நபர் இப்போது தங்களின் முகத்தை மறைக்க அவர்களுக்கு ஒரு "சட்டபூர்வ நோக்கம்" இருந்ததாக நிரூபித்தாக வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை முன்நகர்த்திய ஜனநாயக இயக்க கட்சியின் Laurence Vichnievsky கூறுகையில், அது அரசிடமிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு “நிரூபிக்க வேண்டிய பொறுப்பை மாற்றுவதற்கு” அவசியப்படுவதாக தெரிவித்தார்.
போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து தடை செய்யப்பட்டவர்கள் ஒரு நிர்வாக நீதிபதியிடம் முறையீடு செய்யலாம் என்றாலும், அதுபோன்ற முறையீடுகள் செய்வது நடைமுறையளவில் சாமானிய குடிமக்களுக்கு சாத்தியமில்லை என்பதை ஊடகங்களில் பேசிய வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தினர். போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்ட எவரொருவருக்கும் 48 மணி நேரத்திற்குள் உத்தரவாணை அனுப்ப அரசுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது என்றபோதும், அவர்களால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாவிட்டால் இது பொருந்தாது.
இந்த குற்றச்சாட்டுக்கள் "கலகக்காரர்களை" நோக்கி திருப்பி விடப்பட்டிருப்பதாக அரசின் அர்த்தமற்ற வாதங்களை யாரும் நம்புவதற்கில்லை. ஞாயிறன்று இரவு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனெர் "வதந்திகள், திரித்தல்கள், பொய்யுரைகள், பயங்கள் மற்றும் சந்தேகங்கள் விதைக்கப்பட்டு வருவதன்" காரணமாக ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டார். போராட்டத்தில் "மிக பெரும்பாலும், குண்டர்கள் ஆபத்தை ஏற்படுத்துவதால்”, இச்சட்டம் "போராட்ட உரிமையைப் பாதுகாக்க நோக்கம்" கொண்டதாம்.
“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் 12 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியதில் இருந்து 1,200 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் காயமடைந்திருப்பதாக காஸ்டனெர் குறிப்பிட்டார், ஆனால் லத்திகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளைக் கொண்டு தாக்கி, உணர்விழக்க வைக்கும் கையெறிகுண்டுகளால் தொழிலாளர்களின் கரங்களை எரித்து காயம் உண்டாக்கிய, ரப்பர் தோட்டாக்களால் 20 க்கும் அதிகமானவர்களின் கண்களில் சுட்ட கலகம் ஒடுக்கும் போலிஸின் தாக்குதல்களினாலேயே பெரும்பான்மையினர் காயமடைந்தார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
எப்படிப் பார்த்தாலும், இந்த பாசாங்குத்தனம் அரசு பிரதிநிதி Alice Thourot ஆல் கைவிடப்பட்டது. அப்பெண்மணி ஜனவரி 31 இல் Le Figaro க்குக் கூறுகையில், “தொடர்ந்து வன்முறை குற்றவாளியாகி வரும், நமக்கு முன்னமே தெரிந்த, தீவிர வலது மற்றும் தீவிர இடதின் சிறிய குழுக்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டங்களில் தனிநபர்கள் ஏன் தென்பட வேண்டும் என்பதை பிரெஞ்சு மக்கள் புரிந்து கொள்ளவில்லை,” என்றார். இது இச்சட்டம் இறுதியில் இடதுசாரி எதிர்ப்பைக் குற்றகரமாக்குவதை நோக்கி திருப்பி விடப்பட்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அந்த சட்டமசோதாவுக்கு ஆதரவாக 392 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் இடப்பட்டன. சோசலிஸ்ட் கட்சி (PS), ஜோன்-லூக் மெலென்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI), மற்றும் மரீன் லு பென்னின் நவ-பாசிசவாத தேசிய திரளணி ஆகியவை எதிராக வாக்களித்தவற்றில் உள்ளடங்கும். இந்த கட்சிகள் அனைத்துமே தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசைக் கட்டமைப்பதை ஆதரிக்கின்றன என்பதோடு, அந்த சட்டமசோதாவை நிறைவேற்ற அவற்றின் வாக்குகள் அவசியமில்லை என்பதால் மட்டுமே அதற்கு எதிராக வாக்களித்தன.
பாசிசவாத விச்சி ஆட்சியின் வழிதோன்றலான லு பென்னின் கட்சி மக்ரோனின் சட்டத்திற்கு எதிராக "தனிநபர் சுதந்திரத்தின்" பாதுகாவலராக தன்னை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற உண்மையானது, எந்தவொரு மக்கள் பிரச்சினையும் ஜெயிப்பதற்கான அதிதீவிர வலதின் ஆற்றல், வலதுசாரி போலிஸ்-அரசையும் மிகவும் "மிதமான" முதலாளித்துவ கட்சிகள் என்று கூறிக் கொள்பவைகளின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளையும் சார்ந்துள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரமாக உள்ளது.
அடிபணியா பிரான்ஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் "வேண்டாம்" வாக்குகளும் எரிச்சலூட்டுவதில் குறைந்தவை இல்லை. நவம்பர் 2015 இல், பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் பாரீசில் பயங்கரவாத தாக்குதல் என்ற சாக்குப்போக்கைப் பயன்படுத்தி, அவசரகால நிலையைத் திணித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கியதுடன், போலிஸிற்கு பாரிய அதிகாரங்களை வழங்கியது. மெலென்சோனின் கட்சி அந்த அவசரகால நிலை திணிப்பை ஆதரித்தது, பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்ட நெருக்கடி நிலை மீண்டும் மீண்டும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
அரசியல் ஸ்தாபகத்தின் எந்த கன்னையும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இல்லை. இது அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் வரையில் நீள்கிறது, இவை இந்த "கலகம் ஒடுக்கும்" சட்டத்திற்கு எந்த எதிர்ப்பையும் ஒழுங்கமைக்கவில்லை. தொழிற்சங்கங்கள் அவற்றின் நிதி வரவில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக அரசு மற்றும் முதலாளிமார்களிடம் இருந்து பெறுகின்ற நிலையில், மற்றும் பெருநிறுவனங்களுக்கான ஒரு தொழில்துறை போலிஸ் படையாக அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை வகிக்கும் இவை, ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையாக "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்குக் குரோதமாக இருந்தன. மிகப் பெரிய பிரெஞ்சு தொழிற்சங்க கூட்டமைப்பான CFDT இன் தலைவர் லோரோன் பேர்ஜே, “வன்முறை" போராட்டக்காரர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் கடுமையான அரசு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு, ஒடுக்குமுறை மூலமாக போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் தோல்வியடைந்ததும், தொழிற்சங்கங்கள் அந்த போராட்டங்களை தங்களுடன் "இணைக்கும்" முறையீடுகளைச் செய்ய தமது திசைவழியை மாற்றி உள்ளன, அவை போராட்டங்கள் மீது கட்டுப்பாட்டை எடுத்து அவற்றின் குரல்வளையை நெரிப்பதற்காக செவ்வாயன்று தேசிய "நடவடிக்கை தினம்" என்ற ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன.
எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் பதாஹ் சிசி உடன் மக்ரோன் தன்னை நல்லிணக்கப்படுத்திக் கொள்ள அவரின் சமீபத்திய விஜயத்திற்குப் பின்னர் மற்றும் விச்சி தலைவர் மறுஷல் பெத்தானை "மாவீரர்" என்று புகழ்ந்துரைத்த பின்னர் வந்துள்ள இந்த புதிய சட்டங்கள், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மரணகதியிலான அபாயங்களை அடிக்கோடிடுகின்றன. முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் பொருளாதார உடைவை முகங்கொடுத்துள்ள ஆளும் வர்க்கம் போர் மற்றும் வறுமைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அதிகரித்து வரும் இயக்கத்திற்கு ஒரு போலிஸ் அரசைக் கட்டமைப்பதன் மூலமாக விடையிறுக்கிறது.