ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s “rise” and the savage exploitation of the working class

இந்தியாவின் “எழுச்சி”யும் தொழிலாள வர்க்கத்தை மிருகத்தனமாக சுரண்டலும்

By Kranti Kumara
10 January 2019

ஒரு அழிவுகரமான அந்நியச் செலாவணி நெருக்கடி, அதனை சர்வதேச நாணய நிதியத்தின் கரங்களில் தள்ளியிருக்கும் நிலையில், இந்தியாவின் ஆளும் செல்வந்த தட்டானது, தசாப்த காலங்களாகப் பின்பற்றி வந்த அரசு- தலைமையிலான முதலாளித்துவ அபிவிருத்தி செயல்திட்டத்தை 1991ல் கைவிட்டு, இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு கூலி உழைப்பின் புகலிடமாக மாற்றத் தொடங்கியது.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் மேற்கத்திய பத்திரிகைகளை நம்பும் படியாக இருந்தால், நவ தாராளமய “சந்தை ஆதரவு” கொள்கைகளை ஏற்றுக் கொண்டது ஒரு உன்னத வெற்றியாகும். இறுதியாக பார்க்கையில், 1993க்கும் 2014க்கும் இடையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதன் உண்மை அர்த்தத்தில் சுமார் ஆண்டுக்கு 7 சதவீதமாக, ஒரு வருடாந்த வீத அளவில் வளர்ச்சி கண்டது, அது இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தியளவை கிட்டத்தட்ட நான்கு மடங்காய் அதிகரித்தது.

ஆனால் இந்தியாவின் “எழுச்சி” யானது, ஈவிரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டல் மற்றும் அரசு சொத்துக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் விரைந்து வளர்ந்துவரும் தொழிலாள வர்க்கமானது வறிய கூலிகளுக்கு தள்ளப்பட்டு, டிக்கென்சியன் வேலை நிலைமை மற்றும் ஆபத்தான வேலைநிலைமைகளுக்கு ஆளாகி இருக்கிறது, மற்றும் இந்த நாட்டில் பொது சேவைகள் எனப்படுபவை உண்மையிலேயே இருக்குமாயின், அவை இன்று பாழடைந்து போயுள்ளன மற்றும் மிக அடிப்படையான ஒரு சமூகப் பாதுகாப்பு வலை கூட எப்பொழுதுமே இருந்ததில்லை.

இந்தியா உலகில் மிகவும் சமூக சமத்துவமின்மை கொண்ட நாடுகளுள் ஒன்றாக மாறியுள்ளது. 1980 மற்றும் 2016க்கு இடையில், மிகவும் செல்வம்படைத்த 10 சதவீத இந்தியர்கள் அனைத்து வளர்ச்சி வருவாயின் 66 சதவீதத்தைக் கையகப்படுத்திக் கொண்டார்கள். உயர் ஒரு சதவீதம் மட்டுமே 28 சதவீதம் – அல்லது மிகவும் ஏழையான 50 சதவீத இந்தியர்களுக்கு கிடைக்கும் வருவாய்வளர்ச்சியின் 11 சதவீதத்தை விட இரண்டரை மடங்குக்கும் அதிகமானதை சுவீகரித்துக் கொண்டார்கள்.

தேசிய வருவாய் மீதான புள்ளி விவரங்களின் மூலமாக சமூக சமத்துவமின்மையில் ஏற்பட்டுள்ள பேராசைமிக்க வளர்ச்சி மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. 1991க்கும் 2013க்கும் இடையில் தொழிலாள வர்க்க மக்கட்தொகையில் ஒரு பெரும் வளர்ச்சி இருந்தும் தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதை அவை காட்டுகின்றன.

முதலாளித்துவ வர்க்கத்தின் பிரமாண்டமான பசியின் கொடூரமான வெளிப்பாடுதான் இந்திய பில்லியனர்களின் (பெரும் கோடீஸ்வரர்களின்) அதிவேக வளர்ச்சியாகும், இது, 2018 உலக ஊட்டச்சத்துணவு அறிக்கையானது, 46 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதாக, மற்றும் 25 மில்லியன் குழந்தைகள் “வீணான” நிலையில் இருப்பதாகக் கண்டறிந்த ஒரு நாட்டில் தான் நிகழ்ந்துள்ளது. 1990களில் இந்தியா இரண்டு பில்லியனர்களின் இல்லமாக இருந்தது அவர்களின் இணைந்த சொத்தின் மதிப்பு 3.2 பில்லியன் டாலர்கள், இன்றோ அது 131 ஆகியுள்ளதாக பெருமையடிக்கிறது மற்றும் அவர்களின் செல்வம் 340 பில்லியன் டாலர்களாக ஆக பெருகியுள்ளது, இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதத்திற்கு சமமானது.

உலக அரங்கிற்கு இந்தியாவின் செல்வத்தட்டின் வருகை பற்றி கத்திக் கரைகையில், நாட்டின் 1.3 பில்லியன் (130கோடி) மக்களில், மிகப் பெரும்பான்மையினர், தங்களது வாழ்க்கையை தினமும் தள்ளுவதற்கு பாடுபடும் சமூக சீரழிவானது, பரந்துபட்டும் சகிக்க முடியாமலும் உள்ளது, அது கற்பனைக்குக்கு கூட எட்டாததாகவும் உள்ளது.

இந்தக் கட்டுரையில் மேற்கோளிடப்படும் பல புள்ளிவிவரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அவற்றுள் சில வசதிக்காக முழுமையாக குறிக்கப்பட்டுள்ளது, மற்றும் பெரும்பாலானவை 2011 அல்லது 2012ம் ஆண்டுகளுக்குப் பொருந்துவனவாயினும், அவை ஆவணப்படுத்தும் சமூக நெருக்கடி நிச்சயமாக தணியக் கூடியதல்ல, பெரும்பாலானவை மோசமானதாகவே இருக்கின்றன. தற்போது இந்தியா பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது, அது முதலாளித்துவ சந்தையையும் தனிநபர் செல்வக்குவிப்பையும் வெறித்தனமான வகுப்புவாதத்துடன் இணைத்து ஆராதிக்கிறது.

பரந்த வேலை இன்மை மற்றும் தகுதிக்கு ஏற்ற வேலை இன்மை

இந்தியப் பொருளாதாரத்தில் மிகவும் பளிச்சிடும் சிறப்பியல்புகளுள் ஒன்று அதன் அற்பமான, தொழிலாளர் சக்தி பங்கேற்கும் வீதம் தான்.

இந்தியா பற்றிய ILO வின் அண்மைய அறிக்கையின்படி, நாட்டின் வேலை செய்யும் வயதுடைய மக்கள், அதாவது 15க்கும் 64க்கும் இடைப்பட்ட வயதுடைய மக்கள் 860 மில்லியனில், 405 மில்லியன் (47 சதவீதம்) மட்டுமே “கூலி பெறுபவராக” உள்ளனர் — ILO வரையறையின் கீழ் சம்பாதித்து வாழும் அனைவரையும் குறிக்கிறது அது ஒரு தொழிலாளியாக, மாதச் சம்பளம் வாங்கும் ஒரு தேர்ச்சிபெற்றவராக, விவசாயியாக, கைவினைஞராக, தெருவில் விற்பவராக அல்லது பெருநிறுவன அதிகாரியாகவும் கூட இருக்கலாம்.

இந்தியா விரைந்து விரிவடைந்துவரும் உழைக்கும் வயதுடைய மக்கட்தொகையை பெற்றிருக்கிறது அதில் 15 மற்றும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடையோர், அவர்கள் இந்திய மக்களில் 35 சதவீதமாவர். ஆனால் உலக வங்கி கூறுவதன்படி, ஒவ்வொரு மாதமும் நுழைகின்ற 1.3 மில்லியன் இளைஞர்களை கொண்ட உழைக்கும் சக்தியில் ஒரு சிறு அளவினரே வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

1970கள் மற்றும் 1980களில், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் 3-4 சதவீதம் வளர்கையில், வேலைவாய்ப்பானது ஆண்டுக்கு 2 சதவீதம் அளவில் அதிகரித்தது. 1990களில் இந்தியா, முதலீட்டாளர் ஆதரவு நிகழ்ச்சிநிரலை ஏற்றுக்கொண்டு அரசுடைமை தொழில்துறை பகுதிகளை மூடிய பொழுது, வேலைகளின் வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதத்திற்கும் குறைவாகியது, தற்போதோ வேலைவாய்ப்பின் வளர்ச்சி பூச்சியத்தை நெருங்கிவிட்டது.

பரந்த வேலையின்மை மற்றும் தகுதிக்கேற்ற வேலையின்மை ஆகியவை பரந்த சமூக எண்ணிக்கையில் இருக்கின்றன. வணிகமானது வேலையில்லா மற்றும் தகுதிக்கேற்ற வேலை இல்லா உழைப்பின் பரந்த தொகுதியை, சம்பளத்தைக் குறைப்பதற்கும் வேலை நிலைமைகளை மோசமாக்குவதற்கும் சுரண்டுகிறது என்பதை சொல்லத்தேவை இல்லை. ஆனால் பற்றாக்குறையான வேலை வாய்ப்புக்கள், அரைகுறை புகழ்பெற்ற நிறுவனங்களில் நுழைவதற்கும் சிறந்த கல்வித் தகுதியைப் பெறுவதற்குமான பெரும் போட்டி அங்கே இருக்கிறது என்பதையும் அர்த்தப்படுத்துகின்றன.

ஸ்ராலினிச கட்சிகளும் தொழிற்சங்கங்களும் வர்க்கப் போராட்டத்தை நசுக்கியுள்ள நிலைமைகளின் கீழ், தெளிவற்ற வேலைவாய்ப்பு நிலைமையானது, இட ஒதுக்கீடுகளுக்கான பிற்போக்கு சாதி அடிப்படையிலான கிளர்ச்சிகளை தூண்டிவிட்டுள்ளது, அவை ஒரு சில பொதுத்துறை வேலைகள் மற்றும் பல்கலைக்கழக இடங்கள் அதிக “சமத்துவமான” வழிகளில் வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறது. இளைஞர்களுக்கு வேலையின்மை மற்றும் வேலைகள், கல்விகளுக்கான போட்டியும் கூட இந்திய இளைஞர்களின் தற்கொலைகளுக்கு பிரதான காரணமாகவும் இருக்கிறது. அதுவும் உலகிலேயே அதிகமானதாக, 100, 000 க்கு 35.5 சதவீதமாக உள்ளது.

2018 UNDP ஆசிய-பசிபிக் மனித வளர்ச்சி அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதியின் பின்வரும் வரைபடம் 1991க்குப் பின்னர் உழைக்கும் வயதுடைய மக்கள் எண்ணிக்கை மற்றும் தேசியப் பொருளாதாரத்தில் அவர்களின் “பங்கேற்பு வீதம்” இவற்றுக்கிடையில் அதிகரித்துவரும் இடைவெளியை காட்டுகிறது, அது “மறைக்கப்பட்ட” வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதற்கு சான்றுரைக்கும் ஒரு நிகழ்வுப்போக்காகும்.

ஆயினும், 206 மில்லியன் அல்லது 51 சதவீத வேலைவாய்ப்பு பெற்ற நபர்களாக வரைபடமும் கூட தவறாகக் காட்டுகிறது. இவ்வாறான பெரும் எண்ணிக்கையினர், சிறு வியாபாரம் அல்லது பொது இடங்களில் பொருட்களை விற்றல், சிறு நிலங்களை உழுதல் மற்றும் இதர குறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமாக தங்கள் ஜீவனத்தை நடத்துகின்றனர்.

UNDP மதிப்பீட்டின்படி 1991 இலிருந்து 2013 வரையிலான காலகட்டத்தின் போது, உழைக்கும் வயதுடைய மக்கட்தொகை 241 மில்லியன் அளவில் அதிகரித்திருக்கையில், வேலைவாய்ப்பானது 144 மில்லியன் அளவில் மட்டுமே அதிகரித்தது.

இந்திய பொருளாதாரத்தின் இன்னொரு பளிச்சிடும் தோற்றமானது, முறையான மற்றும் முறைசாரா துறைகள் என்றழைக்கப்படுபவற்றுக்கு இடையிலான பிரிவுகளாகும். முறையான துறை பெருவீத தொழில்துறை மற்றும் வியாபாரங்களை உள்ளடக்குகிறது — அவை நிரந்தர வேலையை சிலவகை நன்மைகளுடன் வழங்கும் போது தொழில் விதிகளுக்கு பாரம்பரியமாக உட்படுத்தப்பட்டு வருகின்றன.

முறைசாரா துறையானது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டது, கிட்டத்தட்ட முற்றிலும் ஒழுங்குபடுத்தப்படாதது மேலும் முதலாளிகள் விருப்பம்போல் சம்பளத்தையும் வேலை நிலைமைகளையும் நிர்ணயிக்கின்றனர். 82 சதவீதமான சம்பளம் பெறும் தொழிலாளர்கள் முழுவருமே முறைசாராத் துறைகளில் வேலைபார்க்கின்றனர், அங்கே அவர்கள் 2012ல் பெற்ற பரிதாபகரமான சராசரி சம்பளம் ஒரு நாளைக்கு வெறும் 147 ரூபாய் (2 டாலர்கள்) தான். முறையான துறைகளில் சராசரி சம்பளம் கணிசமானளவு உயர்ந்ததாகும், ஒரு நாளைக்கு 247 ரூபாய் (3.50 டாலர்கள்) ஆகும் இது எந்த வரையறைப்படியும் ஒரு வறுமைக் கூலி தான்.

பொருளாதாரத்தின் அதிகரித்துவரும் “முறைசாராமை”

முறையான துறையில் முன்னர் வேலைவாய்ப்பெல்லாம் நிலையான வேலைவாய்ப்போடு தொடர்பு கொண்டிருந்ததென்றால், இப்போது அதுபோல் இல்லை. பெரும்பாலும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் சுரண்டலை அதிகரிக்கும் மற்றும் வேலை பாதுகாப்பை வெட்டும் இயக்கத்தை பெரும்பாலும் ஈட்டிமுனைப்புடன் முன்னெடுக்கையில், முறையான துறையில் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் நிலையற்ற, குறைந்த கூலி பெறும் வேலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளது.

2018 அறிக்கையில், “1991ல் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பின்னர் இருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட துறையானது முறையான ஒழுங்கமைந்த / சம்பளம் பெறும் வேலையுடன் ஒத்ததாகப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் சம்பள வேலைவாய்ப்பானது, தொழிலாளர்களுக்கு வேலைப்பாதுகாப்பு மற்றும் இதர நலன்கள் கிடைக்காத நிலையில், வரவர தற்காலிகமானதாகவும் அல்லது ஒப்பந்தமுறையிலானதாகவும் ஆகிவருவது அதிகரிக்கிறது” என்று ILO வலியுறுத்துகிறது.

நீண்டகால வேலையின்மைக்கு தீர்வு, விருப்பம்போல் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தல், விருப்பம்போல் வெளியேற்றல் செய்வதற்கு நிறுவனங்களை அனுமதிப்பது என்னும் பொய்யை மோடி அரசாங்கமானது வெறித்தனமாக கூறி வந்தது. மார்ச் 2018ல் மோடியும் அவருக்கு நெருக்கமான அமைச்சக கூட்டாளிகளும், அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒரு வாரத்திலிருந்து இரண்டு ஆண்டுகள்வரை நீடிக்கும் “நிலைப்படுத்தப்பட்ட கால” வேலைவாய்ப்பு என்று அவர்கள் அழைப்பதை, அனுமதிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை திருத்தினர். “நிலைப்படுத்தப்பட்ட காலப்” பணியாளர்களை எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்ய முதலாளிகள் அனுமதிக்கப்படுவதனால் “நிலைப்படுத்தப்பட்ட காலம்” என்ற வகையினமும் கூட அர்த்தமில்லாமல் போகிறது.

வறுமைக் கூலிகள்

இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தின் சம்பாதிப்புக்களை பரிதாபகரமான நிலைமையிலிருந்து வெறுப்பான நிலை என்ற அளவிற்கு மட்டுமே விவரிக்கலாம். பின்வரும் வரைபடமானது சராசரி வருவாயைக் காட்டுகிறது, இது கிராமப்புற, நகர்ப்புற மற்றும் அனைத்து இந்திய தொழிலாளர்கள் மத்தியில் உள்ள சராசரி வருவாயைக் காட்டுகிறது. ILO வின் படி, 2011-12ல் கிராமப்புறத் தொழிலாளர்களின் அரைப்பங்கினர் ஒரு நாளைக்கு 1.85 டாலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். நகர்ப்புறப் பகுதிகளில், அரைவாசிப்பேர் ஒரு நாளைக்கு 3.20 டாலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். தேசிய ரீதியான சராசரி ஒரு நாளைக்கு 2.15 டாலர்தான். இந்திய தொழிலாளர்களில் அபரிமிதமான பெரும்பான்மையினர் தற்காலிக தொழிலாளர்களே, இந்த பரிதாபகரமான கூலிகளை அவர்கள் பெறுவது கூட நிலையற்றதாகும் என்பதை வலியுறுத்துவது அவசியமானதாகும்.


விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இதர கிராமப்புறத் தொழிலாளர்களின் அவலம்

மேலே சுட்டிக்காட்டியவாறு, விவசாயத் தொழிலாளர்களாக வேலைசெய்யும் பத்து மில்லியன் கணக்கானவர்கள் உட்பட, கிராமப்புறத் தொழிலாளர்களின் அவலமானது குறிப்பாக மிக மோசமானது.

பரந்த அளவிலான கிராமப்புற துன்பங்களை எதிர்கொள்கையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கமானது 2005ல் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டமான, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (MGNREGS) ஒவ்வொரு கிராமப்புற வீட்டின் ஒரு உறுப்பினருக்கு 100 நாட்கள் குறைந்த பட்ச ஊதிய உழைப்பை பெயரளவில் உத்தரவாதம் செய்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, அதன் உயிர்பிழைப்புக்காக, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் பாராளுமன்ற ஆதரவில் தங்கியிருந்த போது அதன் வற்புறுத்தலால் இதனைச் செய்தது. உதாரணமாக “மனித முகத்துடனான சீர்திருத்தம்” என்று அறிவிக்கப்பட்ட MGNREGS திட்டமானது, காங்கிரஸ் கட்சியானது சந்தை ஆதரவு “சீர்த்திருத்தத்தை” வில்லங்கமில்லாமல் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவைப்படும் ஒரு ஜனரஞ்சக மூடுதிரையை அதற்கு வழங்கியது.

MGNREGS இற்கான அற்பமான வாக்குறுதிகளைக் கூட காப்பாற்ற இந்திய அரசாங்கம் தவறிவிட்ட போதிலும், “விவசாய உழைப்புச் சந்தையை” உருக்குலைக்கும் வகையில் அதாவது (விவசாயிகளின்) கூலிகளை அதிகரிக்க செய்ததற்காக, இந்தத் திட்டம், மோடி அரசாங்கம் மற்றும் பெருமுதலாளிகளின் கருத்தொருமித்த தாக்குதலின் கீழ் வந்திருக்கிறது.

இந்த வேலைத்திட்டத்திற்கு கணிசமான அளவு அளவுக்கதிகமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதாவது அரசாங்கம் வழங்குவதற்கு நிர்ணயித்த எண்ணிக்கையை காட்டிலும் அதிகமானவர்கள் MGNREGS உரிமைகளை செயற்படுத்த விழைந்திருந்தனர் என்றபோதிலும், பாஜக அரசாங்கமானது அதற்கான உதவித்தொகையை வெட்டியது. இந்திய வர்த்தக இதழான Business Standard இன் அண்மைய அறிக்கைப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீத அளவாக MGNREGS-க்கு அளிக்கப்படும் நிதிவழங்கலானது 2010-11ல் GDP இன் 0.53 சதவீதத்திலிருந்து 2017-18ல் 0.42 சதவீதத்திற்கு வீழ்ந்தது. பணவீக்கத்தைச் சரிசெய்து கொள்ளும் விதமாக 2017-18க்கான வரவு-செலவு திட்ட நிதி ஒதுக்கீடு 710 பில்லியன் ரூபாய் (10பில்லியன் டாலர்கள்) க்கும் மேலாக இருக்க வேண்டும், ஆனால் வரவு-செலவு திட்டத்தில் உண்மையான ஒதுக்கீடு வெறும் 480 பில்லியன் ரூபாயாக (6.9 பில்லியன் டாலர்களாக) இருந்தன.

இந்த வகையான கட்டயமாக்கப்பட்ட “ஆதாயம்” அவர்களுக்கு கிடைப்பதிலிருந்து அவர்களை ஊக்கமிழக்கச் செய்யும் வகையில், மிகவும் கொடூரமாக, மோடி அரசாங்கமானது வறுமை பீடித்த இந்த தொழிலாளர்களுக்கான கூலிகளை வழங்காமல் பலமாதங்களாக வேண்டுமென்றே காலதாமதம் செய்து இழுத்தடித்து வந்தது.