Print Version|Feedback
Halil Celik, a fighter for socialism (1961-2018)
ஹலீல் செலிக், ஒரு சோசலிசப் போராளி (1961-2018)
By Peter Schwarz
1 February 2019
பேர்லினில் ஹலீல் செலிக், பிப்ரவரி 2016
டிசம்பர் 31,2018 அன்று Sosyalist Eşitlik (சோசலிச சமத்துவம்) குழுவின் தலைவரும் நிறுவனருமான ஹலீல் செலிக் இஸ்தான்புல்லில் தமது 57ம் வயதில் புற்றுநோயால் காலமானார். அவர் அவரது வாழ்வின் 40 ஆண்டுகளை சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும், கடைசி காற்பகுதி காலகட்டத்தை துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) ஒரு பகுதியைக் கட்டுவதற்கும் அர்ப்பணித்திருந்தார்.
ஹலீல் பல்வேறு அரசியல் போக்குகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்த பின்னரே மற்றும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளில் தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே ட்ரொட்ஸ்கிசத்திற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் வந்து சேர்ந்தார். இதற்கு தேவைப்படும் அரசியல் வேட்கை, தனிப்பட்ட துணிவு மற்றும் வற்றாத ஆற்றல் ஆகிய பண்புகளை அவர் அபரிமிதமாகவே கொண்டிருந்தார். போலி இடது அமைப்புகளின் கோட்பாடற்ற, தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாதக் கொள்கைகளுடனான நீண்ட, கசப்பான அனுபவத்தின் அடிப்படையில், ஹலீல் துருக்கியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அபிவிருத்தியானது புரட்சிகர சர்வதேசியத்தின் அடிப்படையிலே மட்டும்தான் இடம்பெறும் என்றும் இதற்கு இருபதாம் நூற்றாண்டின் போக்கில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களை முற்றிலும் புரிந்துகொள்வது தேவைப்படுகிறது என்றும் புரிந்துகொண்டார். இவை இரண்டையும் அவர் நான்காம் அகிலத்தின் அனத்துலகக் குழுவின் வரலாறு மற்றும் ஆவணங்களிலிருந்து கண்டுகொண்டார்.
ஸ்ராலினிச ஆரம்பங்கள்
ஹலீல் செலிக் 1961, நவம்பர் 23ஆம் தேதி இஸ்தான்புல்லில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மாலுமி, தாய் இல்லத் துணைவி. அவரது 16ம் வயதில், ஒரு மாணவனாக அவர் அல்பேனிய சார்பு ஸ்ராலினிசக் கட்சியின் இளைஞர் அமைப்பில் சேர்ந்தார். 1978ல் ஒரு ஆண்டு கழித்து, கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, பள்ளிப் படிப்பையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு பல்வேறு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் வசிப்பிடப் பகுதிகளிலும் ஒரு முழுநேர ஒழுங்கமைப்பாளராகவும் கொள்கை பரப்பாளராகவும் செயற்பட தொடங்கினார்.
இது பல துருக்கிய இளைஞர்கள் தீவிரமயப்படும் ஒரு காலமாக இருந்தது. மற்ற நாடுகளைப் போலவே, 1968க்கும் 1971க்கும் இடையிலான ஆண்டுகள் துருக்கியிலும் வர்க்கப் போராட்டங்களின் போர்க்குண அலையால் குறிக்கப்பட்ட காலப்பகுதியாக இருந்தது. எண்ணற்ற வேலைநிறுத்தங்கள், தொழிற்சாலை உள்ளிருப்புகள், மாணவர் எதிர்ப்புக்கள், ஏழை விவசாயிகளின் நில ஆக்கிரமிப்புக்கள், மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான ஆக்கிரோஷம் மிக்க எதிர்ப்புக்கள் இருந்தன. மார்ச் 1971ல் வாஷிங்டனுடனான ஒத்துழைப்பில், துருக்கிய இராணுவம் தலையிட்டது. அது சுலெய்மான் டெமிரெல் (Süleyman Demirel) இன் குடிமக்கள் அரசாங்கத்தை பதவி துறக்கும்படி நிர்பந்தித்து, அதிகாரத்தை தானே கைப்பற்றி, இரண்டாண்டுகள் வைத்திருந்தது.
ஆட்சிக்கவிழ்ப்பு இரத்தம்தோய்ந்த ஒடுக்குமுறை அலையால் பின்தொடரப்பட்டது, அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட்டன, கைதுகள் மற்றும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இராணுவத்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 1970கள் பயங்கரமான வர்க்கப் போராட்டங்கள், நிலையற்ற அரசாங்கங்கள் மற்றும் என்றுமிருந்திரா புதிய ஒடுக்குமுறை அலைகள் என இறுதியில், 1980 செப்டம்பரில் இராணுவம் மீண்டும் ஒரு சதியை ஏற்பாடுசெய்து தளபதி எவ்ரன் (Evren) கீழ் ஒரு கொடூரமான சர்வாதிகாரத்தை நிறுவும் வரையிலான நிகழ்வுகளால் குறிக்கப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில், இடதுசாரி தீவிர அமைப்புக்கள் செழித்து வளர்ந்தன. துருக்கி முற்போக்குத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) 1967ல் அரசாங்க-ஆதரவு urk-Is தொழிற்சங்க கூட்டமைப்புக்கு ஒரு இடது மாற்றாக நிறுவப்பட்டது, அது 300,000 உறுப்பினர்களாக வளர்ந்தது மற்றும் அரசாலும் பாசிச வலதாலும் அதன்மேல் ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்பட்டது. ஒரு தகவல் மூலத்தின்படி, 1978ல் வெகுஜன இயக்கங்களைச் சேரந்த 1 மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்ளும் பல்வேறு குழுக்கள், கட்சிகள் மற்றும் போக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
இஸ்தான்புல் இல் ஹலீல் செலிக், 2007
இந்த அமைப்புக்களில் பெரும்பாலானவை தேசியவாத மற்றும் ஸ்ராலினிச கருத்துருக்களால் பண்பிடப்பட்டன. சிலர் மாவோ சேதுங் அல்லது சேகுவாரா போதனைகளால் வழிநடத்தப்பட்டனர், சிலர் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தனர், ஆயினும், ஸ்ராலினிசத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கியாலும் நான்காம் அகிலத்தாலும் பாதுகாக்கப்பட்ட புரட்சிகர மார்க்சிசம் துருக்கியில் சற்றும் அறியப்படாமலே இருந்தது. இது ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் துருக்கிய மொழிபெயர்ப்புக்களின் பற்றாக்குறையினால் அல்ல, மாறாக அப்போது சர்வதேசரீதியாக “ட்ரொட்ஸ்கிசப்” போக்கு என்று நன்கு அறியப்பட்ட, மாவோ சேதுங்கையும் சேகுவாராவையும் புகழ்ந்து ஏற்றிய பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் ஏர்னெஸ்ட் மண்டேலின் கொள்கைகளாலாகும்.
அதிகரித்துவரும் ஒடுக்குமுறையும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முறையாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதைக் காட்டிலும், தேசியவாதத்தின் மீதும் சிறு குழுவினாலான இராணுவ நடவடிக்கைகளின் மீதும் தங்கியிருந்த கொள்கையை அம்பலப்படுத்தியது. அரசானது ஒடுக்குமுறையை உக்கிரப்படுத்தியதுடன், பல இடதுசாரி அமைப்புக்களை நொருக்கித்தள்ளியது.
ஹலீல் தாமே 1978 செப்டம்பரில் அவரது அரசியல் நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் இராணுவச் சிறையில் கழித்தார். அங்கு அவர் மோசமாக நடத்தப்பட்டார். சிறையிலிருந்தபோது, ஸ்ராலினிச அரசியலிலிருந்து தன்னைத் தள்ளிவைத்துக் கொள்ள தொடங்கினார், ஆனால், ஒடுக்குமுறை நிலைமைகளின் கீழ் துரோகமாக இருக்கும் என்று உணர்ந்ததால் அவர் அந்த அமைப்பிலிருந்து வெளிப்படையாக முறித்துக்கொள்ள விரும்பவில்லை.
1980 செப்டம்பரில் இரு இராணுவ ஆட்சிக் கவிழப்பு சதிக்குப் பின்னர், அவர் சட்டவிரோத ஸ்ராலினிச அச்சுக்கூடத்தில் வேலை செய்தார். இராணுவ ஆட்சிக்கெதிராக துண்டறிக்கைகளை வினியோகித்ததால் அவர் விரைவில் கைது செய்யப்பட்டார். மற்றும் அதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் எதையும் வெளிப்படுத்தாததால் 1981 கோடையில் விடுதலைசெய்யப்பட்டார். சிறையில் பெரும்பாலான ஸ்ராலினிச தலைவர்கள் மற்றவர்களைக் காட்டிக்கொடுத்தனர் என்ற செய்தியை அவர் ஒரு வழக்கறிஞர் மூலம் அறிந்தார். இறுதியாக அவர் ஸ்ராலினிசத்தோடு முறித்துக் கொண்டார்.
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், அவரது அரசியல் வாழ்க்கையின் அந்த நிலையை “நான் தனியாக நடக்க முடிவு செய்தேன்” என அவர் எழுதியிருந்தார்.
பின்வந்த ஆண்டுகளில் ஹலீல் தனது தொழில்முறைப் பயிற்சியை முடித்தார். திரும்பத்திரும்ப கைதுகளால் இடையீடு செய்யப்பட்டநிலையிலும், அவர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றார் மற்றும் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து, 1985ல் பட்டம்பெற்றார். கம்யூனிச நடவடிக்கைகளுக்கு தொழில்முறை ரீதியாகத் தடைவிதிக்கப்பட்டதன் காரணமாக, அவர் ஆசிரியராக பணியாற்ற முடியவில்லை மற்றும் அவரது படிப்பைத் தொடர்ந்து, 1987ல் அவர் முதுநிலைப் பட்டம் பெற்றார். அவர் தனது வாழ்க்கையை ஒரு சாயம் அடிப்பவராக. சுமை தூக்குபவராக, அச்சுப்பிழை திருத்துநராக மற்றும் இதழியலாளராக வேலைசெய்து சம்பாதித்து வாழ்க்கையை நடத்தினார்.
அவர் ஸ்ராலினிசத்திடமிருந்து விலகிச்சென்ற அதேவேளை, அவரது 20வது வயதில், ஹலீல் முதல்முறையாக ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை அறியத்தொடங்கினார். 2013ல் அவர் அனைத்துலகக் குழுவிற்கு எழுதிய ஒரு அரசியல் விண்ணப்பத்தில், அவர் விளக்கினார், “இந்தக் காலகட்டத்தில்தான் நான் ஜேர்மன் பாசிசம் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்ற புத்தகத்தைக் கண்டேன். அது 1970களில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டு நான் பார்த்த முதல் புத்தகமும் வாசித்த புத்தகமும் அதுதான். ட்ரொட்ஸ்கிசம் மற்றும் ட்ரொட்ஸ்கி பற்றி நான் கொண்டிருந்த அனைத்து தப்பெண்ணங்களுக்கும் எதிரான பலத்த அடியாக அந்தப் புத்தகம் விளங்கியது. நான் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரைப் படிக்கத்தொடங்கினேன் மற்றும் ஸ்ராலின் மார்க்சிசத்தின் எதிரியாக இருந்ததை உணர்ந்தேன்.
ட்ரொட்ஸ்கிசத்துக்கு கடந்துவந்த நீண்டபாதை
ட்ரொட்ஸ்கிசத்துக்கான பாதை நீண்டதும் கடினமானதுமாக நிரூபிக்கப்பட்டது. ஹலீலும் இந்தக் காலகட்டம் முழுவதும் அவரோடு நெருங்கி வேலை செய்த தோழர்கள் வட்டமும், துருக்கியிலும் சர்வதேச ரீதியாகவும் அவர்களுக்கு அறிமுகமாகி இருந்த கிட்டத்தட்ட அனைத்து அரசியற் போக்குகளுமே இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்ட கோட்பாடுகளுடன் முறித்துக்கொண்டு ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தேசிய இயக்கங்களுக்கு அனுசரித்துப் போதல் என்ற உணர்வில் — பப்லோவாதிகள், லம்பேர்வாதிகள், மொரேனோவாதிகள் முதலானோர் தங்களைத்தாங்களே பொய்மைப்படுத்திக் கொண்டனர். அவர் ஒத்துழைத்துப் பணிசெய்த பத்திரிகைகள் மற்றும் அரசியல் செயற்திட்டங்கள் அனைத்தும் ஒரு முட்டுச்சந்தில் முடிவடைந்ததன.
இந்த தட்டானது 1980களில் வலதுபுறம் நோக்கி நகர்ந்ததோடு, குறிப்பாக 1990களில் சோவியத் ஒன்றித்தின் கலைப்புக்குப் பின்னர், இறுதியில் முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்பிற்குள்ளே தன்னை முற்றிலும் ஒருங்கிணைத்துக் கொண்டது, ஹலீலும் அவரது நெருங்கிய தோழர்களும் எதிர்த் திசையில் நகர்ந்தனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின்பால் நோக்குநிலை கொண்ட உண்மையான சர்வதேச சோசலிச முன்னோக்கைத் தேடினர்.
இது இறுதியில், அவர்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நோக்கி வழிநடத்தியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகள் மற்றும் வரலாறு பற்றிய முழுமையான ஆய்வுக்குப் பின்னர், ஹலீல் இது மட்டுமே நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை கொண்டுள்ளது என உறுதிப்படுத்தியதோடு, அவர் தனது கடைசி வருடங்களை துருக்கியில் அனைத்துலக் குழுவின் பகுதியைக் கட்டியமைப்பதற்கு அவரது சக்தி முழுவதையும் அர்ப்பணித்தார்.
ஸ்ராலினிசத்துடன் அவர் முறித்துக் கொண்டபின்னர், ஹலீல் தனது கடந்த கால அனுபவங்களைக் கொண்டு வந்து, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்த முயன்றார். அவர் இளம் தொழிலாளர்களுக்கான கல்வி வட்டங்களை ஒழுங்கமைத்ததோடு பல்கலைக்கழகங்களில் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அவர், தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அடையாளப்படுத்திக்கொண்ட போக்குகளின் ஒத்துழைப்புடன் பிரசுரங்கள் மற்றும் அமைப்புகளை நிறுவுவதற்கு பல முறை முயன்றார். ஆனால் இந்த முன்முயற்சிகள் அனைத்தும் முட்டுச்சந்தில் முடிவடைந்தன.
2016 இல் இஸ்தான்புலில் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மீழெழுச்சி பற்றிய மாநாட்டில் ஹலீல் செலிக் பேசுகிறார்
அந்தவேளையில் அவர் தொழிற்சங்கங்களில் பணியாற்றினார். 1983ல், சுதந்திர தொழிற்சங்கமான Otomobil-Is ல் ஊக்கமுடன் செயற்பட்டார், அது இராணுவ சர்வாதிகாரத்தால் தடைசெய்யப்பட்டது மற்றும் DISK உறுப்பினர்களால் மறுஒழுங்கமைக்கப்பட்டது. 1992ல் அவர் DISK இன் பயிற்சி மற்றும் செய்தித்துறையின் தலைவராக செயற்பட்டார், அது தடைக்குப் பின்னர் தனது வேலையை மீண்டும் புதுப்பித்தது. ஆயினும் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் துண்டறிக்கைகள் மற்றும் “இடது எதிர்ப்பின் தளம்” அறிக்கை ஆகியவற்றின் காரணமாக, அவர் உடனே வெளியேற்றப்பட்டு, சிறப்பு அதிகாரம் கொண்ட அரசுவழக்கறிஞரால் வழக்குத் தொடரப்பட்டார்.
1987ல் ஹலீல் குழு, “சுயாதீன” சோசலிச வேட்பாளர்களுக்கான கூட்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றது. 1988ல், அது Isci Sözü (தொழிலாளர் வார்த்தை) மற்றும் Sosyalism (PGBS — முதலாளிகள், தளபதிகள், அதிகாரத்துவத்தினர் இல்லா சோசலிசம்) வெளியீட்டில் பங்கேற்றது, அதன் உத்தியோகபூர்வ ஆசிரியராக ஹலீல் இருந்தார். பின்னாளில் திரும்பிப்பார்க்கையில், அவர் அதுபற்றி எழுதினார், “PGBS இன் ஸ்தாபிதம் என்பதே கோட்பாடற்ற ஐக்கியத்தின் விளைவாக இருந்தது. அதனை, எமது தத்துவாரத்த பலவீனம் காரணமாக, அரசியல் அப்பாவித்தனம் மற்றும் ‘பழைய ட்ரொட்ஸ்கிச தோழர்களுடனான’ குருட்டுத்தனமான நம்பிக்கையால் அறியாதிருந்தோம்” என்றார்.
ஸ்ராலினிசத்தின் மீதான அரசியல் வேறுபாடுகள் மற்றும் வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு PGBS இன் அடிபணிவு ஆகியவற்றின் காரணமாக, ஹலீலின் குழுவானது 1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமைப்பைவிட்டு வெளியேறியது. பின்னர், அது ஒரு மொரேனோவாத குழுவுடன் கூட்டுச் சேர்ந்து, இணைந்த மாதாந்திர வெளியீடான Enternasyonal Bülten (International Bulletin) ஐ வெளியிட்டது.
1996 இல் ஹலீல் குழு குறுகிய காலத்திற்கு ÖDP (Party of Freedom and Solidarity) இல் சேர்ந்தது, அது பல ஸ்ராலினிசக் கட்சிகளும் இடதுசாரி குட்டி முதலாளித்துவ குழுக்களும் சேர்ந்து அமைத்த அமைப்பாகும், அத்தோடு அது பல தொழிலாளர்களையும் போர்க்குணமிக்க இளைஞர்களையும் ஈர்த்திருந்தது. ஹலீல் குழு, அதனை சோசலிஸ்ட் கட்சியாக மாற்றும் நோக்கில் அல்ல மாறாக அதில் இருக்கும் சிறந்த சக்திகளை வென்றெடுக்கும் நோக்கங்கொண்டு ÖDP இல் சேர்ந்தது. ஹலீல் குழு அதனை சோசலிஸ்ட் கட்சியாக மாற்றமுடியாதெனக் கருதியது. இந்த உள்ளடக்கத்திற்குள், PGBS மறுஒழுங்கு செய்யப்பட்டது, ஆனால் விரைவில் அது மீண்டும் உடைந்து போனது. ஹலீல் குழு இப்பொழுது எல்லைகள் இல்லா சோசலிசம், வர்க்கங்களும் சுரண்டலும் (sss-S) மற்றும் தொழிற்சங்கங்களில் இடது எதிர்ப்பு புல்லட்டின் என்றழைக்கப்படும் மாதாந்திர வெளியீடுகளை வெளியிட்டது.
குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (PKK) உடனான உள்நாட்டுப்போர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியபோது, அரசியல் ஒடுக்குமுறை அதிகரித்தது, அரசியல் காரணங்களுக்காக ஹலீல் தசாப்தங்கள் நீண்ட சிறைத்தண்டனையுடன் அச்சுறுத்தப்பட்டார். அவரது குழு 1994ன் முடிவில் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது. அவர் நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாளே அவரது வீடு “பயங்கரவாத எதிர்ப்பு” சிறப்பு படையால் ஆக்கிரமிக்கப்பட்டது.
துருக்கிக்கு வெளியே, ஹலீல் சர்வதேச ட்ரொட்ஸ்கிச போக்குகளைத் தொடர்புகொள்ள இருந்தார். அவர் பல ஆண்டுகள் வடக்கு ஜேர்மனியில் பிரெமெனில் இல் வாழ்ந்து வந்தார். அங்கே அவர் சமூக பணியாளராக வேலை செய்து வாழ்க்கையை ஓட்டினார்.
ஒரு சர்வதேச மட்டத்தில், ஹலீல் துருக்கியில் பெற்ற அதேவிதமான அனுபவங்களினூடாகவே கடந்து சென்றார். அவர் பப்லோவாத மற்றும் மொரேனோவாத போக்குகளைத் தொடர்புகொண்டார், அவற்றின் பல தலைவர்களை அறிந்து கொண்டார், ஆனால் கூட்டுழைப்பிற்கான கொள்கை அடிப்படையை கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என அது நிரூபித்தது. பின்னர், ஹலீல் சர்வதேச கூடலில் அவரது அனுபவம் பற்றிய திகிலை அடிக்கடி கூறினார். அங்கே அரசியல் உடன்பாடு இல்லாமல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டதுடன் ,பங்கேற்றவர்களுள் கடும்போக்குடைய ஸ்ராலினிஸ்டுகள் மட்டுமல்லாமல் பகிரங்கமான வலதுசாரிகளும் இருந்தனர்.
அவரது மிகவும் தீவிரமான தொடர்புகள் நான்காம் அகிலத்தை மீளஸ்தாபிப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழுவுடன் (Committee to Refound the Fourth International - CRFI) இருந்தன, இது கோர்கே அல்தமிராவின் ஆர்ஜென்டீனிய தொழிலாளர் கட்சியின் (Partido Obrero - PO) ஆதிக்கத்தில் உள்ளது. 1999ல், ஹலீல் ஏதேன்சில் அந்தப் போக்கின் ஒரு மாநாட்டிற்கு ஒரு பார்வையாளராகவும் பின்னர் 2000 இல் புவேனோஸ் அயர்சிஸ் (Buenos Aires) இற்கும் அழைக்கப்பட்டார். இருப்பினும், அமைப்பாளர்கள் அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக அவர்களுடைய குழுவை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கு பெரிதாக தோன்ற செய்வதற்கு மட்டுமே ஆர்வம் காட்டினர்.
உலக சோசலிச வலைத் தளம் பின்னர் குறிப்பிட்டதுபோல், CRFI ஆனது அங்கு அது ஏற்றுக்கொண்ட பல்வேறு போக்குகளின் கடந்தகால வேறுபாடுகள் பற்றியோ அல்லது வரலாற்று அபிவிருத்தி பற்றியோ கலந்துரையாடல் இருக்காது என்ற “கோட்பாட்டு” அடிப்படையில் நிறுவப்பட்டது. “CRFI ஏற்கும் ஒவ்வொன்றினதும் அதன் சொந்த தேசிய சந்தர்ப்பவாத அரசியலை விமர்சனமின்றி அல்லது தலையீடின்றி தொடர்ந்து பின்பற்றுவதற்கு சுதந்திரம்” என்ற அடிப்படையில் நான்காம் அகிலம் “மீளமைக்கப்பட வேண்டும்” என்பதாக இருந்தது.
ஹலீல், கிரேக்கத்தில் உள்ள சவாஸ் மிஷேல்-மட்சாஸ் இன் தொழிலாளர் புரட்சிக் கட்சி (EEK) உடன் சிறிதுகாலம் பணியாற்றினார். EEK, 1985 ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவோடு முறித்துக் கொண்டு இப்போது கிறிஸ்தியான் ராகோவ்ஸ்கி இன் பால்கன் சோசலிச மையத்தின் (Balkan Socialist Centre) ஒரு பகுதியாக CRFI க்கு ஆதரவு கொடுக்கிறது. பால்கனில் ஏகாதிபத்திய தலையீடுகளை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச பால்கன் கூட்டமைப்பை ஊக்குவிக்க போவதாக பால்கன் சோசலிச மையம் பாசாங்கு செய்தது. உண்மையில் அது, சோசலிஸ்டும் அல்லாத ட்ரொட்ஸ்கிஸ்டும் அல்லாத கொள்கை கோட்பாடற்ற போக்குகளின் ஒரு கலவையாகும். அது பிரதானமாக ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தேசியவாதிகள் அடுக்கிலிருந்து சவாஸ் மிஷேல்-மட்சாஸ் இன் நண்பர்களைக் கொண்டிருந்தது. ஒட்டுமொத்த அமைப்பும் ஒரு அரசியல் மோசடியாக மாற இருந்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கிய பிரிவைக் கட்டல்
ஹலீல் அவரது வாழ்வின் இந்தக் காலகட்டத்திலிருந்து அவர் பெற்ற பிடிப்பினைகளை பின்னர் எழுதினார்: “இந்த அனுபவங்களைப் பெற்ற பின்னர், இந்த கோட்பாடற்ற பிளவுகள் எல்லாம் ஊழல் மிக்க தனிநபர்கள் மற்றும் அல்லது குழுக்கள் பற்றி குறிப்புரைப்பதன் மூலம் விளக்கப்பட முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். அங்கு வரலாற்று மற்றும் உலகளாவிய பொருளாயத காரணிகள் அவற்றின் பின்னே இருந்தாக வேண்டும். ஆகையால் நாம் நான்காம் அகிலத்தின் வரலாற்றையும் அனுபவத்தையும் படிப்பதற்கும் அதேபோல முதலாளித்துவ பொருளாதாரத்தையும் படிப்பதற்கும் முடிவெடுத்தோம். இந்த வேலை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் எங்களை ஆக்கிரமித்திருந்தது”.
துருக்கிய மெஹ்ரிங் பதிப்பகத்தின் சின்னத்தின் முன் ஹலீல் செலிக்
ஏற்கனவே வெளிநாட்டுக்குப் போயிருந்த ஹலீல், அவருடைய சொந்த தகவலின்படி, “நான்காம் அகிலத்தைப் பற்றி நான் கண்ட கிட்டத்தட்ட அனைத்தையும் — சர்வதேச இடது எதிர்ப்பு, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணங்கள் மற்றும் பலவற்றை மொழிபெயர்க்கத் தொடங்கி இருந்தேன்”. 1999ல் அவர் உலக சோசலிச வலைத் தளத்தை முதன்முதலாகக் காண நேர்ந்தது, அவர் அதிலிருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கத் தொடங்கி இருந்தார்.
2003ல், ஹலீல் ஏதென்சில் உள்ள EEK-ன் தேசிய குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். சவாஸ் மிஷேல்-மட்சாஸ் அனைத்துலகக் குழுவின் கிரேக்கப் பகுதியின் செயலாளராக இருந்தபோது, அனைத்துலகக் குழுவின் ஆவணங்கள் தொடர்பாக 1985ல் அவர் நடந்துகொண்ட முறையுடன் ஹலீல் முரண்பட நேர்ந்தார். பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியில் நெருக்கடி வெடித்தபொழுது, தொ.பு.க வின் சந்தர்ப்பவாத சீரழிவு பற்றி கலந்துரையாட அனைத்துலகக் குழுவின் தலைமைகளுடனான கூட்டத்தில் பங்கேற்க மறுத்து, அனைத்துலகக் குழு)வடன் முறித்துக் கொண்டார். சர்வதேச விவாதம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைப்பின் உறுப்பினர்களிடமிருந்து அவர் மறைத்தார்.
சவாஸ் மிஷேல்-மட்சாஸ் அந்த நேரத்தில், அனைத்துலகக் குழுவின் தடைகளில் இருந்து சுதந்திரமாய் இருப்பதன் மூலம், கிரீசில் தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத போக்கை தொடர முடியும் என்று ஊகித்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவோடு பிளவுவதற்கு முன்பே, அதன் முதுகுக்குப் பின்னால் ஈரானுக்குப் பயணம் செய்திருந்தார், அங்கு அவர் கொமேனி ஆட்சியை ஆதரித்தார். பிளவுக்குப் பின்னர், கிரேக்கத்திற்குள்ளே முதலாளித்துவ பசோக் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றுடனான கூட்டுக்களை உருவாக்கினார். சர்வதேச ரீதியில், அவர் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியை முன்னெடுத்த மிக்கைல் கோர்பச்சேவை ஆதரித்தார்.
ஹலீல் அனைத்துலகக் குழுவின் ஆவணங்களுடன் சவாஸ் மிஷேல்-மட்சாஸ் ஐ எதிர்கொண்டபோது, கேலியும் அவமதிப்பும் கலந்த கலவையாக, என்ன நடந்ததென்று ஹலீல் பின்னால் ஒரு முறை இந்த கட்டுரையாளரிடம் கூறினார். பின்னவர் ஆத்திரத்தில் வெறித்தனமான வெடிப்புடன் எதிர்வினை ஆற்றினார், அவரது சொந்தக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களை தகாத வார்த்தைகளால் அவமானப்படுத்தினார். சவாஸ் மிஷேல்-மட்சாஸ் ஒரு கோமாளி என்றும் EEK ஒரு வழிபாட்டு அமைப்பு என்றும் ஹலீல் முடித்தார். இந்த அனுபவம் அவரை அனைத்துலகக் குழுவின் ஆவணங்களை இன்னும் நன்கு படிப்பதற்கு ஊக்கப்படுத்தியது.
இந்த ஆய்விலிருந்து அவர், “நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றி பப்லோவாத தலைவர்களிடமிருந்து நாம் கற்றதெல்லாம் தவறு” மற்றும் “நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதக் கோட்பாடுகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணங்களே வெளிப்படுத்தியுள்ளது” என்ற முடிவுக்கு வந்தார்.
அவர் இப்பொழுது உலக சோசலிச வலைத் தளத்தை இன்னும் நெருக்கமாக கவனித்துவரத் தொடங்கினார் மற்றும் முக்கியமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணங்கள் மீதாக உட்சுற்று கல்வியை நடத்தத் தொடங்கினார். அவர் மொழிபெயர்த்தவற்றுள் 1998 ஆஸ்திரேலிய சிட்னியில் சர்வதேச கோடை பள்ளியில் நடைபெற்ற “மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரிச்சினைகளும்” என்ற தலைப்பில் அனைத்துலகக் குழுவின் முன்னணி பிரதிநிதிகள் வழங்கிய உரைகள் மற்றும் ஸ்பார்டசிஸ்ட் போக்குக்கு எதிரான ஒரு அரசியல் தர்க்கமான “பூகோளமயமாக்கலும் சர்வதேச தொழிலாள வர்க்கமும்” ஆகியனவும் அடங்கும்.
இந்த ஆவணங்கள் பற்றிய ஆய்வானது ஹலிலுக்கும் அவரது தோழர்களுக்கும் அரசியல் நோக்குநிலையின் முக்கிய பிரச்சினைகளை தெளிவுபடுத்த உதவியது. “தொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்திற்கு குரோதமாக இருக்கின்றன” என்ற அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவருமான டேவிட் நோர்த்தின் விரிவுரையை கலந்துரையாடிய பின்னர் தொழிற்சங்கங்கள் தொடர்பான அவர்களின் மனோபாவத்தை மாற்றியது.
சோசலிஸ்டுகள் “தொழிற்சங்கங்களை கட்டாயம் எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாய் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும் என்ற பரந்த கண்ணோட்டத்தை, அந்த வடிவம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களை மிகவும் பிரதிநிதித்துவம் செய்யும் வடிவம் என்ற கருத்துக்களை நோர்த் எதிர்த்தார். கவனமான வரலாற்று மற்றும் சமூக பகுப்பாய்வின் அடிப்படையில், அவர் “முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அடிப்படையில் நின்று கொண்டு, தொழிற்சங்கங்கள், தங்கள் இயல்பிலேயே வர்க்கப் போராட்டம் தொடர்பானதில் ஒரு குரோத நோக்கை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகின்றன." “தொழிற்சங்கத்தின் அமைப்பு ரீதியான அபிவிருத்தி சோசலிசத்தின் திசையில் செல்வதில்லை, மாறாக அதற்கு எதிரான திசையில் ஆகும்” என்று அவர் முடிவுரையாகக் கூறினார்.
நவம்பர் 2007ல், Socialism இன் ஆசிரியர்கள் அந்த நேரத்தில் கலந்துரையாடல் பற்றி ICFI க்கு எழுதினர்: “கடந்த இரண்டு ஆண்டுகளாக WSWS இனூடாக நாங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நெருக்கமாக பின்தொடர்ந்து வருகிறோம் மற்றும் அதன் சில ஆவணங்களை துருக்கியில் மொழிபெயர்திருக்கிறோம் மற்றும் கலந்துரையாடி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் நடத்திய கூட்டங்களிலும் விவாதங்களிலும், நம்மை ஆக்கிரமித்த பல கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டிருக்கிறோம். சுருக்கமாக, இஸ்தான்புல்லில் நாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடிப்படை நிலைப்பாடுகளை எங்கள் தோழர்களாலும் ஆதரவாளர்களாலும் புரிந்துகொள்ளப்படும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளன.”
2008ல் ஹலீலும் அவரது தோழர்களும் “பிரின்கிபோ வெளியீட்டகம்” (பிரின்கிபோ என்பது லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டு வாழ்ந்த இஸ்தான்புல்லின் ஒரு தீவைக் குறிப்பது) எனும் பெயருடைய ஒரு வெளியீட்டகத்தை ஸ்தாபித்து, மூன்று புத்தகங்களை வெளியிட்டனர்: பிரான்ஸ் மெஹ்ரிங் ஆல் எழுதப்பட்ட வரலாற்று சடவாதம், மாஸ்கோ வழக்குகள் பற்றி லியோன் செடோவ் ஆல் எழுதப்பட்ட சிவப்பு புத்தகம் மற்றும் ஹலீலால் எழுதப்பட்ட முதலாம் அகிலம் என்பனவாகும்.
ஜூன் 2007ல், ஹலீல் முதல் தடவையாக பேர்லினில் அனைத்துலகக் குழுவின் முன்னணி தோழர்களை நேரில் சந்தித்தார். நான் இந்த சந்திப்பை நன்றாக நினைவு கூர்வேன். ஹலீல் நன்கு ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் பேசியது மட்டுமல்ல, நாங்கள் பேசுவது போன்று அரசியல் மொழியையும் நன்கு பேசினார். அவர் அனைத்துலக குழுவின் வரலாற்றையும் அரசியல் நிலைப்பாடுகளையும் அறிந்திருந்தார் மற்றும் இந்த திசையில் கலந்துரையாடலில் அவரது புரிதலை ஆழப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
பல சர்வதேச தொடர்புகளுக்கு மாறாக காலப்போக்கில் நான் அறிய வந்தது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆளுமையை தனது தேசிய வேலைக்கு பயன்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை, மாறாக அரசியல் நோக்குநிலை மற்றும் முன்னோக்கின் அடிப்படைக் கேள்விகளை தெளிவுபடுத்துவதுடன் அக்கறை கொண்டிருந்தார். போலி-இடது அமைப்புகளின் தலைவர்களிடையே வழக்கமாக காணப்படும் மாயை மற்றும் அகந்தையிலிருந்து அவரும் கூட தனிப்பட்ட ரீதியில் விடுபட்டிருந்தார். அவர் மிகவும் உயர்ந்த அரசியல் மனிதராக இருந்தார், ஆனால் கலாச்சாரம் மற்றும் இதர தலைப்புகளில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார்.
2017 ல் இஸ்தான்புல்லில் ரஷ்ய புரட்சியின் 100 வது ஆண்டு நிறைவு மாநாட்டில் உரையாற்றுகிறார்
இந்த கூட்டத்தில் துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியைக் கட்டுவது என்பது எவ்வளவு சிக்கல் என்பதும் தேவை என்பதும் ஏற்கனவே தெளிவாகி இருந்தது. பல தசாப்தங்களாக தொழிலாளர் இயக்கத்தில் ஸ்ராலினிச மற்றும் தேசிய போக்குகள் மேலாதிக்கம் செய்திருந்த ஒரு நாட்டில், பல்விதமான அரசியல் பிரச்சினைகள் பேசப்பட வேண்டி இருந்தது, தெளிவூட்டப்பட வேண்டியிருந்தது மற்றும் வளர்த்தெடுக்கப்பட வேண்டி இருந்தது: காலதாமதப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தி, துருக்கியிலும் மத்திய கிழக்கு முழுமையிலும் உள்ள தேசிய இனப்பிரச்சினை, தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறவு போன்றவை.
இந்த சந்திப்பின் பின்னர், ஹலீல் துருக்கியில் நான்காம் அகிலத்தின் வரலாறு, பூகோளமயமாக்கல், தேசிய இனப் பிரச்சினை, தொழிற்சங்கங்கள், ஸ்ராலினிசம் மற்றும் இதர பிரச்சினைகள் மீதாக தொடர்ச்சியான கருத்தரங்குகளை நடத்தினார். இஸ்தான்புல்லில் மற்றொரு கூட்டத்திற்குப் பின்னர், சோசலிசத்தின் ஆசிரியர்கள் அனைத்துலகக் குழுவுடன் நெருக்கமாக கூடி வேலைசெய்ய முடிவெடுத்தனர்.
இஸ்தான்புல்லில் நடந்த ஒரு கூட்டத்தின்பொழுது, முழு “இடதும்” முதலாளித்துவ வேலைத்திட்டத்திற்கு அடிபணிவதற்கு ஒரு முக்கிய பொறிமுறையாக இருந்த, குர்த்திஷ் பிரச்சினை தொடர்பாக அங்கு ஒரு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. துருக்கிய “இடது” அணுகுமுறை, குர்துகளுக்கு எதிராக துருக்கிய அரசால் காட்டப்படும் பாரபட்சத்திற்கு எதிராக நிபந்தனையற்ற முறையில் குர்துகளின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்க அவர்களைக் கடமைப்பட வைக்கும் என்ற நோக்கு நிலை மேலோங்கி இருந்தது. அவர்கள் இதனை குர்திஷ் தேசியவாதத்திற்கு முற்றிலும் அடிபணிதலாக மொழிபெயர்த்துக் கொண்டார்கள். “இடது” குழுக்கள், குர்திஷ்-சார்பு தற்போதைய HDP (திரும்பத்திரும்ப தடைகள் வந்ததன் காரணத்தால் அக்கட்சியானது பலதடவை பெயரையும் அதன் சேர்க்கையையும் மாற்றிக் கொண்டது) கட்சிக்கு, அது முற்றிலும் முதலாளித்துவ வேலைத்திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும் அதனை ஆதரித்தன.
ஹலிலும் அவரது தோழர்களும், கம்யூனிச அகிலத்தின் முதலாவது காங்கிரசின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு குர்துகளின் சுயநிர்ணயத்திற்கான உரிமையை ஆதரித்திருந்தனர், இருப்பினும் HDP மற்றும் அதனது முன்னோடிகளுக்கு விமர்சனமற்ற ரீதியில் ஒத்துழைத்திருக்கவில்லை. ஒரு ஆண்டாக நடைபெற்ற முழுமையான கலந்துரையாடலுக்குப் பின்னரே, அவர்கள் அவர்களது நிலைப்பாட்டை 2007ல் மாற்றிக் கொண்டனர்.
சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்குப் பின்னர் அனைத்துலகக் குழுவானது சுயநிர்ணய உரிமை தொடர்பான அதன் நிலைப்பாட்டை முற்றிலும் மீளாய்வு செய்திருந்தது. இந்த காலப் பகுதியில், தேசியவாத, இனவாத மற்றும் மதப் பதட்டங்கள் ஏகாதிபத்திய சக்திகளால் அவர்களது சொந்த நலன்களை உறுதிப்படுத்தும் பொருட்டு திட்டமிட்டே தூண்டிவிடப்பட்டன. யூகோஸ்லாவியா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தேசிய இயக்கங்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் இந்தியா அல்லது சீனாவில் தேசிய இயக்கங்களின் விஷயத்தில் இருந்தது போன்று பல்வேறு மக்களை ஐக்கியப்படுத்த கோரவில்லை, மாறாக ஏகாதிபத்திய அரசுகளின் மற்றும் உள்ளூர் சுரண்டலாளர்களின் நலன்களின் பேரில் இருக்கின்ற அரசுகளைப் பிளவுபடுத்துவதாக அவை இருந்தன. அத்தகைய பிரிவினைவாத இயக்கங்களை நோக்கி அனைத்துலகக் குழுவானது விமர்சன ரீதியானதும் குரோதமானதுமான நிலைப்பாட்டை எடுத்தது மற்றும் அவற்றுக்கு எதிர்மாறாக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை முன்வைத்தது. மத்திய கிழக்கில் இதன்பொருள், தேசிய, இனக்குழு மற்றும் மத சிறுபான்மையர்களின் ஜனநாயக உரிமைகள் மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிசக் குடியரசு எனும் கட்டமைப்பிற்குள் மட்டும்தான் உத்தரவாதப்படுத்த முடியும், புதிய எல்லைகளை வரைவதன் மூலம் அல்ல என்பதாகும்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அனைத்துலகக் குழுவிற்கும் ஹலீல் குழுவிற்கும் இடையிலான ஒத்துழைப்பானது, அதிகரித்த அளவில் நெருக்கமானது. 2014 கோடையில், ஹலீல் அனைத்துலக குழுவின் அகல்பேரவையில் பங்கேற்றார். அவர் துருக்கியின் பொருளாதார, அரசியல் நிலைமைகள் பற்றிய விரிவான அறிக்கையை அளித்தார், அதில் அவர் முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியின் உள்ளடக்கத்தில் அவற்றைப் பகுப்பாய்வு செய்தார். சமூக சமத்துவமின்மையின் பெரும் அதிகரிப்பு, துருக்கிய தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி, எர்டோகனின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அத்தோடு பல்வேறு குட்டி முதலாளித்துவ ”இடது” கட்சிகளின் பங்கு பற்றியும் அவர் பேசினார்.
அகல்பேரவை ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அது கூறியது: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு துருக்கியில் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை நிறுவும் நோக்குடன் ஒரு கலந்துரையாடலைச் செய்வதற்கான Organisation Toplumsal Esitlik (சமூக சமத்துவ குழு) இன் சார்பான தோழர் H இன் விண்ணப்பத்தை முறையே ஏற்கிறது. அனைத்துலகக் குழுவானது ஒரு ஸ்தாபக மாநாட்டிற்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த தயாரிப்பில் அவர்களுக்கு உதவுவதற்காக துருக்கிய தோழர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.”
கலத்துரைடலில், தோழர் டேவிட் நோர்த் வலியுறுத்தியதாவது: “இப்பொழுது அனைத்துலகக் குழு எடுத்தாக வேண்டிய பெரும் சவால், துருக்கியில் அதன் புதிய பகுதியை அபிவிருத்தி செய்வதாகும். இங்கு தீர்க்கமான கேள்வி, ஈடுபடும் தோழர்களின் எண்ணிக்கை அல்ல. மிகவும் முக்கியமான விடயம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் தொழிலாள வர்க்கம் கடந்து வந்த மூலோபாய அனுபவங்கள் இவற்றைப் பற்றிய புரிதலும் அரசியல் தெளிவு பெறலின் அளவும் ஆகும். அந்த சர்வதேச அடித்தளத்தில் மட்டுமே எந்த நாட்டிலும் உள்ள அரசியல் சவால்களுக்கு பதிலிறுப்பது சாத்தியம்.”
ஹலீல் பின்னர் அனைத்துலக குழுவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்தினார். துருக்கிய ஆசிரியர் குழுவானது படிப்படியாக உலக சோசலிச வலைதளத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டது. துருக்கியில் மொழிபெயர்ப்புகளும் கட்டுரைகளும் கிட்டத்தட்ட தினமும் உலக சோசலிச வலைத் தளத்தில் இடம்பெற்றது, 2014 வசந்தத்திலிருந்து ஆங்கில–மொழி பக்கம் தொடர்ச்சியாக ஹலீல் பெயரின் கீழ் கட்டுரைகளை வெளியிட்டது. அவர் பிரதானமாக துருக்கியின் அரசியல் மற்றும் சமூக அபிவிருத்தி பற்றியும் மத்திய கிழக்கில் போர்கள் பற்றியும் எழுதினார்.
ஏப்ரல் 5, 2017 இல், எர்டோகனின் அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பை நிராகரித்து, மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள Toplumsal Esitlik, (சமூக சமத்துவம்) குழுவின் விரிவான அறிக்கையை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது. அந்த அறிக்கை மத்திய கிழக்கில் யுத்தத்தின் அச்சுறுத்தலை விரிவாக ஆய்வு செய்ததோடு தேசிய அரசு அமைப்பின் நெருக்கடி, குர்திஷ் தேசியவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ பாதுகாவலர்கள் பற்றியும் ஆய்வு செய்தது. அது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான கொள்கைக்கும் துருக்கியிலும் முழு மத்திய கிழக்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டுவதற்கும் அழைப்பு விடுத்தது.
2018 கோடையில், Toplumsal Esitlik (சமூக சமத்துவம்) என்ற அதன் பெயரை Sosyalist Esitlik (Socialist Equality Group) என அது கூறியவாறு இரண்டு காரணங்களுக்காக மாற்றியது: “(1) நான்காம் அகிலத்தின் அனைத்து உத்தியோகபூர்வ பகுதிகளோடு (Socialist Equality Party, Sozialistische Gleichheitspartei, Parti de l’égalité socialiste) பொருந்தும் வண்ணம் SE பெயரைக் கருதுகிறது மற்றும் அதன் மூலம் அதன் நான்காம் அகிலத்தின் துருக்கிய பகுதியாக ஆவதற்குரிய அதன் தீர்மனகரமான நிலையை வலியுறுத்துகிறது; (2) அதன் பெயரில் 'சோசலிச' என்ற வார்த்தையை சேர்ப்பதன் மூலம், SE அதன் அடிப்படை குறிக்கோளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: அதாவது முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கும் ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கும் மத்திய கிழக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அனைத்து தேசிய, இன, மத மற்றும் குறுங்குழுவாத நிலைகளைக் கடந்து சர்வதேச ரீதியாக தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்தல் ஆகும்.
ஹலீல் எடுத்த முக்கிய பணிகளில் ஒன்று அனைத்துலகக் குழுவின் நூல்களை மொழிபெயர்த்தலும் வெளியிடலுமாகும் —அவற்றுடன் ஒரு பெரிய பணிச்சுமை எதுவெனில், கனிசமான வேலையுடன் அமைப்பு ரீதியான மற்றும் நிதிரீதியான சவால்களாக இருந்தது.
டேவிட் நோர்த்தால் நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு பங்களிப்புச் செய்த பல நூறு பக்கங்களை கொண்ட நாம் காக்கும் மரபியம் என்ற நூலை ஹலீல் மொழிபெயர்த்தார். ஹலீலின் வேண்டுகோளுக்கிணங்க டேவிட் நோர்த்தின் புதிய முன்னுரையுடன் துருக்கிய பதிப்பு 2018 இல் ஜனவரியில் வெளிவந்தது. இது, துருக்கியில் ஒரு ஆண்டுக்கு முன்புதான் நிறுவப்பட்டிருந்த Mehring Yayıncılık ஆல் வெளியிடப்பட்டது.
துருக்கியில் "நாம் காக்கும் மரபியம்"
இந்த வெளியீட்டின் முக்கியத்துவத்தை பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் ஹலீல் எழுதினார்: "ஸ்ராலினிசம், மாவோயிசம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத போக்குகளும் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தியுள்ள ஒரு நாட்டில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதில் இந்நூல்கள் ஒரு முதல்நிலை பங்கு வகிக்கின்றன. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் துருக்கிய மொழியில் வெளியான நிகழ்கால மார்க்சிச இலக்கியம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் துருக்கிய பிரிவைக் கட்டமைப்பதற்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய படியாக இருக்குமென நாம் நம்புகிறோம்.”
துருக்கிய பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் டேவிட் நோர்த் துருக்கிய பகுதியைக் கட்டுவதற்கான நான்காம் அகிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்: நாம் காக்கும் மரபியத்தின் இந்த புதிய மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படுவதன் சிறப்பு முக்கியத்துவத்தை, ட்ரொட்ஸ்கி துருக்கியில் தஞ்சமடைந்ததற்கும் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறுக்கும் இடையிலான உறவுகள் மட்டும் எடுத்துரைக்கவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் புவிஅரசியலில் துருக்கி கொண்டுள்ள முக்கிய இடம், இந்நாட்டின் வர்க்கப் போராட்டம் பிரமாண்டமான பரிமாணங்களை எடுக்கும் என்பதற்கு உத்தரவாதமளிக்கின்றன. ஆகவே துருக்கியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதென்பது, நான்காம் அகிலத்தின் ஓர் இன்றியமையா மூலோபாய பணியாகும். இதற்கு, குறிப்பாக மிஷேல் பப்லோ (1911–1996) மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் இன் (1923–1995) கலைப்புவாத கருத்துருக்களுடன் தொடர்புபட்ட மார்க்சிச-விரோத திருத்தல்வாதத்தின் வெவ்வேறு வடிவங்களுக்கு எதிராக மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் தொடுத்த நீண்ட போராட்ட வரலாற்றில், துருக்கிய தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் முன்னேறிய பிரிவுகளை கற்பிப்பது அவசியமாகிறது.
நாம் காக்கும் மரபியம் உடன் சேர்த்து மற்ற நான்கு நூல்களும் வெளியிடப்பட்டன: காஸ்ட்ரோயிசமும் குட்டிமுதலாளித்துவ தேசியவாத அரசியலும், 2017 சர்வதேச மேதின அணிவகுப்பு, சோசலிச சமத்துவ கட்சியின் (அமெரிக்கா) வரலாற்று சர்வதேச அடித்தளங்களும், மற்றும் சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் ஆகியன.
அவரது வாழ்வின் இறுதி நாட்களில், ஹலீல் கடந்த நூற்றாண்டிலிருந்து பெறப்படும் முக்கிய அரசியல் மற்றும் மூலோபாயப் படிப்பினைகளை சுருக்கமாகத் தொகுத்துக் கூறும் டேவிட் நோர்த்தால் எழுதப்பட்ட இன்னொரு நூலான ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் என்ற நூலின் மொழிபெயர்ப்பையும் முடித்திருந்தார். அதன் பின்னர்தான், செப்டம்பரில் அவரது ஆபத்தான நோய் கண்டறியப்பட்டது.
உலக சோசலிச வலைத் தளத்திற்கும் வெளியீட்டகத்திற்குமான அவரது வேலைக்கு இணையாக, ஹலீல் உக்கிரமான அரசியல் மற்றும் கல்விப் பணிகளையும் மேற்கொண்டதுடன் இளம் தொழிலாளர்கள் மத்தியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்று மற்றும் அரசியல் அடித்தளங்களை அறிமுகப்படுத்தினார். தனது 57ம் வயதில் அவரது அகால இறப்பானது அனைத்துலகக் குழுவுக்கும் துருக்கியில் உள்ள அவர்களது தோழர்களுக்கும் மிக்பெரிய இழப்பாகும். ஆனால் ஹலீல் அனைத்துலகக் குழுவின் பகுதியைக் கட்டுவதற்கான ஒரு உறுதியான அடித்தளத்தை இட்டார். அவரது வாழ்நாள் பணி தொடரும். ஹலீலுக்குச் செய்யும் மாபெரும் அஞ்சலி Sosyalist Eşitlik ஐ நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பகுதியாக ஸ்தாபிக்கும் அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவதாகும்.