Print Version|Feedback
Macron threatens to criminalize opposition to Zionism in France
மக்ரோன் பிரான்சில் சியோனிச எதிர்ப்பை குற்றமாக்க அச்சுறுத்துகிறார்
By Will Morrow
22 February 2019
வலதுசாரி சக்திகளுடன் அணிசேர்ந்து யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிராக நடத்தப்படும் பிரெஞ்சு ஆளும் ஸ்தாபகத்தின் பிரச்சாரம், தொழிலாளர்களிடையே நிலவும் இடதுசாரி எதிர்ப்பை ஒடுக்கவும் மற்றும் போலிஸ் அதிகாரங்களை விரிவாக்குவதற்கும் ஒரு பிற்போக்குத்தனமான திட்டநிரலுக்கான வெறும் மூடுதிரை என்பது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், மிகவும் வெளிப்படையாக ஆகி வருகிறது.
புதன்கிழமை மாலை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பாரீசில் யூத அமைப்புகளின் பிரதிநிதிகள் கவுன்சிலின் 34 வது வருடாந்தர இரவு உணவு விருந்தில் உரையாற்றினார். அதிவலதின் நிலைப்பாடுகளை எதிரொலித்த அவரது உரை, யூத-எதிர்ப்புவாதம் பிரதானமாக முஸ்லீம்கள் மற்றும் இடதுசாரிகள் உடனும், தொழிலாள வர்க்கத்தின் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வுடனும் இணைந்திருப்பதாக சித்தரித்தது.
சியோனிசத்திற்கு (Zionism) எதிரான, அதாவது ஒரு தனி இஸ்ரேல் அரசை உருவாக்குவதற்கான வலதுசாரி தேசியவாத அரசியல் முன்னோக்கை எதிர்ப்பதையும் உள்ளடக்கி, யூத-எதிர்ப்புவாதம் குறித்த சியோனிசத்தின் வரையறையை அவர் அரசாங்கம் மாற்றியமைக்கும் என்று மக்ரோன் அறிவித்தார்.
யூத-எதிர்ப்புவாத வெறுப்புரை பிரான்சில் ஓர் குற்றமாகும், மக்ரோனின் மறுவரையறைப்படுத்தலானது நிராதரவான பாலஸ்தீன அப்பாவி மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் மரணத் தாக்குதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் உட்பட இஸ்ரேலின் கொள்கைகள் மீதான அனைத்து விமர்சனங்களையும் குற்றமாக்க அச்சுறுத்துகிறது. குற்றவியல் நீதி நெறிமுறைகளில் மாற்றமிருக்காது என்று மக்ரோன் கூறுகின்ற அதேவேளையில், வரையறையில் செய்யப்படும் மாற்றமானது "நமது சட்ட அமலாக்கம், நீதிபதிகள் மற்றும் ஆசிரியர்களின் நடைமுறைகளை மீளபலப்படுத்தும்" என்று கூறினார்.
மேலும் “வெறுப்பு பேச்சுக்களை" எதிர்க்கும் பதாகையின் கீழ், இணைய சுதந்திரத்தை இலக்கு வைக்கும் ஒரு புதிய சட்டமசோதாவை அவர் மே மாதம் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார். அது, “வழமையாக சர்வர்களை மாற்றிக் கொண்டிருக்கும்" வெளிநாட்டு வலைத் தளங்களைத் தணிக்கை செய்ய அரசின் ஆற்றலை அதிகரிக்கும், “இன்று [அவற்றை] முடக்குவது மிகவும் சிரமமாக உள்ளது,” என்றுரைத்தார்.
இணையத்தில் அநாமதேய நிலையை —அதாவது தங்களின் சிந்தனைகளை மற்றும் கருத்துக்களை அரசு கண்காணிக்க இயலாதவாறு இணையத்தைப் பயன்படுத்தும் தனிநபர்களின் ஆற்றலை— மக்ரோன் ஆக்ரோஷமாக கண்டித்தார். “அநாமதேய நிலை சம்பந்தமான கேள்வி நிச்சயமாக மேலெழுப்பப்படும்,” என்றார். “மிகப் பெரும்பாலும், அது கோழைகளின் முகமூடியாக உள்ளது. ஒவ்வொரு போலிப் பெயருக்குப் பின்னாலும், ஒரு பெயர், ஒரு முகம், ஓர் அடையாளம் இருக்கிறது,” என்றார்.
இந்த நடவடிக்கைகளுக்கும் யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்குத் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பு, பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட பாரிய "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டுள்ள நிலை, இந்த அரசாங்கம் அதற்கு விடையிறுப்பதில் அதன் கண்காணிப்பு மற்றும் தணிக்கை அதிகாரங்களைக் கட்டமைத்து வருகிறது.
தனது அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த பேஸ்புக்குடனான தணிக்கை கூட்டுறவின் முக்கியத்துவத்தை மக்ரோன் வலியுறுத்தினார். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து, அரசு அதிகாரிகள் பேஸ்புக்கின் தகவல் தணிக்கை அலுவலகங்களின் இதயதானத்தில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள், அத்துடன் அவர்கள் சமூக ஊடகத்திலிருந்து என்ன கருத்துக்களை நீக்குகிறார்கள் என்பதைப் வெளிப்படையாக பார்க்கவும் முடியாது.
இதெல்லாம் "யூத-எதிர்ப்புவாதத்தை" எதிர்த்து போராடும் கொடியைக் கொண்டு மக்ரோன் இத்திட்டத்தை மூடிமறைக்க முயல்வது மிகவும் அபத்தமாகவும் அரசியல்ரீதியில் நயவஞ்சகமாகவும் உள்ளது. அவர், பிரான்சில் யூதர்களின் பாரிய படுகொலையை ஒழுங்கமைத்த விச்சி ஒத்துழைப்புவாத ஆட்சியின் தலைவர் பிலிப் பெத்தனை ஒரு "மாவீரர்" என்று கடந்த நவம்பரில் அறிவித்து, பிரெஞ்சு பாசிசவாதத்திற்குப் புத்துயிரூட்டச் செயல்பட்டார்.
யூதரும் ஒரு வலதுசாரி சியோனிச அரசியல் பேச்சாளருமான அலன் ஃபிங்கில்குரோட்டை ஒரு போராட்டக்காரர் அருவருப்பான வார்த்தைகளில் சியோனிசவாதியாக கண்டித்த பின்னர், கடந்த சனிக்கிழமை முதல் “யூத-எதிர்ப்புவாதம்” மீதான உத்தியோகபூர்வ பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, அதன் பின்னர் போலிஸ் அந்த போராட்டக்காரரை ஒரு தீவிரவாத இஸ்லாமிய இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதற்காக கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பவராக அறிவித்தது.
“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே சமூக சமத்துவமின்மைக்கு இடதுசாரி எதிர்ப்பால் உயிரூட்டப்பட்டுள்ளன என்பதால், யூத-எதிர்ப்புவாத குற்றச்சாட்டைக் கொண்டு ஒட்டுமொத்த "மஞ்சள் சீருடை" போராட்டத்தையும் மதிப்பிழக்கச் செய்வதற்கு அந்த தனிநபரின் கருத்து இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அந்த ஆர்ப்பாட்டங்களுக்கான பரந்த ஆதரவை எதிர்ப்பதே இந்த பிரச்சாரத்தின் மத்திய குறிக்கோளாகும்.
யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பதாகையின் கீழ், யூத-இனப்படுகொலையில் யூதர்களின் பாரிய படுகொலைக்கு பொறுப்பான சக்திகளின் அரசியல் வழிதோன்றல்களாக விளங்கும் நவ-பாசிசவாத கட்சிகளுடன் எந்த விதத்தில் ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டு வருகிறது என்பது தான் இந்த உத்தியோகபூர்வ பிரச்சாரத்தின் மிகவும் மலைப்பூட்டும் அம்சமாக உள்ளது.
“மஞ்சள் சீருடையாளர்களின்" யூத-எதிர்ப்புவாதம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றுக்கு எதிராக சோசலிஸ்ட் கட்சி (PS) போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, ஏறக்குறைய ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அதில் இணைந்த நிலையில், அதற்கு வெறும் ஒரு நாளுக்குப் பின்னர் மக்ரோன் பேசியிருந்தார். அப்போராட்டத்தில் சோசலிஸ்ட் கட்சி மட்டுமல்ல, மக்ரோன் அமைச்சர்களில் பெரும்பான்மையினரும், குடியரசு கட்சியினர், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, முதலாளித்துவ "இடது" அடிபணியா பிரான்சின் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 1942 இல் பாரீசில் இருந்து நாடு கடத்துவதற்காக யூதர்கள் மீதான Vel d’Hiv சுற்றிவளைப்புக்கு "பிரான்ஸ் பொறுப்பாகாது" என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் அறிவித்திருந்த நவ-பாசிசவாத தேசிய பேரணியின் (RN) தலைவர் மரீன் லு பென்னையும் சோசலிஸ்ட் கட்சி அழைத்திருந்தது.
அரசியல் ஸ்தாபகத்திற்குள் தற்போது லு பென்னின் நட்சத்திர அந்தஸ்து வேகமாக வளர்கிறது என்றால், அதற்கு காரணம் உள்நாட்டு அரசியல் எதிர்ப்புக்கு ஆளும் வர்க்கம் எதைக் கொண்டு விடையிறுக்க உத்தேசித்துள்ளதோ அந்த இராணுவவாதம், தேசியவாதம் மற்றும் ஒடுக்குமுறையை மிகவும் தொடர்ந்து அவரது கட்சி வெளிப்படுத்தி வருகிறது என்பதனால் ஆகும். அவர் தற்போது தனது பிரச்சாரத்தை ஆக்ரோஷமாக முஸ்லீம்களைத் தாக்குவதன் மீது ஒருங்குவித்து வருகிறார். செவ்வாயன்று சோசலிஸ்ட் கட்சி போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்த அப்பெண்மணி, பிரதான கட்சிகள் “வறிய மக்கள் வசிக்கும் அண்டைபகுதிகளில் இஸ்லாமிய வலையமைப்புகள் பரவுவதற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை, அல்லது அவற்றை ஊக்குவித்துள்ளன...” என்று குற்றஞ்சாட்டினார்.
இதுபோன்ற கசடுகள் இப்போது உத்தியோகப்பூர்வ அரசியலுக்கான தொனியை அமைக்கின்றன. புதனன்று மக்ரோனின் உரை "தீவிர இஸ்லாம்" வளர்ச்சியைக் குறித்து மீண்டும் மீண்டும் எச்சரித்ததுடன், தொழிலாள வர்க்க அண்டைப்பகுதிகளில் போலிஸ் கண்காணிப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்தது.
“இந்த சித்தாந்தம் குறிப்பிட்ட புறநகர் பகுதிகளில் அழுகல் பரவுவதைப் போல பரவி வருகிறது,” என்று கூறிய அவர், “இந்தப் பகுதிகளில் குடியரசின் கட்டுப்பாட்டுக்கு" அழைப்புவிடுத்தார். யூத-எதிர்ப்புவாதம் மீதான உத்தியோகபூர்வ பிரச்சாரம் முன்பினும் அதிக பகிரங்கமாக உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி முஸ்லீம்களுக்கு எதிரான ஓர் இனவாத தாக்குதலாக மேலெழுந்து வருகிறது.
இந்த பிரச்சாரத்தை அரசியல் தீவிரங்களுக்கு எதிரான பாரபட்சமற்ற போராட்டம் என்று சித்தரித்து, மக்ரோன் இடதுசாரி எதிர்ப்புக்கு எதிரான ஒரு தாக்குதல் இது என்பதை மறைக்க முயன்றார். “[யூத-எதிர்ப்புவாதம்] எடுக்கும் வெவ்வேறு வடிவங்களை நன்கு கவனியுங்கள்,” என்றார். “யூதர் மீதான வெறுப்பு, அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் முதலாளித்துவம் மீதான வெறுப்பாக உள்ளது ... யூத-எதிர்ப்புவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் தீவிரங்களால் வளர்க்கப்படுகிறது.”
இந்த கருத்துக்கள் பொய்மைப்படுத்தல்களாகும். யூத-எதிர்ப்புவாதம் வரலாற்றுரீதியில் பாசிசவாதத்தின் சித்தாந்தம் என்பதோடு, அது கம்யூனிஸ்ட்கள் மீது மரண தாக்குதல்களைத் தொடுத்தது. மேலும் அதன் வன்முறை தேசியவாதமானது, தொழிலாள வர்க்கத்தில் முதலாளித்துவத்திற்கு உள்ள சோசலிச எதிர்ப்புடன் பொருந்தாது என்பது ஒருபுறம் இருக்கட்டும், எந்தவொரு உண்மையான இடதுசாரி அரசியலுடனும் கூட பொருந்தாது. அது அனைத்திற்கும் மேலாக அதிவலதின் இராஜ்ஜிமாக இருந்தது; இருக்கிறது என்பதுடன், இப்போது அது வளர்ந்து வருகிறது, அதற்காக "மஞ்சள் சீருடையாளர்களை" கண்டித்து வரும் இதே அரசியல் ஸ்தாபகத்தினுள் அதற்கு கிடைத்துள்ள ஆதரவுக்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும்.
ஜேர்மன் அரசாங்கம் சமீபத்தில் பிரசுரித்த ஓர் அறிக்கை இதை ஊர்ஜிதப்படுத்தியது, ஜேர்மனியில் யூத-எதிர்ப்புவாத தாக்குதல்கள் எச்சரிக்கையூட்டும் அளவுக்கு அதிகரித்து வருவதை அது ஆவணப்படுத்தி இருந்தது. யூத-எதிர்ப்புவாதம் புலம்பெயர்ந்தவர்களால் தான் பெரும்பான்மையாக "இறக்குமதி செய்யப்படுகிறது" என்ற ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் வாதங்களுக்கு இடையே, யூத-எதிர்ப்புவாத தாக்குதல்களின் பெரும் பெரும்பான்மை அதிதீவிர வலதால் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கை கண்டறிந்தது. (பார்க்கவும்: “ஜேர்மனியில் யூத-விரோத, தீவிர-வலதுசாரி வன்முறைகளின் எழுச்சி”).
எல்லா "தீவிரங்களும்" கொண்ட யூத-எதிர்ப்புவாதம் மீது மக்ரோனின் சமன்பாடு, இடதையும், தொழிலாள வர்க்கத்தில் நிலவும் அனைத்து சமூக எதிர்ப்பையும், உள்ளார்ந்த யூத-எதிர்ப்புவாதம் என்றும், ஆகவே இன்றியமையா விதத்தில் அவை குற்றம் என்றும் அறிவிக்க நோக்கம் கொண்டுள்ளது. யூத-எதிர்ப்புவாதத்தைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான, ஆணையங்களுக்கு எதிரான, நாடாளுமன்றவாதத்திற்கு எதிரான" வெறுப்பு உள்ளடங்கலாக, “நாம் வாழும் இக்காலத்தில், [வெறுப்பின்] மற்ற வடிவங்களும் அதனுடன் சேர்ந்து வளர்கின்றன,” என்றார்.