Print Version|Feedback
French ruling elite attacks “yellow vests” while claiming to fight anti-Semitism
பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிராக போராடுவதாக கூறி, “மஞ்சள் சீருடையாளர்களை" தாக்குகிறது
By Alex Lantier
21 February 2019
சனிக்கிழமையன்று வலதுசாரி முன்னாள் மாவோயிச பேச்சாளர் அலன் ஃபிங்கில்குரோட்டுக்கும் மஞ்சள் சீருடை அணிந்த ஒரு போராட்டக்காரருக்கும் இடையே நடந்த ஒரு வாக்குவாதத்திற்குப் பின்னர், செவ்வாயன்று இரவு பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) பல நகரங்களில் பேரணிகளுக்கு அழைப்புவிடுத்தது. இஸ்லாமியவாத தொடர்புகளுக்காக பிரெஞ்சு உளவுத்துறைக்கு நன்கறியப்பட்ட அந்த போராட்டக்காரர் ஃபிங்கில்குரோட்டை "அருவருக்கத்தக்க யூதவாதி" என்று அழைத்தார். அப்போதிருந்து ஊடகங்கள் "யூத-எதிர்ப்புவாத இடதை" குறைகூறவும் மற்றும் "மஞ்சள் சீருடையாளர்கள்" சோசலிஸ்ட் கட்சி ஆர்பாட்டத்தை ஆதரிக்க வேண்டுமெனக் கோரவும் ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.
யூத-எதிர்ப்புவாதம் (Anti-Semitic) ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் அருவருக்கத்தக்க சிந்தாந்தமாகும், இது பிரிக்க முடியாதவாறு பாசிசத்துடனும் உலக வரலாற்றிலேயே மிகவும் மோசமான இனப்படுகொலை உடனும், அதாவது பாசிச ஐரோப்பாவில் யூதர்களின் படுகொலையுடனும், தொடர்புபட்டது. அண்மித்து மொத்தம் 76,000 க்கும் அதிகமான யூதர்கள், நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் மும்முரமான ஒத்துழைப்புடன், பிரான்சில் இருந்து நாஜி மரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை உட்பட ஆறு மில்லியன் யூதர்களின் பாரிய படுகொலை ஒரு கொடூரமான குற்றமாகும், இதை ஒருபோதும் மறந்துவிட முடியாது மற்றும் மறந்து விடவும் கூடாது. யூத-எதிர்ப்புவாத செல்வாக்கினது எந்தவொரு சாயலுக்கு எதிரான போராட்டமும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சோசலிச அமைப்பினதும் இன்றியமையா பணியின் பாகமாகும்.
ஆனால் யூத-எதிர்ப்புவாதம் குறித்து எவரொருவருக்கும் உபதேசம் செய்ய சோசலிஸ்ட் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை. சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் குடியரசு அணிவகுப்பு இயக்கத்தின் (LREM) பிற்போக்குத்தனமான முன்வரலாறை ஆய்வுக்குட்படுத்தினால் அது யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்க்கும் அவர்களின் பாசாங்குத்தனங்கள் ஓர் அரசியல் மோசடி என்பதை அம்பலப்படுத்தும். சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒட்டுமொத்த "மஞ்சள் சீருடை" இயக்கத்தையும் இனப்படுகொலைக்குரியது என்றும் இனவாதத்திற்குரியது என்றும் கூறும் ஒரு பிரச்சாரத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பை மதிப்பிழக்கச் செய்வதற்கான ஒரு பிரச்சாரத்தையும் நடத்திக் கொண்டு, அவர்களே இனவாதத்திற்கு அழைப்புவிடுத்தும், நவ-பாசிசவாத போக்குகளைப் பலப்படுத்திக் கொண்டும் வருகிறார்கள்.
சோசலிஸ்ட் கட்சி அதன் போராட்டத்தில் இணைய ஏறத்தாழ ஒட்டுமொத்த பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தது. பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் மற்றும் 23 ஏனைய LREM அமைச்சர்களும், அவர்களுடன் முன்னாள் ஜனாதிபதிகள் பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் நிக்கோலா சார்க்கோசி ஆகியோரும் பங்கெடுத்தனர். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), பசுமை கட்சி, பிரான்சு பேய்ரூவின் ஜனநாயக இயக்கம், வலதுசாரி குடியரசுக் கட்சியின் (LR) தலைவர் லோரோன்ட் வோக்கியே மற்றும் நவ-பாசிசவாத தலைவர் மரீன் லு பென்னுடன் அணி சேர்ந்த எழுக பிரான்ஸ் (DLF) கட்சியின் நிக்கோலா டுபோன்-எய்னியோன் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.
சோசலிஸ்ட் கட்சி தலைவர் ஒலிவியே ஃபோர் (Olivier Faure), மரீன் லு பென்னும் "வரவேற்கப்படுவார்" என்று கூறி, அவரையும் வரவேற்றிருந்தார். அப்பெண்மணியின் தேசிய பேரணி (RN) கட்சியின் "ஒட்டுமொத்த வரலாறும் துல்லியமாக யூத-எதிர்ப்புவாதம் மற்றும் இனவாத பிரச்சினையுடன் பிணைந்துள்ளது,” என்று குறிப்பிட்டு, அவர் அக்கட்சிக்கு அழைப்பு விடுக்க மறுத்தார். யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரானது என்ற பெயரில் அழைக்கப்பட்டிருந்த ஒரு பேரணியில் கலந்து கொள்ள, யூத-எதிர்ப்புவாத கருத்துக்களை வெளியிட்டதற்காக தண்டனை பெற்றுள்ள மரீனின் தந்தை ஜோன்-மரி போன்ற பிரமுகர்களை உள்ளே அனுமதிக்காத வகையில் அவரின் சொந்த மோசடி சூழ்ச்சிகள் அம்பலமாகாது பாதுகாத்துக்கொண்டு, ஒலிவியே ஃபோர், "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக விச்சி அரசியல் வழிதோன்றல்களின் ஆதரவைப் பெற விரும்பினார்.
லு பென் இறுதியில் அப்பேரணியில் கலந்து கொள்ளவில்லை. “வறியமக்களின் அண்டைப்பகுதிகளில் இஸ்லாமியவாத வலையமைப்புகள் பரவுவதற்கு எதிராக ஒன்றும் செய்யாமல், அல்லது அவற்றை ஊக்குவித்த, அல்லது குற்றகரமாகவும் பொறுப்பின்றியும் இரட்டை வேடத்தில் அவற்றைக் குறித்து விவாதித்தும் உள்ள அமைப்புகளோடும் அரசியல்வாதிகளோடும்" அணிவகுக்க மறுத்து தேசிய பேரணி (RN) ஓர் அறிக்கை வெளியிட்டது.
“மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் மக்ரோனுக்கு எதிராக பெரும்பாலான பிரெஞ்சு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், சோசலிஸ்ட் கட்சியோ யூத-எதிர்ப்புவாத சக்திகளுடன் பேரங்களைச் செய்து வருகின்ற அதேவேளையில் அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக அரசாங்கத்தை அணிதிரட்டி வருகிறது. இது உத்தியோகபூர்வ வட்டாரங்களில் பரந்த ஆதரவைப் பெறுகிறது. தொழிற்சங்கங்களோ "மஞ்சள் சீருடை" போராட்டங்களைத் தனிமைப்படுத்துவதற்காக வேலைநிறுத்தங்களை இரத்து செய்த பின்னர், பொதுவான உணர்வுடன் நிற்கிறோம் என்று அவை சோசலிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு உயர்மட்ட அதிகாரிகளை அனுப்பியது.
நவம்பர் 17 இல் மஞ்சள் சீருடையாளர்களின் முதல் போராட்டத்திற்கு முன்னதாகவே அவர்களை நவ-பாசிசவாதிகள் என்று அவதூறு செய்திருந்த தொழிலாளர் பொது கூட்டமைப்பின் (CGT) தலைவர் பிலிப் மார்ட்டினேஸ், மஞ்சள் சீருடையாளர்களின் நடவடிக்கைகளுடன் நல்லிணக்கமாக வேலைநிறுத்தங்கள் நடக்காதவாறு நிறுத்துவதென தொழிற்சங்கங்களது முடிவை நியாயப்படுத்துவதற்காக, இந்த பேரணியில் மீண்டும் "மஞ்சள் சீருடையாளர்களை" கண்டித்தார். எவ்வாறிருப்பினும் சோசலிஸ்ட் கட்சி போராட்டத்தில் இணையுமாறு அவர் CGT உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தார். அங்கே அவர் வலியுறுத்துகையில், “மஞ்சள் சீருடையாளர்களின்" இனவாதம் "இந்த போராட்டங்கள் தொடங்கியதில் இருந்தே என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, மஞ்சள் சீருடை இயக்கத்தின் ஒரு சிறிய பகுதி எஞ்சியவற்றில் நஞ்சு கலந்து வருகிறது,” என்றார்.
“மஞ்சள் சீருடையாளர்களை" இழிவுபடுத்தும் ஊடக பிரச்சாரத்துடன் அணிசேராத அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள் மட்டும் அழைக்கப்படவில்லை. அடிபணியா பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோன் அவர் அழைக்கப்படவில்லை என்று குறைகூறினார். சோசலிஸ்ட் கட்சி "இனவாதம் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அரசியல்ரீதியில் சுரண்டுவதாக" விமர்சித்து வந்ததற்காக ஊடக பிரச்சாரத்தின் இலக்கில் அவர் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் அமைச்சரான மெலோன்சோன், இறுதியில், சோசலிஸ்ட் கட்சியின் மார்சைய் பேரணியில் கலந்து கொள்வதென்றும் அரசியல் சுரண்டலின் இந்நடவடிக்கையில் இணைவதென்றும் முடிவெடுத்தார்.
யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான PS-LREM பிரச்சாரம் பாசாங்குத்தனமானதும், முற்றுமுழுதாக மோசடியானதும் ஆகும். ஐரோப்பா எங்கிலும் யூத-எதிர்ப்புவாதத்தின் சமீபத்திய வளர்ச்சி அதிதீவிர நிகழ்வுப்போக்காக உள்ளது; அவை கடந்தாண்டின் போது ஜேர்மனியில் 60 சதவீதமும், பிரான்சில் 69 சதவீதமும் அதிகரித்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான போராட்டமின்றி யூத-எதிர்ப்புவாதத்தின் வளர்ச்சிக்கு எதிராக போராடுவது சாத்தியமே இல்லை.
ஜேர்மனியில் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள், இதுபோன்ற மிகப் பெருவாரியான குற்றங்களுக்குப் பொறுப்பாகின்ற அதிவலதின் பாத்திரத்தை உயர்த்திக் காட்டுகின்றன. ஆனால் ஜேர்மனியின் மகா கூட்டணி அரசாங்கத்தின் மறைமுகமான ஒத்துழைப்புடன் அதிவலது செழிப்பாக வளர்ந்து வருகிறது, உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் கெம்னிட்ஸில் ஒரு யூத உணவு விடுதி தாக்கப்பட்ட போது ஈனத்தனமாக நவ-நாஜி கலகங்களைப் புகழ்ந்துரைத்தார்.
பிரான்சில், சோசலிஸ்ட் கட்சியும் (PS) அதிலிருந்து 2017 இல் மேலெழுந்த மக்ரோனின் குடியரசு அணிவகுப்பு இயக்கமும் (LREM) பிரெஞ்சு அரசியலில் யூத-எதிர்ப்புவாதத்தின் பாரம்பரியத்தை சட்டபூர்வமாக்குவதில் மத்திய பாத்திரம் வகித்துள்ளன.
ஹோலாண்ட் இரண்டு முறை மரீன் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேசியிருந்தார். ஒரு நவ-பாசிசவாத அரசியல்வாதி எலிசேக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல்முறையாகும். அந்நேரத்தில், ஹோலாண்ட் குடியுரிமையைப் பறிப்பதை அரசியலமைப்பிற்குள் உட்புகுத்த முனைந்திருந்தார், இந்த சட்டபூர்வ இயங்குமுறையானது எதிர்ப்பை ஒடுக்குவதை நியாயப்படுத்தவும் யூதர்களைப் படுகொலை முகாம்களுக்கு அனுப்பவும் விச்சி பயன்படுத்திய இயங்குமுறையாகும். இறுதியாக, இத்தகைய நாடு கடத்தல்களுக்கு ஒப்புதல் வழங்கிய விச்சி ஆட்சியின் தலைவர் பிலிப் பெத்தனை கடந்த நவம்பரில் மக்ரோன் புகழ்ந்துரைத்தார்.
யூத-எதிர்ப்புவாதத்தை மீளப்பலப்படுத்துவதற்கான இத்தகைய கொள்கைகள் அனைத்தும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை இலக்கில் கொண்டுள்ளன. பிரான்சில் "மஞ்சள் சீருடை" போராட்டங்களுடன் சேர்ந்து, போர்ச்சுக்கல், பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியிலும் வேலைநிறுத்தங்கள் கட்டவிழ்ந்து வருகின்றன. ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது, அது எல்லா வழிவகைகளையும் கொண்டு இன்னும் அதிக பரவலாக ஒடுக்குமுறையை நடத்துவதற்கு அவசியமான அரசியல் நிலைமைகளை ஏற்படுத்த முயன்று வருகிறது.
இவ்விதத்தில் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதம மந்திரி இமானுவல் வால்ஸ், நவ பாசிசவாத கட்சி Vox உட்பட ஸ்பானிய வலதுசாரி கட்சிகளின் மாட்ரிட் பேரணியில் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டம் Vox ஐயும் உள்ளடக்கிய ஒரு வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தை நிறுவ நோக்கம் கொண்டது — Vox கட்சி உள்நாட்டு போரின்போது பாசிசவாத சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் இராணுவத்தின் முன்வரலாறை, அதாவது, இடதுசாரி தொழிலாளர்களுக்கு எதிராக பாரிய படுகொலையை பயன்படுத்தியதைப் பாதுகாக்கிறது.
“மஞ்சள் சீருடை" இயக்கமானது தசாப்தங்களாக ஐரோப்பாவில் திணிக்கப்பட்டு வந்துள்ள கொள்கைகளை தொழிலாளர்களும் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க அடுக்குகளும் நிராகரிப்பதை வெளிப்படுத்துகிறது. இப்போது அரசியல் படிப்பினைகளைப் பெறுவது முக்கியம். 1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து மூன்று தசாப்தங்களாக அதிகரித்து வரும் ஏகாதிபத்தியப் போரை அடுத்து, மற்றும் 2008 நிதியப் பொறிவுடன் ஆரம்பித்த ஆழ்ந்த சிக்கன கொள்கைகளின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், முதலாளித்துவம் ஒரு மிகப் பெரும் நெருக்கடியில் உள்ளது. யூத-எதிர்ப்புவாதத்தின் வளர்ச்சி மீண்டும் பிரிக்கவியலாதவாறு இந்த முதலாளித்துவ நெருக்கடியுடன் பிணைந்துள்ளது.
யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அதை எதிர்க்கிறோம் என்று கூறியவாறு யூத-எதிர்ப்புவாதத்தை சட்டபூர்வமாக்குகின்ற இத்தகைய அனைத்து அரசியல் போக்குகளுடன் நனவுபூர்வமாக உடைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னணிப்படையைக் கட்டமைக்கும் போராட்டத்தைக் கோருகிறது. சோசலிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் பிரான்சுவா மித்திரோன் 1990 இல் கார்பொன்ட்ராவில் கல்லறையை உருக்குலைத்ததற்கு எதிராக ஒரு போராட்டத்தில் பங்கெடுத்ததைக் குறிப்பிட்டு, ஒலிவியே ஃபோர், சோசலிஸ்ட் கட்சியை வரலாற்றுரீதியில் யூத-எதிர்ப்புவாதத்தின் எதிர்ப்பாளராக காட்ட முயன்றார். உண்மையில் இந்த எடுத்துக்காட்டு அவரின் வாதங்களை மறுத்துரைக்கிறது.
1942 இல் யூதர்களை நாடு கடத்துவதற்காக அவர்களைப் பாரியளவில் சுற்றி வளைத்த Vél d’Hiv நடவடிக்கையை ஒழுங்கமைத்த விச்சி போலிஸ் தலைவர் றெனே புஸ்க்கே உடனான தொடர்புகளை அவர் தொடர்ந்து கொண்டிருந்தது மீது எழுந்த ஒரு மோசடிக்காக முன்னாள் விச்சி அதிகாரியான மித்திரோன் எரிச்சலூட்டும் வகையில் அதில் பங்கெடுத்தார். மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, இன்றைய புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற குட்டி-முதலாளித்துவ பப்லோவாத சக்திகள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையே உருவாக்கப்பட்ட கூட்டணி தொழிலாளர்களின் இயக்கத்திற்கு ஒரு பிற்போக்குத்தனமான பொறி என்பதை அந்த மோசடி சித்தரித்தது. இந்த போலி-இடதுகள், சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாத கொள்கைகளைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவ கட்சியான சோசலிஸ்ட் கட்சியிடம் தொழிலாளர்களின் கை-கால்களைக் கட்டிய கயிறை ஒப்படைத்தனர்.
முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த கட்சிகளின் வழிதோன்றல்கள் அரசியல் சூழலில் நஞ்சு கலக்க, எரிச்சலூட்டும் விதத்தில் யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்ப்பதாக கூறியவாறு மறைமுகமாக அதை ஊக்குவித்து கொண்டிருக்கின்றன.
பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste – PES) கொள்கை, வர்க்கப் போராட்டத்தின் அதிகரித்து வரும் சர்வதேச மேலெழுச்சியை அடித்தளமாக கொண்டுள்ளது, பிரான்சில் "மஞ்சள் சீருடை" இயக்கம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெளிப்பாடாகும். அது மார்க்சிச மற்றும் சர்வதேசியவாதத்தைக் கொண்டு, அதாவது அடிவேரில் இருந்து அழுகி போயுள்ள முதலாளித்துவத்திடம் சரணடைந்துள்ள ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாத போக்குகளுக்கு எதிராக அரசியல் அதிகாரத்திற்காக போராடுதவற்கான ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க முயல்வதன் மூலமாக யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிராக போராடுகிறது.