Print Version|Feedback
French media slanders “yellow vests” and Muslims as anti-Semites
பிரெஞ்சு ஊடகங்கள், "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் முஸ்லீம்களை யூத-எதிர்ப்புவாதிகள் என்று அவதூறு பரப்புகிறது
By Will Morrow and Alex Lantier
19 February 2019
பாரீசில் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களுக்கும் ஊடக பேச்சாளர் அலன் ஃபிங்கில்குரோட் (Alain Finkielkraut) க்கும் இடையே சனிக்கிழமை நடந்த ஒரு வாக்குவாதத்திற்குப் பின்னர், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்களையும் மற்றும் முஸ்லீம்களையும் யூத-எதிர்ப்புவாதிகளாக பழிசுமத்தும் ஒரு பிற்போக்குத்தனமான ஊடக பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம், இப்போதைய நிலையில் மிகவும் மர்மமாக உள்ளபோதினும், இதில் ஓர் அரசியல் ஆத்திரமூட்டலின் நாற்றம் வீசுகிறது. யூதவாத (Zionist) வலதுசாரியாக நன்கறியப்பட்டவரும் ஒரு யூதருமான அலன் ஃபிங்கில்குரோட் கடந்த வாரம் வலதுசாரி லு ஃபிகாரோ நாளிதழில் "மஞ்சள் சீருடையாளர்கள்" நடத்திய "வன்முறை" மற்றும் "அட்டூழியம்" என்று குற்றஞ்சாட்டப்படுவதைக் குறித்து அவர்களைத் தாக்கி இருந்தார். இருப்பினும் பேரணியில் அவர் கலந்து கொண்டதுடன், "மஞ்சள் சீருடையாளர்களின்" ஒரு குழுவுக்குள் சிக்கிக்கொண்டார், இக்குழுவில் இஸ்லாமிய தொடர்புகளுக்காக அரசு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் ஒரு தாடிக்காரரும் உள்ளடங்கி இருந்தார். இந்த மனிதர் அருவருப்பூட்டும் வசை மொழிகளில் அலன் ஃபிங்கில்குரோட் ஐ யூதவாதி என்று கண்டித்தார். பின்னர் போலிஸ் ஃபிங்கில்குரோட் ஐ சுற்றி வளைத்து அவரை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தியது.
ஆரம்பத்தில், அரசு செய்தி தொடர்பாளர் பென்ஜமின் கிறிவோ வலியுறுத்துகையில், “மஞ்சள் சீருடையாளர்கள்" ஃபிங்கில்குரோட் மீது "அருவருப்பான யூதர்" என்பது போன்ற பாசிசவாத கோஷங்களை முழங்கினார்கள் என்றார். ஆனால் அந்நிகழ்வின் செல்போன் காணொளிகளை மீளாய்வு செய்த பத்திரிகையாளர்கள் அம்மாதிரியான வார்த்தைகளை அவர்கள் செவிமடுக்கவில்லை என்று தெரிவித்தனர். ஃபிங்கில்குரோட், கிறிவோவுக்கு நன்றி தெரிவித்ததுடன், அதை மறுத்தார்: “அவர் எனக்கு காட்டும் ஆதரவால் நெகிழ்ந்து போயுள்ளேன் என்றாலும் யாரும் என்னை அருவருப்பான யூதர் என்று அழைக்கவில்லை,” என்றார். அந்த தாடிக்காரருக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளுக்கு அழுத்தமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், குட்டி-முதலாளித்துவ புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் (NPA) மற்றும் ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) சங்கமும் மூன்று மாதங்களுக்கு முன்னர் "மஞ்சள் சீருடையாளர்களை" ஒரு பாசிசவாத இயக்கம் என்று பரப்பிய பொய்களையே இரவோடு இரவாக ஊடகங்களும், அரசும், வலதும் மீட்டுயிர்ப்பித்தன. நேட்டோ மற்றும் இஸ்ரேல் போர்கள் மீதான கோபத்தாலும் மற்றும் யூதர்களின் செல்வவளம் மீதான பொறாமையாலும் பிரெஞ்சு முஸ்லீம்கள் யூத-எதிர்ப்புவாதிகளாக மாறியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டிருக்கின்றன. சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பை யூத-எதிர்ப்புவாத தூரிகையால் மெருகூட்டுவதன் மூலமாக "மஞ்சள் சீருடையாளர்களின்" செல்வாக்கை எதிர்கொள்வதே இதன் நோக்கமாகும்.
தொழிலாளர்களையும், சுய-தொழில் புரிவோர், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளையும் அணிதிரட்டியுள்ள “மஞ்சள் சீருடையாளர்" இயக்கம் சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் பலபடித்தான தன்மை கொண்டது என்பதை "மஞ்சள் சீருடையாளர்" இயக்கம் தொடங்கிய போதே உலக சோசலிச வலைத் தளம் விவரித்துள்ளது. வர்க்க, சர்வதேசியவாத கோரிக்கைகளுக்கு எதிராக ஜனரஞ்சகவாத, ஜனநாயக கோரிக்கைகளை முன்னெடுக்கையிலும் அது, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிராக போராட ஒரு "மஞ்சள் சீருடை" அணிய விரும்பும் எவரொருவரையும் வரவேற்றது. இது, இந்த இயக்கத்தில் வலதுசாரி சக்திகள் தற்காலிகமாக இணைவதை அனுமதிக்கிறது, இதுவரையில் கண்கூடாக எந்த பாத்திரமும் வகித்திராத இஸ்லாமியவாதிகளும் இதில் உள்ளடங்குவர்.
இருப்பினும் "மஞ்சள் சீருடையாளர்கள்" பெரிதும் தொழிலாள வர்க்கத்திலிருந்து வந்துள்ளார்கள் என்பதோடு, சமூக சமத்துவமின்மை, இனவாதம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்க்கிறார்கள். யூத-எதிர்ப்புவாதம் மற்றும் இதுபோன்ற வெறுப்பூட்டும் பொய்கள் மேலெழுந்திருப்பதற்கான பிரதான பொறுப்பு "மஞ்சள் சீருடையாளர்களது" இல்லை, மாறாக இப்போது அவர்களைக் கண்டித்துக் கொண்டிருப்பவர்களுடையதாகும்.
தொழிலாள வர்க்கத்தில் யூத-எதிர்ப்புவாதம் என்று கூறி குற்றஞ்சாட்டி வரும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாசாங்குத்தனம் நயவஞ்சகமானது. ஃபிங்கில்குரோட் குறித்து சனிக்கிழமை மாலை மக்ரோன் வெளியிட்ட ஒரு ட்வீட் சேதியில், “அவருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யூத-எதிர்ப்புவாத களங்கங்கள், நாம் என்னவாக இருக்கிறோமோ மற்றும் எது நம்மை ஒரு தலைச்சிறந்த தேசமாக ஆக்குகிறதோ அதை மறுப்பதாக உள்ளன. இதை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது,” என்றார்.
ஆனால் கடந்த நவம்பரில் இதே மக்ரோன் தான், நாஜிக்களுடன் ஒத்துழைத்த மற்றும் பிரான்சில் யூதர்களின் பாரிய படுகொலைகளை மேற்பார்வையிட்ட பாசிசவாத விச்சி ஆட்சியின் தலைவர் பிலிப் பெத்தனைப் புகழ்ந்துரைத்தார். பெத்தன் 11,000 குழந்தைகள் உட்பட 76,000 இக்கும் அதிகமானவர்களை நாஜி கொடுஞ்சிறை முகாம்களுக்கு அனுப்பினார், அங்கே ஏறத்தாழ 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். முதலாம் உலகப் போரில் பெத்தன் ஒரு "தலைச்சிறந்த சிப்பாயாக" இருந்தார் என்று ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற மக்ரோனின் வாதம் யூத-எதிர்ப்புவாத அடிப்படையில் நவ-பாசிசவாத சக்திகளுக்கு ஒரு முறையீடாக இருந்தது.
நவ-பாசிசவாத தலைவர் மரீன் லு பென்னின் தந்தை ஜோன்-மரி இழிவுகரமாக யூத-இன அழிப்பை (Holocaust) "வரலாற்று குறிப்பு" என்று உதறிவிட்ட நிலையில், மரீன் லு பென்னோ ஃபிங்கில்குரோட் கையாளப்படுவதன் மீது சீறியுள்ளார். “அலன் ஃபிங்கில்குரோட் மீதான இந்த தாக்குதல் அருவருக்கத்தக்க ஒரு அதிர்ச்சியான நடவடிக்கை, இது மஞ்சள் சீருடை இயக்கத்தை ஊடுருவுவதற்கான யூத-எதிர்ப்புவாத அதி இடதின் முயற்சிகளைச் சித்தரிக்கிறது,” என்று அப்பெண்மணி ட்வீட் செய்தார்.
ஃபிங்கில்குரோட் ஐ ஒரு சியோனிசவாதி (Zionist - யூத-அரசு அமைப்பதை ஆதரிப்பவர்) என விமர்சிப்பது யூத-எதிர்ப்புவாதமாகும் என்று BFM-TV முடிவின்றி வலியுறுத்திய அதேவேளையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசிய பண்டிதர்களும் பேராசிரியர்களும் முதலாளித்துவத்திற்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கண்டித்தனர். பெருநிறுவனத்திற்கு பொருத்தமான வேட்பாளர்களை அடையாளம் காண்பவரும், சுய-பாணியிலான மெய்யியலாளருமான Julia de Funès அறிவித்தார்: “இன்று யூத-எதிர்ப்புவாதத்தின் உண்மையான முகம், நிச்சயமாக இப்போது கத்தோலிக்க அதி வலதோ அல்லது 1930 களில் ஐரோப்பிய நாஜிசமோ இல்லை. அது அடிப்படைவாத இஸ்லாம் ஆகும்.”
செல்வந்தர்களுக்கான மக்ரோனின் வரிவிலக்குக்கு (ISF) “மஞ்சள் சீருடையாளர்களின்" எதிர்ப்பானது அவர்கள் இன-அழிப்பு யூத-எதிர்ப்புவாதிகளுடன் அணி சேர்வதை எடுத்துக்காட்டுகிறது என்பதையும் அவர் ஆத்திரமூட்டும் வகையில் சேர்த்துக் கொண்டார்: “மிக சுலபம், மஞ்சள் சீருடையாளர்களின் தர்க்கம், பணக்காரர்கள் மீதான அதீத பொறாமை மற்றும் வெறுப்புணர்ச்சியின் தர்க்கமாக தரந்தாழ்ந்துள்ளது. ISF சம்பந்தமான கேள்வி அதை நிரூபிக்கிறது. ... நாம் அதீத உணர்ச்சிவசப்பட்ட தர்க்கத்தை முகங்கொடுத்துள்ளோம், முதலாவது மற்றொரு இனத்தை வெறுக்கும் இனமாக, இரண்டாவது மற்றொரு வர்க்கத்தை வெறுக்கும் வர்க்கமாக இங்கே இவ்விரு வெறுப்பும் ஒன்றுசேர்ந்து ஒரே தர்க்கமாக வருகிறது.”
இனம் சார்ந்த வெறுப்புகளுக்கும் மற்றும் பாசிசத்தின் மரபார்ந்த படுகொலைகளுக்கும் பின்நோக்கி முறையீடுகள் செய்வதற்கும், பெரும் பில்லியனர்களால் நயவஞ்சகமாக பறிக்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்து சமூக செல்வவளத்தை பகுத்தறிவார்ந்த முறையில் பயன்படுத்துவதற்கான உழைக்கும் மக்களின் சோசலிச அபிலாஷைகளுக்கும் இடையே ஒரு வர்க்க பிளவு உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றிணைப்பதற்கு Funès இன் முயற்சி ஒரு மோசடியான அரசியல் பொய்மைப்படுத்தலாகும். ஐரோப்பா எங்கிலும் அதிவலது கட்சிகளைக் கட்டமைப்பதற்காக 20 ஆம் நூற்றாண்டின் பாசிசவாதத்தின் வழிதோன்றல்களை வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது, தொழிலாளர்கள் இல்லை, முதலாளித்துவ வர்க்கமாகும்.
ஜேர்மனியில், பெரும் பில்லியனர் அகுஸ்ட் வோன் ஃபிங்க் இன் தந்தை ஹிட்லருக்கு நிதியுதவி வழங்கினார் — இப்போது இவர் அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடுக்கு (AfD) நிதியுதவி வழங்கி வருகிறார். மீள்இராணுவமயப்படுத்தும் மக்கள்விரோத கொள்கையை நியாயப்படுத்த, ஒட்டுமொத்த ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் மறைமுகமான ஆதரவுடன், வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்கள் ஹிட்லரின் மரபை பெருமைப்படுத்தி வருகின்ற நிலையில், இந்த கட்சி பலமடைந்து வருகிறது.
பிரான்சில், லு பென்னின் கட்சி எண்ணற்ற ஆக்ரோஷமான யூத-எதிர்ப்புவாத (anti-Semitic) குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகிறது. இத்தகைய தொடர்புகள் குறித்து ஊடகங்களோ செவிடாகி விட்டதைப் போல மவுனம் காக்கின்றன என்பதுடன், நவ-பாசிசவாதிகளை உத்தியோகபூர்வ அரசியலுக்குள் ஒருங்கிணைக்கின்ற அதேவேளையில் அவர்களைப் பகிரங்கமாக யூத-எதிர்ப்புவாதத்தின் எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்ள அனுமதிக்கின்றன. இப்போதும் கூட மரியோன் மரிஷால் லு பென் Action française அமைப்பை சந்திக்கிறார், இது விச்சி ஆட்சியில் பணியாளர்களை நியமிக்க உதவிய, 20 ஆம் நூற்றாண்டில் Charles Maurras தலைமையிலான இதே பெயரைக் கொண்ட யூத-எதிர்ப்புவாத குழுவின் வழிவந்ததாகும். 2013 இல், Action française அமைப்பின் உறுப்பினரான சேர்ஜ் அயூப், இடதுசாரி மாணவர் கிளெமொன்ட் மெரிக் இன் படுகொலையை ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்.
நவ-பாசிஸ்ட்டுகளுக்கு நிதி திரட்டுபவரான பிலிப் பெனான்க் (Philippe Péninque) சோசலிஸ்ட் கட்சி (PS) அமைச்சர் ஜெரோம் கௌசாக்கின் சட்டவிரோத நடவடிக்கைகளை மட்டும் ஒழுங்கமைக்கவில்லை, அவர் யூத-எதிர்ப்புவாத பிரச்சாரத்தைப் பரப்புகின்ற ஒரு குழுவான சமத்துவம் மற்றும் நல்லிணக்க குழு (Égalité et Réconciliation - E&R) என்பதையும் ஸ்தாபித்தார். முஸ்லீம்கள் மத்தியில் யூத-எதிர்ப்புவாதத்தை ஊக்குவிப்பதில் E&R குழு வகிக்கும் பாத்திரம் குறித்து கையைப் பிசைந்து கொண்டிருக்கும் ஊடகங்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் லு பென் வம்சத்துடன் E&R குழுவின் தொடர்புகள் குறித்தும் மவுனமாக உடந்தையாக இருக்கின்றன.
ஃபிங்கில்குரோட், அவர் பங்கிற்கு, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒரு அனுதாபியாக பங்காற்றி உள்ளார். 2014 இல், Le Figaro உடனான ஒரு பேட்டியில் ஃபிங்கில்குரோட், காசாவில் நிராயுதபாணியான பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய போரைப் பாதுகாத்தார், அதில் 1,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அவர் அறிவித்தார், “நடத்தப்படவிருந்த குண்டுவீச்சுக்களைக் குறித்து சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் காசாவில் வசித்தவர்களை இஸ்ரேலியர்கள் எச்சரித்தனர்.” “அங்கே வசித்தவர்களுக்கு எங்கேயும் செல்ல இடமில்லை என்று எனக்கு கூறப்பட்ட போது, காசாவின் நிலத்தடி பதுங்குமிடங்கள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதை நான் கூறினேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
நிராயுதபாணியான அப்பாவி மக்களை இஸ்ரேல் அரசு நேருக்குநேராக படுகொலை செய்ததை ஆதரிப்பதை விமர்சிக்க முடியாது என்றும், அதன் மீதான அனைத்து எதிர்ப்பும் யூத-எதிர்ப்புவாதம் என்றும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் வாதிடுகிறது. இது, பாலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக பரந்தளவில் உணரப்படும் எதிர்ப்பை, யூத-எதிர்ப்புவாதத்திற்குள் கலந்துவிடவும், அவ்விதத்தில் பிந்தையதை சட்டபூர்வமாக்கவும் சேவையாற்றுகிறது.
“மஞ்சள் சீருடையாளர்களை" முகங்கொடுத்துள்ள ஆளும் வர்க்கம், இப்போது தேசியத்தைக் கொண்டு தொழிலாளர்களை பிளவுபடுத்தவும், வெளிநாடுகள் மீதான போர் மற்றும் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தடுக்கவும் அதனிடம் இருக்கும் அனைத்து வழிவகைகளையும் பிரயோகித்து வருகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அது செய்த போர்களின் இரத்தக்களரியையும் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் போர்களையும், யூத, முஸ்லீம் மற்றும் பிற தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்த முயற்சிப்பதற்காக பயன்படுத்துகிறது — இந்த நடவடிக்கையானது பின்னர் ஆளும் உயரடுக்கு, தானே யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்த்து போராடி வருகிறது என்ற பொய்யைக் கொண்டு மூடிமறைக்கிறது.
தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான இதுபோன்ற முயற்சிகள் நிராகரிக்கப்பட வேண்டும். ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்திற்கு (ஓர் யூத அரசு அமைப்பதற்கு) அனைத்து தேசியங்களிலும் உள்ள தொழிலாளர்களிடையே ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பை, முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச போராட்டத்தின் மூலமாக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக போராடுவதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதன் அடிப்படையில் மட்டுமே அணித்திரட்ட முடியும்.