Print Version|Feedback
France recalls its ambassador to Italy
பிரான்ஸ் இத்தாலிக்கான அதன் தூதரைத் திரும்ப அழைத்துக் கொள்கிறது
Alex Lantier
8 February 2019
இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முதல் முறையாக, பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம், நேற்று, ரோமில் உள்ள அதன் தூதரைத் திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு அழைப்பு விடுத்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் ஒரு குழுவை இத்தாலிய துணை பிரதமர் Luigi di Maio பெப்ரவரி 5 இல் சந்தித்தார் என்பது தான் உடனடி சாக்குபோக்காக இருந்தது. எவ்வாறிருப்பினும் மிகப் பரந்த சர்வதேச முரண்பாடுகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.
அது குறிப்பிட்டது, “பல மாதங்களாக,” “தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள், ஆதாரமற்ற தாக்குதல்கள் மற்றும் ஒவ்வொருவரும் அறிந்துள்ள மற்றும் நினைவுகூரத் தக்க ஆத்திரமூட்டும் பிரகடனங்கள் ஆகியவற்றுடன் பிரான்ஸ் மீண்டும் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இது [இரண்டாம் உலக] போர் முடிந்ததற்குப் பின்னர் முன்னொருபோதும் நடந்திராதது. உடன்பாடின்மைகள் இருப்பது ஒரு விடயம், அவற்றை வாக்குகளைப் பெறும் நோக்கில் சாதகமாக்கிக் கொள்வது வேறு விதமானது. இந்த சமீபத்திய தலையீடுகள் ஏற்கவியலாத மற்றொரு ஆத்திரமூட்டலாகும்.”
பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையே "நட்பான மற்றும் பரஸ்பர மதிப்பார்ந்த உறவுக்கு" அழைப்பு விடுத்த அந்த அறிக்கை இதையும் சேர்த்துக் கொண்டது: “இந்நடவடிக்கைகள் அனைத்தும் பயங்கரமான சூழலை உருவாக்கி உள்ளன, இது இத்தாலி அரசாங்கத்தினது பிரான்ஸ் உடனான உறவுகளின் உள்நோக்கங்கள் மீது கேள்விகளை எழுப்புகின்றது. இந்த முன்னொருபோதும் இல்லாத சூழலின் வெளிச்சத்தில், பிரெஞ்சு அரசாங்கம் இத்தாலிக்கான பிரெஞ்சு தூதரை ஆலோசனைகளுக்காக திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது.”
பாரீஸ் அதன் தூதரை அழைத்துக் கொள்வதென்பது, ஏறத்தாழ இராஜாங்க உறவுகள் முறியும் அபாயத்தை அல்லது போரைச் சமிக்ஞை செய்யும் ஒரு நகர்வாக இருக்கக்கூடிய இது, ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தால் இடைவிடாது தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் தூண்டி விடப்படுவதிலிருந்து பெருக்கெடுத்து வரும் ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் முறிவை அடிக்கோடிடுகிறது.
பாரீஸ் மற்றும் ரோமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கிற்காக போட்டியிட்டு வந்த நிலையில் மற்றும் லிபியாவில் 2011 நேட்டோ போரைத் தொடர்ந்து அங்கே உள்நாட்டு போரில் அவை எதிரெதிர் கன்னைகளை ஆதரித்திருந்த நிலையில், அவற்றிற்கு இடையிலான மோதல்கள் முன்பில்லாதளவில் அதிக கடுமையாக மாறியுள்ளன. இரண்டாண்டுகளுக்கு முன்னர், பிரான்சின் கடற்படை துறைமுகங்களை இத்தாலியின் Fincantieri பெருநிறுவனம் விலைக்கு வாங்குவதை தவிர்க்க மக்ரோன் அவற்றை தேசியமயமாக்கினார். இத்தாலியின் அதிவலது அரசாங்கம் பதவி ஏற்றபோது, மக்ரோன் அதை "தொழுநோயைப் பரப்புவதாக" தாக்கியதுடன், நவ-பாசிசவாதத்திற்கு குரோதமான அறிவொளி பெற்ற பேர்லின்-பாரீஸ் அச்சின் ஒரு செய்தி தொடர்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டார்.
மிகச் சமீபத்தில், இத்தாலிய அதிகாரிகள் அதிகரித்தளவில் பிரான்ஸை குற்றம்சாட்டி இருந்தனர். முன்னதாக இத்தாலியிலிருந்து பிரான்சுக்குத் தப்பி சென்றிருந்த, முன்னாள் இத்தாலிய இடதுசாரி Cesare Battisti ஐ இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒப்படைக்க வேண்டுமென பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோவுடன் ஏற்பாடு செய்து கொண்ட பின்னர், இத்தாலிய உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி கடந்த மாதம் லிபியா விவகாரத்தில் பாரீஸைத் தாக்கினார். “லிபியாவில், நிலைமையை ஸ்திரப்படுத்துவதில் பிரான்சுக்கு எந்த ஆர்வமும் இல்லை, அனேகமாக ஏனென்றால் அதன் எண்ணெய்சார் நலன்கள் இத்தாலியின் நலன்களுக்கு எதிராக உள்ளன,” என்றார்.
முன்னாள் இத்தாலிய காலனியான லிபியாவில் அகதிகளுக்கான அதன் சொந்த சித்திரவதை முகாம்களை அமைத்து வருகின்ற ரோம், ஆபிரிக்காவில் பிரான்சின் நவகாலனித்துவ போர்களைத் தாக்கி வருகிறது. “ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரெஞ்சு, ஆபிரிக்காவை காலனிமயப்படுத்துவதை ஒருபோதும் கைவிட்டதில்லை,” என்று கடந்த மாதம் di Maio தெரிவித்தார். அவர் பிரெஞ்சு நாணயத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் CFA பிராங் நாணயம் பிரான்சின் முன்னாள் ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்: “பிரான்ஸ் டஜன் கணக்கான ஆபிரிக்க நாடுகளில் காலனிய பிராங் (colonial franc) நாணயத்தை வெளியிடுகிறது, இந்த நாணயத்தைக் கொண்டு அது பிரான்சின் அரசு கடன்களுக்கு நிதி வழங்குகிறது.”
வெனிசுவேலாவில், பாரீஸ் பலமாக ஆதரித்துள்ள அமெரிக்க-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியையும் ரோம் விமர்சித்தது—ரஷ்யா மற்றும் சீனா மீது அனுதாபம் கொண்ட ரோமின் அனுதாபிகளை, இவர்கள் வெனிசூலா ஆட்சியை ஆதரிக்கின்ற நிலையில், இவர்களைச் சாடுவதைப் பிரெஞ்சு பத்திரிகைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அது விமர்சிக்கிறது.
பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம், பாரீசுக்கும் ரோமுக்கும் இடையிலான இப்போதைய நெருக்கடியை, இரண்டாம் உலக போர் வரையில் சென்று ஒப்பிடுவதற்கான ஒரு சூழலைக் காண முற்பட்டது அர்த்தமற்றதொன்றல்ல. 1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், இதுவரையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜூன் 10, 1940 இல் இத்தாலி பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்த தூண்டிய எந்தவொரு அடிப்படையான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களையும் தீர்த்திருக்கவில்லை.
நாஜி ஹிட்லர் இராணுவம் (Wehrmacht) வடக்கில் பிரெஞ்சு இராணுவத்தின் பெரும்பான்மையை நசுக்கிய போது இத்தாலிய பிரெஞ்சு துருப்புகள் ஆல்ப்ஸ் பகுதியில் மோதி கொண்டிருந்தன. போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர், நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி மார்ஷல் பிலிப் பெத்தன் ஹிட்லருடன் பேரம்பேசினார், பிரான்ஸ், விவசாய மற்றும் தொழில்துறை ஜேர்மனை நோக்கியும் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான போரில் இத்தாலிக்கு அவசியப்படுவதை நோக்கியும் திருப்பி விடப்பட்டது. இராணுவரீதியில் பேர்லினும் ரோமும் வட ஆபிரிக்காவில் பிரான்சின் காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தன, தென்கிழக்கு பிரான்சின் பெரும்பகுதிகளை ஆக்கிரமிக்க ரோமுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் பாசிச ஐரோப்பாவுக்கும் இன்றைய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான வெளியுறவு கொள்கையின் ஒத்தத்தன்மை தவறுக்கிடமற்றது. 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து ஒரு கால் நூற்றாண்டு ஏகாதிபத்திய போர்களுக்குப் பின்னர், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல், ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் மற்றும் முன்னாள் காலனித்துவ பிரதேசங்களைச் சூறையாடுவதற்குமான மோதல் அசாதாரண தீவிரத்தை எட்டி வருகிறது.
2011 இல், ஜேர்மனி மற்றும் இத்தாலியின் கணிசமான சக்திகளின் ஆட்சேபனைகளுக்கு இடையே, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும், இலண்டன் மற்றும் வாஷிங்டனும் லிபியாவில் போர் தொடங்கிய போதே, உலக சோசலிச வலைத் தளம், அந்த ஏகாதிபத்திய போர் முனைவின் தாக்கங்கள் ஐரோப்பாவில் ஏற்படும் என்பதை எச்சரித்தது:
முன்னாள் பாதுகாப்பு மந்திரி ரம்ஸ்பெல்ட் “பழைய ஐரோப்பா” என்று நகையாடிய பொது முன்னணி இப்பொழுது முறிந்துவிட்டது. ஆனால் சார்க்கோசியின் திட்டங்களுக்கு தனது ஆதரவு இத்தகைய தாக்கங்களைக் கொடுக்கும் என ஒபாமா கணக்கிட்டிருப்பார் என்று முழுமையாக ஊகிக்கமுடியாது. பேர்லினால் பகிரங்கமாக எதிர்க்கப்படும் ஒரு போரில் பங்கு பெறுவதின் மூலம், மேற்கு ஐரோப்பாவுடன் அரசியல், இராணுவ வகையிலான ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்னும் தன் பல தசாப்தங்களாக இருந்த கொள்கையை வாஷிங்டன் கிட்டத்தட்டக் கைவிட்டுவிட்டது. பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய மோதல்களில் ஆழ்ந்துள்ள ஒரு கண்டத்தில் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. முன்பு நடந்தது போலவே, தன் வரலாற்று விரோதிகளால் தந்திர உத்தியில் தோற்கடிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்டுவிடக்கூடும் என அஞ்சும் ஜேர்மனி தன் நலன்களைக் பாதுகாக்க வேறு வழிவகைகளைக் காண முயலும். மீண்டும் வாஷிங்டன் பேரழிவு விளைவிக்கும் நிகழ்ச்சிகளை இயக்கக் கூடிய வகையில் செயல்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. 2014 இல், பேர்லின் அதன் வெளியுறவு கொள்கையை மீள்இராணுவமயப்படுத்தும் ஓர் நடவடிக்கையைத் தொடங்கியது, 2016 இல் பிரெக்ஸிட் மற்றும் ட்ரம்ப் தேர்வானமையும் நேட்டோ கூட்டணியின் ஆழ்ந்த முறிவை மேற்புறத்திற்குக் கொண்டு வந்தது. இப்போதோ ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் அவற்றின் இராணுவ எந்திரங்களுக்குள் நூறாயிரக் கணக்கான யூரோக்களைப் பாய்ச்சி வருகின்றன. ஐரோப்பா ரஷ்யாவை, சீனாவை அல்லது அமெரிக்காவை எதிர்த்து சண்டையிட தயாராக இருக்க வேண்டுமென மக்ரோன் கடந்தாண்டு கூறியிருந்த போதினும், ஐரோப்பிய சக்திகள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் சண்டையிடவும் தயாரிப்பு செய்து வருகின்றன.
பிரிட்டன் அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற தயாராகி வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் குழப்பத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்வாக்கான சக்தியாக விளங்கும் பேர்லினில் வெளியுறவு கொள்கை மீது கசப்பான பிளவுகள் நிலவுகின்றன. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மக்ரோனுடன் ஒரு கூட்டணியில் இணைந்துள்ள அதேவேளையில், பேர்லின் மற்றும் ரோமுக்கு இடையே இரண்டாம் உலகப் போர் சகாப்த கூட்டணியின் பெயரை மீண்டும் முன்னிறுத்தி, பேர்லின்-வியன்னா-ரோம் "அச்சு" க்கு ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய ஆளும் வர்க்கங்கள் இரண்டினது அழைப்புகளையும் கடந்தாண்டு கண்டது. இத்தகைய நிலைமைகளின் கீழ், அடுத்த மாத முனீச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற மக்ரோனின் நேற்றைய திடீர் முடிவு ஆழ்ந்த நெருக்கடியின் மற்றொரு அறிகுறியாக உள்ளது.
ஐரோப்பாவில் ஏகாதிபத்திய சக்திகள் எதனாலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதுவும் வழங்க முடியாது, தொழிலாள வர்க்கம் இந்த போட்டி முகாம்களில் எந்தவொன்றுக்குப் பின்னாலும் தன்னை நிறுத்திக் கொள்ளவும் முடியாது. அவை அனைத்துமே சமூக செலவினக் குறைப்பு, இராணுவவாதம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய பாசிசவாத மரபின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நிற்கின்றன—ஜேர்மன் இராணுவவாத பேராசிரியர்கள் ஹிட்லருக்குப் புத்துயிரூட்ட முயன்று வருவதில் தொடங்கி, முசோலினியைப் புகழும் இத்தாலியின் அதிவலது அமைச்சர்கள் வரையில், பெத்தன் மீது தன் வியப்பை அறிவித்த மக்ரோன் வரையில் இது நீள்கிறது.
ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிராக ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே இந்த போராட்டத்தின் முக்கிய பிரச்சினையாகும். போருக்கான ஐரோப்பிய இராணுவவாதிகளின் முனைவுக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை எதிர் நிறுத்துகிறது.
மேலதிக வாசிப்புக்கு :
அமெரிக்காவை சமாளிப்பது எப்படி? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை
[25 January 2003]
லிபியப் போரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான மோதல்கள் ஆழமடைதலும்
[16 April 2011]
லிபிய யுத்தமும் ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடியும்
[30 May 2011]