Print Version|Feedback
Two hundred thousand protest in Barcelona against show trial of Catalan separatists
கட்டலான் பிரிவினைவாதிகளின் ஜோடிப்பு வழக்கிற்கு எதிராக பார்சிலோனாவில் இரண்டு லட்சம் பேர் எதிர்ப்பு
By Alejandro López
18 February 2019
மாட்ரிட்டில், 12 கட்டலான் தேசியவாத தலைவர்கள் மீது சென்ற வாரம் தொடுக்கப்பட்ட ஜோடிப்பு வழக்கிற்கு எதிராக பார்சிலோனாவில் சனியன்று, குறைந்தது 200,000 பேர் –ஒழுங்கமைப்பாளர்களின் கணிப்பின் படி 500,000 பேர்– அணிவகுத்தனர். இந்த வழக்கு, சென்ற புதனன்று நிகழ்ந்த ஸ்பானிய அரசாங்க பொறிவுக்குப் பின்னரே நடத்தப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் இருந்து கட்டலான் சுதந்திரம் பெறுவதற்கான 2017 கருத்து வாக்கெடுப்பை ஒழுங்கமைப்பதற்காக கலகத்தையும் கிளர்ச்சியையும் தூண்டிவிட்டார்கள் என்ற மோசடி குற்றச்சாட்டுக்களின் பேரில் பிரதிவாதிகள் குற்றம்சாட்டப்பட்டு வருகிறார்கள். அதனால், அவர்கள் 25 ஆண்டுகள் வரையிலான சாத்தியமுள்ள சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்கள்.
பிரிவினைவாத-சார்பு கட்டலான் தேசிய சட்டமன்றம் (National Catalan Assembly-ANC) மற்றும் Omnium கலாச்சாரம், அத்துடன் பல அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த அணிவகுப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. இதில், கட்டலோனியாவிற்காக ஒன்றுகூடுதல் (Together for Catalonia), கட்டலோனிய இடதுசாரி குடியரசுக் கட்சி (Republican Left of Catalonia-ERC), மக்கள் ஐக்கிய வேட்பாளர் அந்தஸ்து (Popular Unity Candidacy-CUP) மற்றும் பொடெமோஸ் ஆதரவிலான Catalonia in Common ஆகிய அரசியல் கட்சிகள் அடங்கும். இந்த ஆர்ப்பாட்டத்தை பல தொழிற்சங்கங்களும் ஆதரித்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள், “சுய-நிர்ணயம் என்பது ஒரு உரிமை, அது குற்றமல்ல,” “எங்கள் அனைவரையும் அவர்கள் நியாயந்தீர்க்கிறார்கள்,” மற்றும் “நான் குற்றஞ்சாட்டுகிறேன்” போன்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியாக அணிவகுத்தனர். கட்டலான் பிராந்திய பிரதமர் குயும் டொர்ரா (Quim Torra) இந்த அணிவகுப்பை வழிநடத்தினார்.
ஸ்பெயினில் ஒரு பொலிஸ் அரசை ஸ்தாபிக்க முனையும் முதலாளித்துவத்துவ உந்துதலுக்கு எதிரான, அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை மையப்படுத்தியதான, வெகுஜன பங்கேற்பு என்பது மிகப் பரந்த எதிர்ப்புக்கு ஒரு அடையாளமாக இருந்தது. இது, மாட்ரிட்டில் ஜோடிப்பு வழக்கிற்கு அடித்தளம் அமைக்கின்ற அரசியல் பொய்மைப்படுத்துதல்களை பயன்படுத்தும் கட்டலான் எதிர்ப்பு பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் இப்போது தொடர்கிறது.
கட்டலான் தேசியவாதக் கட்சிகள் என்பவை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சார்பாக முதலாளித்துவ, சிக்கன சார்பு கட்சிகளாக இருக்கின்றன. அவை, நேட்டோ போர்களை மறைமுகமாக ஆதரிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியை நோக்கிய உந்துதலுக்கு எதிராக ஐபீரிய தீபகற்பத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டம் முழுவதையும் அவர்களது முன்னோக்கு வெட்டுகிறது.
இந்த கட்சிகளின் பிற்போக்குத்தன குணாம்சம் ஒருபுறம் இருந்தாலும், மாட்ரிட்டில் நடந்த இந்த ஜோடிப்பு வழக்கு ஐயத்திற்கு இடமின்றி கட்டாயமாக எதிர்க்கப்பட வேண்டும்.
சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தைப் போல, பிரிவினைவாத வாக்கெடுப்பும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அமைதியான வாக்காளர்கள் மீது தாக்குதலை நடத்திய ஸ்பானிய பொலிசார் தான் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். தீவிரமாக ஆர்ப்பாட்டத்தையும், அரசுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பையும் தூண்டுவதாக அர்த்தப்படுத்தி – ஒரு வன்முறையாகவும், எழுச்சியைத் தூண்டும் கிளர்ச்சியாகவும் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்ட - கிளர்ச்சியை செய்ததாக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, சர்வாதிகார ஆட்சியை நோக்கிய ஒரு பெரும் அடி அப்போது எடுத்து வைக்கப்பட்டது.
விசாரணையின் இரண்டாம் நாளன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜேவியர் ஸரகோஸா (Javier Zaragoza) பேசுகையில், கட்டலான் வாக்காளர்களை, “சட்டபூர்வமான பொலிஸ் நடவடிக்கையை தடுத்த மனித கேடயங்கள்” என்று கண்டனம் செய்தார். மேலும் அவர், “வாக்கெடுப்பு நாளன்று நிகழ்ந்த வன்முறைக்கு ஸ்பானிய சட்ட அமலாக்கப் பிரிவு காரணமாக முடியும் என்று நான் நினைக்கவில்லை, மாறாக, சட்டம் தெரிந்த, ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டிய நபர்கள் தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
உண்மையில், கட்டலோனியா முழுவதும் 92 வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவுகளை கைப்பற்றும் முயற்சியில் போலீசார் வாக்காளர்களைத் தாக்கினர், 1,000 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அப்போது ஆட்சியில் இருந்த மக்கள் கட்சி (Popular Party-PP) அரசாங்கம்தான் அதற்கு பொறுப்பு என்ற நிலையில், கட்டலோனியாவிற்கு 16,000 பொலிசாரை அது அனுப்பி வைத்தது. மேலும், இந்த நகர்வுக்கு துணை நின்ற சோசலிஸ்ட் கட்சியும் (PSOE), மற்றும் அதை எதிர்க்க மறுக்கும் பொடெமோஸ் கட்சியும் பொறுப்பை பகிர்ந்து கொண்டன. இச்சூழ்நிலையில், பொலிசார், உயர்மட்ட கட்டலான் பிராந்திய அதிகாரிகளை கைது செய்தனர், 144 வலைத் தளங்களை மூடினர், மில்லியன் கணக்கான சுவரொட்டிகளையும், துண்டு பிரசுரங்களையும் கைப்பற்றினர், அச்சகங்களை சோதனையிட்டனர், கூட்டங்களுக்கு தடை விதித்தனர், மேலும் இந்த கருத்துக்கணிப்பிற்கு ஆதரவளித்த 700 மேயர்களையும் அச்சுறுத்தினர்.
கிளர்ச்சிக்கான குற்றச்சாட்டுக்களின் மோசடியான குணத்தின் ஒரு அறிகுறி என்னவென்றால், பெல்ஜியம், பிரிட்டன் மற்றும் ஜேர்மனியில் உள்ள நீதிமன்றங்கள், ஸ்பெயினில் இருந்து தப்பிவந்த கட்டலான் அதிகாரிகளை விசாரணைக்காக மாட்ரிட்டுக்கு மீண்டும் அனுப்பியுள்ளது. இது பிராந்திய பிரதமர் கார்லெஸ் புய்க்மொன்ட் (Carles Puigdemont) ஐயும் உள்ளடக்கியது.
ஸ்பானிய அரசாங்கம், கட்டலான் தேசியவாதக் கட்சிகளை அரசியல் ரீதியாக சிரச்சேதம் செய்ய நோக்கம் கொண்டுள்ளது. புய்க்மொன்ட் உட்பட ஏழு நாடுகடத்தப்பட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 29 பேர் அதற்கு விரும்பப்படுகிறார்கள் அல்லது குற்றச்சாட்டின் கீழ் இருக்கிறார்கள். தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள 12 பேரை கடந்து, நான்கு கட்டலான் பிராந்திய பொலிஸ் அதிகாரிகளும் கூட, ஆறு கட்டலான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் கீழ்படியவில்லை என்ற குற்றம்சாட்டின் பேரில் ஒரு தனி வழக்கை எதிர்கொள்கின்றனர்.
பிரதிவாதிகள் ஒரு நியாயமான விசாரணைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. இந்த வழக்கை, கட்டலோனியாவின் உயர் நீதிமன்ற நீதிபதி அல்லாமல், ஸ்பானிய உச்ச நீதிமன்றம் கையாண்டு வருகிறது. இந்த கருத்து வாக்கெடுப்பிற்கான இணைய தள வசதிகள் கட்டலோனியாவிற்கு வெளியில் இருந்து அமைக்கப்பட்டிருந்தது, பிரான்சில் இருந்து வாக்குச்சீட்டு பெட்டிகள் வரவழைக்கப்பட்டிருந்தது, அத்துடன் இந்த வாக்கெடுப்பில் சர்வதேச பார்வையாளர்களும் கலந்து கொண்டது போன்றவையே இதற்கு காரணம் என்று மாட்ரிட் விவாதிக்கிறது.
உண்மையில், ஸ்பானிய அரசு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதன் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதித்துறை பொதுச் சபை (General Council of the Judiciary) மூலம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர், அங்கு PP மற்றும் PSOE கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் பணியாற்றுகின்றனர். “திரை மறைவில் இருந்து” நீதிமன்றத்தை PP “கட்டுப்படுத்தும்” என்பதால் இந்த பரிந்துரைப்புக்களுக்கு நன்றி” என்று PP இன் செனேட் செய்தித் தொடர்பாளர் இக்னேஷியோ கோஸிடோ (Ignacio Cosidó) வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்டதால் சமீபத்தில் இது வெளியாகியது.
ஐரோப்பிய ஜனநாயக வழக்கறிஞர்களின் (European Democratic Lawyers-EDL) சங்கம், ஏனைய சட்ட வல்லுநர் குழுக்களின் மத்தியில், பிரதிவாதிகள் அவர்களது வழக்குகளை தயார் செய்வதற்கு போதுமான நேரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று எச்சரித்துள்ளது. “அவர்களை பாதுகாக்கும் அவர்களது திறமை எதிர்மறை விளைவுகளை” கொண்டிருந்ததை குற்றம்சாட்டாமலேயே ஓராண்டிற்கும் மேலான அவர்களது விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல் பற்றி குறிப்பிட்டு EDL ஒரு அறிக்கை வெளியிட்டது. மூன்று மாதங்களில் இந்த வழக்கு விசாரணை முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது, தடுப்புக் காவல் கைதிகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு எழுந்து, நீதிமன்றத்திற்குச் சென்று வர குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்களை செலவு செய்ய வேண்டும். மேலும், இடைவேளை நேரங்களில் கூட தனிப்பட்ட அறைகளில் வைத்து அவர்கள் பூட்டி வைக்கப்படுவார்கள்.
மானுவல் மார்ச்செனா (Manuel Marchena) தலைமையில், ஏழு நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு, நிகழ்வுகள் பற்றிய வாதித்தரப்பின் பதிவுகளை பிரதிவாதித் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காத வகையில், புய்க்மொன்ட் உள்ளிட்ட, 50 பிரதிவாதி தரப்பு சாட்சியங்கள், அத்துடன் கூடுதல் நிபுணத்துவ சாட்சியங்கள் மற்றும் முக்கிய சாட்சியங்கள் என அனைத்தையும் நிராகரித்தது. அநேகமாக அனைத்து சாட்சியங்களும் ஆதாரங்களும் பொது வழக்கறிஞர், ஸ்பெயினின் பொது வழக்கறிஞர் (PSOE அரசாங்க கட்டுப்பாட்டிலானது) மற்றும் பாசிசவாத சார்பு, கட்டலான் எதிர்ப்புக் கட்சியான Vox ஆகியோரால் முன்வைக்கப்பட்டது என்பதை இந்த அமர்வு ஒப்புக்கொண்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்லும் உந்துதலை தடுத்தும் நிறுத்தும் ஒரே சக்தியாக தொழிலாள வர்க்கம் மட்டுமே உள்ளது. மதிப்பிழந்து, தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கண்டு அச்சமடைந்து ஆளும் உயரடுக்கு ஒரு பொலிஸ் அரசை ஸ்தாபிக்க தீர்மானிப்பதை போர்ச்சுக்கல் மற்றும் பிரான்சில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்ட அலைகளின் போது காணமுடிந்தது. எஞ்சிய முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளாக பேச்சுவார்த்தைகளுக்கு முறையிடவும், அமைதியை அவர்கள் விரும்புவதாக நாடகமாடவும் கட்டலான் தேசியவாதிகள் முயற்சித்தமை அரசியல் ரீதியாக திவாலாகிவிட்டன. சர்வாதிகார ஆட்சிக்கான உந்துதலை இது தடுத்து நிறுத்தாது.
வியாழனன்று, பிராந்திய முன்னாள் துணை பிரதமர், ஒரியோல் ஜுங்குவெராஸ் (Oriol Junqueras) அவர் ஒரு அரசியல் கைதி என்று அறிவித்து இவ்வாறு தெரிவித்தார்: “எனது கருத்துகளால் நான் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறேன், மாறாக எனது செயல்களால்” அல்ல. அதே நேரத்தில், ஸ்பானிய அரசாங்கத்துடன் ஒரு “அரசியல் தீர்வை” எட்டுவதற்கு அழைப்பு விடுத்தார். மேலும் அவர், “பேச்சுவார்த்தை எப்போதும் மறுக்கப்பட்டதாக உள்ளது. எங்களை எதிர்ப்பவர்களின் நாற்காலிகள் எப்போதும் காலியாக உள்ளன” என்றும் தெரிவித்தார். அவர், “ஸ்பெயினையும், அதன் மக்களையும், மற்றும் ஸ்பானிய மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் நான் விரும்புகிறேன் என்று பலமுறை நான் கூறியிருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
ஜுங்குவெராஸிடம் இருந்து முறையீடுகள் ஒருபுறம் வந்திருப்பினும், மாட்ரிட்டில் நீதித்துறை அநீதிக்கு EU ஆதரவு உள்ளது. கடந்த வாரம், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் ஜிர்கி கட்டைனேன் (Jyrki Katainen) இந்த வழக்கு விசாரணையை அங்கீகரித்து, “ஸ்பெயினில் உள்ள சட்ட அமைப்பை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
வெள்ளியன்று, “கட்டலோனியா, மற்றும் கருத்துக்கணிப்பு மீதான வழக்கு: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு சவால்” என்ற தலைப்பிலான ஒரு மாநாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தது. அந்நிகழ்ச்சி, முறையே முன்னாள் மற்றும் இந்நாள் கட்டலோனிய பிரதமர்களான புய்க்மொன்ட் மற்றும் குயும் டொர்ரா ஆகியோரின் ஒத்துழைப்புடன் பிளெமிய பிரிவினைவாதக் கட்சியான N-VA ஆல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இது, “பாராளுமன்ற வளாகத்திற்குள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்” என்று பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக EU கூறியது. பிரிவினைவாத ஆர்ப்பாட்டக்காரர்களால் பார்சிலோனாவில் ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடங்கள் அமைதியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும், அத்துடன், “சுயாதீன சார்பு தலைவர்களுக்கு எதிரான வழக்கின் தொடக்கத்துடன் தொடர்புபட்ட பதட்டங்களையும்” இது மேற்கோள் காட்டியது.
ஐரோப்பிய பாராளுமன்ற அதிகாரி ஹெய்டி ஹௌட்டாலா (Heidi Hautala), முக்கிய ஸ்பானிய கட்சிகளிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே அந்த நிகழ்ச்சியை EU பாராளுமன்றம் இரத்து செய்தது என ட்வீட் செய்தார்.
இதற்கிடையில், தனது அரசாங்க வரவு செலவுத் திட்ட அறிக்கை மீதான வாக்குகளை இழந்த பின்னர் இடைத் தேர்தல்களுக்கு வெள்ளியன்று அழைப்பு விடுத்த PSOE இன் இடைக்கால அரசாங்கத் தலைவர் பெட்ரோ சான்சேஸ் மாட்ரிட் ஜோடிப்பு வழக்கை பாதுகாக்க ஸ்பெயினின் தூதரகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தியும், கட்டலான் பிரிவினைவாதிகளை இலக்கு வைத்தும் ஒரு சர்வதேச அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள பூகோள அளவிலான ஸ்பெயின் திட்டம் (Global Spain Project) என்ற அமைப்பு தயாரிப்பு செய்து வருகிறது.
பூகோள அளவிலான ஸ்பெயின் அமைப்பின் திட்டத்திற்கான இளைய அமைச்சர், இரேனே லோஸானோ (Irene Lozano), ஸ்பெயின் நன்மதிப்பு மீதான இந்த வழக்கின் தாக்கம் பற்றி “அரசாங்கத்திற்குள் பரந்த கவலை” நிலவுகிறது என கூறினார். மேலும் அவர் இவ்வாறு கூறினார்: “சட்டபூர்வமாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, உண்மையில் என்ன நடந்தது என்பதை ஸ்பானிய மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு விளக்கம் அளிக்க நீதித்துறை தயாராக உள்ளது என்பதை நான் அறிவேன், ஏனென்றால், முன்னூகிக்கக்கூடிய வகையில், பழிவாங்கும் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் முறையான கேள்விகளுக்கு தவறான விளக்கங்களை உருவாக்கும் தவறான தகவல்களை வழங்குவதற்கான முயற்சிகள் அங்கு இடம்பெறக்கூடும்.” மேலும், பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் தான், “மிகுந்த அரசியல்” தகவல்களை கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:
கட்டலான் தேசியவாதிகள் மீதான வழக்கும், ஸ்பெயினில் அதிவலதின் அபாயமும் [PDF]
[14 February 2019]