Print Version|Feedback
The show trial of the Catalan nationalists and the far-right danger in Spain
கட்டலான் தேசியவாதிகள் மீதான வழக்கும், ஸ்பெயினில் அதிவலதின் அபாயமும்
Alex Lantier
14 February 2018
மாட்ரிட்டில் கட்டலான் தேசியவாதிகள் மீது ஜோடிப்பு வழக்கு தொடங்கியதும், கட்டலான் தேசியவாத சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சிறுபான்மை ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கை ஆதரிக்க மறுத்தனர். PSOE பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸின் வரவு-செலவு திட்டக்கணக்கு 191க்கு 158 என்ற வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வியாழக்கிழமை அவரின் அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்திய பின்னர், அவர் இந்த வசந்தகாலத்தில் தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டால், மக்கள் கட்சி (PP, 23.1 சதவீதம்), குடிமக்கள் கட்சி (Cs, 19.2 சதவீதம்) மற்றும் மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து வந்த கட்டலான்-எதிர்ப்பு, பாசிசவாத-ஆதரவு புதிய கட்சியான VOX (8.9 சதவீதம்) என இவை ஒருமித்து 51 சதவீத பெரும்பான்மை பெறக்கூடுமென கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மக்கள் கட்சி தலைவர் பப்லோ கசாடோ இந்த வலதுசாரி கட்சிகளின் ஒரு "பொதுவான முன்னணிக்கு" நேற்று அழைப்புவிடுத்தார், முன்னதாக இந்த வலதுசாரி கட்சிகள் கடந்த மாதம் அண்டலூசியாவில் ஒரு பிராந்திய அரசாங்கத்திற்காக கூட்டணி அமைத்திருந்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு, ஒரு பாசிசவாத ஆட்சியைக் கட்டமைப்பதாக உள்ளது. புறநிலைரீதியில், இது தொழிலாள வர்க்கத்தின் பலமான எதிர்ப்பை முகங்கொடுக்கிறது. இருப்பினும், 1936-1939 உள்நாட்டு போரில் ஸ்பெயினைக் கைப்பற்றிய ஸ்பானிய பாசிசவாத சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் அரசு 1978 வரையில் ஆட்சி செலுத்திய நிலையில், இந்த மரபுக்கு வரலாற்றுரீதியில் வேரூன்றிய எதிர்ப்பு, தற்போதைய எந்தவொரு கட்சியிலும் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை.
PSOE மற்றும் அதன் போலி-இடது கூட்டாளி பொடெமோஸூம் பிற்போக்குத்தனமானவை என்பதுடன் திவாலானவையாகும். PSOE அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான பொடெமோஸ், இந்த வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு ஒப்புதலை பெற, கட்டலான் தேசியவாதிகளுடன் ஓர் உடன்படிக்கையை பெற நேற்று கடைசி தருணம் வரையில் முயன்று வந்தது. தேசியவாதம் மற்றும் ஜனரஞ்சகவாதத்தை ஊக்குவித்தவாறு, சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வரும், பொடெமோஸை வழிநடத்தும் ஸ்ராலினிசவாத மற்றும் பப்லோவாத பேராசிரியர்கள் ஸ்பானிய நவ-பாசிசவாதத்திற்கு புத்துயிரூட்ட ஆளும் வர்க்கத்தை அனுமதிக்கின்றனர்.
பொடெமோஸ் கடந்தாண்டு PSOE ஐ தேர்தல்கள் மூலமாக அதிகாரத்திற்கு கொண்டு வரவில்லை, மாறாக PSOE, பொடெமோஸ், கட்டலான் மற்றும் பாஸ்க் தேசியவாதிகள் என இவர்களின் ஒரு சிறிய நாடாளுமன்ற பெரும்பான்மையை ஒன்றுதிரட்டி பின்புல பேச்சுவார்த்தைகள் மூலமாக கொண்டு வந்தது. பின்னர் இந்த கூட்டணி, மக்கள் கட்சி பிரதம மந்திரி மரீயானோ ரஹோய் ஐ பதவியிலிருந்து நீக்கி, சான்சேஸைப் பதவியில் இருத்தியது. பொடெமோஸ் பொது செயலாளர் பேராசிரியர் பப்லோ இக்லெஸியாஸ் அவரின் தேர்தல் மூலோபாயத்திற்கு கீழ் அமைந்திருந்த தேசியவாத முன்னோக்கை விவரித்தார்: “நாங்கள் ஸ்பானியர்களாக ஆக இருப்பதற்கு பெருமைப்படுகிறோம், அரசியலில் ஜெயிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் அதே வார்த்தைகளை நாங்களும் பயன்படுத்துவோம். ஏனென்றால் நாங்கள் ஜெயிக்காவிட்டால், எங்களால் விடயங்களை மாற்ற முடியாது.”
உண்மையில், தேசியவாத வலது கருத்துருக்களை ஒரு "யதார்த்த" கொள்கையாக ஏற்றுக் கொண்டு, பொடெமோஸ் வெற்றிக்குத் தயாரிப்பு செய்யவில்லை மாறாக தோல்விக்குத் தயாரிப்பு செய்தது. ஸ்பெயினில் 1978 இல் இருந்து முதலாளித்துவ ஆட்சிக்கான பிரதான கட்சியாக விளங்கும் PSOE அதிகாரத்திற்கு வந்ததும், அனுமானித்தவாறே மக்கள் கட்சியிலிருந்து வித்தியாசமின்றி தொழிலாளர்களை அன்னியப்படுத்தும் மற்றும் நவ-பாசிசவாதிகளைப் பலப்படுத்தும் ஒரு திட்டநிரலைப் பின்பற்றியது. அது மக்கள் கட்சியின் 2018 சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கை தக்க வைத்ததுடன், இராணுவத்திற்குள் பில்லியன்களைப் பாய்ச்சியது, முக்கியமாக, அது கட்டலான் தேசியவாதிகள் மீதான மக்கள் கட்சியின் ஒடுக்குமுறையைத் தொடர்ந்தது.
அக்டோபர் 1, 2017 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பன்னிரெண்டு கட்டலான் தேசியவாதிகள் மீது கிளர்ச்சியை மற்றும் பிரிவினையைத் தூண்டிவிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் செவ்வாயன்று வழக்கு தொடங்கியது.
கட்டலான் தேசியவாத கட்சிகள் பிற்போக்குத்தனமான சிக்கன-சார்பு கட்சிகள் என்பதுடன், இவை நேட்டோ போர்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் மௌனமாக ஆதரிக்கின்றன. ஆனால் இந்த வழக்கானது சிந்தனை சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுதவற்கான சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலாக உள்ளது, மேலும் பிராங்கோயிசம் வீழ்ந்ததற்குப் பின்னர் இருந்து முன்னொருபோதும் இல்லாத விதத்தில், அரசுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்குவதற்கான ஓர் அச்சுறுத்தலாகவும் உள்ளது.
கட்டலான் பிராந்திய துணை-பிரதமர் Oriol Junqueras, கட்டலான் கலாச்சார அமைப்பு தலைவர்கள் Jordi Sànchez மற்றும் Jordi Cuixart ஆகியோரின் அமைதியான அரசியல் நடவடிக்கைக்காக, அதாவது ஒரு கருத்துக்கணிப்பை ஒழுங்கமைத்ததற்காக, அல்லது ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக 25 ஆண்டு கால சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே வன்முறையான மேலெழுச்சியை ஒழுங்கமைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளனர். ஆனால் அந்த கருத்து வாக்கெடுப்பின் போது நடந்த ஒரே வன்முறை அமைதியான வாக்காளர்கள் மீது மக்கள் கட்சியின் போலிஸ் நடத்திய ஒடுக்குமுறை மட்டுமேயாகும், அது 800 க்கும் அதிகமானவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியது.
அந்த கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர், PSOE, பிராங்கோயிச பாடல்கள் பாடப்பட்ட கட்டலான்-எதிர்ப்பு போராட்டங்களைத் தூண்டிவிட்ட ரஹோயின் அரசாங்கத்தையும் மற்றும் கட்டலான் தேசியவாதம் "நம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்" என்று அறிவித்த ஸ்பானிய இராணுவத் தலைவரையும் ஆதரித்தது. "சிவப்பு மற்றும் பிரிவினைவாதிகள்" மீதான பிராங்கோயிச குற்றச்சாட்டுக்களை எதிரொலிக்கும் இந்த பிரச்சாரம், ஒரு தசாப்த கால ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர் அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு மத்தியில், ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் அரசியலை அதிகமாக வலதை நோக்கி திருப்புவதற்காக செய்யும் ஒரு முயற்சி என்பது இப்போது தெளிவாகிறது.
பொடெமோஸ் ஆதரவிலான PSOE ஆட்சியின் கீழ், வழக்கறிஞர்களோ, சிறையில் இருப்பவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக அரசு நடத்திய வன்முறைக்கு இந்த கைதிகள் தான் குற்றவாளிகள் என்று ஓர்வெல்லியன் பாணியில் வாதங்களை முன்நிறுத்தி வருகிறார்கள். “கருத்துக் வாக்கெடுப்பில் நடந்த வன்முறைக்கான பொறுப்பை ஸ்பெயினின் சட்ட அமலாக்கத்துறை மீது சாட்ட முடியுமென நான் நினைக்கவில்லை, மாறாக சட்டத்தை அறிந்தே, ஆயிரக் கணக்கான குடிமக்களை ஒன்றுதிரட்டியவர்கள் மீது தான் சாட்ட முடியும். அவர்கள் சட்டபூர்வ போலிஸ் நடவடிக்கையைத் தடுக்கும் மனித முட்டுக்கட்டைகளாக நடந்து கொண்டார்கள்,” என்று வழக்கறிஞர் ஜாவியர் ஜரகோசா நேற்று அந்த வழக்கு விசாரணையின் போது தெரிவித்தார்.
அரசுடன் இணைந்த ஒரு "அரசு வழக்கறிஞராக" தன்னை நிறுத்திக் கொள்ள VOX அனுமதிக்கப்பட்டுள்ளது, அது பிரதிவாதிகளுக்கு 60 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு சிறை தண்டனை கோரி வருகிறது.
அதே நேரத்தில், VOX தலைவர் சந்தியாகோ அபஸ்கால் (Santiago Abascal) உள்நாட்டு போரில் பிரான்கோவின் முன்வரலாறைப் பகிரங்கமாக பாதுகாத்தார். “பிராங்கோ இராணுவத்தில் சண்டையிட்ட முப்பாட்டனார்களின் குரல்கள் நாங்கள், அவர்களின் குடும்பங்கள் என்ன செய்ததோ அவற்றை எல்லாம் நாங்கள் கண்டிக்க விரும்பவில்லை,” என்றவர் கடந்த மாதம் அறிவித்தார். “ஸ்பெயினின் ஒருபக்க நினைவைக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புபவர்களின் அரசியல் வெறித்தனத்தின் காரணமாகத்தான், இங்கே வீதி பெயர்களைக் கூட மாற்ற விரும்பாதவர்களும் இருக்கிறார்கள்.”
இது அரசு பயங்கரம் மற்றும் பாரிய படுகொலை மூலமாக தொழிலாள வர்க்கம் மீதான பாசிச ஒடுக்குமுறையை பாதுகாப்பதாகும். பிராங்கோ 1936 இல் ஸ்பானிய குடியரசுக்கு எதிராக ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கினார். இரத்தந்தோய்ந்த மூன்றாண்டு கால உள்நாட்டு போருக்குப் பின்னர் —அனைத்திற்கும் மேலாக பிராங்கோ அதில் தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சிகளை ஒடுக்கிய மற்றும் ஸ்பெயினில் புரட்சிக்காக போராடிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளைப் படுகொலை செய்த ஸ்ரானிசவாத மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளின் பாத்திரத்தை சாதகமாக்கிக் கொண்டிருந்தார்— அவர் ஆயிரக் கணக்கான இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய படுகொலையைக் கொண்டு அவர் ஆட்சியை இறுக்கினார்.
இவ்வாறிருக்கையில், கட்டலான் தேசியவாதிகள் மீதான ஜோடிப்பு வழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளது. “நாங்கள் ஸ்பெயினின் சட்ட அமைப்புமுறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்,” என்று ஐரோப்பிய ஆணைக்குழு துணை தலைவர் Jyrki Katainen நேற்று தெரிவித்தார், “இதுவொரு அரசியல் பிரச்சினை இல்லை. இந்த அபிவிருத்திகள் மீது நாங்கள் அரசியல் அறிக்கைகள் வழங்கப்போவதில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
கடுமையான எச்சரிக்கைகள் வரிசையில் நிற்கின்றன: ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு மூன்று தசாப்த கால ஏகாதிபத்திய போருக்குப் பின்னரும், 2008 பொறிவிலிருந்து ஒரு தசாப்தமாக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னரும், ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் அடி ஆழத்திலிருந்து அழுகி உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும், வெறுக்கப்பட்ட அரசாங்கங்கள் உள்நாட்டு எதிர்ப்பின் அச்சுறுத்தலுக்கு எதிராக நவ-பாசிசவாத இயக்கங்களைத் தூண்டிவிட்டு வருகின்றன. ஜேர்மன் மகா கூட்டணி அரசாங்கம் அவர்களின் மீள்இராணுவமயமாக்கும் கொள்கையைப் பாதுகாக்க ஹிட்லரிசத்தை சலவை செய்ய முயலுகின்ற வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்களை ஆதரிக்கிறது, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைப் புகழ்ந்துரைத்ததோடு, வன்முறையாக "மஞ்சள் சீருடையாளர்களை" ஒடுக்கி வருகிறார். பிராங்கோயிசம் மீதான தொழிலாளர்களின் வெறுப்பின் காரணமாக நவ-பாசிசவாதத்தை நெருங்க விடப் போவதில்லை என்று சில நேரம் வாதிடும் பண்டிதர்களைக் கொண்ட ஸ்பெயினும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
சர்வதேச வர்க்க போராட்ட மேலெழுச்சி அபிவிருத்தி அடைந்து வருகிறது. பிரான்சில் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியில் பாரிய ஒருநாள் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமீபத்திய மாதங்களில் ஸ்பெயினில் டாக்சி ஓட்டுனர்கள், துறைமுகம், சில்லறை வியாபாரம், விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஆகியவை தயாராகி வருகின்ற வர்க்க போராட்டத்தின் பலமான வெடிப்புக்கான அறிகுறிகளாகும். ஆனால் பெருக்கெடுத்து வரும் போர்குணமும் சமூக கோபமும் ஆளும் உயரடுக்கின் தீர்க்கமான எதிர்ப்பை எதிர்கொள்ளும், தொழிலாள வர்க்கம் சர்வதேசரீதியில் ஓர் அரசியல் போராட்டத்திற்கு முகங்கொடுக்கிறது.
பொடெமோஸின் ஸ்ராலினிச பப்லோவாத அரசியலுடனும் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான இதுபோன்ற போலி-இடது கட்சிகளிடம் இருந்தும் அரசியல்ரீதியில் தீர்மானகரமாக முறித்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதும் சோசலிச சர்வதேசவாதமுமே, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டத்தின் அடித்தளமாகும். இது, ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலுமான நாடுகளிலும் முதலாளித்துவம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்து ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமையை வழங்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளைக் கட்டமைக்க போராடுவதைக் குறிக்கிறது.