ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bernie Sanders announces 2020 presidential campaign

2020 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை பேர்ணி சாண்டர்ஸ் அறிவிக்கிறார்

Niles Niemuth
20 February 2019

செனட் உறுப்பினரான பேர்ணி சாண்டர்ஸ், செவ்வாயன்று எதிர்பார்த்தமாதிரியே வெர்மாண்ட் பொது வானொலியிலும் You Tube க்கு அனுப்பிய ஒரு வீடியோவிலும், 2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அவரை பரிந்துரை செய்யக்கோரிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்தலில் போட்டியிட கருதும் குறைந்தபட்சம் வேறு 16 பேர் வேட்பாளரினுள், பிரச்சார அல்லது ஆராய்ச்சிக் குழுவின் முன் அறிவிக்கப்பட்ட 10 ஆவது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாண்டர்ஸ் ஆவார்.

2016 இல், சமூக சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதாக அளித்த தனது வாக்குறுதியின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து பரந்த ஆதரவை சாண்டர்ஸ் ஈர்த்தார். பொருளாதார சமத்துவமின்மை, "பில்லியனர் வர்க்கத்திற்கு" எதிராக ஒரு "அரசியல் புரட்சிக்கான" அவரது அழைப்புக்கு பெருமளவான மக்கள் செவிமடுத்தனர். ஜனநாயகக் கட்சி தலைமைப்பீடத்திற்கு அதிர்ச்சியான மற்றும் திகிலை கொடுத்து அவரே ஆச்சரியப்படுமளவிற்கு  வேட்பாளராக, சாண்டர்ஸ் 13 மில்லியன் வாக்குகளுக்கும் மேலான வாக்குகளை பெற்று முன்னாள் எஃகு உற்பத்தி மற்றும் கனரக தொழில்துறை மாநிலங்களான (Rust Belt states) மிச்சிகன், இந்தியானா மற்றும் விஸ்கான்சினில் ஹில்லாரி கிளின்டன் அணிக்கு எதிராக ஆச்சரியமான வெற்றிகளை  சாதித்தார்.

சாண்டர்ஸ் பொதுமக்கள் ஆதரவைப் பெற்றபோதும் கூட, போர் மற்றும் வணிக சார்புடைய கொள்கைகளுக்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் பரந்தளவில் வெறுக்கப்பட்ட கிளின்டன், சாண்டர்ஸ் பிரச்சாரத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும், அவரே கட்சியின் வேட்பாளராக பரிந்துரை செய்யப்படுவதற்கும் ஜனநாயகக் கட்சி தேசியக் குழுவோடு சேர்ந்து செயல்பட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அப்பட்டமாக தகவல்கள் வெளிப்பட்டபோதிலும்கூட, கட்சியின் மாநாட்டில் கிளிண்டனை ஆதரித்து, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ உளவுத்துறை அமைப்புக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதன் மூலம் சாண்டர்ஸ் அவருக்கு நியமிக்கப்பட்ட பங்கை சரியாக மேற்கொண்டார். இதுதான் அவருடைய "அரசியல் புரட்சியின்" விளைவாகும்.

சாண்டரின் முதலாவது தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி காணப்படுகிறது. அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் கடந்த 32 ஆண்டுகளில் 2018 இலேயே மிகவும் அதிகரித்தன. மேற்கு வேர்ஜீனியாவில் கடந்த ஆண்டு தொடங்கிய ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலைகள் இந்த வாரம் மீண்டும் திரும்பின. கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்ய தயாராக உள்ளனர். கடந்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் 33,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், மற்றும் 5,600 டென்வர் நகர ஆசிரியர்கள் கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு தொடங்கவுள்ள ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க முன்னர் அமெரிக்க மற்றும் கனடாவில் கார்த் தொழிலாளர்கள் மத்தியில் ஆலை மூடல்கள் மற்றும் வெட்டுகளுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரிக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கில்லாடோரா தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான மஞ்சள் சீருடை போராட்டங்கள் பிரான்சில் தொடர்கின்றன. பிரிட்டன், ஜேர்மனி, ஹங்கேரி, இந்தியா, தென் ஆபிரிக்கா மற்றும் பிற நாடுகளில் பெரும் வேலைநிறுத்தங்கள் வெடித்திருக்கின்றன.

ஆளும் வர்க்கம், இந்த வளர்ந்துவரும் வர்க்கப் போராட்டத்தின் அலை ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடனும் முன்னோக்குடனும் ஒன்றிணைந்துவிடும்  என திகிலடைந்திருக்கிறது.

நாட்டிற்கான ஜனாதிபதி உரையின் அவரது கருத்துக்களை தொடர்ந்து, திங்களன்று ட்ரம்பினால் வழங்கப்பட்ட பாசிச உரையின் முக்கியத்துவம் இதுதான். காங்கிரஸின் எதிர்ப்பிற்கு பின்னர் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்திய சில நாட்களுக்கு பின்னர், "சோசலிசத்திற்கான ஒளிமயமான காலம் எங்கள் அரைக்கோளத்தில் முடிவிற்குவந்துவிட்டது" என்று ட்ரம்ப் புளோரிடா பல்கலைக் கழகத்தில் பார்வையாளருக்கு அறிவித்தார். அடிப்படை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீதான ட்ரம்ப்பின் தாக்குதல், பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் அதிகாரங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மீதான போர் பிரகடனமாகும்.

ட்ரம்ப் எதிர்பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது சோசலிசத்தின் "ஒளிமயமான காலம்” முடிவிற்கு வரவில்லை, அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரும் போராட்டங்கள் ஆளும் வர்க்கத்துடனும் முதலாளித்துவ அமைப்புமுறையுடனும் நேரடியாக முரண்பாட்டைக் கொண்டு வருகின்றன.

சாண்டர்ஸ் இந்த கிளர்ச்சியுறும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் பிரதிநிதி அல்ல. 2016 பிப்ரவரியில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வின் தொடக்கத்தில் அவரது வளர்ந்து வரும் ஆதரவை பதிவு செய்யும் போது உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல்,: "சமூக மற்றும் வர்க்க வேறுபடுத்தலின் ஆரம்ப கட்டங்களை மட்டும் கடந்து செல்லும் எழுச்சியுறும் வெகுஜன எதிர்ப்பின் ஒரு தற்காலிக பயனாளியே அவர்." இந்த இயக்கத்திற்கு ஆளும் வர்க்கத்திற்குள்ளே உள்ள பதில்தான் சாண்டர்ஸ் என்று உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது. சமூக எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு பின்னால் திசைதிருப்பும் ஒரு கடத்தி போல செயற்பட்டார் மற்றும் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.

"முதலாளித்துவம்," "சோசலிசம்," "பாசிசம்," "ஏகாதிபத்தியம்," "சர்வதேசவாதம்," "சமத்துவம்" அல்லது "தொழிலாள வர்க்கம்" ஆகியவை பற்றி சாண்டர்ஸின் ஆரம்ப பிரச்சார அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் விலக்கப்பட்டது.

அவர் தனது பிரச்சாரத்தில் "நமது நாட்டை மாற்றியமைத்து பொருளாதார, சமூக, இன, சுற்றுச்சூழல் நீதி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்" என்று செவ்வாயன்று அறிவித்தார். ஆனால் ஜனநாயகக் கட்சி எனும் வாகனத்தின் மூலம் இவற்றை எப்படி அடைய முடியும் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்ட்டெஸ் (Alexandria Ocasio-Cortez) போன்ற தனிநபர்களுடன் சேர்ந்து சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியை இடது பக்கம் தள்ளி, முற்போக்கான மாற்றத்திற்கான ஒரு சக்தியாக்கமுடியும் என அடித்தளமான மோசடியை ஊக்குவிக்கின்றார். இந்த அரசியல் புரிதலுடன் பேசிய Jacobin இன் ஆசிரியரும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் (DSA) கட்சியின் முன்னணி உறுப்பினருமான பாஸ்கர் சுன்காரா (Bhaskar Sunkara), சாண்டர்ஸ் "2016 இல் ஒரு புரட்சியைத் தொடங்கினார். 2020 இல் அவர் அதை முடிக்க முடியும்" என்று செவ்வாயன்று கார்டியன் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியினரை இடது நோக்கி திருப்புகின்றார் என்ற கூற்று உண்மைகளால் நிராகரிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ட்ரம்பிற்கு தங்கள் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியினர் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் விடயங்களில் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் தீவிரமான இராணுவ நடவடிக்கைக்கான கோரிக்கைகளில் மையமாகக் கொண்டுள்ளனர். இணையத் தணிக்கை "போலி செய்திகளை" எதிர்ப்பதற்கான பெயரில் அதிகரித்து வரும் இராணுவ மற்றும் உளவுத்துறை கருவிகளின் மேலாதிக்க பிரிவுகளுக்கு அவர்கள் ஊதுகுழலாக சேவை செய்துள்ளனர். இந்த வலதுசாரி செயற்திட்டத்தை எதிர்ப்பதற்கு மாறாக, சாண்டர்ஸ் தனது ஆதரவைக் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோர் மீதான பாசிசத் தாக்குதல்களுக்கு இராணுவத்திற்கான நிதியில் பெருமளவு அதிகரிப்பு செய்வதற்கு ஆதரவு கொடுத்து ஒரு பில்லியன் டாலர்களை "எல்லை பாதுகாப்பு" இற்காக வழங்கி பதிலளித்தனர்; அதே நேரத்தில், சமூக திட்டங்களில் நிர்வாகத்தின் தாக்குதல்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வரி வெட்டுக்களில் அவர்கள் உதவியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அடையாள அரசியலை இடைவிடாமல் ஊக்குவித்தனர். இதில் #MeToo உட்பட, அடிப்படை ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்தல் அதாவது சரியான சட்டவிசாரணை முறை மற்றும் நிராபராதி என்பதை நீரூபிக்கும் சாத்தியம் என்பவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தி உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு உதவுகிறது. பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான சாண்டர்ஸ், தனது வார்த்தைகளை வெளிப்படுத்தியவுடனேயே தனது சொந்தக் கட்சிக்குள் இருந்து எதிர்ப்பை கொண்டு வந்துள்ளது. இதன் நோக்கம், 2016 போல, ஒரு வலதுசாரி பிரச்சாரத்தின் அடிப்படையில் இனவாத, பாலின மற்றும் பாலியல் அரசியல் மூலம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்திற்கு பின்னால் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளை அணிதிரட்ட முனைகின்றது.

"முற்போக்கான" மற்றும் "தொழிலாளி சார்பான" ஜனநாயகக் கட்சியினருடனான அனுபவங்களின் பற்றாக்குறை ஏதும் இல்லை, அவை எப்பொழுதும் பேரழிவில் முடிவடையும். ஜனநாயகக் கட்சியே அனைத்து முற்போக்கான சமூக இயக்கங்களின் கல்லறை ஆகும். சாண்டர்ஸ் மீண்டும் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் ஒரு அரசியல் முட்டுச்சந்திற்கு இட்டுச்செல்ல முயல்கிறார்.

சமூக சமத்துவமின்மை மற்றும் செல்வந்தர்களின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது, போரின் ஆபத்திற்கு எதிர்ப்பு, பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் ஆபத்து ஆகியவற்றை மேலிருந்து அடிவரை செல்வந்தரும் ஒட்டுண்ணித்தன தன்னலக்குழுவினராலும் முற்றுமுழுதாக மேலாதிக்கம் செய்யப்படும் ஒரு முதலாளித்துவ சமூக கட்டமைப்பினுள் சிறிய சீர்திருத்தங்கள் மூலம் செய்யமுடியாது. அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் சமூக மற்றும் பொருளாதார வாழ்வை ஒரு அடிப்படையான, புரட்சிகர மறுஒழுங்குசெய்வதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க முடியும்.

சமூக சமத்துவம் மற்றும் உண்மையான ஜனநாயகம் என்பன சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே நிறுவ முடியும். இதற்கு தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கான அமைப்புகளை உருவாக்குவது அவசியமாக இருப்பதுடன், செல்வத்தை பறிமுதல் செய்து மற்றும் பாரிய நிறுவனங்களை மக்களால் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாக மாற்றுவது அவசியமாகும். முதலாளித்துவ அமைப்பு முறையின் மீதான ஒரு முன்னணி தாக்குதல் இல்லாமல் எதையும் வெற்றிகொள்ள முடியாது.