Print Version|Feedback
National 24-hour strike goes forward in Belgium
பெல்ஜியத்தில் தேசிய 24 மணிநேர வேலைநிறுத்தம் தொடர்கிறது
By Will Morrow
13 February 2019
வணிக குழுக்களும் தொழிற்சங்கங்களும் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளால் செயற்படுத்தப்படும் குறைந்த ஊதியங்களால் அதிகரித்த கோபத்தின் மத்தியில், இன்று பெல்ஜியத்தில் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்க பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர். பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் இவ் வேலைநிறுத்தமானது, ஐரோப்பாவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பரந்த, சர்வதேச வேலைநிறுத்த எழுச்சியின் ஒரு பாகமாகும்.
பெல்ஜியத்தில் வேலைநிறுத்த நடவடிக்கை நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கியது. செயற்பட்டுக் கொண்டிருக்கும்வேலை நிறுத்தத்தில், தேசிய டிராம் மற்றும் பேருந்து வலையமைப்பு முற்றிலும் அல்லது கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தப்படும் என்று ஊடகங்கள் அறிவித்தன. சட்டபூர்வ குறைந்தபட்ச வரம்பிற்குள், வழமையான எண்ணிக்கையிலும் அரைவாசியளவு இரயில்கள் ஓட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்ட்வெர்ப் துறைமுகம் (Antwerp Port) மற்றும் கெண்ட் துறைமுகம் (Port of Ghent) ஆகிய இரண்டும் வேலைநிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட மறுத்துவிட்ட போதிலும், பெருமளவிலான பொதுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குப்பை சேகரிப்பு துறையும், தபால் சேவையின் ஒரு பகுதியும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் தீயணைப்பு படையினரின் நிர்வாக ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
நேற்று, தேசிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான ஸ்கேய்ஸ் (Skeyes) செவ்வாய் இரவு 10 மணிக்கும் புதன் இரவு 10 மணிக்கும் இடையில் விமானப் போக்குவரத்தை அனுமதிக்காது என்று அறிவித்தது. ஏனெனில் "ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முக்கிய பதவிகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை எந்த நிச்சயமும் இல்லை” என்று அறிவித்தது. புருசல்ஸ் தெற்கு சார்லுருவா (Brussels South Charleroi) விமான நிலையம் மூடப்பட்டது. TUI Fly விமான சேவை பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், அண்மையாக உள்ள விமான நிலையத்திற்கு அனைத்து விமானங்களையும் திசைதிருப்புமாறு அறிவித்துள்ளது.
ஊதியங்கள், வேலைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான 10 ஆண்டுகளுக்கும் மேலான தீவிரமான தாக்குதல்களுக்கு பின்னர், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்துவரும் எதிர்ப்பிற்கு மத்தியில், பெல்ஜியத்தில் குறைந்த ஊதியங்கள் மற்றும் மோசமான வேலை நிலைமைகளுக்கு எதிராக சீற்றங்கள் பெருகி வருகிறது.
பேர்லினில் சுமார் 70,000 ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பு மற்றும் சமூக தொழிலாளர்கள் மற்றும் பிற பொதுத்துறை ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோம் நகரில் 200,000 மக்கள் சனிக்கிழமையன்று ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இத்தாலிய அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட வேலையின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான பரந்த சீற்றத்தை பிரதிபலிக்கிறது.
பிரான்ஸ் முழுவதும், பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நவம்பர் முதல் ஜனாதிபதி மக்ரோனின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராகவும், பெருகிய சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும் வாராந்த "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் பங்குபற்றுகின்றனர். பொதுக் கல்வி மீதான தாக்குதல்களை எதிர்க்கும் ஆசிரியர்கள் "சிவப்பு பேனா" பதாகையுடன் போராட்டத்தில் அண்மையில் இணைந்து கொண்டனர்.
இதற்கிடையில் மெக்சிக்கோவின் மத்தாமோரொஸில் உள்ள கார் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அமெரிக்க எல்லை வரை விரிவடைந்து வருகிறது, அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா முழுவதும் பல நாடுகளில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களும் நடைபெற்று வருகின்றன.
கூட்டாக செயல்படும் போது தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் சமூக சக்தி உள்ளது. எவ்வாறெனினும், பெல்ஜிய வேலைநிறுத்தத்தின் ஒழுங்கமைப்பாளர்களான மூன்று தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள், தொழிலாள வர்க்கத்தின் ஊதியம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராக பலத்தை அணிதிரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அவர்கள் வரையறுக்கப்பட்ட ஒரு நாள் நடவடிக்கையால் தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த கோபத்தை கட்டுப்படுத்த முயல்கின்றனர். இதன் மூலம் அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடர அனுமதிக்கின்றனர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ சங்கங்கள் இடையே 2019_2020 தேசிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பின்னர், ஜனவரி மாதம் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க தொழிற்சங்கங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன.
1996 இல் அனைத்து முக்கிய பெல்ஜியக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அமைத்த பிற்போக்குத்தன வணிக-சார்பு அமைப்பின் கீழ், தேசிய பொருளாதார கவுன்சில் அமைத்துள்ள ஒரு மட்டத்திற்கு தேசிய ஊதிய உயர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பெல்ஜியத்தின் அண்டை நாடுகளான பிரான்சுடனும் ஜேர்மனியுடனும் "போட்டித்தன்மையை" இழக்கக்கூடாது என்பதற்காக என்ன சம்பள உயர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை ஒரு கணக்கீடு மூலம் வெளியிட்டன. டிசம்பரில், சபை அதிகபட்சமாக 0.8 சதவிகிதத்தை அதிகரித்தது, அதே நேரத்தில் தொழிற்சங்கங்கள் 1.5 சதவிகிதம் அதிகரிப்பு வேண்டும் என்று கோருகின்றன.
பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் சர்வதேச அளவில் தமது வர்க்க சகோதர சகோதரிகளுடனான போட்டியில் தொழிலாளர்களின் ஊதியங்களை கீழ் நோக்கி குறைக்கும் தேசியவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத கட்டமைப்பை தொழிற்சங்கங்கள் முழுமையாக ஆதரிக்கின்றன. ஊதிய அதிகரிப்புக்கு என்ன வரம்பு என்பதை முடிவு செய்யும் முதலாளிகள்-சங்கத்தின் "10 பேர் கொண்ட குழுவில்" அவர்களுக்கு நிரந்தர இடங்கள் உள்ளன.
இன்றைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் எதிர்ப்பின் ஒரு நனவான வெளிப்பாடு ஆகும். அவை சுயாதீனமாகவும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியேயும் வளர்ந்து வருவதை தடுக்கவும், சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் இணைவதை தடுக்கவும் முனைகின்றன. இந்த அடித்தளத்தின் மீதே ஒரு வெற்றிகரமான போராட்டம் நடத்தப்படமுடியும்.
உயரும் வாழ்க்கைச் செலவு மற்றும் சமத்துவமின்மையின் தாக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில், புருஸல்ஸில் கடந்த மாதம் "மஞ்சள் சீருடை" எதிர்ப்புக்களில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஒருவர், RTBF செய்தியிடம், அவர் தனது ஓய்வூதியமாக ஒரு மாதத்திற்கு 1350 யூரோக்களைப் பெறுவதாக கூறினார். "நான் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை 23 ஆம் திகதி பெறுகிறேன். இப்போது 8 ஆம் திகதியாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நான் காப்புறுதி, வாடகை, மின்சாரம் போக இதரவைக்கு 150 யூரோ செலவாகும், இவற்றிற்கு பணம் செலுத்திய பின்னர், என் வாழ்க்கைச் செலவினங்களுக்காக 200 யூரோக்களை மட்டுமே வைத்திருக்கிறேன்" எனக் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் Welkenraedt இல் நடந்த ஒன்று உட்பட, பல திடீர் வேலைநிறுத்தங்கள் கடந்த வருடங்களில் இரயில் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நேரத்தில், தொழிற்சங்க அதிகாரி லோரண்ட் ப்ரூக், RTBF க்கு கூறுகையில், வேலைநிறுத்தம் பரவக்கூடும் ஆனால் "கூறுவதற்கு மிகவும் கடினமாக உள்ளது ... எந்த நேரத்திலும் இது எங்கும் நடைபெறலாம். சாரதிகள் மகிழ்ச்சியாக இல்லை” என்று கூறினார்.
2016-2017 இல் சார்ல்ஸ் மிஷேல் தலைமையிலான வலதுசாரி பெல்ஜிய அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளால் சமத்துவமின்மை இன்னும் அதிகரித்திருக்கிறது; அவருடைய சோசலிஸ்ட் கட்சி முன்னோடியான எலோயோ டி ரூபோ ஆல் தொடங்கப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்தார்.
மிஷேல் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், 38 மணி நேர நிலையான வேலை வாரம் முடிவடைந்து, ஒவ்வொரு இரண்டு வார வேலை மணித்தியாலங்களில் இருந்து ஒரு வருடத்துக்கான முழு வேலை செய்யும் மணித்தியாலங்களாக மாற்றுவதன் மூலம்; ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச சம்பள அதிகரிப்பு குறைக்கப்படுகிறது. ஓய்வூதிய வயதை 65 ல் இருந்து 67 வரை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் வகையில், வாழ்நாள் முழுவதும் பணியாற்றும் மணிநேரங்களுக்கு ஓய்வூதியங்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுக்கள் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தொடர்கின்றன. 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் உட்பட, சமூக வெட்டுக்களுக்கு விடைகாணும் வகையில் இன்றைய வேலைநிறுத்தம் போன்ற தேசிய ஒருநாள் வேலைநிறுத்தங்களை அவர்கள் முன்னர் அறிவித்திருந்தனர், ஆனால் பின்னர் அவர்கள் உடனடியாக அரசாங்கத்துடன் வெட்டுக்களை திட்டமிட்டு நடத்தினர்.
எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி இன்றைய வேலைநிறுத்தத்திற்கான அதன் ஆதரவை அறிவித்த அதே வேளையில், 2011-2014 காலப்பகுதியில் டி ரூபோவின் கீழ் இருந்த அதே வேளையில் அது அதேபோன்ற கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடத்தியது. 20ம் நூற்றாண்டில் பெல்ஜியத்தின் ஓய்வூதிய அமைப்பு நிறுவப்பட்டபோது, வாழ்க்கை எதிர்பார்ப்பு 62 ஆண்டுகள் மட்டுமே இருந்ததாக சுட்டிக்காட்டிய டி ரூபோ ஓய்வூதிய வயதை உயர்த்த வேண்டும் என்று கோரினார். "ஒவ்வொரு ஆண்டும் ஆயுட்காலம் இரண்டு மாதங்களால் உயருகிறது," என்று அவர் புகார் கூறினார்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது போன்று பெல்ஜியத்திலும், போராட்டத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை தொழிற்சங்கங்களின் கையில் இருந்து போராட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மற்ற நாடுகளில் உள்ள அவர்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளால் நடத்தப்பட்டது போன்று தங்கள் போராட்டங்களை நடத்தவும், அதேபோன்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்கவும் தொழிலாளர்களுக்கு சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்கள் தேவை.