Print Version|Feedback
Another devastating fire kills at least 80 in Bangladesh capital
பங்களாதேஷ் தலைநகரில் மற்றொரு பேரழிவுகர தீ விபத்தில் குறைந்தது 80 பேர் பலி
By Sujeewa Amaranath
22 February 2019
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஒரு பகுதியான சவுக்பஜாரில் (Chqwkbazar) புதனன்று இரவு ஒரு நான்கு மாடி கட்டிடத்தில் திடீரென பற்றிய தீ அருகிருந்த மூன்று கட்டிடங்களுக்கும் விரைந்து பரவியதில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர், மேலும் மற்றொரு 50 பேர் காயமடைந்தனர். பற்றியெரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர பொலிஸூக்கும் தீயணைப்பு படையினருக்கும் 12 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் பிடித்தது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பெரும்பாலும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு கருகி போயிருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்தன. 14 மணிநேரங்களுக்குப் பின்னர், மேலும் உடல்களைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும், காயமடைந்ததில் சிலர் இன்னமும் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதால், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட, பல மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறப்பு எண்ணிக்கை குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன. New York Times பத்திரிகை, இத்தீவிபத்து குறைந்தது 110 பேரை பலி கொண்டிருக்கும் எனக் கூறுகிறது. டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிபத்து பிரிவு தலைவர் சமந்தா லால் சென், குறைந்தது படுகாயமடைந்த ஒன்பது பேருக்கு இந்த பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என Associated Press க்கு தெரிவித்தார்.
தீ விபத்திற்கான காரணம் இன்னமும் அதிகாரபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை, என்றாலும், அதையொத்த பல பேரழிவுகளுக்குப் பின்னர் கட்டிட விதிமுறை மீறல்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் பலமுறை எச்சரித்திருந்தும், இந்த பகுதியில் இரசாயனங்களை சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டிருந்தது தான் திடீரென வெடித்த இந்த பெரும் தீ விபத்திற்கு காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
வெடிமருந்துத்துறை அதிகாரியான ஷாம்சுல் அலாம் (Shamsul Alam), Al Jazeera ஊடகத்தில், “ஒரு எரிவாயு உருளை (gas cylinder) வெடித்தபோது தான் அங்கு தீ பற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதை முதல்கட்ட விசாரணை கண்டறிந்துள்ளது. எங்களது குழு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. இப்போது எதையும் உறுதியாக கூற முடியாது” என்று தெரிவித்தார்.
சவுக்பஜாரில் உள்ள பல கட்டிடங்களைப் போல, இந்த கட்டிடத்தின் மேல் தளங்களும் குடியிருப்பு அடுக்குமாடிகளாக பயன்பாட்டில் இருந்த அதேவேளையில், தரைத்தளங்கள் சேமிப்புக் கிடங்குகளாகவும் கடைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஊடக செய்திகளின் படி, தரைத்தளத்தின் ஒரு சேமிப்புக் கிடங்கில் எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயனங்களும் பிளாஸ்டிக் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்த காரணத்தால் தான், உடனடியாக தீ பற்றிக் கொண்டுள்ளது. அப்போது, குடியிருப்பு தளங்களில் இருந்த எரிவாயு உருளைகள் தொடர்ந்து வெடித்த நிலையில், நெருப்பு மேலும் பரவுவதற்கு அது உதவியாக இருந்தது என்பதாக சாட்சியாளர்களும் பொலிஸூம் தெரிவித்தனர்.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் சவுக்பஜார் மாநிலம், குறுகிய தெருக்களையும் ஒன்றுகொன்று மிக நெருக்கமாக அமைந்த கட்டிடங்களையும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட இரவு 11 மணியளவில் நெருப்பு பற்றியபோது, பல குடியிருப்புகள் தூக்கத்தில் இருந்துள்ளன. இந்நிலையில், திடீரென பற்றிய அந்த நெருப்பு மற்றும் வெடிப்புக்களின் காரணமாக வாகனங்கள் மற்றும் ரிக்ஷாக்கள் உட்பட, ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து போனதுடன், குடியிருப்பாளர்களையும் கடைக்காரர்களையும் அவ்விபத்து பலி கொண்டது என சாட்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஹாஜி அப்துல் காதெர் என்பவர் AFP க்கு இவ்வாறு தெரிவித்தார்: “எனக்கு ஒரு பெரும் சத்தம் கேட்டது. நான் திரும்பி பார்த்தபோது ஒட்டுமொத்த தெருவும் நெருப்பில் மூழ்கிவிட்டிருந்ததைக் கண்டேன். எங்கும் தீப்பிழம்புகள் பரவியிருந்தன.”
ஒரு உணவக மேலாளரான முகமது ராகிப் (Mohammad Rakib) என்பவர், ஒரு ரிக்ஷா ஓட்டுநர் தீயை அணைக்க முயன்றதை நான் கவனித்தேன், பின்னர் நெருப்பில் உயிரோடு அவர் எரிந்து போனார் என்றும் New York Times பத்திரிகைக்கு தெரிவித்தார். “பலரும் அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்,” என்றும் கூறினார். மேலும் அவர், “அப்போது நான் மிகவும் அச்சமடைந்திருந்ததால், எல்லா பணத்தையும் அங்கேயே போட்டுவிட்டு உணவகத்தை விட்டு தப்பித்து வந்துவிட்டேன்” என்று கூறினார்.
இந்த சம்பவம், நெருப்பில் காணாமல் போன தங்களது சொந்தக்காரர்கள் பற்றிய தகவலுக்காக மக்கள் காத்திருக்கும் மற்றும் எரிந்து சிதைந்து போன வாகனங்கள் தெரு எங்கிலும் சிதறிக் கிடக்கும் ஒரு கொடூரமான துயரகரமான காட்சியை உருவாக்கி இருந்தது.
சில பாதிக்கப்பட்டவர்கள் அருகிருந்த உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் என்றும், ஏனையோர் திருமண விருந்தில் இருந்தனர் என்றும் கூறப்பட்டது. டாக்கா தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்டவர்களில் பலர் கட்டிடங்களுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டனர் என்று தெரிவித்தார். ஒரு பெண்மணி அவரது கையில் பிடித்திருந்த தனது சிறிய மகளுடன் ரிக்சாவில் பயணித்து கொண்டிருந்தபோது அவர்களும் அந்த தீக்கு இரையாகிப் போயினர்.
தீயணைப்பு வண்டிகள் விபத்துப் பகுதியை எளிதில் சென்றடைய முடியவில்லை, ஏனென்றால் வியாழக்கிழமை தேசிய விடுமுறை காரணமாக அக்கம்பக்கத்து சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் அந்த தெரு நிரம்பிவழிந்தது என்று அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
ஒவ்வொரு பேரழிவிற்கு பின்னரும் நிகழ்த்தப்படும் பொதுவானதொரு முகஸ்துதி சம்பிரதாயமாக, பங்களாதேஷின் ஜனாதிபதி அப்துல் ஹமீதும், பிரதமர் ஷேக் ஹசினா வஜேத் உம் சம்பவம் குறித்து தங்களது அதிர்ச்சியையும், நெருப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தனர்.
இந்த சோக நிகழ்வு குறித்த மக்களின் கோபத்தை திசைதிருப்ப, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு வெறும் 100,000 டாக்காவும் (1,191 அமெரிக்க டாலர்) மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 டாக்காவும் வழங்கப்படும் என அறிவித்தது.
உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமால் (Asaduzzaman Khan Kamal), சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீ விபத்து பற்றி விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் அது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்ற தகவலை அறிவித்தார். தொழில்துறை அமைச்சகமும் மற்றும், தீயணைப்பு மற்றும் குடிமை பாதுகாப்பு (Fire Service and Civil Defence-FSCD) துறையும் கூட, விசாரணைகளுக்கு அறிவித்துள்ளன.
டாக்காவின் தென் நகர மாநகராட்சி மேயர் சயீத் கோகோன் (Sayeed KhoKon), டாக்காவிற்குள் இனிமேல் இரசாயன கிடங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். இத்தகைய உத்தியோகபூர்வ பதில்களும், நடவடிக்கை எடுக்கப் போவதாக விடுக்கப்படும் வெற்று வாக்குறுதிகளும் கடந்த காலத்தில் ஏற்கனவே பலமுறை விடுக்கப்பட்டவையே.
2010 இல் நிகழ்ந்தான ஒரு கொடிய தீ விபத்திற்குப் பின்னர், குடியிருப்பு பகுதிகளில் இரசாயனப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுவதற்கு தடை விதிக்க பங்களாதேஷ் அதிகாரிகள் முனைந்தனர், என்றாலும் நாளடைவில் அது மாறிப்போனது. நிம்டோலி (Nimtoli) மாகாணத்தில் 124 பேரை பலி கொண்ட அந்த தீ விபத்தின் போதும், அங்கிருந்த ஒரு சட்டவிரோதமான சேமிப்பு கிடங்கு தான் நிலைமை மிகவும் மோசமாக காரணமாக இருந்தது.
BBC செய்தியின் படி, “அந்த சம்பவத்திற்குப் பின்னர், குடியிருப்பு பகுதிகளில் இருந்து அனைத்து இரசாயன சேமிப்புக் கிடங்குகளையும் அகற்ற வேண்டுமென ஒரு குழு ஆலோசனை வழங்கியது, ஆனால் தொடர்ந்து பல வருடங்களாகியும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.”
அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட கட்டுமான மண்டல வரையறை விதிமுறைகள் இருப்பினும் அவற்றை செயல்படுத்துவதில் இருக்கும் தொய்வு அல்லது அது தொடர்பான ஊழல்கள் காரணமாக பல சமயங்களில் அவை நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. செல்வந்த வணிக உரிமையாளர்கள், இலாபம் தரும் நிறுவனங்களுக்குள் அதிகாரிகள் தலையீடு செய்யக் கூடாது என்பதற்காக எளிதாக அவர்களது கண்களை குருடாக்கும் வகையில், வழமையாக அவர்களுக்கு கையூட்டு வழங்கிவிடுகின்றனர்.
2010 க்கு பின்னர், FSCD மற்றும் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய செயலூக்கப் படை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது, ஆனால் சேமிப்புக் கிடங்கு எதுவும் அகற்றப்படவில்லை என்று Al Jazeera ஊடகத்திற்கு ஒரு FSCD அதிகாரி தெரிவித்தார்.
வெடிமருந்துத் துறை சவுக்பஜார் பகுதியில் மட்டும் தொகுத்த தரவின் படி, எளிதில் பற்றியெறியும் தன்மை கொண்ட இரசாயனங்களை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் உரிமங்களைக் கொண்ட 46 நிறுவனங்கள் அங்கு இயங்கி வருகின்றன, அதேவேளையில், வாசனைத் திரவியங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய ஏனைய 70 நிறுவனங்களும் உரிமங்களை கொண்டுள்ளன. ஆனால், பெயர் வெளியிட விரும்பாத அத்துறையின் அதிகாரி ஒருவர், இந்த 116 நிறுவனங்களைத் தவிர, 2,000 க்கும் அதிகமான சட்டவிரோதமான இரசாயன சேமிப்புக் கிடங்குகள் இந்த பகுதியில் இயங்கி வருகின்றன என்று Al Jazeera ஊடகத்திற்கு தெரிவித்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் பங்களாதேஷில் சம்பவித்ததான கட்டிட தீ விபத்துக்கள் மற்றும் சரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 2012 இல், டாக்காவின் புறநகர் பகுதியில், அசுலியா (Ashulia) மாகாணத்தில் உள்ள, பல அடுக்குமாடிகளைக் கொண்ட Tazreen Fashion ஆலையில் தீப்பற்றிக் கொண்டபோது அதில் 112 க்கும் அதிகமான ஆலைத் தொழிலாளர்கள் எரிந்து போயினர்.
2013 இல், ஐந்து ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை உள்ளடக்கிய எட்டு அடுக்குமாடி Rana Plaza கட்டிடம் சரிந்தது. உலகின் மிக மோசமான தொழிற்துறை பேரழிவுகளில் ஒன்றான அதில் முக்கியமாக ஆடைத் தொழிலாளர்கள் உட்பட 1,200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அந்த நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது:
“இந்த சோகத்தைத் தொடர்ந்து, அரசாங்கங்கள், ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் போன்ற அனைத்தும், ஏதேனும் ஒரு வழியில், எதையாவது செய்தாக வேண்டும் என்றும், ஆடைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பூகோள அளவிலான பெருநிறுவனங்களுக்கும், பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தன. உண்மை என்னவென்றால், ஏற்றுமதிகளையோ அல்லது இலாபங்களையோ குறைப்பதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் செய்யாது. பூகோள முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் முறிவின் மத்தியில், பாதுகாப்பு நிலைமைகள் மோசமடையுமேயன்றி, மேம்பாடு காணாது.”
பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி தலைமையிலான அரசாங்கம், உயர் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்து பெருமை பேசி, இந்த ஜனவரியில் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்துள்ளது. உண்மையில், ஏனைய வறிய நாடுகளைப் போல பங்களாதேஷூம், தொழிலாளர்களின் கொத்தடிமை நிலைமைகளை சுரண்டும் வகையில் உலகளாவிய பெருநிறுவனங்களுக்கான மலிவு உழைப்பு தளமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. ஹசினாவின் நிர்வாகமும், முதலாளித்துவ வர்க்கமும் பொதுமக்கள் அழுத்தம் தரும் சமூக கேள்விகளுக்கு எந்தவித பதிலையும் தர முடியாத நிலையில் இருக்கின்றன.
சென்ற மாதத்தில், பொலிஸ் மிரட்டல் மற்றும் பாரிய ஆலை மூடல்களுக்கான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஊதிய உயர்வு கோரி ஆடைத் தொழிலாளர்கள் எட்டு நாள் போராட்டத்தை நடத்தி முடித்து பணிக்கு திரும்பிய பின்னர், 7,000 க்கும் அதிகமான தொழிலாளர்களை பெரும் ஆடை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ததற்கு அவாமி லீக் அரசாங்கம் பின்புலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹசினா அரசாங்கம், ஏனைய குறைவூதிய நாடுகளில் இருந்து சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கான அதன் முயற்சிகளில், நாட்டின் தொழிலாள வர்க்கம் மீதான இரக்கமற்ற சுரண்டலை விருத்தியடையச் செய்யும் வகையில், உள்ளூர் பெருவணிகர்கள், உலக முதலீட்டாளர்கள் மற்றும் சிறுவணிக ஜாம்பவான்களின் நலன்களை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
2013 இல் WSWS வலியுறுத்தியது போன்று: “இத்தகைய துயரங்கள், இலாப அமைப்பு முறைக்குள் தாமே இறுதியாக வேரூன்றிக் கொண்ட குற்றங்களாக இருக்கின்றன. புவியில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாங்குடைய வாழ்க்கைத் தரத்தை வழங்கும் திறன் படைத்த உலகளாவிய உற்பத்தி என்பது, ஒருசில செல்வந்தர்களுக்கு மட்டும் பெரும் இலாபத்தை வாரியிறைக்கும், உலகெங்கிலுமான உழைக்கும் மக்களை ஆழ்ந்த இழிநிலைக்குள் தள்ளும் முதலாளித்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
“இந்த காலாவதியான மற்றும் பிற்போக்குத்தன சமூக ஒழுங்கை இல்லாதொழிப்பதற்கான, மேலும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சமூக தேவைகளுக்கான அழுத்தத்தை சமாளிக்க ஒரு பகுத்தறிவார்ந்த திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரே தீர்வு என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் தங்கியுள்ளது.”
ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:
The Bangladesh factory collapse and the drive for profit
[27 April 2013]
Bangladesh fire kills more than 120 people
[5 June 2010]