ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Autoworkers, supporters demonstrate in Detroit to oppose GM closures and layoffs

ஜிஎம் ஆலைமூடல்கள் மற்றும் வேலைநீக்கங்களை எதிர்க்க வாகனத்துறை தொழிலாளர்களும், ஆதரவாளர்களும் டெட்ராய்டில் ஆர்ப்பாட்டம்

By Niles Niemuth
11 February 2019

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆலைமூடல்கள் மற்றும் வேலைநீக்கங்களுக்கான ஜெனரல் மோட்டார்ஸின் திட்டங்களை எதிர்க்க, மத்தியமேற்கு எங்கிலும் இருந்து 100 க்கும் அதிகமான வாகனத்துறை தொழிலாளர்களும் ஆதரவாளர்களும் டெட்ராய்டில் சனிக்கிழமை அணிவகுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழும் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டல் குழுவும் ஏற்பாடு செய்திருந்தன.

டெட்ராய்டில் ஹாம்ட்ராம்க், லாட்ஸ்டவுன், ஓஹியோ மற்றும் ஒன்டாரியோ ஒசாவாவின் மிகப் பெரிய உற்பத்தி ஆலைகள் உட்பட ஐந்து ஆலைகளை மூடுவது மற்றும் சம்பளத்தில் உள்ள 14,000 உற்பத்தித்துறை தொழிலாளர்களின் வேலைகளை அழிப்பதற்கான அதன் திட்டங்களை ஜிஎம் நிறுவனம் கடந்தாண்டு அறிவித்தது. ஜிஎம் 4,250 நிர்வாக பணியாளர்களை (white-collar workers) வெளியேற்ற தொடங்கிய போது கடந்த வாரம் முதல் வேலைநீக்கங்கள் வந்தது.


உலகளவில் ஜிஎம் தலைமையகங்களின் முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

 

ஆலைமூடல்கள் மற்றும் வேலைநீக்கங்களுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே எதிர்ப்பான சனிக்கிழமை ஆர்ப்பாட்டம், சாமானிய தொழிலாளர்களின் ஆலை குழுக்களை உருவாக்குவதன் மூலமாக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தைச் சர்வதேசரீதியில் ஒருங்கிணைப்பதற்கு போராடுவதன் அடிப்படையில் அழைக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் UAW சங்கம் மற்றும் கனடாவில் யூனிஃபொர் சங்கம் ஆகிய நிறுவன-சார்பு தொழிற்சங்கங்கள் இந்த ஆலைமூடல்களை நிறுத்த ஒன்றும் செய்யவில்லை என்பதோடு, மாறாக அவை மெக்சிகோ தொழிலாளர்கள் மீது பழிசுமத்தி தேசியவாத நச்சை புகுத்தி வருகின்றன.

அந்த பேரணியும் அதை தொடர்ந்து டெட்ராய்டின் இரண்டாவது பாப்பிஸ்ட் தேவாலயத்தில் (Baptist Church) நடந்த கூட்டமும் சமூக ஊடங்களில் உலகெங்கிலும் இருந்து தொழிலாளர்களால் பார்க்கப்பட்டது. இந்த போராட்டம் இந்தியாவில் ஜோடிப்பு குற்றச்சாட்டுகளில் அடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களின் பிரதிநிதிகளிடம் இருந்தும், இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் இருந்தும், மெக்சிகோ மத்தாமோரொஸில் வேலைநிறுத்தம் செய்து வரும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்களிடம் இருந்தும் பலமான ஆதரவு அறிக்கைகளைப் பெற்றது. துருக்கி, ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொழிலாளர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தனர்.

மிச்சிகன், இலினோய், லோவா மற்றும் மேற்புறத்து நியூ யோர்க் எங்கிலும் இருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் கீழ்பகுதி டெட்ராய்டில் ஆற்று முகத்துவாரத்தின் மறுமலர்ச்சி மையத்தில் உலகளவிலான ஜிஎம் நிறுவனங்களுக்கான தமையகங்களின் முன்னால் ஒரு மணி நேரம் அணிவகுத்ததனர். டெட்ராய்ட் வாய்ன் மாநிலம் மற்றும் அன் ஆர்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினது கிளைகளால் மாணவர் பிரதிநிதிகள் அணிதிரட்டப்பட்டிருந்தனர்.

“ஒரே போராட்டம், ஒரே மோதல்! உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!”; “டெட்ராய்ட், ஒசாவா, லாட்ஸ்டவுன், நீங்கள் அவற்றை மூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!”; “வேலை வெட்டுக்கள், வேலை இழப்புகள்! தொழிற்சங்கங்கள் முதலாளிமார்களுடன் செயல்படுகின்றன!” என்பவை உள்ளடங்கலாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை முழங்கினர்.


போராட்டத்தின் மற்றொரு பிரிவு

“வேலைநீக்கங்கள் வேண்டாம்! ஜிஎம் ஆலைமூடல்களை எதிர்த்து போராடு,” என்ற பதாகைகளை ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வெறுக்கப்படும் இரட்டை அடுக்கு கூலி முறையை ஒழிக்கவும் மற்றும் ஒவ்வொரு ஆலையிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதற்கும் அழைப்பு விடுத்தனர். “முந்தைய சலுகை பறிப்புகள் இனி கிடையாது! இத்துடன் விட்டுக்கொடுப்புகள் முடிந்தது,” “பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான UAW க்கு எதிரான போராட்டம்,” “ஆலைகள் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்காக போராடுவோம்,” “சோசலிசத்திற்காக போராடுவோம்! தனியார் இலாபங்களுக்காக அல்ல, சமூக தேவைக்காக,” என்று எழுதிய பலகைகளை ஏனையவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த பேரணியில் முன்னாள் கிறைஸ்லர் தொழிலாளரும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலருமான லோரன்ஸ் போர்ட்டர் மற்றும் WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழ் ஆசிரியர் ஜெர்ரி வைட்டால் மறுமலர்ச்சி மையத்தின் படிகளில் இருந்து உரை நிகழ்த்தினர்.


ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

"தொழிலாள வர்க்கம் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை இந்த ஆர்ப்பாட்டம் எடுத்துக் காட்டியுள்ளது,” என்று கூட்டத்தை நோக்கி கூறிய போர்ட்டர், “ஜெனரல் மோட்டார்ஸ் திட்டங்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு. குறைவூதியங்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு. உலகெங்கிலுமான அவர்களின் சகோதர சகோதரிகளிடம் இருந்து தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு. நிர்வாகத்துடன் கரம் கோர்த்துள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு. விட்டுக்கொடுப்புகள் மற்றும் முந்தைய சலுகை பறிப்புகளுக்கான காலம் முடிந்துவிட்டது என்பதை இந்த ஆர்ப்பாட்டம் எடுத்துரைக்கிறது. உழைக்கும் மக்கள் போராடுவதற்கு ஒரு வழியை எதிர்நோக்கி வருகிறார்கள்!” என்றார்.

ஆலைகளை மூடுவதென்ற ஜிஎம் நிறுவனத்தின் முடிவை கண்டித்த வைட், அவற்றைச் சார்ந்துள்ள தொழிலாள வர்க்க சமூகங்களை அது சீரழித்துவிடும் என்றார். “இந்த சட்டவிரோத முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம் என்பதை கூறுவதற்கே இன்று இங்கே நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். இந்த பெருநிறுவனங்களுக்காக பில்லியன் பில்லியன்களாக சம்பாதித்து கொடுத்த தொழிலாளர்களை வீதிகளில் தூக்கி வீசும் பெருநிறுவனங்களின் மற்றொரு குற்றகரமான தாக்குதலுக்காக நாங்கள் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டோம்!”

“1979 இல் முதல் கிறைஸ்லர் பிணையெடுப்புக்குப் பின்னர் இருந்து,” வைட் அறிவித்தார், “ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) ஒரு ஆண்டுக்குப் பின் ஒரு ஆண்டாக, வாகனத்துறை தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளைக் காப்பாற்றிக் கொள்ள கூலி மற்றும் சலுகை வெட்டுக்களை ஏற்று கொள்ள வேண்டுமென அவர்களுக்குக் கூறி வந்துள்ளது. அது எதை உருவாக்கி உள்ளது? ஆறு நூறாயிரம் தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழந்துள்ளனர், பழைய தொழிலாள்கள் வெளியேற்றப்பட்டு, ஒரு புதிய தலைமுறை இளம் வாகனத்துறை தொழிலாளர்கள் வறிய கூலிகளில், எந்த உரிமைகளும் இல்லாமல் பகுதி நேர தொழிலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், இதிலும் கூட UAW க்கு அவர்கள் தொடர்ந்து சந்தா செலுத்துகின்றனர். பெருநிறுவனங்களிடம் இருந்து கையூட்டு பெறுகின்றதும் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸின் 100 மில்லியன் பங்குகளைக் கொண்டுள்ளதுமான எந்த அமைப்பும் வாகனத்துறை தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒன்றும் செய்யப் போவதில்லை.”


டெட்ராய்ட் நகர மைய்யப்பகுதியில் அமைந்துள்ள உலகளாவிய ஜிஎம் ஆலைகளுக்கான தலைமையகத்தின் படிகளில் நின்று ஜெர்ரி வைட் உரையாற்றுகிறார்

சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டல் குழுவானது வாகனத்துறை தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து போராட்டத்தை வெளியில் எடுக்கவும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும் டிசம்பர் 9 கூட்டத்தில் உருவாக்கப்பட்டது என்பதை வைட் விவரித்தார்.

உரைகளை செவிமடுத்தப் பின்னர், போராட்டக்காரர்கள் பின்னர் டெட்ராய்டின் நகர மைய்ய பகுதி வழியாக இரண்டாம் பாப்பிஸ்ட் தேவாலயத்தை நோக்கி அணிவகுத்தனர், இது அமெரிக்க உள்நாட்டு போருக்கு முன்னதாக அடிமைகள் தப்பிப்பதற்கு நிலத்தடி இரயில் பாதையின் ஒரு நிறுத்தமாக சேவையாற்றிய இடமாகும். அந்த கூட்டத்தில் வைட், WSWS இன் சர்வதேச ஆசிரியக் குழு தலைவர் மற்றும் SEP தேசிய தலைவர் டேவிட் நோர்த், SEP தேசிய செயலர் ஜோசப் கிஷோர் மற்றும் WSWS எழுத்தாளர் எரிக் இலண்டன் ஆகியோர் உரையாற்றினர்.

அந்த தேவாலயத்தின் வரலாற்றுடன் அந்த ஆர்ப்பாட்டம் வரலாற்றுரீதியில் ஒத்திசைந்து இருப்பதைக் குறித்த கருத்துக்களுடன் நோர்த் உரையைத் தொடங்கினார். “1850 களில் இந்த தேவாலயத்திற்கு வந்தவர்கள் எவ்வாறு நிலைமைகளை கண்டார்கள் என்பதை உங்களால் கற்பனை மட்டுமே செய்ய முடியும். ஒரு தசாப்தத்திற்குள் அடிமைப்படுத்துவதற்கான அதிகாரம் இருக்கப் போவதில்லை என்று 1855 இல் யாரால் கற்பனை செய்திருக்க முடியும்?”


டேவிட் நோர்த்

அந்த பேரணியில் பேசிய நோர்த் கூறினார், “இங்கே தான் எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்பட்டது.” அந்த ஆர்ப்பாட்டம் "வாழும் உலகத்தைக் குறித்த சமூக நனவும் புரிதலும் அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்த ஒரு வர்க்கத்தின் அபிலாஷைகளுக்கு நனவுபூர்வமான வெளிப்பாட்டை வழங்கியது,” என்றவர் விவரித்தார். அந்த ஆர்ப்பாட்டம் வரவிருப்பதை குறித்த ஓர் எதிர்பார்ப்பாக இருந்தது என்றார்.

“இன்று நாம் வெளிப்படுத்திய கோஷங்கள் வரவிருக்கும் காலத்தில் மில்லியன் கணக்கான பத்து மில்லியன் கணக்கானவர்கள் முன்னெடுக்கப் போகும் கோஷங்களாகும்,” என்று அறிவித்த நோர்த், “தொழிலாள வர்க்கத்தைச் செயலூக்கமான அரசியல் வாழ்வுக்குள் கொண்டு வர, பெருந்திரளான மக்களுக்கு ஓர் அரசியல் நோக்குநிலையை வழங்க நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

நோர்த்தை அடுத்து பேசிய வைட் விவரித்தார், “நவீன கால அடிமைத்தனத்தை, கூலி அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர, பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களான பேரோக்களே வெட்கப்படுமளவுக்கு சமூக சமத்துவமின்மையின் அளப்பரிய மட்டங்களை உருவாக்கி உள்ள முதலாளித்துவத்திற்கு முடிவு கட்ட நாம் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.” அவர் இந்திய மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் இடைக்கால குழுவின் அங்கத்தவர் ஜிதேந்திர தன்கரிடம் இருந்து அக்கூட்டத்திற்கான வாழ்த்துக்களைக் கொண்டு வந்தார்.

தொழிலாளர்கள் அவர்களின் சொந்த சுயாதீனமான அமைப்பை உருவாக்க நிறுவனத்தின் தொழிற்சங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பின்னர், நிறுவனம் நடத்திய ஒரு வன்முறை மோதலில் ஒரு மேலாளர் உயிரிழந்ததற்காக அந்த புதிய தொழிற்சங்கத்தின் பதின்மூன்று தலைவர்களுக்கு ஜோடிப்பு வழக்கின் கீழ் ஆயுள்கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. “நாம் ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு தேசத்தின் போராட்டத்தில் அடித்தளம் அமைக்காமல், மாறாக உலக தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலமாக நமது ஐக்கியத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம்,” என்று தன்கர் அவர் கடிதத்தில் குறிப்பிட்டார். (இந்த வாழ்த்து செய்தி WSWS இல் முழுமையாக பிரசுரிக்கப்படும்.)

மெக்சிகோவில் நடந்து வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களின் அளப்பரிய முக்கியத்துவம் குறித்து இலண்டன் பேசினார், அவர் "பழைய-பாணியிலான வேலைநிறுத்த காய்ச்சல் விவகாரத்தைக் கொண்டு வந்திருப்பதாக" குறிப்பிட்டதும் கைத்தட்டல்கள் ஒலித்தன. இந்த வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. “வெவ்வேறு நாடுகளின் தொழிலாளர்கள் ஒரே மொழியைப் பேசாதவர்களாக இருக்கலாம், வெவ்வேறு தோல் நிறங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்... அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக போராடுகிறார்கள் என்பது ஒரு புனிதநாள் சேதி அல்ல, அதுவொரு மூலோபாய அவசியம்,” என்றார்.

மெக்சிகோ தொழிலாளர்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து இலண்டன் ஆதரவு சேதிகளைக் கொண்டு வந்திருந்தார். அவர்களில் ஒரு தொழிலாளரும், மத்தாமோரொஸில் Fisher Dynamics இல் சாமானிய-தொழிலாளர்கள் குழுவின் தலைவருமான க்ரீசெல்டா, “வேலைநீக்கங்கள், துஷ்பிரயோகங்களுக்கு முடிவு கட்டவும் மற்றும் நியாயமான சம்பளங்களை வென்றெடுப்பதற்கும் கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க" அவரின் ஆதரவைத் தெரிவித்தார். “நாம் ஒன்றுபட வேண்டும். நமது போராட்டத்திற்கு எல்லைகள் கிடையாது. நாம் இங்கே உறுதியாக நிற்க வேண்டும்,” என்றார்.

இறுதியாக பேசிய கிஷோர் கூறுகையில், தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும், அது அனைத்து தொழிலாளர்களின் ஐக்கியத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும், அது பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் இலாபங்களுக்கு அடிபணிய செய்யப்படக்கூடாது என்ற ஒரு மூலோபாயத்தை இந்த ஆர்ப்பாட்டம் அமைத்துக் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

“அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோசலிஸ்ட் நாடாக ஆகாது,” என்று டொனால்ட் ட்ரம்ப் அவரின் மாநில கூட்டாட்சி மன்ற உரையில் அறிவித்த அறிவிப்பின் முக்கியத்துவத்தைக் குறித்து கிஷோர் பேசினார். தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியால் ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது என்று குறிப்பிட்ட கிஷோர், அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கிலும் என்றார். ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டு கட்சிகளுமே தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவற்றின் எதிர்ப்பில் ஒன்றுபட்டுள்ளன என்பதை அவர் விவரித்தார்.


ஜோசப் கிஷோர்

ஜிஎம் நிறுவனத்தின் நடவடிக்கைகள் முதலாளித்துவத்தின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றன என்பதை கிஷோர் தெரிவித்தார். “முதலாளித்துவம் என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா, ஜிஎம் நிறுவனம் ஐந்து ஆலைகளை மூடி வருகின்ற நிலையில், அதன் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை கையளிக்கிறதே அது தான்.”

“ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தால் மிரண்டுள்ளது,” என்று கிஷோர் தெரிவித்தார். “இந்த கருத்து, வர்க்க போராட்டத்தின் இந்த கருத்து, சமூக புரட்சியின் இந்த கருத்து, தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையில் செயல்படும் ஒரு சமூகம் குறித்த இந்த கருத்து, இலாபங்களின் மீதல்ல சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட இந்த கருத்து, பெருந்திரளான மக்களை ஒரேயொரு முறை பற்றிக் கொண்டால் —அது பெருந்திரளான மக்களைப் பற்றி வருகிறது என்ற நிலையில்— இந்த புவியில் மிகவும் பலமான சக்தியாக இருக்கும்,” என்றார்.

தொழிற்சங்க அதிகாரிகளால் பாலியல்ரீதியில் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்ற பெண் பணியாளர்களைப் பாதுகாத்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வாகனத்துறை தொழிலாளரான நிக், தொழிலாளர்களுக்கு தகவலும் குரலும் வழங்குவதில் WSWS வகிக்கும் முக்கிய பாத்திரத்தை விவரித்து, கடந்த பல ஆண்டுகளாக வாகனத்துறை தொழிலாளர்களின் அனுபவத்தை ஆய்வுக்குட்படுத்தி கூறினார். அவர் கூட்டத்தை நோக்கி கூறினார், “நாம் அவர்களை பயமுறுத்தி உள்ளோம், அவர்களைப் பயமுறுத்த முழு உரிமை உள்ளது. நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் இதை நாம் தனிநபர்களாக அல்ல, சோசலிச சமத்துவக் கட்சி மூலமாக இதை செய்ய வேண்டும்,” என்றார்.

ஆளும் வர்க்கத்தின் தலைமை "அதன் அடிஆழத்திலிருந்து அழுகி போயுள்ளது,” என்று கூறிய நோர்த், “தொழிற்சங்கங்களுடன் கூட்டு வைத்திருக்கும் அனுதாப குழுக்களும், ஜனநாயகக் கட்சிக்குள் உள்ள அதன் கூட்டாளிகள் ஒருபுறம் இருக்கட்டும், வரலாற்று அபிவிருத்திக்களின் மிகவும் ஆழமான நிகழ்முறைகளைக் குறித்து பேசுவது டொனால்ட் ட்ரம்ப் அல்ல, இந்த கட்சி தான் பேசுகிறது,” சோசலிச சமத்துவக் கட்சி. அதில் பங்கு பெற்றவர்களை SEP இல் இணையுமாறும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.