Print Version|Feedback
French Prime Minister proposes government registry of demonstrators
பிரெஞ்சு பிரதம மந்திரி ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த அரசு பதிவேட்டுக்கு முன்மொழிகிறார்
By Alex Lantier
8 January 2019
சென்ற சனிக்கிழமை எட்டாவது வார "மஞ்சள் சீருடை" (Gilets jaunes) போராட்டங்களில் பிரான்ஸ் எங்கிலும் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, பிரெஞ்சு பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் நேற்றிரவு பிரெஞ்சு தொலைக்காட்சியில், ஆர்ப்பாட்டங்களை நசுக்க ஓர் அசாதாரண சட்டம் கொண்டு வருவது குறித்து அறிவித்தார். முதலில் நவ-பாசிசவாதிகளால் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுக்கும் வகையில், அவர், ஆர்ப்பாட்டக்காரர்களை அரசின் இரகசிய பட்டியல்களில் வைத்து நிதியியல் தடைகளுக்கு உள்ளாக்குவதற்கு முன்மொழிந்தார்.
“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் பிரான்ஸ் எங்கிலும், உண்மையில் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களின் சமூக கோபத்தை வெளிப்படுத்துகிறது என்பதை பிலிப் ஒப்புக் கொண்டார். “ஆரம்பத்தில் இருந்தே, 'மஞ்சள் சீருடையாளர்களின்' அறிக்கைகளில், அதிக நுகர்வு சக்திக்கான கோரிக்கைகள் இருந்தன, அவர்கள் கைவிடப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரெஞ்சு மக்களுக்காக பேசி வருகின்றனர்,” என்றவர் தெரிவித்தார்.
ஆனால் பிலிப் இவ்வாறு ஒப்புக் கொண்ட போதிலும், அவர் அரசாங்கத்தினது பரவலாக வெறுக்கப்படும் கொள்கையில் அது எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை என்றும், மாறாக ஆர்பாட்டம் செய்வதற்கான உரிமை மீது கூடுதல் தடைகளை ஏற்படுத்தியும் மற்றும் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக பொலிஸ் எந்திரத்தைப் பாரியளவில் பலப்படுத்தியும் அந்த இயக்கத்தை அது நசுக்க முயலும் என்பதையும் அழுத்தந்திருத்தமாக தெரிவித்தார்.
“வன்முறை கும்பல் அட்டை" (“hooligan card”) போன்ற ஒரு முறையைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டம் செய்வதிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காக, போராட்டக்காரர்கள் பட்டியலில் பதியப்படுவார்கள், அது கால்பந்தாட்ட மைதானங்களுக்குள் நுழைவதிலிருந்து குறிப்பிட்ட நபர்களைத் தடுப்பதற்கு பொலிஸை அனுமதிக்கும் என்றார். இதற்கும் கூடுதலாக, நிர்வாகத்திடம் பதிவு செய்யாத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அபராதங்கள் விதிக்க உள்ளார். “நமது சட்டத்தை மாற்றுவதையும் மற்றும் இந்த பதிவு செய்யும் கடமைப்பாட்டை பூர்த்தி செய்யாதவர்களைத் தண்டிப்பதையும் அரசாங்கம் ஆதரிக்கிறது,” என்றவர் அறிவித்தார்.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் கடுமையான தண்டனைகள் விதிக்க அனுமதிக்கும் நடைமுறைகளையும் பிலிப் முன்மொழிந்தார். “முகமூடி (cagoulé) அணிந்து வந்தவர்களைப் பொறுத்த வரையில், இன்று அதுவொரு பிழை தான்; நாளை அதுவொரு குற்றமாக இருக்க வேண்டும். குண்டர்கள்தான் விலை கொடுக்க வேண்டும், வரி செலுத்துபவர்கள் அல்ல,” என்றார். “இத்தகைய ஆர்ப்பாட்டங்களைச் சிலர் கலகம் செய்வதற்கும், பொருட்களை உடைத்து எரிப்பதற்கும் ஆதாயமாக எடுத்துக் கொள்வதை எங்களால் ஏற்க முடியாது. இத்தகையவர்களுக்கு நமது நாட்டில் ஒருபோதும் கடைசி ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட இடமில்லை,” என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.
டிசம்பர் 2018 தொடக்கத்தில் பாரீசின் மையப்பகுதியை முடக்குவதற்காக அணிதிரட்டப்பட்ட பொலிஸூடன் ஒப்பிடுகையில், இன்னும் பாரியளவில் பொலிஸ் அணித்திரட்டப்படுமென பிரதம மந்திரி அறிவித்தார். அவர் குறிப்பிட்டார்: “கவச வாகனங்கள் அல்லது நீர்பீய்ச்சிகள் போன்ற பொலிஸ் பயன்படுத்தும் சிறப்பு சாதனங்கள் நடைமுறையில் பயனுள்ளதாக நிரூபணமாயின. ஆகவே அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் மற்றும் அவற்றின் செயலாற்றலை அதிகரிக்கவும் நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.” 85,000 பொலிஸையும், பின்புல CRS பொலிஸ், துணைஇராணுவ ஆயுதந்தாங்கிய காவல்படை மற்றும் இதரப் படைகளையும் அடுத்த வாரயிறுதியில், குறிப்பாக பாரீசில் அணிதிரட்ட அவர் சூளுரைத்தார்.
இது ஜனாதிபதி மக்ரோனினது மற்றும் அவரை ஆதரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினது ஜனநாயக-விரோத நோக்குநிலையை தெளிவுபடுத்துகிறது. “மஞ்சள் சீருடையாளர்களை" தொழிலாளர்கள் ஆதரிப்பதையும் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான சமூக செலவினக் குறைப்பு கொள்கைகள் பரந்தளவில் நிராகரிப்படுவதையும் எதிர்கொண்டு, மக்ரோன் வங்கிகளின் கட்டளைகளை, படைகளைப் பயன்படுத்தி திணிக்க விரும்புகிறார். சமூக செலவினக் குறைப்பு மற்றும் போருக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கும் ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைப்பதை நியாயப்படுத்துவதற்காக, பிலிப்பும் மக்ரோனும் தங்களை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்வதற்கான முயற்சி பாசாங்குத்தனமான பொய்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
பத்திரிகைகளோ "மஞ்சள் சீருடையாளர்களை" பாசிசவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களுக்கு எதிராக சரமாரியாக அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றன. ஆனால் மக்ரோன்தான் அதிவலதின் கொள்கையை முன்னெடுத்து வருகிறார். வரவிருக்கின்ற சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நவ-பாசிசவாதிகளுக்கு நெருக்கமான பொலிஸ் சங்கமான Alliance இன் கோரிக்கைகளையே பிலிப்பின் முன்மொழிவுகள் திரும்ப உரைக்கின்றன. இந்நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் அல்லது அளவுகடந்த அபராதங்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதன் மூலமாக சமூக கோபத்தைத் திணறடிக்க முயலும்.
ஞாயிறன்று, Alliance சங்கத்தின் பொதுச் செயலாளர் Frédéric Lagache, "மைதான தடைகள் மாதிரியில்" (“வன்முறை கும்பல் அட்டை") போராட்டக்காரர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தார். ஆர்ப்பாட்டங்களில் முகமூடி அணிவதை ஒரு குற்றமாக தண்டிக்க வேண்டுமென்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது "கடுமையான அபராதங்கள்" விதிக்கப்பட வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மற்றொரு பொலிஸ் சங்கமான CFDT, தண்டனை நடவடிக்கைகளைக் குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்க முன்மொழிந்த அதேவேளையில், நவ-பாசிசவாத Alliance சங்கம் முன்வைத்த சில முன்மொழிவுகளை எதிர்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிவு செய்ய வேண்டுமென்ற முன்மொழிவை அது "பயனற்றது மற்றும் ஆக்கபூர்வமற்றது" என்று விமர்சித்தது. CFDT அறிக்கை அறிவித்தது: “ஆர்ப்பாட்டங்களின் போது ஆபத்து விளைவிக்கக்கூடியவர்களை அடையாளம் காண உதவும் என்பதைத் தவிர, ஒரு நிர்வாக கோப்பு மட்டுமே கூட பயனற்றதாக இருக்கும், மாறாக ஒரு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னதாக அதில் நிர்பந்திக்கும் அதிகாரம் எதுவும் இருக்காது,” என்று குறிப்பிட்டது.
உண்மையில், ஒரு பதிவேடு உருவாக்குவதானது, அடிப்படையிலேயே சட்டவிரோத தன்மையைக் கொண்டிருக்கும் என்பதுடன், ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக ஏதோவொரு காரணத்திற்காக ஒருவர் பொலிஸைக் கோபப்படுத்தி இருந்தால் அவர் அதில் பங்கெடுக்காவிட்டாலும் கூட அவரை முன்கூட்டியே கைது செய்வதற்கு மட்டுமே கதவுகளைத் திறந்துவிடும்.
CFDT மற்றும் அரசாங்கத்திற்கு இடையே மிகவும் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்ற நிலையில், பிலிப்பும் மக்ரோனும் நவ-பாசிசவாத Alliance சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்றுள்ளனர்.
இது, 2017 ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste – PES) முன்வைத்த பகுப்பாய்வின் சரியான தன்மையை ஊர்ஜிதப்படுத்துகிறது. மக்ரோன் பெரியளவில் ஒரு ஜனநாயக மாற்றீடு இல்லை என்பதால் மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத மரீன் லு பென் இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிராக தொழிலாளர்களின் ஒரு அரசாங்கத்திற்குத் தயாரிப்பு செய்வதே தீர்க்கமான கேள்வி என்பதை PES குறிப்பிட்டது.
ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசுகள் ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்குப் பரவலாக தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும் என்பதே, “மஞ்சள் சீருடை" இயக்கத்தில் தொழிலாளர்களின் தீவிரமயப்படல் எழுப்பும் மத்திய கேள்வியாகும்.
நாஜி ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்த பாசிசவாத சர்வாதிகாரி மார்ஷல் பிலிப் பெத்தானின் இராணுவத் தொழில் வாழ்வைக் கௌரவிப்பது சட்டப்பூர்வமானதே என்று கடந்த நவம்பரில் மக்ரோன் அறிவித்தமை, அவர் "குடியரசின் பாதுகாப்புக்காக" என்ற மூடுமறைப்பில் ஓர் எதேச்சதிகார ஆட்சியைக் கட்டமைக்க முயல்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது.
“மஞ்சள் சீருடை" இயக்கம் வெடித்ததற்குப் பின்னர் இருந்து, பிரான்ஸ் எங்கிலும் அதிகரித்தளவில் பிற்போக்குத்தனமான மற்றும் ஆத்திரமூட்டும் பொலிஸ் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.
இந்தாண்டின் தொடக்கத்தில், வடக்கு பிரான்சின் ஸொம் (Somme) பொலிஸ் துறை சுவாச பாதுகாப்பு சாதனத்தைக் கொண்டு செல்வதற்கோ அல்லது பிரயோகிப்பதற்கோ தடைவிதித்து ஒரு உத்தரவு பிறப்பித்தது. தீயணைப்பு துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்துறையையும் கூட உடனடியாக சட்டவிரோதமான பணியாக ஆக்கிய இந்த நடவடிக்கை, வாயு பாதுகாப்பு முகமூடிகள் அணிந்த போராட்டக்காரர்களை நிறுத்தி விசாரிப்பதற்கும் மற்றும் அவர்களின் பாதுகாப்பு சாதனங்களைப் பறிமுதல் செய்வதற்கும் பொலிஸை அனுமதிக்க நோக்கம் கொண்டிருந்தது.
சனிக்கிழமை "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிரான பொலிஸ் தடியடி நடவடிக்கையின் போது ஆயுதந்தாங்கிய காவல்படையை எதிர்த்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் Christophe Dettinger அவர் வழக்கறிஞருடன் நேற்று பொலிஸில் சரணடைந்தார். அவர் ஊடகத்தின் ஒரு விஷமப் பிரச்சாரத்திற்கு ஆளாகி இருப்பதுடன், அவர் வீட்டை சோதனையிட்ட பொலிஸால் விரட்டப்பட்டு வருகிறார்.
அவர் சரணடைவதற்கு முன்னதாக பதிவிட்ட ஒரு காணொளியில், Dettinger அவர் நடவடிக்கைகளை விவரித்திருந்தார்: “என் மீது வாயு பிரயோகிக்கப்பட்ட போது நான் CRS ஐ நோக்கி முன்நகர விரும்பினேன் (...). ஒரு தருணத்தில், என் கோபம் அதிகரித்தது, ஆம், நான் மோசமாக நடந்து கொண்டேன். ஆம், நான் மோசமாக தான் நடந்து கொண்டேன், ஆனால் என்னை நானே பாதுகாத்தேன், அவ்வளவு தான்... பிரெஞ்சு மக்களே, “மஞ்சள் சீருடையாளர்களே" நான் முழு மனதுடன் உங்களுடன் உள்ளேன், நாம் அமைதியான முறையில் தொடர வேண்டும், ஆனால் தயவுசெய்து போராட்டத்தைத் தொடருங்கள்.”
பொலிஸ் மூர்க்கத்தனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களைப் பாதுகாக்க முனைவதைச் சட்டவிரோதமாக ஆக்கும் நோக்கில், இப்போது அரசு அவரை ஐந்தாண்டு சிறைவாசம் மற்றும் 75,000 யூரோ அபராதம் கொண்டு அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.
Dettinger இன் முன்னாள் பயிற்சியாளர் Jacky Trompesauce பின்வருமாறு கருத்துரைத்தார்: “கிறிஸ்தோப் ஒரு சிறந்த விளையாட்டு வீரர், அவர் மரியாதைக்குரிய நபர், அவர் குண்டர் கிடையாது... ஆயுதந்தாங்கிய காவற்படையினரை விட பலவீனமானவர்களை நோக்கி அவர்கள் செல்வதை அவரால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பெண்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்படும் புகைப்படங்களை நான் பார்த்ததாக நினைக்கிறேன், ஒருவேளை அவரின் சொந்த மனைவியாக கூட இருக்கலாம்; அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர் முகமூடி அணிந்திருக்கவில்லை, அவர் வெறும் கைகளுடன் தான் இருந்தார். அவர் ஒரு முரடர் இல்லை,” என்றார்.